வித்வான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,795 
 

ஒரு அசந்தர்ப்பமான நிமிஷத்தில் வந்து சேர்ந்தாள் யக்ஷ்ணி.

காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை மாதிரி ஒரு வதை. ஒரு சந்தோஷமான இம்சை. இன்னதென்று தெளிவாய் உருவம் புலப்படாமல் ஒரு கற்பனை. வாசிக்க வயலினை எடுத்தால் வழி தப்பிப் போகிறது. விதம் விதமாய் வில்லை ஓட்டிப் பார்த்தாயிற்று. நழுவி நழுவிச் சறுக்குகிறதே ஒழிய பிடி கிடைக்கிற வழியாய் இல்லை. வெறுத்துப் போய் வில்லை வீசிவிட்டுத் தோட்டத்தில் உலாவ வந்த நிமிடத்தில் சட்டென்று பொறி தட்டிற்று. உற்சாகக் குருவி உள்ளே கூவிற்று. திடுமென்று ஒரு பெரிய அலைபொங்கி அதில் தான் நுரைப் பூவாய் அலம்பி அலம்பிப் போகிற மாதிரி மிதப்பாய் இருந்தது. அவசரமாய் உள்ளே திரும்பி வயலினை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார். வில்லை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் வாசல் பக்கம் தொந்தரவு. ரிஷபத்தை நீளக் கூவித் தெருக் கதவு திறந்தது. கற்பனை கலைந்து ரௌத்திரம் பொங்கக் கண்ணை திறந்து பார்த்தார் ஜானகிராமன்.

எதிர்த்தாற்போல் ஜோஸப் ஓம். அவன் அக்குளில் ஒரு கட்டைப் பெட்டி. சுருதிப் பெட்டி அளவுக்குச் சாதுவாக, சமர்த்தாக, அதற்குள் இருப்பது சைத்தான் என்று அந்த நிமிடம் அவருக்குத் தெரியாது.

ஓம் ரொம்ப மாறிப் போயிருந்தான். உடம்பு ஒரு சுற்று பருத்திருந்தது. முன்னைக்கு இப்போது ஒரு மாற்று, தோல் வெளுத்திருந்தது. கூடவே அதில் ஒரு மினுமினுப்பு. இங்கிருந்தபோது முன்னந்தலையில் இரண்டு விரற்கடை அகலத்துக்கு விழ ஆரம்பித்திருந்த வழுக்கை மறைந்து போய் தலைமுழுக்கத் தங்கக் கேசம் மண்டியிருந்தது. வருடம் கூடக் கூட வயது குறைந்து கொண்டு வருகிற மாதிரி ஒரு பிரமிப்புத் தட்டியது.

இந்த மாதிரி பிரமிப்பு அவன் இங்கிருந்த இரண்டு வருஷத்தில் ஏராளமான முறை ஏற்பட்டதுண்டு.

ஓம் அமெரிக்கன். ஓரிவில் யூனிவர்சிட்டியில் உத்தியோகம். சங்கீதப் புரொபசர். இங்கிலீஷ் சங்கீதத்தில் நிபுணன். கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு வந்தான். இருக்கிற எல்லோரையும் விட்டு ஜானகிராமனைத் தேடிப் பிடித்தான்.

ஜானகிராமன் சங்கீதத்தில் மகான். இன்னொரு நாதமுனி. ஆனால் குடத்திலிட்ட விளக்கு. சங்கீதத்தை தவிர தனக்கு வேறெதுவும் தெரியும் என்று காட்டிக் கொண்டதில்லை. இதை முழுக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், அதைத் தெரிந்து கொண்டால் போதும் என்கிற உறுதியும், தீர்மானமும் உண்டு. ஊருக்கு வெளியில் தன்னந்தனியாக ஒரு சிறு வீட்டில் வாசம். தன் வேலை மொத்தத்தையும் தானே செய்து கொள்கிற வழக்கம். எத்தனையோ பேருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்தது உண்டு. ஆனால் சிஷ்யர் என்று யாரையும் அங்கீகரித்தது கிடையாது. அருமை தெரிந்து கூப்பிட்டவர்களின் அழைப்பை ஏற்று அவ்வப்போது கச்சேரிகளுக்குப் போவது உண்டு. இந்த மாதிரி ஒரு மனிதர் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இருந்தது ஒரு பெரிய ஆச்சரியம்தான். ஆனால் இருக்கிறார். அறுபத்தைந்து வருட வாழ்க்கையில் விஞ்ஞானம் தீண்டாத ஒரு அபூர்வ மனிதர்.

ஓம் இவரைத்தான் தேடி வந்தான். இரண்டு வருடம் அல்லும் பகலும் அருகிலேயே இருந்து கற்றுக் கொண்டான். தரையில் சப்பணம் கூட்டி உட்காரக் கற்றுக் கொண்டான். உஸ் உஸ் என்று கண்ணால் தண்ணி விட்டுக் கொண்டு ரசம் சாதம் சாப்பிடக் கற்றான். அந்தக் காலத்துக் குருகுலவாசம். ஜானகிராமனின் அன்றாட நடவடிக்கை அத்தனையும் அத்துப்படி. இரண்டு வருடம் முடிந்து அமெரிக்காவுக்குப் புறப்படுகிறபோது தன்னுடன் வந்துவிடுமாறு கெஞ்சினான். ‘ வேண்டாமய்யா சாமி ’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஜானகிராமன். இன்று மூணு வருஷம் கழித்து இப்படித் திடுமென்று எதிரில் வந்து நிற்கிறான். இடுப்பில் ஒரு பெட்டியை இடுக்கிக் கொண்டு.

“ அடடே, ஓம் ! சௌக்கியமா ? ”

“ ம். ”

“ எப்ப வந்தே ? எனக்கு முன்னாலேயே எழுதக் கூடாதோ ? ”

“ இன்னிக்கு , இதோ , இப்போ. ”

“ எனக்கு முன்னாலேயே எழுதக் கூடாதோ ? ”

ஓம் மெலிதாய்ச் சிரித்தான்.

“ ம் , அப்புறம் ? ”

“ இன்னிக்கு உங்க பிறந்த நாள். ”

“ இன்னிக்கா, இன்னிக்கா, இல்லையே. ”

“ புரட்டாசி பூரம்தானே நீங்க ? ”

“ அடடே, அந்தக் கணக்கெல்லாம் இன்னும் இருக்கா ? ”

“ மறந்து போயிடாம இருக்கணும்னு கம்ப்யூட்டர்லே ப்ரோகிராம் பண்ணி வைச்சிருந்தேன். ”

“ ஆ ! ரொம்ப சந்தோஷம். சித்த இரு. காப்பி கலந்து எடுத்துண்டு வரேன். ”

“ வேண்டாம், நீங்க உட்காருங்க. நீங்க இந்த வேலையெல்லாம் இனிமே செய்யக்கூடாது. ”

“ அதனால் என்ன குறைச்சல் வந்துடுத்து இப்போ ? எங்க குரு, அவருக்கும் பெரியவா எல்லாம் காலம் காலமா பண்ணிண்டு வந்திருக்கா. ”

“ இருக்கட்டும். நீங்க பண்ணக்கூடாது இனிமே. ”

“ அதுக்குத்தான் இதை எடுத்துண்டு வந்தேன். ”

“ என்னது அது ? ”

“ ஒரு வார்த்தை சொன்னாப் போதும். இது உங்களுக்குக் குளிக்க வெந்நீர் போடும். வேஷ்டி தோய்க்கும். காப்பி கலக்கும். பூஜைக்கு பூப்பறிக்கும். படுக்கை போடும். ”

“ இத்துனூன்டு பெட்டியா ? ”

“ ஆம். இது சேவை செய்கிற கம்ப்யூட்டர். ”

“ அய்யய்யோ, அந்தச் சமாசாரமெல்லாம் வேண்டாமய்யா. ”

“ இதில பயப்பட ஒண்ணும் இல்ல. இது ஒரு சாதனம். ஒரு சௌகரியம். ஒரு கீழ்ப்படிதல் உள்ள வேலைக்காரன் அவ்வளவுதான். ”

“ வேண்டாமய்யா, நான் ஒரு டேப் ரிக்கார்டரைக் கூடத் தொட்டுப் பார்த்ததில்லை. ”

“ அந்த பயம் வேண்டாம் உங்களுக்கு. நீங்க ஒண்ணையும் திருக வேண்டாம். தொடக்கூட வேண்டாம். வேறுமனே குரல் கொடுத்தால் போதும். காரியம் செய்திடும். ”

“ அடே ! மிஷினிலே அப்படிக் கூடப் பண்ண முடியுமா ? ”

“ பண்ணியிருக்காளே, இது மிஷின் இல்லை. ஒரு சிஸ்டம். உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இதன் சென்ஸார்களைப் பொருத்தி விடலாம். அவை உங்கள் ஆணைகளை வாங்கிக் கொண்டு மத்திய கம்ப்யூட்டருக்கு அனுப்பும். கம்ப்யூட்டர் அந்த ஆணையைச் செயல்படுத்தச் செய்திகள் கொடுக்கும். ”

“ புரியலையே. ”

“ உதாரணமாக நீங்கள் குளிக்க விரும்புகிறீர்கள். வெந்நீர் வேண்டும். எந்த அறையிலிருந்தும், எனக்கு வெந்நீர் தயார் செய் என்று சொன்னால் போதும். கீசர்க்குத் தகவல் அனுப்பி அதை மூட்டித் தேவையான டெம்பரேச்சரில் வெந்நீர் ரெடி பண்ணிடும்.”

“ என்னய்யா, சித்து விளையாட்டா ? பேசுமோ ? ”

“ ம். ”

“ வேண்டாம்யா. ஏதாவது ஏடாகூடமாகச் செய்து வைக்கப் போகிறது.

“ கவலை வேண்டாம். நான் பதினைந்து நாள் உங்க கூடவே தங்கியிருந்து உங்களின் ஒவ்வொரு தினசரி நிமிடங்களையும் கவனித்து ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறேன். விஷயங்களைச் செய்திகளாக மாற்றி அதன் ஞாபகத்தில் நிரப்பிவிடலாம். எத்தனை டிகிரி வெந்நீர், மிளகு ரசத்துக்கு எத்தனை காரம், எத்தனை தண்ணீர், எத்தனை நிமிட கொதி, வேஷ்டியை உலர்த்துவது எவ்விதம், பூஜைக்கு எந்தெந்தப் பூ, இதெல்லாம் அதற்கு உருவேற்றிவிடலாம். பிசகு இராது. இவை தவிர, உங்களைத் தொடர்ந்து கவனித்து உங்கள் ரசனைக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப புதிதாய்த் தானே கற்றுக்கொள்ள ஒரு அமைப்பு இதில் இருக்கிறது. ”

“ நீ எதையாவது பண்ணிட்டு ஊருக்குப் போயிடுவே. நி அந்தண்டை நகர்ந்ததும் தகராறு பண்ணினா நான் என்னய்யா பண்றது ? ”

“ பிரச்சினை இல்லை. உங்களுக்குப் பிடிக்காதது எதையும் இது பண்ணாது. அப்படி ஏதும் செய்துவிட்டால், நீ பண்றது எனக்குப் பிடிக்கலை என்று சொல்லி விடுங்கள், சரி செய்து கொண்டு விடும். ”

“ ம் ? ”

“ இதை நிறுவ இந்த வீட்டில் சில அடிப்படையான மாறுதல்கள் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்தால் போதும், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். ”

“ என்னமோ பண்ணு, என் உசிரை வாங்காதே. ”

“ ம்… இன்னொரு விஷயம். இதை நீங்கள் அழைப்பதற்கு ஒரு பெயர் வேண்டும். உங்களுக்குப் பிடித்ததாக ஒரு பெயர் சொல்லுங்கள். ”

“ அபிதகுசலாம்பாள்னு வைச்சுடு. என் ஆம்படையா பெயர். கடைசி மூச்சை விடறவரைக்கும் அவதான் எனக்கு சிசுருஷை பண்ணிண்டு இருந்தா. ”

“ அத்தனை நீளம் சாத்தியமில்லை. சின்னதாய், மூன்று எழுத்தில் ஏதாவது சொல்லக்கூடாதா. ”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *