முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 3,952 
 

முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை சொன்ன நட்சத்திர வீட்டு நாயின் கதை

“கேளாய், போஜனே! நாய் என்றால் எல்லா நாயும் ஒன்றாகிவிடாது. அதிலும் நட்சத்திர வீட்டு நாய் இருக்கிறதே, அதற்கென்று ஒரு தனி நடை, தனிப் பார்வை, தனிக் குணம் எல்லாம் உண்டு. அது பொதுவாக யாரைக் கண்டாலும் குரைத்துவிடுவதில்லை; ‘யாரைக் கண்டால் குரைக்க வேண்டும். யாரைக் கண்டால் குரைக்கக் கூடாது’ என்பதெல்லாம் அதற்குத் தெரியும். அது மட்டுமல்ல; அது தன் எஜமானியைத் தேடி யார் வந்தாலும் சரி-முதலில் வாலை ஆட்டும்; அதற்குப் பின் அவர்களை ஓர் உரசு உரசி நிற்கும். இவை யிரண்டும் பிடிக்காமல் யாராவது எழுந்து செல்ல முயன்றால்தான் அது குரைக்கும்!

இத்தனை அருங் குணங்களும் ஒருங்கே அமைந்திருந்த அபூர்வ நாய் ஒன்று நடிகை நவஸ்ரீயின் வீட்டில் இருந்தது. அதன் பராமரிப்புக்கென்றே நியமிக்கப்பட்டிருந்த பரமசிவன் நாயர் ஒரு நாள் அதை வழக்கம்போல் ‘மாலை உலா’வுக்கு அழைத்துச் செல்ல, அது அந்த நாயரைக் கண்டதும் வழக்கத்துக்கு விரோதமாக ‘வள், வள்’ என்று குரைக்க, ‘இன்று என்ன கேடு உனக்கு?’ என்று நாயர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அதன் தலையில் ஒரு போடு போட, ‘அம்மா ஷூட்டிங்குக்குப் போயிருக்கிறார்கள்; இன்னொன்று வேண்டுமானலும் போடு!’ என்று சமையற்காரன் ‘அதற்குள்ள மதிப்புக்கூட இந்த வீட்டில் நமக்கு இல்லையே!’ என்ற ஆத்திரத்தில் அவனை மேலும் கொஞ்சம் உற்சாகப்படுத்த, ‘அம்மா வீட்டில் இல்லையா? அப்படியானால் ஒன்றென்ன இரண்டாகவே போடுகிறேன்!’ என்று அவன் மேலும் இரண்டு போட்டு அதை இழுத்துக் கொண்டு வெளியே செல்வானாயினன்.

வழியிலும் நாயர் சொன்னதை அந்த நாய் கேட்கவில்லை; அவன் அதை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு சென்றால் அது அவனை இன்னொரு பக்கம் இழுத்துக் கொண்டு சென்றது. மீறி அவன் அதைத் தன் வழிக்கு இழுத்தால் அது ‘வள், வள்’ என்று குரைத்தது. ‘இது என்ன தொல்லை! இன்று என்ன வந்துவிட்டது இந்த நாய்க்கு?’ என்று அவன் விழித்துக் கொண்டு நின்ற காலை, கேட்ட நேரத்தில் ‘ஆப்பிள் ஜூஸ்’ கொண்டு வந்து கொடுக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு அன்றைய ஷூஅட்டிங்கைக் ‘கான்சல்’ செய்துவிட்டு வந்த நவஸ்ரீ, அவனையும் அவனுடன் ஒத்துழைக்க மறுத்துக் கொண்டிருந்த தன் அருமை நாயையும் பார்த்துவிட்டு, ‘என்ன நாயர், என்ன நாய்க்கு?’ என்று விசாரிக்க, ‘என்னவோ தெரியவில்லை அம்மா, இன்று என்னைக் கண்டதிலிருந்து அது குரைத்துக்கொண்டே இருக்கிறது!’ என்று அவன் கையைப் பிசைய, ‘ஏன், என்ன உடம்புக்கு?’ என்று பதறிய நவஸ்ரீ, தன்னை மறந்து சட்டென்று காரை விட்டுக் கீழே இறங்கி, ‘எங்கே, அந்தச் சங்கிலியை இப்படிக் கொடு, பார்ப்போம்?’ என்று அவன் கையிலிருந்த சங்கிலியைத் தானே வாங்கிப் பிடித்துக்கொண்டு, ‘என்ன டார்லிங், என்ன?’ என்று அதைத் தடவிக் கொடுத்துக்கொண்டே கொஞ்ச முயல, அதற்கும் இடம் கொடாமல் அது அவளைப் பார்த்தும் ‘வள், வள்’ என்று குரைக்க, அதற்குள் தங்கள் அபிமான நட்சத்திரத்தை அபிமான நாயுடன் அங்கே பார்த்துவிட்ட ரசிக மகாஜனங்கள் ‘வொய்ங், வொய்ங்’ என்று விசில் அடித்தும், அவள் சினிமாவில் பாடிய பாடல்களையும் ஆடிய ஆடல்களையும் அவளுக்கு எதிர்த்தாற்போல் பாடிக் காட்டியும், ஆடிக் காட்டியும் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்த, ‘இது வேறே தொல்லை எனக்கு! ஏ நாயர்! நீ ஓடிப்போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வா; நான் டார்லிங்கைக் காரிலேயே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்விடுகிறேன்!’ என்று தன் ஆசை நாயுடன் அவசர அவசரமாகக் காரில் ஏறிக்கொண்டு, ‘ரசிக மகா ஜனங்களே, வணக்கம்!’ என்று அவள் அவர்களை நோக்கிக் ‘கடனே’ என்று கை கூப்பிவிட்டுச் செல்வாளாயினள்.

டாக்டர் வந்தார்; நாயைப் பார்த்தார்; ‘இன்ஜக்‌ஷன்’ போட்டார். அப்போதும் அது குரைப்பதை நிறுத்தாமற் போகவே, ‘இனி இதை ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போகவேண்டும்’ என்று டாக்டர் சொல்லிவிட்டுச் செல்ல, அப்படியே அந்த நாயை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்ட, அதை அவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ‘இங்கேயே இரண்டு நாட்கள் இதை விட்டுவிட்டுப் போங்கள்!’ என்று சொல்ல, ‘ஆ! என் டார்லிங்கைப் பிரிந்து நான் எப்படி இரண்டு நாட்கள் உயிர் வாழ்வேன்?’ என்று நவஸ்ரீ ‘கிளிசரைன்’ இல்லாமலேயே கண்ணீர் விடுவாளாயினள்.

பார்த்தார் நாயர்; ‘இனி ஒரே வழிதான் இருக்கிறது!’ என்று நாயையும் நடிகையையும் அழைத்துக் கொண்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் வீட்டுக்கு வந்தார்.

விஷயத்தை கேட்ட விக்கிரமாதித்தர் விழுந்து விழுந்து சிரிக்க, ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று நாயர் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘கோளாறு எதுவும் நாயிடம் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘என்னக் கோளாறு?’ என்று நாயர் கேட்க, ‘ஐயப்பன் விரதத்துக்காக நீங்கள் அணிந்திருக்கும் கறுப்புச் சட்டையும் கறுப்பு வேட்டியும் இந்த நாய்க்குப் பிடிக்கவில்லை; அதனால்தான் இது உங்களைக் கண்டதும் குரைக்கிறது!’ என்று விக்கிரமாதித்தர் விளக்க, ‘அப்படியா? நான்தான் கறுப்பாடை அணிந்திருக்கிறேன்; அம்மா கறுப்பாடை எதுவும் அணியவில்லையே? அவர்களைப் பார்த்து இந்த நாய் ஏன் குரைக்கிறது?’ என்று நாயர் கேட்க, ‘அவர்கள் கறுப்பாடை அணியாவிட்டாலும், கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தும் இந்த நாய் குரைக்கிறது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அப்படியா?’ என்று நவஸ்ரீ உடனே தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிக் காரில் எறிந்துவிட்டு ‘டார்லிங்!’ என்று தன் அருமை நாயை அழைக்க, அது குரைப்பதை நிறுத்தி வாலைக் ‘குழை, குழை’ என்று குழைத்துக்கொண்டே சென்று அவளை ஓர் உரசு உரசிக் கொண்டு நிற்க, ‘ஏ, நாயர்! இனி நீ உன் விரதம் முடியும்வரை இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காதே!’ என்று சொல்லிப் பரமசிவன் நாயரை அனுப்பி விட்டுத் தன்னுடைய டார்லிங்கைத் தூக்கி ஆசை தீர முத்தமிட்டுக்கொண்டே காரில் ஏறி, ‘நன்றி’ என்று சொல்லி மிஸ்டர் விக்கிரமாதித்தரிடம் விடை பெறுவாளாயினள்.”

முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான முல்லை இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க……..

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *