பத்ம வியூகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 17,761 
 

ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. மேலும், நூற்றுக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர். அதிலும் அந்தத் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது குழந்தைகளும் பெண்களும்தான். இப்படி ஒரு தீவிரமான தாக்குதலை, சற்றும் எதிர்பார்க்காததால், இந்த முறை, அரசு இயந்திரங்கள் எல்லாம் ஆடிப் போயிருந்தன.

தொலைக்காட்சி செய்திகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த நாலு பேரும் கிட்டத்தட்ட ஒரே ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இனியும் அரசாங்கத்தை நம்பி ஒரு பயனுமில்லை. எதிரிகளிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியதுதான் ஒரே வழி.

ஒரு நிழல் யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த அந்த வீட்டில், மந்திராலோசனைக் கூட்டம் இப்படித்தான் ஆரம்பமானது.

ஶ்ரீராம்தான் முதலில் ஆரம்பித்தான். “நாம் செய்ய வேண்டிய முதல் வேலை வாசல் பாதுகாப்பைப் பலப்படுத்துவது. எதிரிகள் உள்ளே நுழைவதற்கான அனைத்து வழிகளும் மூடப்படவேண்டும்”. ஶ்ரீராம் ஒரு பிரபல செக்யூரிட்டி ஏஜென்சியில் மேனேஜராக இருப்பதால் பாதுகாப்பு பற்றிய எல்லா அம்சங்களும் அவனுக்கு அத்துபடி.

“எல்லா வழிகளும் மூடப்பட்டால் நம்முடைய தினசரி வேலைகளை எப்படி பார்ப்பது? “ என்றான் பிரான்சிஸ். அவன்தான் அந்த வீட்டின் “டவுட்டிங்க் தாமஸ்”. எதிலும் எப்போதும் சந்தேகப்படுவது அவன் கூடப் பிறந்த குணம்.

“அப்படி இல்லை பிரான்சிஸ் ! இந்தப் பாதுகாப்புக் கவசம் எதிரிகளின் உடல், மற்றும் உருவ அமைப்புக்கேத்தபடி வடிவமைக்கப்பட்டது. எதிரிகளின் ஊடுருவலை முற்றிலுமாகத் தடை செய்யும் அதே நேரத்தில் நம்முடைய நடமாட்டத்திற்கு எந்த விதமான தடங்கலையும் ஏற்படுத்தாது. இதுதான் நான் நம்முடைய முதல் பாதுகாப்பு வியூகம்” என்று அந்தப் பொருளை எடுத்து மேசையின் மீது வைத்தான் ஶ்ரீராம். அதைப் பரிசீலித்துப் பார்த்த மற்ற மூவரின் முகத்திலும் திருப்தி தெரிந்தது.

“இது நமது இரண்டாவது பாதுகாப்புக் வியூகம்” என்ற ஆரிஃப், உள்ளங்கை அளவில் இருந்த ஒரு டியூபை எடுத்து மேஜையின் மேல் வைத்தான். ஏதோ பற்பசை டியூப் போல இருந்த அதன் மேல் எச்சரிக்கை குறியீடும், கையாளுவதற்கான விதிமுறைகளும் அச்சடிக்கப்பட்டிருந்தன.

அதைக் கையில் எடுத்து திறக்கப் போன பிரான்சிஸை சைகையாலேயே தடுத்த ஆரிஃப் “ தேவையில்லாமல் உபயோக்கிக்க வேண்டாம். சில பின் விளைவுகளைக் கொண்டது இது“ என்று எச்சரித்து, அதை எதிரியிடம் எப்படி பிரயோகிப்பது என்று மற்ற மூன்று பேருக்கும் தெளிவாக விளக்கினான். கெமிக்கல் இஞ்சினியராக இருக்கும் ஆரிஃப் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று பிரான்சிஸ் உட்பட அனைவரும் நம்பினார்கள்.

மூன்றாவது யார் பிரான்சிஸா ? லக்ஷ்மணா ? என்றான் ஶ்ரீராம்.
இப்போது மூன்றாவது கவசம் லக்ஷ்மணின் பையை விட்டு வெளியே வந்தது. ஒரு தீப்பெட்டி அளவிலேயே இருந்த அந்த பொருளை கையில் எடுத்தான் ஶ்ரீராம். “ரொம்ப சின்னதா இல்லை ? “ என்றவனை இடை மறித்த லக்ஷ்மண். போர்க் கருவிகளின் தீவிரம் அதன் உருவத்தில் இருப்பதில்லை வீரியத்தில்தான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டின் உருவம் சிறியதுதான் ஆனால் … வீரியம் … …. எல்லோருக்கும் தெரிந்ததுதானே ? என்றான்.

“இதைத் தனியாகப் பிரயோகிக்க முடியாது” என்று அதை செயல்படுத்தும் மற்றொரு உபகரணத்தை எடுத்து மேஜையில் வைத்தான். அதை எந்த சமயத்தில், எப்படி, எவ்வளவு நேரம் பயன் படுத்த வேண்டும் என்று விளக்கினான். மூன்றாவது வியூகமும் திருப்திதான்.

கடைசியாக, “வாப்பா ! எலக்ட்ரிகல் இஞ்சினியர் ! நீதான் கடைசி !” என்றவுடன் பிரான்சிஸ் எழுந்தான். சோபாவின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கவரைப் பிரித்து டென்னிஸ் மட்டை போல நீளமாக இருந்த ஒரு பொருளை வெளியே எடுத்தான்.

இதுதான் நம் கடைசி வியூகம். உங்கள் மற்ற வியூகங்கள் எதிரி நுழைவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.. ஆனால் என்னுடைய இந்த வியூகம் மீறி உள்ளே வரும் எதிரியைத் நேரடியாகத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டது என்று சொன்ன பிரான்சிஸ் அதை ஒரு முறை செயல்படுத்தியும் காண்பித்தான்.

மேஜையில் வைக்கப்பட்டிருந்த அந்த நான்கு கவசங்களையும் மீண்டும் ஒரு முறை பார்த்த நாலு பேரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். முதல் மூன்று வியூகங்களும் எதிரியை உள்ளே விடாமல் தடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், மீறி எதிரிகள் நுழையலாம். ஆனால், கடைசி வியூகம் சூப்பர். அதுதான் எதிரிக்குக் கொடுக்கப் போகும் மரண அடி. இது ஒரு வகை பத்ம வியூகம். இது ஒரு வழிப் பாதை நுழைந்தவர் யாரும் உயிருடன் வெளியே போக முடியாது

எதிரி இப்போது வரட்டும் பத்ம வியூகத்திற்குள் ! ஒரு கை பார்த்து விடலாம் !.

அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதே நேரத்தில், அந்த வீட்டிலிருந்து 100 அடி தூரத்தில் இருந்த பெரிய தண்ணீர் தொட்டிக்குள் வேறோரு சதித் திட்டம் தீட்டப் பட்டுக் கொண்டிருந்தது. அந்த சதிக் கூட்டத்திலிருந்து நான்கு “ ஏயிடஸ்” வகை கொசுக்கள், டெங்கு வைரஸை உடல் முழுதும் ஏற்றிக் கொண்டு, திறந்து கிடந்த தண்ணீர்த் தொட்டியில் இருந்து கிளம்பி “ஙொய்ய்…. ய்ய்ய்” என்ற ரீங்காரத்துடன் அந்த வீட்டை நோக்கி வேகமாகப் பறந்து வந்து கொண்டிருந்தன.

அப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்த்து, அந்த வீட்டில் இருந்தவர்கள், முதல் வியூகமான நெட்லான் வலை, இரண்டாவது வியூகமான ஓடோமாஸ் கிரீம், மூன்றாவது வியூகமான ஆல் அவுட் மேட் மற்றும் நான்காவது வியூகமான எலக்ட்ரிக் பாட் டுடன் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *