முதல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 22,787 
 

சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்தால் சிறுகதை எழுதிவிடலாம் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். வாங்கியபிறகுதான் தெரிந்தது அது ஒரு சிறுகதை தொகுப்பு என்று. அவரும் அதை முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்தகத்தை குரியர் மேனிடம் வாங்கியபோது சுஜாதாவே நேரில் வந்து டெலிவர் செய்தது போல இருந்தது. புத்தகத்தை ஒரு வரி விடாமல் படிக்கவேண்டும் என்று நினைத்து முன்னுரை வாசித்தபோது,

” ஏமாந்துட்டியா, சரி கவலை படாதே. இந்த புக்க படிச்சா உனக்கு ஒரு ஐடியா வரும். அதவெச்சு நீயா கதை எழுது. எதையாவது சுட்டாலும் பரவாயில்ல கதையை முடிக்கும்போது என்னோட பேரையும் சேத்து எழுதி வெச்சுடாத, அப்பறம் மாட்டிக்குவ”, என்று சுஜாதா சொல்வது கேட்டது.

தொகுப்பை ஆரம்பிக்கும் போது இருந்த குழப்பம் வாசித்து முடித்த பின்பும் இருந்தது. எழுத முடியும் என்ற நம்பிக்கை சற்றே குறைந்து போயிருந்தது.

“சுஜாதாவே சொல்லிட்டார் எழுதிதான் பாப்போம்” என்று மனதை தேற்றிக்கொண்டேன். அடுத்து எழுந்தது இரண்டு கேள்விகள்.

எப்படி எழுதுவது?

பேப்பரில் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத நாம் ஒன்றும் புலவர் இல்லை என்பதை உணர்ந்து மடிகணினியை தேர்வு செய்தேன். தமிழில் எழுத நிறைய மென்பொருள் வந்துவிட்டது, பறவைக்கு ‘ற’ வா இல்லை ‘ர’ வா என்ற குழப்பம் வந்தாலும் மென்பொருள் தானாகவே சரி செய்துகொள்ளும் என்ற அற்ப புத்தி.

என்ன எழுதுவது?

எழுதுவதை விட என்ன எழுதுவது என்று முடிவு செய்வதே கஷ்டம் போலும். எவ்வளவு யோசித்தும் எதுவும் பிடிபடவில்லை. சரி பிள்ளையார் சுழி போடுவோம் கதை தானாக வரும் என்று நினைத்து மென்பொருளை துவக்கினேன். வந்தது முதல் சிக்கல்.

தமிழ் கீ பேடில் பிள்ளையார் சுழி எங்கே?

இல்லை போலும். சரி சமாளிப்போம் என்று ‘உ’ போட்டு அதனை அடிக்கோடிட்டேன். அடைப்புக்குறிக்குள் சுழி என்று எழுதப்போனேன். ஐ.டி பழக்கம்.

‘நான் எழுதும் முதல் கதை இது என்பதால் அதுவே தலைப்பாக இருக்கட்டும்’. பின்பு யோசித்தேன் ‘எத்தனை எழுத்தாளர்கள் தங்களின் முதல் கதைக்கு இந்த தலைப்பை வைத்திருப்பார்கள்? இந்த தலைப்பை வைத்த எத்தனை பேர் முதல் கதையுடன் எழுதுவதை விட்டிருப்பார்கள்.’

தலைப்பில் மட்டும் கதை இருந்தால் போதாது, என்ன எழுதுவது என்று யோசித்தபோது சுஜாதாவின் புத்தகத்தை வாங்கி ஏமாந்த கதையை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

‘முதலில் அந்த புத்தகத்தை பற்றி எழுதலாம்’. மென்பொருளின் உதவியுடன் எழுத துவங்கினேன். புத்தகத்தை பற்றியும் அதன் முன்னுரை பற்றியும் நான் ஏமாந்ததையும் எழுதினேன்.

சுஜாதா நேரில் வந்து கதை எழுதுவது பற்றி டிப்ஸ் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து எழுத துவங்கினேன்.

வந்தது அடுத்த சிக்கல். எதற்காக மென்பொருளை தேர்வு செய்தேனோ அதுவே சிக்கல். ‘பரவாயில்ல’ என்று எழுதும்போது ‘ர’ ‘ற’ இரண்டையும் மென்பொருள் காட்டியது.

“அட துரோகி, கவுத்துட்டியே” என்று அதை திட்ட, புத்தகத்தின் பின்புறம் இருந்த சுஜாதா என்னை பார்த்து சிரித்தார். வேறு வழியில்லாமல் புத்தகத்தில் தேடி சரியான ‘ர’ வை போட்டு தொடர்ந்து எழுதினேன். இன்னும் எங்கெல்லாம் பிழையாய் எழுதினேன் என்பது சீக்ரெட்.

நல்லவேளை, நான் செய்த தவறை மென்பொருள் மறைத்தது, அதன் தவறை சுஜாதா மறைத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *