நீ இன்னா ஸார் சொல்றே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 19,161 
 

கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.

நான் ஒண்ணும் ‘லூஸ்’ இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா… எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம்.

அதான் ஸார்… நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்… பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கிட்டிருக்கும் போதே அப்படிப் பார்த்தா நா உங்க கண்ணிலே ஆம்பிட்டுக்குவேன்… ஆனா நம்பகிட்டே ஒரு பழக்கம்… அது நல்லதோ, கெட்டதோ… யாருக்கிட்டேயும் அனாவசியமா பேசிக்க மாட்டேன். நான் பேசறதே இல்லே… பின்னே என்னா ஸார், பேசறதுக்கு இன்னா இருக்குது! ரொம்பப் பேசறவனெ நம்பவே கூடாது ஸார்! அவனுக்குப் புத்தியே இருக்காது. பேசாம இருக்கிறவனையும் நம்பக் கூடாது… ஏன்னா அவன் பெரிய ஆளு ஸார்… சமயம் வாச்சா ஆளையே தீர்த்துப் பிடுவான்.

“அந்தா பெரிய ஓட்டல்லே நீ இன்னாடா பண்றே பாண்டியா?”ன்னு கேப்பீங்க. ஐயாதான் மூணாவது மாடியிலே வெயிட்டர் பாய். இன்னா ஸார், வெயிட்டர் பாயின்னா கேவலமா பூடுச்சா… நீ கூடப் போட மாட்டே ஸார், அந்த மாதிரி ‘ஒயிட் டிரஸ்’; இடுப்பிலே கட்டியிருக்கிற பெல்டு இருக்கே, அசல் சில்க், சார் சில்க்! பொத்தானெல்லாம் சும்மா பளபளன்னு… ஒரு தடவை வந்து நம்மெ கண்டுகினு போ சார்… யார் வேண்ணாலும் வரலாம்… ரூம் வாடகைதான் பதினைஞ்சு ரூபா… மாசத்துக்கான்னு கேக்காதே… இவன் யாரோ சுத்த நாட்பொறம்னு கேலி பண்ணுவாங்க… ஒரு நாளைக்குப் பதினைஞ்சு ரூபா நைனா; ரூமெல்லாம் படா டமாசா இருக்கும்… சோபாவுங்க இன்னா, கட்டிலுங்க இன்னா… கண்ணாடிங்க இன்னா – பாத்ரூம்லே கண்ணாடிங்க வேற – ஷவர்பாத், ‘சுட்’ தண்ணி, ‘பஸ்’ தண்ணி – வேற இன்னா வோணும்! மணி அடிச்சா நா ஓடியாந்துருவேன்… ஒரு தடவை வந்து தங்கிப் பாரு சார். படா மஜாவா இருக்கும்… வந்தா மூணாவது மாடியிலே தங்கு சார்… அப்பத்தான் நான் கண்டுக்குவேன் – மத்த பசங்க மாதிரித் தலையை சொறிஞ்சிக்கினு ‘பக்சிஸ்’ கேக்க மாட்டேன்… குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன் – அதிலே நா ரொம்ப ஸ்டிரிக்ட்!

மூணாவது மாடியிலேருந்து ‘ரூப் கார்டனு’க்கு போறது ரொம்ப சுளுவு… நான் ஏன் இம்மா ‘கம்பல்’ பண்ணிக் கூப்ட்றேன்னு யோசிக்கிறியா சார்? ஒரு விசயம், ஒண்ணு கேக்கணும்; அதுக்குத்தான். இன்னா விசயம்னு கேப்பீங்க… வந்தாத்தானே சொல்லலாம்…

மின்னே மாதிரி இல்லே இப்போ… மின்னேல்லாம் புச்சா யார்னாச்சம் வந்துட்டா, ‘சார் ஒரு கடுதாசி எழுதணும் ஒரு கடுதாசி எழுதணும்’னு காயிதத்தைக் கையிலே வெச்சிக்கினு படா பேஜார் குடுப்பேன்… இப்ப அப்படி எல்லாம் இல்லே, நீங்க பயப்படாம வர்லாம்.

கடுதாசின்னு சொன்னப்புறம் ஞாபகம் வருது சார், எங்கிட்ட அந்த மாதிரி எல்லாருகிட்டயும் எழுதி வாங்கின கடுதாசி நெறைய கெடக்குது… எல்லாம் நனைஞ்சு, எழுத்தெல்லாம் கலைஞ்சி பூட்டுது சார்… எப்பிடி நனைஞ்சிது?… அழுது அழுது நனைஞ்சி போச்சி. இப்பல்லாம் நா அழுவறதே இல்லே – அதெல்லாம் நெனச்சா சிரிப்பு வருது. அப்பல்லாம் எனக்கு என்னமோ ஒரு வேகம் பொறந்துடும். கடுதாசி எழுதலேன்னா தலைவெடிச்சிப் போற மாதிரி.

கடுதாசி யாருக்குன்னு கேக்கறியா? ஊர்லே இருக்கிற எங்க மாமனுக்குத்தான். எங்க மாமனை நீங்க பார்த்ததில்லியே சார்… அவரு பெரிய ஜவான்… மீசையெப் பாத்தாவே நீங்க பயந்துடுவீங்க. அவரெ நெனச்சா இப்பக்கூட எனக்குக் கொஞ்சம் ‘தில்’லுதான்… தோ, இம்மா ஒசரம், நல்ல பாடி… அந்த ஆளு பட்டாளத்துக்குப் போனவரு ஸார்… சண்டையிலே கொலை யெல்லாம் பண்ணியிருக்காராம். பத்து ஜப்பான்காரன்களைக் கையாலே புடிச்சு அப்படியே கழுத்தை நெரிச்சிக் கொன்னுப் போ��
�்டாராம். அவருதான் சார் எங்க மாமன்! – ஏன் சார்!… எனக்கு ஒரு விசயம் ரொம்ப நாளா கேக்கணும்னு – கொலை பண்ணா ஜெயில்லே பிடிச்சிப் போடறாங்களே… பட்டாளத்துக்குப் போயி கொலை பண்ணா ஏன் சார் ஜெயில்லே போடறதில்லே? மாமனைப் புடிச்சி ஜெயில்லே போடணும் சார். அப்போ பாக்கறத்துக்கு ரொம்ப நல்லாயிருக்கும்! கம்பிக்கு அந்தப் பக்கம் மாமன் நிக்கும். நான் இந்தப் பக்கம் நின்னுக்கிட்டு, ‘வேணும் கட்டைக்கு வேணும்; வெங்கலக் கட்டைக்கு வேணும்’னு ஒழுங்கு காட்டிக்கிட்டுச் சிரிப்பேன்… அம்மாடி! அப்போ பாக்கணும் மாமன் மூஞ்சியை… மீசையெ முறுக்கிட்டுப் பல்லைக் கடிச்சிக்கினு உறுமினார்னா – அவ்வளவுதான்… நான் நிப்பனா அங்கே? ஒரே ஓட்டம்! ஹோ; எதுக்கு ஓடணும்? அதுதான் நடுவாலே கம்பி இருக்கே… பயப்படாம… நின்னுக்கிட்டுச் சிரிப்பேன். மாமனுக்கு வெறி புடிச்சி, கோவம் தாங்காம கம்பியிலே முட்டிக்கும் – ஜெயில் கம்பி எம்மா ஸ்ட்ராங்கா போட்டிருப்பாங்க? இவுரு பலம் அதுக்கிட்டே நடக்குமா? மண்டை ஒடைஞ்சி ரத்தம் கொட்டும்…

சீ! இது இன்னா நெனைப்பு?… பாவம் மாமன்… என்னமோ கோவத்திலே என்னை வெட்டறதுக்கு வந்துட்டது. அதுக்கு எம்மேலே ரொம்ப ஆசை. அம்மா, அப்பா இல்லாத என்னை வளர்த்து ஆளாக்கினது அதுதானே… மாமன் கிட்டே ஒனக்கு ஏண்டா இம்மாம் கோவம்னு கேப்பீங்க.

இதான் சார் விசயம் – மாமனுக்கு ஒரு மவ இருக்கா சார். அவளெ நான்தான் கண்ணாலம் கட்டிக்கணும்னு மாமன் சொல்லிச்சி. நா மாட்டேன்னிட்டேன். அது இன்னா சார் கண்ணாலம் கட்டிக்கிறது? முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அவன் இன்னா ஆளு? படா கில்லாடியாச்சே, உடுவானா? ஆச்சா போச்சா அறுத்துப் புடுவேன்; வெட்டிப் புடுவேன்னு மெரட்னான் – அவன் பிளான் இன்னா தெரியுமா? கத்தியெக் கையிலே வெச்சிக்கினு ‘கட்டுடா தாலியெ’ன்னு சொல்றது. இல்லேன்னா ஒரே வெட்டு; கலியானப் பந்தல்லியே என்னெப் பலி குடுத்துடறதுன்னு… இதெக் கேட்டவுடனே எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே… அவன் செய்வான் சார், செய்வான்… இந்த நியூஸ் எனக்கு யாரு குடுத்தான்னு கேளுங்க… எங்க மாமன் மவதான். அதுக்கு எங்கிட்டே ரொம்பப் பிரியம் சார். ரெண்டு பேரும் சின்னத்திலிருந்து ஒன்னா வெளையாடினவங்க சார். அது வந்து அழுதுகிட்டே சொல்லிச்சி ‘மச்சான் என்னெக் கண்ணாலம் கட்டிக்க ஒனக்கு இஸ்டம் இல்லாட்டிப் போனாப் பரவாயில்லே; இஸ்டமில்லாம கட்டிக்கிட்டு இன்னா பிரயோசனம்? மாட்டேன்னு சொன்னா ஒன்னெ வெட்டிப் போடுவேன்னு அப்பன் சொல்லுது, அப்பன் கொணம்தான் ஒனக்குத் தெரியுமே. நீ எங்கேயாவது போயிடு மச்சான்’னு வள்ளி அழுவும்போது – அதான் அது பேரு – ஒரு நிமிசம் எனக்குத் தோணிச்சி; இவ்வளவு ஆசை வெச்சிருக்காளே, இவளையே கட்டிக்கினா இன்னான்னு. ஆனா அந்தக் கொலைகாரன் மவளைக் கட்டிக்கிட்டா, அவன் ‘ஆன்னா ஊன்னா’ வெட்டுவேன் குத்துவேன்னு கத்தியெத் தூக்கிட்டு வருவானேன்னு நெனைச்சிக்கிட்டேன். அன்னைக்கு ராவோட ராவா ரயிலேறி மெட்றாஸீக்கு வந்துட்டேன். ரயில் சார்ஜீக்கு கையிலே கொஞ்சம் பணம் கொடுத்தது வள்ளிதான். பாவம் வள்ளி! எங்கனாச்சும் கண்ணாலம் கட்டிக்கினு நல்லபடியா வாழணும்…. அந்த விசயம் தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் சார் கடுதாசி எழுதணும். அடிக்கடி தோணும். தோணும் போதெல்லாம் யாருகிட்டேயாவது போயி, சொல்லி எழுதச் சொல்றது. எழுதி எங்கே அனுப்பறது? அப்புறம் மாமனுக்குத் தெரிஞ்சிதுன்னா என்னெத் தேடிக்கிட்டு வந்துட்டா இன்னா பண்றதுன்னு நெனைச்சிக்கிட்டு பேசாம வெச்சிக்குவேன். ஆனா பாவம், வள்ளிப் பொண்ணை நெனச்சா வருத்தமா இருக்கும். அவளைக் கண்ணாலம் கட்டிக்காம போனோமேன்னு நெனச்சா அழுகை அழுகையா வரும். நானே கண்ணாலம் கட்டிக்காம ஓடியாந்துட்டேனே. வேற எவன் வந்து அவளைக் கட்டிக்கப் போறான்?
யாருமே கண்ணாலம் கட்டாம அவ வாழ்க்கையே வீணாப்பூடுச்சோ? நெனச்சா நெஞ்சே வெடிச்சிப் போற மாதிரி வருத்தமா இருக்குது சார். ஹம்… பொண்ணுன்னு ஒருத்தி பொறந்தா அவளுக்குப் புருசன்னு ஒருத்தன் பொறக்காமலா பூட்றான்!… எல்லாத்துக்கும் கடவுள்னு ஒருத்தன் இருக்கான் சார்…

அந்தக் கடுதாசியிலே ஒண்ணை எடுத்துப் படிக்கிறேன் கேக்கிறியா சார்?

“தேவரீர் மாமாவுக்கு, சுபம். உன் சுபத்தையும் உன் மவள் அன்புமிக்க வள்ளியின் சுபத்துக்கும் எழுத வேண்டியது. உன் மவளை நான் கட்டிக்கலேன்னு மனசிலே ஒண்ணும் வருத்தம் வெச்சிக்காதே! இவ்வளவு நாளு வள்ளிக்குக் கண்ணாலம் காச்சியெல்லாம் நடந்து, புள்ளைக்குட்டியோட புருசன் வூட்லே வாழும்னு நெனைக்கிறேன். இன்னா பண்றது? நா கொடுத்து வெக்கலே… அதுக்காக எனக்கு ஒண்ணும் வருத்தம் கெடையாது. இந்த சென்மத்திலே இல்லா காட்டியும் அடுத்த சென்மத்திலே நான் வள்ளியெத்தான் கண்ணாலம் கட்டிக்குவேன். ஆனா அப்பவும் அவளுக்கு அப்பனா வந்து நீயே பொறக்காம இருக்கணும். இங்கே நான் ஏதாவது நல்ல பொண்ணா பாத்துக்கிட்டிருக்கேன். கெடைச்சதும் ஒனக்குக் காயிதம் போடறேன். சமாச்சாரம் வந்ததும் நேரிலே வந்து எனக்குக் கண்ணாலம் கட்டிவெக்க வேணும்னு கேட்டுக் கொள்கிறேன்… இப்படிக்கு, உன் அக்கா மவன் பாண்டியன்…”

– நான் சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தார் சார், அவரு. யாருன்னு கேக்கிறியா?… எத்தினியோ பேரு எழுதிக் குடுத்தாங்க. யாருன்னு சொல்றது. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடுதாசி எழுதும்போது சொன்னதைத்தான் அப்பிடியே ஞாபகம் வெச்சுக்கிட்டு திருப்பிச் சொன்னேன். இல்லேன்னா, நான் ரொம்பப் படிச்சிக் கிழிச்சேன்.

.. நெனச்சிப் பாத்தா வள்ளிப் பொண்ணுக்கு என்னம்மோ துரோகம் பண்ணிட்ட மாதிரித் தோணுது. அந்த சமயத்திலே தனியா குந்திக்கினு அழுவேன்.

நம்ம மானேஜர் இல்லே சார் – ஐயிரு அவுரு என்னெப் பாத்து ஒருநாள் சொன்னாரு ‘இவன் ஒரு கேரக்டர்’னு… அப்படின்னா என்னான்னு எனக்குத் தெரியலை.

நான் ரொம்ப அழகு சார். நெசமாத்தான்… என்னை மாதிரி இன்னொரு அழகான மனுசனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லே. நான் அவ்வளவு அழகு சார் – என்னெப்பத்தி நானே எப்படி சார் ஒரேயடியா சொல்லிக்கிறது? அதுக்குத்தான் சொல்றேன் ஒரு தடவை இங்கே வந்துட்டுப் போங்கன்னு.

கடுதாசி எழுதற பழக்கத்தை எப்படி உட்டேன்னு கேளுங்க, சுகுணா இல்லே சார், சுகுணா – சினிமாவிலே ‘ஆக்டு’ குடுப்பாங்களே, பெரிய ஸ்டார் – அந்த அம்மாவை நீங்க பார்க்காமயா இருந்திருப்பீங்க? படத்திலேயாவது பாத்து இருப்பீங்களே… அதான் அந்த அம்மா படம் எல்லா பத்திரிகையிலேயும் வந்துச்சே – கார் ஆக்சிடன்டுலே செத்துப்போன உடனே – அதுக்கு முதல் நாளு நம்ம ஹோட்டல்லே இங்கேதான் மூணாவது மாடியிலே ஒன்பதாம் நம்பர் ரூம்லே தங்கி இருந்தாங்க. பாவம்! பத்து வருசத்துக்கு முந்தி அந்த அம்மாவுக்கு இருந்த பேரும் பணமும்… ஹ்ம்! எல்லாம் அவ்வளவுதான் சார். ஆனா நேர்லே பாத்தா அடாடாடா! ‘ஸம்’னு இருப்பாங்க சார். அவங்களுக்கு கடைசி காலத்திலே சான்ஸே இல்லியே, ஏன் ஸார்?

நான் யாரு கிட்டேயும் பேசாதவன். ஆனா அவுங்க கிட்டே மட்டும் ஏனோ ரொம்பப் பேசுவேன். அவுங்களுக்கும் எங்கிட்டே ரொம்ப ஆசை – அதுக்காகத்தான் இங்கே வந்திருந்தாங்களாம். எதுக்கு? – அதான் பழைய மாதிரி மறுபடியும் பேரும் பணமும் எடுக்கிறதுக்காக… என்னென்னமோ திட்டமெல்லாம் போட்டாங்க… யார் யாரோ வருவாங்க, பேசுவாங்க… நமக்கு அதெல்லாம் இன்னா தெரியுது? அவுங்க யார் யாரையோ புடிச்சி சினிமா படம் பிடிக்கறதுக்குப் பிளான் போட்டாங்க சார். அதிலே ஒரு ஆளு என்னைக் கேட்டான் சார்: ‘ஏம்பா, நீ படத்திலே ஆக்ட் குடுக்கிறியா, ஹீரோ பர்சனாலிடி இருக்கே’ன்னு. நானும்
‘ஈஈ’ன்னு இளிச்சிக்கிட்டு நின்னேன். அப்புறம் அந்த சுகுணா அம்மாதான் சொன்னாங்க: ‘பாண்டியா, நீ குழந்தை. சினிமாவெல்லாம் உனக்கு வேணாம்; அது உன்னைப் பாழாக்கிடும்’ – அப்படீன்னு. அவ்வளவுதான்! நமக்கு ஒதறல் எடுத்துக்கிச்சி. அந்த ஆசையை விட்டுப் பிட்டேன்.

ரெண்டு மூணு நாளிலே நான் ரொம்ப சினேகம் ஆயிட்டேன். அவங்களோட, வள்ளி மேலே வந்த ஆசை மாதிரி அவங்க மேலேயும் லேசா ஒரு ஆசை உண்டாயிடுச்சி. ஜன்னல் வழியா அவுங்க மொகம் தெரியற இடத்திலே நின்னு அவங்களையே பாத்துக்கிட்டிருப்பேன். அவுங்களும் பாப்பாங்க. அவுங்க சிரிப்பாங்க; நானும் சிரிப்பேன்.

அன்னக்கிப் பாத்து எனக்கு மாமாவுக்குக் கடுதாசி எழுதணுமிங்கிற ஆசை வந்தது. காயிதத்தை எடுத்துக்கிட்டு, சுகுணா அம்மாகிட்டே போனேன். அந்த அம்மா சந்தோசமா கூப்பிட்டு உக்காரச் சொல்லிக் கடுதாசி எழுத ஆரம்பிச்சாங்க. அப்ப அவுங்க பக்கத்திலே ஒரு புஸ்தகம் இருந்தது. அது இங்கிலீஷ் புஸ்தகம். எனக்குப் படிக்கத் தெரியாதே ஒழிய, எது இங்கிலீசு எழுத்து, எது தமிழ் எழுத்துன்னு நல்லாத் தெரியும். இங்கிலீசு எழுத்துத்தான் சார் ரொம்ப அழகு; தமிழ் நல்லாவேயில்லே, என்னமோ புழு நௌியற மாதிரி… அந்த சுகுணா எப்பவுமே ஏதாவது பொஸ்தகத்தைப் படிச்சிகினே இருப்பாங்க – நா அவங்களைக் கேட்டேன்: “நம்ம ஐயிருல்லே – மேனேஜர் – அவரு என்னைப் பார்த்து, ‘இவன் ஒரு கேரக்டர்’னு சொன்னார், அப்படின்னா என்னா அர்த்தம்”னு. சுகுணா சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க: “அவரு சொன்னதிலே ஒண்ணும் தப்பில்லே” அப்படீன்னா…

… அவங்க சொன்ன அர்த்தத்தை அப்படியே எனக்குத் திருப்பிச் சொல்ல வரல்லே. அனா அர்த்தம் மட்டும் புரிஞ்சு போச்சு. நான் இன்னா சார் அப்பிடியா?

அந்தச் சுகுணா சொல்வாங்க. என் கண்ணு ரொம்ப அழகாம்; என் உதடு கீழ்உதடு இல்லே. அது ரொம்ப ரொம்ப அழகாம்; நான் மன்மதனாம். எனக்கு அவுங்க அப்படிச் சொல்லும்போது உடம்பெல்லாம், என்னமோ செய்யும். எனக்கு அவுங்க மேலே ஆசை – ஆசைன்னா, காதல் உண்டாயிருச்சி; போ சார், எனக்கு வெக்கமா இருக்கு.

அன்னக்கிக் கடுதாசி எழுதறப்போ நான் என் மனசுக்குள்ளே இருந்த ஆசையைச் சொல்லிப்பிட்டேன். கொஞ்சம்கூடப் பயப்படலே! அவுங்க முகத்தைப் பார்த்தப்போ அப்படி ஒரு துணிச்சல்; ஆனா எல்லாம் பொசுக்குனு போயிடுச்சி சார். என் மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு என்னெக் கட்டிப் புடிச்சி, அவுங்க – அந்த சுகுணா – ‘ஓ’ன்னு அழுவ ஆரம்பிச்சுட்டாங்க சார். எனக்கும் அழ வந்திடுச்சு. நானும் அழுவறேன். அவுங்களும் அழுவறாங்க… எனக்கு ‘ஏன்’னே புரியலே. அப்புறம் அவுங்க சொன்னாங்க… அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.

“நான் பாக்கியசாலிதான்! ஆனா என்னோட இந்த வௌிவேஷத்தைக் கண்டு நீ மயங்காதே. நான் வெறும் சக்கை… விஷச் சக்கை… ஒரு மனுஷனுக்குத் தரக்கூடிய இன்பம் எதுவும் எங்கிட்டே இல்லே. உன்னை அடையறதுக்கு நான் குடுத்து வெக்கலே… அந்தப் பாக்கியம் இருந்தும் இல்லாம போன மாதிரி, அடுத்த ஜென்மத்திலாவது நாம்ப ஒருத்தரை ஒருத்தர் அடையலாம்…”. இன்னும் என்னென்னமோ சொல்லிக்கினெ என் கையிலே மொகத்தைப் பொதைச்சுக்கிட்டு கதறிட்டாங்க கதறி – யாரு அவங்க? – பெரிய சினிமா ஸ்டாரு சார்!… பாவம் அடுத்த நாளு அநியாயமா பூட்டாங்களே சார்! அவுங்க குடுத்த மோதிரம் ஒண்ணு – தோ- விரல்லே கெடக்கு… ஆனா, அந்த அம்மா ஐயிரு என்னைச் சொல்றமாதிரி – அவங்களே ஒரு கேரக்டருதான் சார். ஆனா, அவுங்க செத்தப்போ நான் வருத்தப்படவே இல்லை சார்! நான் எப்ப சாகறதுன்னுதான் அடிக்கடி யோசிக்கிறேன் சார்; இதிலே இன்னொரு கஷ்டமும் இருக்கு. அடுத்த ஜென்மத்திலே நா யாரைக் கண்ணாலம் கட்டிக்கறது? வள்ளியையா, சுகுணாவையா?…

இந்த ஜென்மத்திலே நான் சொகமாத்தான் இருக்கேன். அடுத்த ஜென்மத்தை நெனைச்சிக்கினா ஒண்ணுமே புரியலை சார்…

இதெப்பத்தி உங்களை ஒரு வார்த்தை கேக்கலாம்னுதான் சார் இந்தப் பக்கம் வந்தா வாங்கன்னு சொல்றேன். இங்கே இருக்கிறவங்க, கேட்டா சிரிக்கிறாங்க சார்…

“நீ ஒரு ‘கேரக்டர்” தான்”னு சொல்றாங்க. பார்க்கப் போனா ஒலகத்திலே ஒவ்வொரு மனுஷனும் ஒரு ‘கேரக்டர்’ தான்! நீ இன்னா சார் சொல்றே…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *