பாஸ்போர்ட் வாங்கலியோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,423 
 

எண்பதை எட்டிவிட்ட என் அம்மா, வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினாள்.

அமெரிக்காவில் சாண்டியாகோவில் இருந்து மகன் மெயில் அனுப்பி இருந்தான் – ‘ஆல் த பெஸ்ட் டாடி!’ லண்டனில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். என் ஒரே மகளிடம் இருந்து. ‘kavalai vaendam. vettri ungalukkae’

அப்ளிகேஷன் கொடுக்க நானும் என் மனைவியும் பாஸ்போர்ட் ஆபீஸ் போகும் செய்தி உலகம் முழுவதும் பரவியிருந்தது. 10 நாட்களாகத் தூக்கத்தையும் தியாகம் செய்து பாரத்தைப் பூர்த்தி செய்தாகிவிட்டது. ஒன்றுக்கு இரண்டாக போட்டோ ஒட்டி, கையெழுத்துகள் சரமாரியாகப் போட்டு, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புக், வோட்டர் ஐ.டி. என்று சகலத்துக்கும் ஜெராக்ஸ் எடுத்து… இன்னும் என்னவெல்லாம் கேட்டு இருந்தார்களோ, அத்தனையையும் ரெடி செய்துவிட்டேன். ஓரத்தில் மஞ்சள், குங்குமம் தடவவில்லை என்பதுதான் குறை!

“பாஸ்போர்ட் கைல கிடைச்சவுடன், நீங்க ப்ளேன் ஏறிடப்போறதில்லை. வாங்கிவெச்சுக்கிட்டா, எப்போ வேணும்னாலும் உதவும்” என்று மருந்து, மாத்திரை கொடுப்பதுபோல் தினமும் மூன்று வேளை சொல்லி, வீட்டில் என்னை மூளைச் சலவை செய்துமெனக்கெட வைத்துவிட்டார்கள்!

பாஸ்போர்ட் அலுவலகத்தில் மனைவியுடன் நான் ஆஜராக வேண்டிய நாள் எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், போஸ்டர் ஒட்டாத குறையாக ஊரெல்லாம் அதைப் பிரகடனப்படுத்தினேன். ஏற்கெனவே பாஸ்போர்ட் வாங்கி, வீட்டு காத்ரெஜ் லாக்கரில் பூட்டி வைத்திருக்கும் பலரும், இதற்காகவே காத்திருந்தது போல் என் மீது அட்வைஸ் மழை பொழியத் தொடங்கினார்கள். ‘மவனே… என் பாஸ்போர்ட் கைல கிடைக்கட்டும்… உங்க எல்லாத்துக்கும் வெச்சுக்கறேன் கச்சேரி!’

நான் படும், படப்போகும் துன்பங்களை எல்லாம் பட்டு, போன மாதம்தான் பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்ற நண்பர், என்னை மரத்தடியில் உட்காரவைத்துப் பாடம் எடுத்தார். பக்கத்தில் மனைவி.

“தட்கல்லதானே அப்ளை பண்ணி இருக்கீங்க?” – இது நண்பரின் முதல் கேள்வி.

“ஆமாம்…”

“நல்லவேளை… ஆர்டினரியா இருந்தா, பாஸ்போர்ட் கிடைக்க ஆறேழு மாதம் ஆயிடும்” என்றார். அடுத்து,

“என்னிக்கு உங்க அப்பாயின்ட்மென்ட்?”

சொன்னேன்.

“எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா? மேடம் எல்லா இடத்துலயும் கையெழுத்துப் போட்டுட்டாங்களா?”

“ஓ யெஸ்!”

“அன்னிக்கு மழை பெய்யாமல் இருக்க கடவுள்கிட்டே வேண்டிக்குங்க…”

கண்கள் மூடி இரண்டு நிமிடம் தியானித்தேன்.

“சரி… காலைல ஏழரை மணிக்கெல்லாம் பாஸ்போர்ட் ஆபீஸ் போயிடுங்க.”

“அத்தனை சீக்கிரமாவா?”

“முடிஞ்சா, இன்னும்கூட சீக்கிரம் போறது நல்லது.”

“ஏங்க… இவருக்கு டயாபடீஸ்… இன்சுலின் போட்டுக்கறார். பசி தாங்காது!” என்று மனைவி குறுக்கிட்டாள். “ஏங்க… முதல் நாள் ராத்திரியே இட்லி ரெடி பண்ணி, மிளகாய்ப் பொடி தடவிவெச்சுடறேன். காலைல புறப் படறதுக்கு முன்னே அதைச் சாப்பிட்டு, காபி குடிச்சுடுங்க. கைல பிஸ்கட்டும், ஹார்லிக்ஸும் எடுத்துக்கறேன். 11 மணிக்கு உங்களுக்குப் பசிக்கும். காலி வயித்துல உடம்பு வீக்காப்போயிடும்… மயக்கம் வந்துடும்!” என்று நிகழ்ச்சி நிரல் தயாரித்த மனைவியிடம், “அப்படியே உங்களுக்கும் ரெண்டு வாழைப் பழம் எடுத்துக்குங்க மேடம்” என்றார் நண்பர்.

“ஏழரை மணிக்குப் போனவுடனே, நீங்க நேரா ரெண்டாவது மாடிக்குப் போயிடுங்க. சீனியர் சிட்டிசனுக்கு எல்லாம் அங்கேதான் டோக்கன் கொடுப்பாங்க!”

“டோக்கனா? நான் ஜெனரல் ஆஸ்பத்திரி ஓ.பி. வார்டுக்கா போறேன்?”

“பாஸ்போர்ட் ஆபீஸ்லயும் டோக்கன் சிஸ்டம்தான்… நீங்க மேலே போயிடுங்க!”

“ஏன் அதையே திருப்பித் திருப்பிச் சொல்றீங்க. சீனியர் சிட்டிசன் ஸ்டேட்டஸ் ஏற்கெனவே வந்தாச்சு. சீக்கிரம் மேலே போக வேண்டியதுதானே!” என்று நான் சொன்னதைக் காதில் வாங்காமல் நண்பர் தொடர்ந்தார்… “மேடம், கீழே க்யூவுல நிற்கட்டும்.”

“ஏழரை மணிக்கே க்யூ இருக்குமா?”

“நீங்க வேற… 6 மணிக்கே ஜனம் வந்துடும்.”

“ஒண்ணுமில்லே… இவளுக்கு ஆர்த்தரைடிஸ் பிராப்ளம் இருக்கு. சேர்ந்த மாதிரி 10 நிமிஷம் நின்னா, கால் ரெண்டும் அப்பம் மாதிரி வீங்கிடும். ஒரு மடக்கு நாற்காலி வேணும்னா கைல எடுத்துக்கலாமா?”

“சும்மா இருங்க… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!” என்று பல்லை நறநறவென்று கடித்தாள் மனைவி.

“எல்லா ஒரிஜினல்களும் உங்ககிட்டேயே இருக்கட்டும்” என்றார் நண்பர்.

“அப்போ இவகிட்டே ஒரிஜினல் கேட்க மாட்டாங்களா?”

“கேட்பாங்க… ஆனா, உங்களுக்கு முதல்ல முடிஞ்சுடும்.”

“காரியமா?”

“விளையாடாதீங்க… செக்கிங் சொன்னேன். அப்புறம் நீங்க ஒரிஜினல்களை எல்லாம் மேடத்துகிட்டே கொடுத்துடலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை.”

“கூட்டத்துல இவளைக் கண்டுபிடிக்க முடியுமா? ம்… நான்தான் தப்புப் பண்ணிட்டேன்.”

“என்ன?”

“ரெண்டு, மூணு வயசு வித்தியாசத்துல ஒரு பெண்ணைக் கல்யாணம் கட்டியிருந்தா, இப்போ அவளும் சீனியர் சிட்டிசன் ஆகியிருப்பா. ரெண்டு பேரும் ஒண்ணாவே மேலே போயிருப்போம். ஐ மீன், ரெண்டாவது மாடிக்கு. இவளுக் கும் எனக்கும் 10 வயசு வித்தியாசம்!”

“அத இப்போ சொல்லுங்க, கல்யாணமாகி 30 வருஷம் ஆயிடுச்சுங்கறதை மறந்துட்டு…”

“எனக்கும் பாஸ்போர்ட் தேவைப்படும்னு அப்போ கண்டேனா?”

கணவன் – மனைவி வாக்குவாதத்தை நண்பர் ரசிக்கவில்லை. வகுப்பு எடுப்பதிலேயே அவர் குறியாக இருந்தார்!

“உங்களுக்கு E கவுன்ட்டர். அங்கே அப்ளிகேஷனைக் கொடுத்தா, செக் பண்ணிப் பார்த்து, ஒரு ஃபைல்லவெச்சுக் கொடுப்பாங்க. அதைப்

பக்கத்து கவுன்ட்டர்ல கொடுத்து, நீங்க எடுத்துருக்கற டி.டி-யையும் கொடுத்தா, அவங்க ஒரு சலான் கொடுப்பாங்க. அதைப் பத்திரமா வெச்சுக்கணும்.”

“அப்போ மேடம்..?”

“அவங்களுக்கும் டோக்கன் கொடுப்பாங்க… அது A, B, C, D ன்னு ஏதாவது ஒரு கவுன்ட்டர் இருக்கும்.”

“அங்கே அப்ளிகேஷனைக் கொடுத்தா, செக் பண்ணி ஃபைல்ல போட்டுக் கொடுப்பாங்க. பக்கத்து கவுன்ட்டர்ல ஃபைலையும், டி.டி-யை யும் கொடுத்தா, சலான் கொடுப்பாங்க. அதைப் பத்திரமா வெச்சுக்கணும்.”

“உங்களுக்கு கற்பூரப் புத்தி. ஒரு தடவை சொன்னதை ‘கப்’னு பிடிச்சுட்டீங்களே… கவலைப்படாதீங்க… ஏதாவது பிரச்னை வந்தா கூப்பிடுங்க. ரெண்டு வாரத்துல பாஸ்போர்ட் ஸ்பீடு போஸ்ட்ல வந்துடும்” என்று நம்பிக்கை ஊட்டினார் நண்பர். வகுப்பு கலைந்தது!

குறிப்பிட்ட நாளன்று மிகச் சரியாக ஏழரை மணிக்கு நாங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, திருப்பதி தர்ம தரிசனத்துக்கு நிற்பது மாதிரி நீண்ட வரிசை எங்களை வரவேற்றது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. எப்போ கவுன்ட்டர் தரிசனம் கிடைத்து, சலான் பிரசாதம் வாங்கி…

“உங்களுக்கு என்ன சார் வேண்டும்?” என்று யாரோ ஒரு ஊழியர் கேட்டார்.

‘மளிகை சாமான்’ என்று சொல்லாமல், “பாஸ்போர்ட் அப்ளிகேஷன்…” என்று இழுத்தேன்.

“தட்கல்லா..?”

“ஆமாம்…”

“நீங்க சீனியர் சிட்டிசனா?”

“ஆமாம்…”

“அப்போ நீங்க மேலே போங்க…” (இவரும்!)

“ரெண்டாவது மாடிக்குத்தானே?”

“ஆமாம்… மேடம்… நீங்க இங்க க்யூவுல நில்லுங்க” என்று சொல்லிவிட்டு, ஊழியர் மாயமானார்.

“ஏங்க… நீங்க ஜாக்கிரதையா படி ஏறிப் போங்க. சுவத்துக்கட்டையைப் பிடிச்சுக்குங்க. மூச்சு வாங்கினா, முதல் மாடில கொஞ்ச நேரம் நின்னுட்டு, அப்புறம் ஏறுங்க. பசிச்சா, பிஸ்கட் சாப்பிடுங்க. பக்கத்துல யாருக்கும் கொடுக்க வேண்டாம்.”

என்னை 90 வயதுக் கிழவராக்கிவிட்டாள் மனைவி. அதில் ஒரு அற்ப சந்தோஷம் அவளுக்கு.

“நீ ஜாக்கிரதையா நில்லு… ஃபைல் பத்திரம்… ஏதாவது வேணும்னா ‘செல்’லுல கூப்பிடு”என்று சொல்லிவிட்டு, மனைவியிடம் இருந்து பிரியா விடை பெற்றேன்.

இரண்டாவது மாடியில் ஏற்கெனவே ஏழெட்டு பேர் உட்கார்ந்து இருந்தார்கள். ஆண்கள், பெண்கள். சராசரி வயது 72 இருக்கும். ஒப்பிடும்போது நான் பச்சா! ஒரு நாற்காலி பிடித்து உட்கார்ந்தேன். கண்களால் அலை பாய்ந்தேன். இரண்டு பெண் கள் கையில் ஆறேழு மாதக் கைக் குழந்தையுடன். மைனர் சைல்டுக்கும் அதுதான் இடம் என்று அறிவிப்புப் பலகை சொன்னது. துணைக்குப் பெண்ணின் அம்மா, அப்பாவும் வந்திருந்தார்கள். ஒரு குழந்தையைப் பக்கத்தில் மேஜை மீது படுக்க வைத்தார்கள். அதன் பிஞ்சு விரலில் மை தடவி, அப்ளிகேஷனில் ஒற்றி எடுத்தார்கள். தம்ப் இம்ப்ரஷன். குழந்தை வீறிட்டது. மையாகிவிட்ட அதன் விரலை, பஞ்சுவைத்து வலிக்காமல் மென்மையாகத் துடைத்தார் தாத்தா. அழுக்கு விரலை, குழந்தை வாயில் போட்டுக்கொண்டுவிடும் என்ற கவலை அவருக்கு. இன்னொரு குழந்தையின் அம்மா, எங்கோ கீழே போய்விட்டு வந்தாள். “இது தப்பான அப்ளிகேஷனாம்… போயிட்டு இன்னொரு நாள்தான் வரணும்…” என்று குழந்தையை அள்ளிக்கொண்டு போனாள்.

ஒரு தாத்தா, சீரியஸாக ஹிந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். முதல் பக்கம் ஆரம்பித்து, கடைசிப் பக்கம் வரையில் ஒரு நியூஸ் விடாமல் படித்து முடித்தார். ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் ‘ஆபிச்சுவரி காலம்’ உன்னிப்பாகப் பார்த்தார். “செய்யறது அதர்மம்… சொல்லிக்கிறது ‘கூட்டணி தர்மம்…’ இந்த நாடு உருப்படாது சார்… யார், யாரையோ என்கவுன்ட்டர்ங்கற பேர்ல ஷூட் பண்றாங்க… ஆனா…” என்று அலுத்துக் கொண்டார் தாத்தா.

பக்கத்தில் இருந்த ஒரு மாமி, பாட்டிலில் இருந்து மோர் எடுத்துக் குடித்துவிட்டுத் தெம்பாகக் கேட்டார், “ஆபீஸ் எப்போ திறப்பாங்க?”

“தெரியலையே… அநேகமா ஒன்பதரை மணிக் குத் திறந்துடுவாங்க.”

இதற்குள் நிறைய சீனியர்கள் சேர்ந்து விட்டார்கள்.

என்னுடைய போன் ஒலித்தது. டிஸ்ப்ளேயில் மனைவி.

“அதே இடத்துலதான் இன்னும் நின்னுக் கிட்டு இருக்கேன். க்யூ நகரவே ஆரம்பிக்கலே… நீங்க?” என்று கேட்டாள்.

“எனக்கு நல்லாப் பொழுது போகுது. இன்னும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரிக்கலே” என்றேன்.

மணி ஒன்பதரை. அலுவலக ஊழியர் ஒருவர் வந்து, தனது இருக்கையில் உட்கார்ந்து, ஒவ்வொரு அப்ளிகேஷனாகப் பிடுங்காத குறையாக வாங்கி, முத்திரை குத்தி, டோக்கன் எண் ஒட்டினார். எனக்கு E 6.

திபுதிபுவென்று இன்னோர் அறைக்கு ஓட்டமும், நடையும், தள்ளாட்டமுமாக விரைந்து, நாற்காலியைப் பிடித்தோம். கவுன்ட்டர்களுக்கு அந்தப் பக்கம் காலியாக இருந்தது. இன்னமும் டியூட்டிக்கு வரவில்லை.

வாட்டசாட்டமான செக்யூரிட்டி வந்தார். என்னைப் பார்த்து முறைத்தார்.

“சார்… இது சீனியர் சிட்டிசன்ஸ் கவுன்ட் டர். எழுந்து வெளியே போங்க” என்றார்.

எனக்குக் கொஞ்சம் பெருமையாக இருந்தது! வயதைச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தினேன்.

மனைவி மெசேஜ் அனுப்பினாள். ‘எனக்கு D 36…’

“அங்கே ஏன் போய் நிக்கறீங்க? நாற்காலி போட்டிருக்கில்லே. உட்கார மாட்டீங்களா?” என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டு இருந்த செக்யூரிட்டியிடம் நிறையப் பேர் சந்தேகம் தெளிந்துகொண்டார்கள்.

“கேஷ்தான் கட்டணும்… டி.டி. வாங்கிக்கிட்டா உங்க அதிர்ஷ்டம்…” என்று தப்பும் தவறுமாக ‘கைடு’ செய்தார்.

ஒரு வழியாக, கவுன்ட்டரில் வெளிச்சம் பரவியது. மின் விசிறிகள் சத்தம் போட்டுக்கொண்டே சுழன்றன. அலுவலகம் இயங்க ஆரம்பித்துவிட்டது. கீழே க்யூவில் நின்று இருந்தவர்களில் ஒரு சிலர் வேக வேகமாக வந்தார்கள். என் மனைவியைத்தேடி னேன். ஏமாந்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் களில் பலர் நேற்று டோக்கன் பெற்றவர்கள். இன்று பணம் கட்டி சலான் வாங்க வந்திருக்கிறார்கள்.

“இந்த மாதிரி தனித் தனியால்லாம் கொடுத்தா வாங்க மாட்டேன்… ஒண்ணா சேர்த்து பின் போட்டுக் கொண்டுவாங்க.”

“இங்கே ஏன் கூட்டமா வந்து நிக்கறீங்க? ஒவ்வொருத்தரா வாங்க. இல்லேன்னா, நான் எழுந்து போயிடுவேன்” என்றெல்லாம் அரசு ஊழியர்கள் செவ்வனே கடமை ஆற்றினார்கள்.

“டோக்கன் நம்பர்: E 6…” என்று மைக் அலறியது.

என் அப்ளிகேஷனையும், ஒரிஜினல்களையும் கொடுத்துவிட்டு, இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டினேன். எதையாவது காரணம் சொல்லி, திருப்பி அனுப்பிவிடாமல் இருக்க வேண்டுமே! நெற்றிப்பொட்டில் வியர்த்தது. போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ, என்னவோ… கேள்வி எதுவும் எழுப்பாமல், மனுவில் கையெழுத்திட்டு, ‘தட்கல்’ என்று அச்சிடப்பட்டு இருந்த ஃபைலில் போட்டுக்கொடுத்தார் அந்தப் புண்ணியவதி.

அடுத்த கால் மணி நேரம், இன்னொரு வரிசையில் நின்று, டிமாண்ட் டிராஃப்ட்டைக் கொடுத்து, கம்ப்யூட்டர் கொடுத்த சலானைப் பெற்று, கண்களில் ஒற்றிக்கொண்டேன்! பத்தரைக்குள் என் வேலை முடிந்துவிட்டது.

அறையைவிட்டு வெளியே வந்து, போனை எடுத்து, “நீ எங்கே இருக்கே.?” என்றேன், D 36 -இடம்”.

“நான் முதல் மாடியில் நின்னுட்டு இருக்கேன். இப்பதான் 17 முடிஞ்சிருக்கு” என்றாள் மனைவி. அவளிடம் ஒரிஜினல்களை எல்லாம் கொடுத்துவிட்டு, படி இறங்கிக் கீழே வந்தேன். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் ஸ்டேஷன், அரசு பொது மருத்துவமனை என்று எல்லாவற்றையும் தோற்கடிக்கும் கூட்டம் வெளியே! ஆனால், கசா முசாவெல்லாம் கிடையாது. சமர்த்தாக எல்லோரும் க்யூவில் நின்று நகர்ந்துகொண்டு இருந்தார்கள்.

மெயின் கேட்டுக்கு வெளியே, பிளாட் ஃபார வண்டியில் மசால் வடையும், டீயும் பரபரப்பாக விற்பனை.

நேரம் போக்க, பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தை மூன்று முறை சுற்றி வந்தேன். நிறையப் பேர் கையில் அப்ளிகேஷன்களுடன் பிஸியாக அலைந்துகொண்டு இருந்தார்கள்.

மறுபடியும் படி ஏறி முதல் மாடி போனேன். படிக்கட்டில் அதே இடத்தில் கால் கடுக்க நின்றுகொண்டு இருந்தாள் அவள்.

இடைப்பட்ட நேரத்தில் நான் நொந்து நூலானதைத் தவிர்த்துவிட்டு, க்ளைமாக் ஸுக்கு வந்துவிடுகிறேன்.

அதோ, கையில் சலானுடன் இறங்கி வருகிறாள் என் மனைவி.

“எல்லாம் முடிஞ்சுதா..?”

“அதை ஏன் கேட்கறீங்க?”

“சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான்…”

“என் அப்ளிகேஷனைப் பார்த்துட்டே வந்த லேடி, திடீரென்று என்னை நிமிர்ந்து பார்த்தாங்க. ‘பேங்க் ஸ்டேட்மென்ட் ஒரிஜினல் எங்கே?’ன்னு ஏதோ கேட்டாங்க. அவர்கிட்டே இருக்கு… அவர் இன்னொரு கவுன்ட்டர்ல நிக்கறார்’னு சொல்லிட்டு, பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கறதா வேண்டிக்கிட்டேன். நல்லவேளை, அவங்க அதுக்கு மேலே எதுவும் சொல்லாம ஃபைலைக் கையில் கொடுத்துட்டாங்க!”

நேரம் அப்போது 12.30.

பசி வயிற்றைக் கிள்ள… வெளியே வந்தேன்/தோம்.

நண்பர் போனில் அழைத்தார். “எல்லாம் முடிஞ்சுடுச்சா?”

“இப்பதான் முடிஞ்சது.”

“கவலையைவிடுங்க… இன்னும் ரெண்டு வாரத்துல பாஸ்போர்ட் உங்க கைக்கு வந்துடும்..”

“அது வர்றப்போ வரட்டும்… எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இன்னிக்கு ராத்திரியே ‘பாஸ்போர்ட்’ வேண்டும்!” என்றேன்.

“புரியுது… கலக்கிடுவோம்” என்றார் நண்பர்!

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *