மறக்க முடியுமா..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் நகைச்சுவை
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 12,753 
 

“அம்மா.என்னோட இன்னொரு சாக்சக் காணம்…ப்ளீஸ்..வாம்மா..!”

“பப்லு..எத்தன ஜோடி இருக்கு..அலமாரியில நல்லா தேடிப்பாரு…!”

“நல்லா தேடிட்டேன்..எல்லாமே ஜோடியில்லாமதான் இருக்கு…வாம்மா..வந்து தேடு….!”

பப்லுக்கு சுருதி ஏறிவிட்டால் லேசில் இறங்காது…!

“அம்மா..இன்னிக்கு வெள்ளிக்கிழமை..! ஸ்போர்ட்ஸ் யூனிஃபார்ம்..! எங்க காணம்…? ஏற்கனவே ரொம்ப லேட்டாச்சு…”

மாயா அவள் பங்குக்கு சேர்ந்து கொண்டாள்..!

“ஐய்யய்யோ..நேத்து அயர்ன் பண்ணக் குடுத்தேன்….!

லேட்டானா நான் செண்பகத்து கிட்ட குடுத்து விடறேன்னு சொன்னானே மணி…மறந்துட்டானா…?”

“அம்மா ! கேஸ் தீந்து போச்சு…! இன்னும் இட்லி வேகல.. இரண்டாவது சிலிண்டரும் காலியா இருக்குதேம்மா..! புக் பண்ண மறந்துட்டீங்களா….?”

“நான் மறந்தது இருக்கட்டும்..பப்லு சாக்செல்லாம ஜோடியா மடிச்சு வைன்னு எத்தன வாட்டி படிச்சு படிச்சு சொல்லியிருக்கேன்…!

இப்ப ஒண்ணக்கூட காணம்.!
நேத்து ஏன் மணிகிட்டேயிருந்து பாப்பாவோட ஸ்போர்ட்ஸ் யூனிஃபார்ம வாங்கி வைக்கல..?

செண்பகம் உனக்கு வரவர மறதி அதிகமாயிட்டிருக்கு…!

மாமனாருக்கு காது அவ்வளவாக கேட்காததும் ஒருவிதத்தில் நல்லதாய் போச்சு….!

இல்லையென்றால் எல்லோருக்கும் முன்னால் இங்கு ஆஜராகியிருப்பாரே…இதோ வந்துவிட்டாரே….!

“கல்பனா..இன்னைக்கு பேப்பர்காரன் பேப்பர் போட மறந்துட்டான் போல இருக்கேம்மா…

வாசல்ல இரண்டு மணிநேரம் கால்கடுக்க நின்னதுதான் மிச்சம்..

செண்பகத்த பக்கத்து வீட்டுக்கு அனுப்பி கொஞ்சம் விசாரிச்சுட்டு வரச்சொல்லும்மா…!

இன்னும் காலமேயிலேருந்து பாத்ரூம் போகல..!”

காப்பி குடிச்சாத்தான் பாத்ரூம் வரும்னு சொல்றவங்களத்தான் கேள்விப்பட்டிருக்கேன்..ஆனா பேப்பர் படிச்சாத்தான் பாத்ரூம் வரும்னு சொல்றவங்கள பார்த்ததுண்டா..?

இதெல்லாம் ஒரு டிராக்கில ஓடிண்டிருக்கும்போ இதோ இன்னொரு டிராக்….!

அம்மா ஃபோன் அடிக்குது பாருங்க…!

ஆபீசில் கூட வேலைபார்க்கும் ஷோபா..

“ஏய் கல்பனா.. நான் இன்னிக்கு ஆபீசுக்கு வரமுடியாது..இரண்டு முக்கியமான ஃபைல் மேனேஜர் கையெழுத்துக்குப் போகணும். என் மேசையத் தொறந்ததுமே மேலாக இருக்கும்..முடிச்சு கையெழுத்துக்கு அனுப்பிடுடா..ப்ளீஸ்….!”

பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனைக் கட் பண்ணி விட்டாளே பாவி…!

இன்னொரு ‘ ப்ளீஸ் ‘ மட்டும் காதில் விழட்டும்..! என்ன பண்ணப்போறேன்னு மட்டும் பாரு…’

மனசில் கருவிக்கொண்டு சாக்சைத் தேடினாள்..

“அப்பா..பசங்க ஸ்கூலுக்கு போகட்டும் செண்பகத்த அனுப்பி பேப்பர் வாங்கித்தரேன்…!

அதுவரைக்கும் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க ப்ளீஸ்…!”

மெள்ள கீழே இறங்கி வந்தான் கோபி…!

“என்ன அமக்களம்…? பப்லு குட்டிக்கு என்ன வேணும்….?”

“ஆமா..கேஸ் தீந்ததுமே உங்கள இரண்டாவது சிலிண்டர் புக் பண்ணச் சொன்னேனே…”

“சாரி.. மறந்துட்டேன் கப்பு.. இதுவும் காலியா…?”

“ஆமாம்.. நல்ல மறதி ! இன்னிக்கு எல்லோரும் ஒரு டம்ளர் தோச மாவ குடிச்சிட்டு கெளம்புங்க..!”

“இது கூட நல்ல ஐடியா…!”

பாத்ரூமில் நுழைந்தவன்..,

“கப்பு..! நேத்து செண்பகத்த புது பிரஷ் வாங்கிட்டு வரச் சொன்னேனே…வாங்கல?”

“ஏன் இப்போதானே புதுசு வாங்கினீங்க.. என்னாச்சு..?”

“டாய்லெட்டுக்குள்ள விழுந்திடிச்சு….”

“ஆமா…டாய்லெட்ல உக்காந்து எதப் பண்ணணமோ அதத் தவிர எல்லாத்தையும் பண்ணினா..?”

“நான் இப்போ எத வச்சு பல் தேய்க்கறது….?”

“ஆபத்துக்கு பாவமில்லை..!உங்கப்பா பல்செட்ட தேய்க்கிற பிரக்ஷ் இருக்கும்…. இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுங்க..!

***

நேரமாகிக் கொண்டே போனது..

கல்பனா இன்னும் குளிக்கவேயில்லை..

எப்போது குளித்து ? ஆபீசுக்கு இன்றைக்கும் லேட்டா..?

ஐய்யய்யோ..! நேற்று வரும்போதே பெட்ரோல் பூஜ்யத்தை தொட்டதே..!

சீக்கிரம் கிளம்பி பெட்ரோல் போட்டுக் கொண்டு போக வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தது இந்த அமர்க்களத்தில் மறந்து விட்டதே.!

“அம்மா.. ஸ்கூல் வேன் போயிருக்கும்மா… யூனிஃபார்ம் இல்லைன்னு ஒரு லெட்டர் எழுதி குடுங்கம்மா..!

இல்லேன்னா மிஸ் என்ன வெளில நிக்கவச்சிடுவாங்க…!

“ஏங்க.. லெட்டர் கூட நான்தான் எழுதணுமா..! போங்க.. ஒரு லெட்டர் எழுதுங்க…!

“என்னன்னு எழுதணுண்டா மாயாக்குட்டி…?”

“ஆமா..அது கூட அவதான் சொல்லணும்..!

எழுதுங்க.. மணி அயர்ன் பண்ணிக்குடுக்க லேட்டாச்சு.. செண்பகம் மறந்துட்டா’ ன்னு..”

“ஏம்மா..எம்பேர இழுக்குறீங்க..? போனவாரமே தொவச்சதும்
‘ குடுங்க..குடுங்க.’ன்னு எத்தன வாட்டி தொண்டத்தண்ணி வத்த கத்தியிருப்பேன்…?”

“சரி..இதெல்லாமே எழுதணுமா..?”

கோபி சமயா சந்தர்ப்பம் தெரியாமல் ஜோக்கடிப்பான்..

“சரி.. ஒரு வெள்ளை பேப்பரும் பேனாவும் இருக்கா…?”

“இந்த நோட்டிலேயிருந்து கிழிச்சிக்குங்கப்பா…”

பப்லு சமர்த்தாய் தன் நோட்டை நீட்டினான்…

“டேய்..அது வீட்டுப் பாட நோட்டுடா..!”

“ஆமா! அவன் ஹோம் வொர்க் பண்ணி கிழிச்சான்..கிழிடா…!”

“பேனா…?”

“இதோ….”

மாயா நீட்டினாள்..

“இதுல இங்க் தீர்ந்து போச்சு போலியே..எழுத வரல…”

“அப்பா..இந்தா..பென்சில்ல எழுது..”

“ஆமா..என் கண்ணாடிய எங்க வச்சேன்….?”

“அப்பா..அப்பா..!”

மாயாவும் பப்லுவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..

“என்ன சிரிப்பு…? எனக்கு ஆபீசுக்கு லேட்டாச்சு..?”

“அப்பா ! கண்ணாடி உங்க மூக்கு மேலேயே இருக்கு…!”

கோபிக்கு அசடு வழிந்தது..

“இந்தா..கவர் இல்ல..அப்பிடியே மடிச்சு டீச்சர் கிட்ட குடு….”

“அம்மா..இன்னைக்கு நீதான் எங்கள ஸ்கூல்ல டிராப் பண்ணனும்..அப்பிடியே மிஸ்ஸப் பாத்து சொல்லிடும்மா..எனக்கு பயம்மா இருக்கு….!”

“என் வண்டியிலேயே பெட்ரோல் இல்லை…என்னங்க பசங்கள பள்ளிக்கூடத்தில எறக்கிவிட்டுட்டு என்னையும் அப்படியே பஸ் ஸ்டாப்பில இறக்கி விட்டுட்டு போங்க….!”

“இன்னைக்கு காக்கா குளியல்தான்..

“ஆமா..மத்த நாள் அப்படியே கிளியோபாட்ரா குளியல் மாதிரி..?

வேகமாய் கோபி குளியலறைக்கு ஓடினான்..

“அம்மா..இன்னக்கு பசங்களுக்கு சாப்பாடு..?”

“பிரட் இருக்கு..ஜாம் தடவி குடு…தாத்தாவுக்கும் இரண்டு குடு…!

“மாயா..! மதியம் கேன்டீன்ல ஏதாவது நீயும் வாங்கிட்டு, பப்லுக்கும் குடு….!”

“ஐய்யா…!எனக்கு சமோசா…! கோன் ஐஸ்….!”

“உங்களுக்கும் சாருக்கும்…?”

“ம்ம்..கேன்டீன்ல பாத்துக்குவோம்..”

கல்பனா செண்பகத்தை முறைத்தாள்…

நாங்க போனதும் கதவசாத்திட்டு டீ.வி.யில புதுப்படம் நெட்ஃபிளிக்ஸ்ல ஏதாவது ஓடும்..படுத்துகிட்டே நாங்க வரைக்கும் பாத்திட்டிரு!

தாத்தாவையும் தொணைக்கு கூப்பிட்டுக்கோ…!

இன்னிக்கு உங்காட்ல மழதான்..”

“ஏம்மா..எம்மேல பாயறீங்க…!மறந்ததெல்லாம் நீங்க…!”

“செண்பகம்! வெறுப்பேத்தாத.!

***

“சரி.. எல்லோரும் ரெடியா…? என்னோட ப்ரீஃப்கேஸ் எங்க..?”

“இதோ..அப்பா நான் எடுத்து வச்சிட்டேன்…!”

“தேங்யூடா பப்லு குட்டி.. நீதான் சமத்து குட்டி..!”

“அப்போ நான்…?”

“என்னோட மாயா சக்கரக் கட்டி..”

“கர்ச்சீஃப் எங்க..!”

“சார்.. இந்தாங்க…”

“தாங்யூ செண்பகம்…!”

கல்பனா எல்லோரையும் ஒரு முறை முறைத்தாள்…

“போதும்.. கொஞ்சல்…! நேரமாயிட்டிருக்கு…!”

“கல்பனா.எனக்கு இன்னொரு காப்பி கிடைக்குமாம்மா..? பேப்பரும் இல்ல.. இன்னொரு காப்பி குடிச்சாத்தான்…”

“சரிப்பா..மேல சொல்ல வேண்டாமே…!

செண்பகம் மைக்ரோவேவ்ல மாமாக்கு சூடா ஒரு காப்பி கலந்து குடுத்திட்டு மறுவேல பாரு…!

ஃப்ரிட்ஜில இருக்கிறத சுட வச்சு இரண்டு பேரும் மதியம் சாப்பிடுங்க…!”

“சரிம்மா…”

செண்பகம் குஷி மூடில் இருந்தாள்…

“பப்லு..மாயா…! கீழ் போய் காருகிட்ட நில்லுங்க.. நானும் அம்மாவும் பின்னாடியே வரோம்..”

“கல்பனா.. கார் சாவி எங்க…?”

“என்ன கேட்டா…?”

“இந்த ஆணிலதானே மாட்டி வப்பேன்….ஏதாவது வச்ச இடத்தில இருந்தாத்தானே..?”

“செண்பகம்! சாரோட கார் சாவியப் பாத்தியா…?”

“இது என்னடா கூத்து..! இந்த வீட்ல எதக்காணலினாலும் எம்மண்டையப் போட்டு உருட்டுறதே வேலையா போச்சு…?”

“பாக்கலன்னா..பாக்கலன்னு சொல்லேன்.. எதுக்கு பிலாக்கணம் வக்கிற..?”

மாமனாருக்கு ஏதோ காது குறுகுறுவென்றது போலும்…!

“என்னது..காப்பிப் பொடி காலியா..? நான்வேணா அடுத்த வீட்டு ராமசாமியக் கேட்டு இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடி வாங்கிட்டு வரவா…?”

“பேசாம அங்கேயே ஒரு டம்ளர் காப்பி சாப்பிட்டு வாப்பா..நீ வேற..!”

அலமாரியைத் தலைகீழாகக் கவுத்து தேடியாகிவிட்டது..!

“கப்பு .. இதுக்கு மேல லேட்டானா மேனேஜர்
‘ வீட்டுக்குப் போ ‘ ன்னு சொல்லிடுவார்.. முக்கியமான மீட்டிங் வேற இருக்கு…!”

“அப்பா.அம்மா..வாங்க! நேரமாச்சு.. எவ்வளவு நேரம் காரில வெயிட் பண்றது..?”

“என்னது..? காரிலியா..! இங்க கார் சாவிய காணலியேன்னு…!”

“அப்பா…அப்பா..! மூக்குக் கண்ணாடி மூக்கில..கார்சாவி கார்ல…”

“நான் ஒரு மடையன்..நேத்து கார்லேந்து எடுக்க மறந்திட்டேன் போல இருக்கு..!

நல்லவேளை லாக் பண்ணல..”

“கல்பனா..வா! போகலாம்.. நேரமாச்சு…”

“ம்ம்ம்.. எல்லோரும் ஏறியாச்சா…?”

“அம்மா..மிஸ் திட்டப் போறாங்க..”

“என்னையும்தான் மேனேஜர் திட்டப் போறாரு…பேசாம வா..!

“ஹைய்யா..சமோசா.. ஐஸ்கிரீம்..!”

கதவைச் சாத்தி கிளம்ப தயாரானான் கோபி…!

“சார்.. சார்..போகவேண்டாம்….
மேல வாங்க…!”

“என்ன செண்பகம். ? என்னத்த மறந்தோம்..? அப்பாவுக்கு ஏதாவது…?”

“அதெல்லாம் இல்ல.. எல்லோரும் மேல வாங்க…”

***

“என்ன செண்பகம் ? உயிர் போன மாதிரி கூப்பாடு போடற..?”

“உயிருதான் போயிருச்சும்மா..?”

“என்ன சொல்ற? அப்பாவுக்கு ஏதாவது….?”

“இல்லம்மா..டி.வி.யப்பாருங்க.!””

“நாங்க எப்படா தொலைவோம்னு காத்திட்டிருந்து டி.வி. பாக்க ஆரம்பிச்சிட்டியா….?”

“கல்பனா.. கொஞ்சம் வாய மூடு..என்ன சொல்றாங்ன்னு கேப்போமே!”

“ஒரு வாரமாகவே உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே..!

நேற்று இரவு மூன்று மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி காலை நான்கு மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது..!

இதுவரை நான்கு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..!

இவரின் அறிவுக் கூர்மை அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்..!

மிகுந்த நினைவாற்றல் கைவரப் பெற்றவர்..மறதி எனும் சொல்லே இவரது அகராதியில் இல்லை..!

பள்ளியில் படிக்கும்போதே…”

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..!

மூன்றுநாள் கொடிகள் அரைக்கம்பத்தில்…”

செய்தி வாசிப்பாளர் சிரமப்பட்டு அழுகையை வரவழைத்து, சோகக் கடலில் மூழ்கி இருந்தார்..

“அப்பா..இன்னிக்கு லீவா…?”

“ஆமாண்டா மாயாக்குட்டி…”

“எனக்கு….?”

“உனக்கும் தான் பப்லு செல்லம்…”

“அப்பா..உனக்கும் ஆபீசுக்கு போகவேண்டாமா….?”

“ஷோபா…உனக்கு நல்லா வேணும்..நாளைக்கு நீயே வந்து உன் வேலையப் பாரு ….!”

கல்பனா மனதுக்குள் ஒரு அற்ப சந்தோஷம் …

தாத்தா அவசரமாய் அறையை விட்டு வெளியே வந்தார்…

“என்ன ஆச்சு..? எல்லாரும் டி.வி.முன்னாடி..? ஓ… அதுதான் இன்னைக்கு பேப்பர் இன்னும் வரலியா…?”

“அம்மா..நல்லவேள.. மிஸ் கிட்டேயிருந்து தப்பிச்சேன்…!”

“அப்பா.. நீயும் மேனேஜர் கிட்டேயிருந்து தப்பிச்ச இல்லப்பா…?”

“இப்போ நான்தான் உங்க எல்லார் கிட்டையும் மாட்டிக்கிட்டேன்..?

செண்பகத்தின் மகிழ்ச்சியெல்லாம் மாயமாய் மறைந்து போனது ….

அம்மா..இன்னைக்கு சாப்பாடு…?”

“ஹோட்டலெல்லாம் மூடி இருப்பானே….!”

“கல்பனா.. பிருந்தாமாமிதான் இருக்கவே இருக்காளே..!”

“அப்பா..சமயத்தில உன் மூள நல்லாவே வேல செய்யும்!”

“மாமா.. நம்பர் எங்கியோ மறந்து வச்சிட்டேனே…”

“கல்பனா…எனக்கு மனப்பாடம்..மறக்கவேயில்ல..! எழுதிக்கோ..! 94*** ****7….

“தாத்தா..! யூ ஆர் கிரேட்…! நீங்கதான் அடுத்த சீஃப் மினிஸ்டர்..!”

“இரு..! எனக்கு அவசரமா பாத்ரூம் போகணும்….!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *