பார்வதி கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,915 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பார்வதி கதை

“விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பதினான்காவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘பார்வதி, பார்வதி’ என்ற பாவை ஒருத்தி எங்கள் பக்கத்திலே இருந்தாள். எண்ணிப் பதினாறு வயது முடியு முன்னரே அவள் பக்கத்து வீட்டுப் பையனான பரஞ்சோதியைப் பார்த்து, ‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான், பார்வையிலே படம் பிடிச்சான்!’ என்று தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று பாட, பதிலுக்கு அவனும், ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? பூவாடை போட்டு வர, பூத்த பருவமா?’ என்று மொட்டை மாடியில் நின்று பாட, ‘எங்கே, எப்பொழுது யார் கிடைப்பார்கள்?’ என்று வேறுவேலை ஒன்றும் இல்லாமல் காத்துக் கொண்டிருந்த காதலாகப்பட்டது, அன்றே அவர்களுக்கிடையில் தோன்றி, ஊன்றி, முளை விட்டு, இலை விட்டு, செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, பழுக்கும் வரை ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர், திடீரென்று ஒருநாள் விழித்துக்கொண்டு, ‘அப்படியா சமாசாரம்? ஆச்சா, போச்சா?’ என்று அங்கொரு காலும், இங்கொரு காலும் எடுத்து வைத்துக் ‘குதி, குதி’ என்று குதிக்க, ‘சும்மா நிறுத்துங்கள்!’ என்பதாகத்தானே முச்சந்தியில் கை காட்டி வண்டிகளை நிறுத்தும் போலீஸ்காரன்போல் அவள் தன் பெற்றோரை அலட்சியமாகக் கை காட்டி நிறுத்துவாளாயினள்.

‘பள்ளிக்கூடம் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நேற்று நீ அந்தப் பயலோடு எங்கேயடி, போனாய்?’ என்பதாகத்தானே தாயாகப்பட்டவள் சீற, ‘நான் ஒன்றும் அந்தப் பயலோடு போகவில்லை; வாத்தியாரம்மாவோடு ‘எக்ஸ்கர்ஷன்’தான் போயிருந்தேன்!’ என்பதாகத்தானே மகளாகப்பட்டவள் ‘காதல் பொய்’களில் ஒன்றைச் சொல்லி, அவள் வாயை அடக்குவாளாயினள்.

‘இப்படிப் போய்ப் போய்த்தான் அவள் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு வருஷங்கள் உட்கார்ந்திருக்கிறாள் போல் இருக்கிறது!’ என்பதாகத்தானே தகப்பனாராகப் பட்டவர் திருவாய் மலர, ‘நானா உட்கார்ந்திருக்கிறேன்? அவர்கள் உட்கார வைத்தால் அதற்கு நான் என்ன செய்வதாம்?’ என்பதாகத்தானே மகளாகப்பட்டவளும் தன் பவளவாய் திறந்து, பதவிசாகச் சொல்வாளாயினள்.

‘காலேஜுக்குப் போனால்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்பார்கள்: ஹைஸ்கூலிலேயே இப்படி நடக்கிறதே?’ என்று தாயார் மூக்கின்மேல் விரலை வைக்க, ‘காலம் அப்படி இருக்குடி! எலிமெண்டரி ஸ்கூலிலேயே இப்படியெல்லாம் நடந்தாலும் இப்போது ஆச்சரியப் படுவதற்கில்லை!’ என்று தகப்பனார் தம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்காருவாராயினர்.

‘அவன் என்ன ஜாதியோ, இழவோ தெரியவில்லையே? ஒரே ஜாதியாயிருந்தாலும் மானம் போவதற்கு முன்னால் மூன்று முடிச்சைப் போட்டு விட்டுவிடலாம்’ என்று தாயாகப்பட்டவள் சொல்ல, ‘அதற்கும் பதினெட்டு வயதாவது ஆக வேண்டாமா? எதற்கும் உன் மகளைக் கேட்டுப் பார், அவன் என்ன ஜாதி என்று?’ ‘அவன் என்ன ஜாதியடி?’ என்று மகளைக் கேட்க, அவள் ‘இப்படியும் ஒரு முண்டம் இருக்குமா?’ என்பதுபோல் தன்னை மட்டுமே புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு ‘களுக்’கென்று சிரிக்க, தாயார் ஒன்றும் புரியாமல், ‘என்னடி, சிரிக்கிறாய்?’ என்று கேட்க, ‘ஜாதி மதத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு காதல் பிறப்பதில்லை அம்மா, காதல் பிறப்பதில்லை!’ என்பதாகத் தானே, தான் படித்த கதைகளிலிருந்தும், பார்த்த சினிமாக்களிலிருந்தும் கண்ட உண்மையை அவள் பளிச் சென்று எடுத்துச் சொல்ல, ‘அப்படியென்றால் அவன் ஒரு ஜாதி, நீ ஒரு ஜாதியா?’ என்பதாகத்தானே தாயார் மேலும் ஒரு ‘பிற்போக்குக் கேள்வி’யைக் கேட்டு வைக்க, ‘ஆமாம், ஆமாம், ஆமாம்!’ என்று அவள் தன் ‘முற்போக்குப் பதி’லை ஒரு முறைக்கு மும்முறையாகச் சொல்லி வைப்பாளாயினள்.

இதைக் கேட்டதும், ‘நடக்காது; இந்தக் கலியாணம் என் உயிருள்ளவரை நடக்கவே நடக்காது!’ என்று தகப்பனார் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொண்டே ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து நிற்க, ‘நடக்காவிட்டால் என்னை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது!’ என்று மகளும் அழுத்தம் திருத்தமாக ஒரு விள்ளு விள்ளிச் சொல்லி, அவரைப் பயமுறுத்துவாளாயினள்.

‘இப்படிப்பட்ட பெண்ணை உயிரோடு பார்ப்பதும் ஒன்றுதான்; உயிரில்லாமல் பார்ப்பதும் ஒன்றுதான்!’ என்று தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, ‘மணந்தால் நான் அவரைத்தான் மணப்பேன்; இல்லாவிட்டால் மரணத்தைத் தழுவுவேன்!’ என்று மகளாகப்பட்டவள் தான் கற்ற சினிமா வசனங்களிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து அவருக்கு முன்னால் வீச, ‘ஐயோ, அப்படியெல்லாம் செய்து விடாதேடி யம்மா!’ என்று அவள் தாயாராகப்பட்டவள் அவளைக் கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் வடிப்பாளாயினள்.

பார்த்தார் தகப்பனார்; ‘பக்கத்து வீட்டு பருவ மச்சா’னையும், ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவ’த்தையும் எப்படிப் பிரிப்பதென்று யோசித்தார். அதற்கு முதற்படியாகப் ‘படித்தது போதும், என் அருமை மகளே!’ என்று தம் மகளைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தினார். நிறுத்தியபின் அவளுக்குப் ‘பால் கசக்கிறதா, படுக்கை நோகிறதா?’ என்று கவனித்தார்; ‘இல்லை’ என்று தெரிந்தது. அதே மாதிரி பக்கத்து வீட்டுப் பையன் அவளைப் பார்க்காத ஏக்கத்தால் ‘பாகாய் உருகுகிறானா, துரும்பாய் இளைக்கிறானா?’ என்று பார்த்தார்; அவன் பலூனாய்ப் பருத்து வந்ததைக் கண்டு பரம திருப்தியடைந்தார். ஆனாலும், ‘அன்புள்ள அத்தான் ஆசைக்கோர் கடிதம்’ என்று இங்கிருந்தும், ‘உன்னைக் கண் தேடுதே! உன் எழில் காணவே, என் உளம் நாடுதே!’ என்று அங்கிருந்தும் ‘கடிதம் விடு தூது’ நடக்க, அந்தத் துதிலிருந்தும் தப்பவதற்காக அவர் தம் வீட்டை மாற்றினார். அப்போதும் அந்தத் தூது நிற்காமல் தபால் இலாகாவினர் கைக்குப் போய்ச் சேர, அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யாமல் பிள்ளையின் கடிதத்தைப் பெண்ணைப் பெற்றவர்களிடமும், பெண்ணின் கடிதத்தைப் பிள்ளையைப் பெற்றவர்களிடமும் கொடுக்க, உடனே பிள்ளையின் தகப்பனார் துடிப்பதற்கு மீசையில்லாத குறையைத் தம் குடுமியை அவிழ்த்துப் பட்டென்று ஒரு தட்டுத்தட்டி முடிவதில் தீர்த்துக்கொண்டு பெண்ணைப் பெற்றவரைத் தேடி வர, ‘என்ன சங்கதி?’ என்று இவர் அவரை விசாரிக்க, ‘உம்முடைய பெண்ணை அடக்கி வையும்! மரியாதையாகச் சொல்கிறேன்; உம்முடைய பெண்ணை அடக்கி வையும்!’ என்று அவர் ‘ருத்திர தாண்டவம்’ ஆட, ‘யாரிடம் சொல்கிறீர்? நீர் முதலில் உம்முடைய பையனை அடக்கி வையும்!’ என்று இவர் ‘ஊழிக்கூத்’தே ஆட, அதற்குள் அவருடைய சகதர்மிணி ‘தா, தை’ என்று அங்கே வந்து, ‘என்னதான் இருந்தாலும் இப்படியா? ஆற்ற மாட்டாமல் பெண்ணைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு அகமுடையான் தேடி வைக்கவும் அறிவு இருக்க வேண்டாமா? அதற்காக இப்படியா ஊரை மேய விடுவது? தூ!’ என்று கீழே துப்ப, ‘யாரைப் பார்த்துக் கீழே துப்புகிறாய்? அயலான் வீட்டுப் பெண்ணின் தலையில் கை வைக்கும் அழகான பிள்ளையைப் பெற்று வைத்துக் கொண்டிருக்கும் நீயா என்னைப் பார்த்துக் கீழே துப்புகிறாய்? உன் மூஞ்சியிலேயே நான் துப்புகிறேன். பார்! தூ!’ என்று இவருடைய மனைவி அவள் முகத்திலேயே துப்ப, இருவரும் ஒருவர் தலை முடியை ஒருவர் வளைத்துப் பிடித்துக்கொண்டு, முடிந்த மட்டும் அடித்துக் கொள்வாராயினர்.

தாங்கள் குடுமியைப் பிடித்துக் கொள்வதற்குப் பதிலாகத் தங்கள் மனைவிமார் இருவரும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு நிற்பதைக் கண்ட கணவன்மார் அப்படியே திகைத்துப் போய் நிற்க, அதற்குள் அவர்கள் இருவரும் ஒருவர் சவுரியை ஒருவர் பிடுங்கிக் கையில் வைத்துக் கொண்டு, ‘மரியாதையாக என் சவுரியைக் கொடுடி!’ என்று அவளை இவளும், ‘மரியாதையாக என் சவுரியைக் கொடுடி’ என்று இவளை அவளும் இரைக்க இரைக்கக் கேட்டுக் கொண்டு நிற்பாராயினர்.

இந்தச் சமயத்தில் தங்கள் மனைவிமாரின் உண்மையான முடியின் அளவை உள்ளது உள்ளவாறு தெரிந்து கொண்ட கணவன்மார் இருவரும் தங்களுக்குள்ளே சிரித்தபடி அவர்களுக்கிடையே புகுந்து, அவளுடைய சவுரியை இவளிடமும், இவளுடைய சவுரியை அவளிடமும் வாங்கிக் கொடுத்து விட்டுத் தங்கள் தங்கள் வீடு நோக்கி நடக்க, ‘கலியாணத்தின் போது நடக்க வேண்டிய சம்பந்தி சண்டை இப்போதே நடந்துவிட்டதால் இனி கலியாணம் நடக்க வேண்டியதுதான் பாக்கி!’ என்று நினைத்த காதலர்கள் இருவரும் தங்களைப் பார்த்து ஊர் சிரிப்பதை மறந்து, தங்களைத் தாங்களே பார்த்துச் சிரித்துக் கொள்வாராயினர்.

இப்படியாகத்தானே இவர்களுடைய காதல் ‘ஊர் அறிந்த ரகசிய’மாய்ப் போக, பெண்ணைப் பெற்றவர் அப்போதும் தம் பிடிவாதத்தை விடாமல் தம்முடைய பெண்ணை வேறு ஒர் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அங்கே ‘பரமசிவம், பரமசிவம்’ என்ற ஒரு பையனைப் பார்த்து, அவன் தலையில் பார்வதியைப் பலவந்தமாகக் கட்டி வைத்து தம் கடமையைத் தீர்த்துக்கொண்டதோடு, ஜாதியையும் ஒருவாறு காப்பாற்றி வைப்பாராயினர்.

இந்தச் செய்தியை அறிந்தான் பரஞ்சோதி; இப்படி நடந்த பின் ஒரு காதலன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சாவுச் சேதியைக் கூட சந்தோஷமாக வெளியிடும் ஒரு தினசரியைத் தினந்தோறும் படித்து வந்ததன் காரணமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த அவன், ஒரு பாழுங்கிணற்றைத் தேடினான்; கிடைக்கவில்லை. ஒரு துளி விஷத்தைத் தேடினான்; கிடைக்கவில்லை. ஒரு முழம் கயிற்றைத் தேடினான்; கிடைத்தது. அவ்வளவுதான் ‘ஏன், காதலித்தோம்?’ என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்?’ என்று கூடத் தெரியாமல், பதினெட்டு வயதுகூட நிரம்பாத அந்தப் பாவி மகன் தன் கழுத்தில் அந்தக் கயிற்றைச் சுருக்கிட்டுக் கொண்டு தொங்கிவிட்டான்!

இந்தச் செய்தியை அறிந்தாள் பார்வதி; இப்படி நடந்த பின் ஒரு காதலி என்ன செய்ய வேண்டும் என்பதை, தான் ஏற்கெனவே பார்த்த பல சினிமாப் படங்களிலிருந்து தெரிந்து வைத்துக் கொண்டிருந்த அவள், ஒரு முழம் கயிற்றைத் தேடினாள்; கிடைக்கவில்லை. ஒரு துளி விஷத்தைத் தேடினாள்; கிடைக்கவில்லை. ஒரு பாழுங்கிணற்றைத் தேடினாள்; கிடைத்தது. அவ்வளவுதான்; ‘ஏன் காதலித்தோம்?’ என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்?’ என்றுகூடத் தெரியாமல், அந்தப் பதினாறு வயது பாவி மகள் பாழுங் கிணற்றிலே விழுந்து சாக, ‘அது தற்செயலாக நிகழ்ந்த விபத்து!’ என்று கதை கட்டி, அவள் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட குற்றத்திலிருந்து தங்கள் மகளையும் தங்களையும் ஒருங்கே காத்துக்கொண்டு அமைதியுறுவாராயினர்.

இந்த அருமையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுபோல் சீர்திருத்தவாதிகள் சிலர் கடச்சுட வந்து, சுடுகாட்டிலேயே சுடச்சுட ஒரு கூட்டத்தைக் கூட்டி, ‘பலி! ஜாதி வெறிக்கு இரு இளம் உயிர்கள் பலி!’ என்று சுடச் சுடப் பேச, ‘ஜாதி வெறிக்கு என்று மட்டும் சொல்லாதீர்கள்; பதினெட்டு வயதுக்கு முன்னரே காதலிக்க ஆரம்பித்துவிட்ட அறியாமைக்குப் பலி, அசட்டுத்தனத்துக்குப் பலி, அதிகப்பிரசங்கித்தனத்துக்குப் பலி என்றும் சொல்லுங்கள்!’ என்பதாகத்தானே அங்கிருந்த ஒரு பெரியவர் அதை மறுத்துச் சொல்ல, ‘அடி, அந்தப் பழம் பஞ்சாங்கத்தை! உதை, அந்த மூடப் பழக்க வழக்கத்தை!’ என்று அவர்கள் அவரை விரட்டிக்கொண்டு ஓடுவாராயினர்.

இந்த விதமாகத்தானே இவர்கள் கதை முடிய, உண்மையை அறியாத பரமசிவம் தன் மனைவியின் மரணத்தால் மனம் உடைந்து, ‘என் மனைவியைப் பலி கொண்ட பாழுங் கிணற்றுக்கு நானும் பலியாவேன்!’ என்று பலியாக, அது சீர்திருத்தவாதிகள் உள்பட அனைவரையுமே சிந்தனைக்குள் ஆழ்த்துவதாயிற்று.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘பார்வதிக்காகப் பரஞ்சோதி செத்தான்; பரஞ்சோதிக்காகப் பார்வதி செத்தாள்; பரமசிவம் ஏன் செத்தான்?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அறிவில்லாமல் செத்தான்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது காண்க… காண்க… காண்க…

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *