மசால்வடையும் ஒரு சொகுசுக்காரும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 22,127 
 

`என்ன கொடுமை சார் இது?’ – சினிமாவில் ஓர் நகைச்சுவை நடிகர் சொல்லும் வசனம் இது. அதை நானும் சொல்ல நேரும் என்று கனவிலும் நினைக்கவில்லை…

பேருந்து செல்லும் மெயின் ரோடில் இருந்த பழக்கடைக்காரரிடம், “சார், இங்கே ஒரு மசால்வடை, பஜ்ஜி விக்கிற ஸ்டால் கடை இருந்துச்சே, அது எங்கே?” என்று கேட்டேன். டாஸ்மாக்குப் பக்கத்துல போட்டாத்தான் வெயாபாரம் ஆவும்னு அந்தக் கடையை சார்பனா மேட்டுப் பக்கம் இடம் மாத்திட்டாங்க சார்!”.

நண்பரின் இரவல் ஸ்கூட்டரில் சார்பனா மேட்டுக்குப் போய் பஜ்ஜிக் கடையைக் கண்டுபிடித்தபோது, செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தைச் சேர்த்துவிட்ட விஞ்ஞானிகளின் சந்தோஷம் வந்தது எனக்கு.

கடந்த ஒரு மணி நேரமாய் அலையோ அலை என்று அலைந்து திரிந்தும் எனக்கு மசால்வடை விற்கும் கடை ஒன்றும் அகப்படவில்லை. கடைசியில் கண்டுபிடித்து நாலு மசால்வடையைப் பொட்டலம் கட்டிக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்டு வெற்றி வீரனாய் வீடு திரும்பினேன்.

வாசற்புறம் இருந்த கார் ஷெட்டில் சாதுப் பிள்ளாண்டானாய் என் சொகுசுக் கார் செக்கச் செவேல் நிறத்தில் பளபளப்புடன் நின்றது. பதினைந்து நாட்களுக்கு முன், நாலு நாள் சென்னைக்கு வேலையாகப் போய்விட்டுத் திரும்பியவன், காரை ஸ்டார்ட் செய்ய முனைந்தபோது, சத்தமே வரவில்லை. எனக்குக் கார் மெக்கானிசம் தெரியாது. ஏதோ ஓட்டுவேன், அவ்வளவுதான். கார் கம்பெனி வொர்க் ஷாப் எஞ்சினீயர் லோகேஷுக்குப் போன் செய்தேன். “அது ஒண்ணுமில்லே சார், நீங்க வெளியூருக்குப் போனதுலேர்ந்து கார் சும்மா நின்னுகினே இருந்துச்சு இல்லியா, பேட்டரி டவுன் ஆகியிருக்கும். காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணிப் பாரு சார். கொஞ்ச நேரம் இஞ்சின் ஓடுச்சுன்னா பேட்டரி சார்ஜ் ஆயிக்கும்…” என்றார்.

நண்பர் அசோக்குக்குப் போன் போட்டு வரவழைத்து, காரைத் தள்ளச் சொன்னேன். ஒரு ஆள் தள்ளுவது சிரமமாக இருந்ததால், என் பேரன் விஷாலைக் கெஞ்சி அவனையும் உதவிக்குச் செர்த்துக் கொண்டேன். தெருவில் புத்தம் புதுக் காரைத் தள்ளுவதை அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்டிர் அதிசயம் என வேடிக்கை பார்த்தார்கள்.

அப்புறம் அசோக்தான் பானெட்டைத் திறக்கச் சொல்லி இஞ்சினைப் பார்த்து அந்த விபரீதத்தைக் கண்டுபிடித்தார். இஞ்சின் உள்ளே கேபிள் ஒயர்கள் கண்டபடி பிய்ந்து தொங்கின; “எலி செமையா பூந்து வெள்ளாடியிருக்கு சார்!” என்றார். எட்டிப் பார்த்தேன். ஆமாம். எலி நிகடிநத்திய திருவிளையாடலினால்தான் கார் ஸ்டார்ட் ஆக மறுக்கிறது என்பதைப் புரிந்து கலங்கிப் போனேன்.

வொர்க் ஷாப் இஞ்சினீயர் லோகேஷிடம் விவரத்தைச் சொன்னதும், “ஒண்ணும் கவலைப் படாதே சார். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம டெக்னீஷியனும் டிரைவரும் அங்க வருவாங்க!” என்றார்.

கொஞ்ச நேரத்தில் கம்பெனியிலிருந்து ஒரு காரில் டெக்னீஷியன் வந்தார். “உங்க காரை டோ பண்ணி கம்பெனி ஒர்க் ஷாப்புக்குக் கொண்டு போய் சரி பண்ணிடறோம்!” என்று சொல்லி, காரைச் சங்கிலி போட்டு இழுத்துப் போனார்.

மறுநாள் போன் வந்தது. லோகேஷ்தான். “சார், மொத்தம் ௪ கேபிளை எலி கடிச்சு வெச்சிருக்கு. மூணு கேபிள் எங்ககிட்டே இருந்தது, அதை ஃபிக்ஸ் பண்ணிட்டோம். நாலாவது கேபிளுக்கு மெட்றாசுக்கு ஆர்டர் ப்ளேஸ் பண்ணியிருக்கோம். நாளைக்கு வந்துடும். காரை நாளைக்கு நீங்க டெலிவரி எடுத்துக்கலாம்…” என்றார். கூடவே, “சார், நீங்க காரை டெலிவரி எடுக்க வர்றப்ப, கொஞ்சம் பொகையிலை வாங்கிட்டு வந்துடுங்க. இஞ்சின்ல அங்கங்கே வெச்சுக் கட்டித் தர்றேன். பொகையிலை நெடிக்கு எலிக வராது!” என்றார்.

பஜாருக்குச் சென்று பதப்படுத்தப்பட்ட, நீள நீளமாக இருந்த புகையிலையை எடை போட்டு ஐம்பது ரூபாய்க்கு வாங்கி வொர்க் ஷாப்புக்கு எடுத்துப் போனேன்.

சரி செய்த காரின் இஞ்சினுள் இரண்டு மூன்று இடங்களில் புகையிலையை மடித்து வைத்து, நூலால் கட்டி, அதை என்னிடம் காட்டினார் லோகேஷ். என் காரை டோ பண்ணி இழுத்துச் சென்றது, கேபிள் மாற்றியது, லேபர் சார்ஜ் என்று மூவாயிரம் ரூபாய் பில்லுக்குப் பணம் செலுத்தியபின், காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

காரின் இஞ்சினுள்ளும், பின்புற டிக்கியிலும் புகையிலை வைக்கப்பட்டிருந்தது. காருக்குள் புகையிலையின் கார நெடி அடித்தது. அப்பாடா! ஒருவழியாய் பிரச்னை தீர்ந்தது… என்று நினைத்தேன். மூவாயிரம் ரூபாயோடு தொலைந்ததே, போகட்டும் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டேன். ஆனால், அது ஒரே வாரத்தில் கானல் நீர் ஆயிற்று!

ஒரு வாரத்துக்குப் பின் காரை ஸ்டார்ட் செய்து பார்த்தேன். பு..ர்..ரென்றது; உடனே, இஞ்சின் ஆஃப் ஆயிற்று.

மறுபடியும் எலி கடித்திருக்குமோ? சேச்சே, இருக்காது…நாம்தான் நிறையப் புகையிலை வாங்கி இஞ்சினில் வைத்திருக்கிறோமே… – பானெட்டைத் திறந்து பார்த்தேன். இந்தத் தடவை இக்னீஷியன் கேபிள் பக்கம் எலி கடித்து வைத்திருந்தது. சட், சனியன்!

மறுபடியும் லோகேஷுக்குப் போன் செய்தேன். காரை வொர்க் ஷாப்புக்குக் கட்டி இழுத்துப் போனார்கள். ரூபாய் இரண்டாயிரம் தண்டம் அழுதேன்.

நண்பர் வேலு சொன்னார். “பொகையிலைக் காரம் நாலைஞ்சு நாளைக்குத் தான் இருக்கும்பா. எலி பிடிக்க மக்கான் பஜார்ல பொறி விக்கிறான். நாலைஞ்சு வாங்கி அதுல மசால் வடை வாங்கிவை. இஞ்சினுக்குள்ளாற போறதுக்கு முன்னாடி, வடையைப் பாத்துட்டு எலி பொறிகிட்டே வரும்; பொட்டுன்னு விழுந்துடும்!”

ஒரு எலிப் பொறி ரூ.50 வீதம் நான்கு பொறிகள் வாங்கினேன். அதில் நீட்டிக் கொண்டிருக்கும் கூரிய முனையில் வடையைச் செருகி வைத்துவிட்டு, வளையத்தைப் பின்னுக்கு இழுத்து நீண்ட கம்பி ஒன்றால் மடக்கி, ஒரு துளையில் இணைத்து விட வேண்டும். எலி வடையைத் தொட்டால், கம்பி விடுபட, வளையம் எலியின் கழுத்தில் பொடேரென்று விழுந்து அமுக்கிக் கொன்று விடுமாம்.

மசால் வடையைத் தேடி வீதி வீதியாய் நான் அலைந்ததற்குக் காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!

இந்தமுறை கார் இஞ்சின் அடியில் நாலு எலிப் பொறியிலும் மசால் வடையைச் செருகி, பொறிகளைப் பரவலாக வைத்தேன். இன்னிக்கு ராத்திரி நாலு எலிகள் மரணம் நிச்சயம்! என்று சொல்லிக் கொண்டே தூங்கப் போனேன். இரவு நிறையக் கனவு. காலையில் ஏராள எலிகள் செத்துக் கிடக்கிறாற் போன்று காட்சிகள்!

அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு எலி கூட மசால்வடை டெக்னிக்கில் மாட்டவில்லை!

பெங்களூரிலிருந்து மகன் கணபதி போனில், “வீட்டுக்குப் பின்புறம் தோட்டம் போட்டிருக்கீங்க இல்லையா? அங்கே போய் எலி வளை இருக்கா பாருங்க!” என்று சொன்னான். போய்ப் பார்த்தேன். சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். தரையில் ஏழெட்டு துவாரங்கள் தெரிந்தன. மகனிடம் சொன்னேன். “அதெல்லாம் பெருச்சாளி தங்கும் வளைகள். செடிகளையெல்லாம் வெட்டித் தள்ளிட்டு, தோட்டத்தை சிமிண்டுத் தரையாக்கிடுங்க. எலியெல்லாம் இடம் மாறிடும். இல்லாட்டி, விவசாயி யார்கிட்டேயாவுது எக்ஸ்பர்ட் ஒப்பினியன் கேளுங்க!” என்றான்.

தோட்டப் பகுதி முழுவதையும் சிமெண்டுத் தரையாக்குவதில் சிரமம் இருந்தது. கல், மண், சிமிண்ட் எல்லாம் அதிகமான விலை விற்பது ஒருபுறம், தரை போட மேஸ்திரி, சிற்றாள் கேட்கும் அதீதக் கூலியைக் கொடுக்கத் தயாராக இருந்தாலும், வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அல்லவா குதிரைக் கொம்பாக இருக்கிறது?

பல்லடம் பக்கத்தில் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி என்கிற நண்பர் பெரிய விவசாயி. அவருக்கு போன் போட்டேன். முழுவதும் கேட்டவர், எனக்கு சில வழிமுறைகளைச் சொன்னார்: “பப்பாளிக் காய் வாங்கி, அதைத் துண்டு துண்டாய் நறுக்கி, எலி வருகிற இடத்துலப் போடுங்க. அதைக் கடிச்சுடுச்சுன்னா அப்புறம் அந்தத் திசைப் பக்கமே எலி வராது. இன்னொண்ணு… எலி வங்குகள்ல பச்சை மிளகாயைப் போடுங்க. அதைக் கடிச்சுட்டு, காரம் தாங்காம ஓடிப் போயிடும். இல்லாட்டி, எலி பிஸ்கட்டுன்னு மருந்துக் கடைகள்ல விப்பாங்க. அதை வாங்கி வளைகள்கிட்டே போட்டீங்கன்னா, அதைத் தின்னுட்டு எலி செத்துப் போகும். ஒரு முக்கியமான விஷயம்… எலி, விஷ பிஸ்கட்டைச் சாப்ட்டுட்டு, வளைகளுக்குள்ளாற போய் செத்துடுச்சுன்னா, நாத்தம் தாங்க முடியாது; அது எங்கே செத்துக் கெடக்குன்னு கண்டு பிடிக்கவும் முடியாது…” என்றார்.

நண்பர் ஜல்லிப்பட்டி மேலும் சொன்னார்: “எலிகளுக்குத் தக்காளின்னா ரொம்ப இஷ்டமாச் சாப்புடும். மருந்துக் கடைகள்ல எலி பாஷாண பேஸ்ட்டுன்னு விக்கிறாங்க. அதை எடுத்து தக்காளியை ரெண்டாப் பிச்சு, அதுல தடவி வளைக்குள்ளே போட்டுடுங்க. செத்துப்போவும்…” என்று அவர் கொடுத்த கூடுதல் தகவலையும் மனதில் பதிந்து கொண்டேன்.

மயிலாடுதுறை நண்பர் பழனிவேல் ஒரு யோசனை சொன்னார்: “ரொம்பச் சிம்பிளா ஒரு யோசனை சொல்றேன், கேளுங்க! ஒரு பூனை வளர்க்க ஆரம்பியுங்க. அது மியாவ்னு எழுப்புற குரல் கேட்டாலே எலிக அந்த இடத்துல நிக்காது; ஓடிப் போயிடும்!”

எனக்கு மண்டை குழம்பியது. எலிக்கு விஷம் வைத்துக் கொல்வதில் அது எங்கே போய் செத்துத் தொலைக்கும் என்பது தெரியாமற் போகும் அபாயம் இருப்பதால், அந்த முடிவைக் கைவிட்டேன். பூனை வளர்ப்பது சரியாக இருக்குமோ என்று தோன்றவே, இப்போது பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் கேட்கிறேன் ; சார், வீட்டுல பூனை வளர்க்கணும். பூனை எங்கே கிடைக்கும்?

Print Friendly, PDF & Email

2 thoughts on “மசால்வடையும் ஒரு சொகுசுக்காரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *