நீளமான இராத்திரி… ஊதலான மார்கழி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,981 
 

காதில் justin bieber-ன் latin girl, david guetta-வின் one more love இரைந்துகொண்டிருக்கிறது என்றோ, bob marley, eminem, rihanna, akon எல்லோரும் வரிசையில் காத்துகொண்டிருக்கிறார்கள் என்றோ, ‘மூடு’ மாறினால் shakira-வோ, jackson-னோ அழைக்கப்படுவார்கள் என்றோ பார்ப்பவர்கள் நினைக்ககூடும். காரணம் என் levis track jeans, retro tops மற்றும் reebok shoe.

உண்மையில் ‘சின்ன கௌண்டர்’ முத்துமணி மாலையும், கரகாட்டகாரன் மாங்குயிலே பூங்குயிலேயும் தான் காந்தபுலத்தின் மின்விசை அதிர்வுகளால் என் காதில் வழிந்துகொண்டிருந்தது. மாநகரங்களில் குடிபெயரும் முதல் தலைமுறைகளின் பிரதிபலிப்பு என்னுள் இன்னமும் இருப்பது இது ஒரு அடையாளம்.

அன்று பஸ்ஸில் இடம் கிடைத்துவிட்டது. பெங்களுருவை தன் உடையாலும் நடையாலும் சுமந்து கொண்டிருக்கும் ஊரான்களை பஸ்ஸில் இடம் பிடிக்க ஓடும்போது எளிதாக கண்டுபிடித்துவிடலாம். போன முறை ஊருக்கு திரும்ப முட்டி மோதி இடம் பிடித்தபோது பெருத்த பெண்மணியின் உருவத்தில் இருந்த 007 என் ஊரான்தனத்தை கண்டுபிடித்தால், “பட்ச்ச புள்ளயா இது… அவுசரம் இன்னா உனுக்கு… பொறுமயா போயேன்…” என்று கத்தினாள். போனில் லைனில் இருந்த நண்பன் “whats happening da” என்றான், “nothing da… அந்த அக்காவுக்கு வழிதெரியலயாம் கேட்டுட்டுருக்காங்க” என்று தப்பித்தேன்.

என்ன செய்வது சொகுசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் புக் செய்து ஹாயாக பயணம் செய்ய எனக்கு கொடுத்துவைக்கவில்லை. என் சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள தக்கோலம் கிராமம். அங்கே செல்ல சராசரி பேருந்துகளில் தான் மாறிமாறி போக வேண்டும். ஏழுமணி நேர பயணத்தில் கால்முட்டியும், நடுமுதுகும் பெயர்ந்து போகும்.

வாகனங்களை உண்டு செரித்த மலைப்பாம்பாக வளைந்து கிடக்கும் தேசிய நெடுஞ்சாலையின் நீண்ட இரவுகளில் பேருந்துகள் நீந்திகொண்டிருந்தன.

பெங்களூரின் குளிரை மார்கழி மாதம் சென்னைக்கு கடத்திக்கொண்டுருந்தது. நேரம் 9 மணியை கடந்திருந்தது . காலை நான்காகும் போய் சேர. எப்போதும் முதல் ஒரு மணி நேரம் தூங்க முற்பட்டு தோல்வியடைவேன். இப்போது பழக்கமாகியிருந்தது. அப்படி இப்படி என்று அரை மயக்கத்தில் பயணத்தை கழித்துவிடுவேன்.

எனக்குள் இருக்கும் ஊரான்தனத்தை மற்றவர்களுக்கு காட்டாமல் பேருந்தின் அசௌகர்யங்களை உச்சு கொட்டி அடுத்தவர்களுக்கு கடத்தி தோல்வியுறுவேன். அவர்கள் உட்கார்ந்த மாத்திரத்தில் தூங்கியிருப்பார்கள். என்னைப்போல் ஓங்குதாங்காக வேலை செய்யும் யாவரும் தூங்குவதற்கு சிரமப்பட, இவர்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள் தான். வஞ்சனை இல்லாமல் உழைப்பதும், வஞ்சகம் இல்லாமல் தூங்குவதும் எனக்குப் புதிதில்லை. ஊரில் தாத்தாவையும் அப்பாவையும் பார்த்த எனக்கு இப்படி புதிதாக பார்க்க வைப்பது எது என்று புரியவில்லை.

நான் கூறவந்தது இதைப்பற்றி அல்ல… ஒட்டுமொத்த பேருந்து பயணிகளும் கண் இமைக்காமல் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு பயணிக்கும் நள்ளிரவு அனுபவம் யாரவது பெற்றிருக்கிறீர்களா..? எனக்கு நேர்ந்தது.

அடர்த்தியான காற்று முகத்தில் தவழ, ஜன்னலோர பயணம் வழக்கமாக அமைந்தது. தூங்கியும் தூங்காமலும் பயணிக்க ஏதுவாய் ஹெட் போன் காதில் அலறிக் கொண்டுருந்தது. சிறுவயதில் பயணங்களில் வரிசையாக நடப்பட்ட மரங்களை எண்ணிக்கொண்டே வருவேன். இப்போதெல்லாம் எண்ணுவதற்கு எண்ணமும் இல்லை, நட்டுவைத்த மரங்களும் இல்லை. தங்க நாற்கர சாலைத்திட்டம் எல்லா மரங்களையும் அழித்திருந்து.

குளிர் இரவின் அடர் தென்றல் முகத்தை சில்லிட்டது. ஓசூர் அடுத்துள்ள சூலகிரியில் பேருந்து மெதுவானது. வண்டியை ஓரங்கட்டினார்கள். சிறிது நேரம் கழித்து மேலும் பயணிகள் ஏற்றப்பட்டார்கள். பேருந்தில் இடம் இல்லாததைப் பார்த்து முகம் சுளித்துக்கொண்டார்கள். இன்னும் சில பேர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அந்த பயணிகள் வந்த volvo குளிர் சாதனா சொகுசு பேருந்து break down-ஆம். அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளை மாற்றுப் பேருந்துகளில் ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்தேன். “இங்கபாரும்மா இந்த பஸ்ஸ விட்டா அடுத்த பஸ்சுக்கு 1 மணிநேரம் ஆகும்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகப் பாருங்க இல்லைன்னா… நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல…!”

அநேக பயணிகள் மனது மாறி எங்கள் பேருந்துக்குள் ஏறிக் கொண்டார்கள். பெரும்பான்மை பயணிகள் இது தான் தங்களின் முதல் பயணம் போல விசித்திரமான முக பாவத்தோடு நின்றுகொண்டே பயணித்தார்கள். “இதற்கு நாங்கள் ஏன் முழித்துக்கொண்டு வந்தோம்” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நான்கு இளம்பெண்கள். பெண்களின் நெளிவு சுளிவுகளை நகல் எடுத்து காண்பிப்பதை போல உடை. நல்ல வழமையான உடல் வாகு. ‘ஏசி அறையிலேயே இருந்திருப்பார்கள் போல’ என்று சொல்வதைப் போல் நடத்துனர் அவர்களை மேலும் கீழுமாகப் பார்த்தார். ஆனாலும் மார்கழியின் நேரடியான குளிர் அவர்களின் மஞ்சள் நிற தேகத்திற்கு செர்ரி பழம் வைத்து தைத்தாற்போல் சிவந்துகொண்டிருந்தது. போயும் போயும் இந்த பேருந்தில் ஏற்றிவிட்டு விட்டார்களே என்ற கோபத்தில் இன்னும் கொஞ்சம் சிவந்திருந்தது. பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

பத்திரிக்கை ஓவியர்களுக்குத் தீனி போடுவதைப் போல நல்ல வடிவான முகம். வரைந்துவைத்தாற்போல் கண்கள். நவீன பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்குப் புதிதாக முளைத்த செல்போன் உறுப்பை அவர்கள் விடுவதாய் இல்லை. பேருந்தின் குலுக்கல்களில் கம்பியைப் பிடிப்பதா? செல்போனைப் பிடிப்பதா? என்று அவர்கள் தத்தளிக்கும் அழகைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

அவர்கள் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் எழுத்துகள் என் கவனம் கலைத்தது. என்ன வாசகம் எழுதியிருந்தது என்று முறைத்து முறைத்து பார்த்தேன். நம்புங்க… நான் வாசகத்தை மட்டும் தான் பார்த்தேன். ஒருவளின் டீ-ஷர்ட்டில் touch me என்று எழுதியிருந்தது. மற்றவளின் டீ-ஷர்ட்டில் think bigger என்று எழுதியிருந்தது. ஏனோ ஒரு நிமிடம் எஸ்.ஜே.சூர்யா நினைவில் வந்து சென்றார். பெருமூச்சை விட்டுக்கொண்டேன். இன்னொருவளின் டீ-ஷர்ட் ஏதோ சங்கேத வார்த்தைகளை கொண்டு நூல் நூற்றிருந்தது. காந்தியாரின் எளிமை அவளின் half drawer -ரில் தெரிந்தது. மற்றொருவள் நல்ல பருமன். அவளின் மேலாடை தனது ஜீன்ஸைத் தொட்டும் தொடாமலும் இடுப்பை மறைக்க மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

“டேய் மானங்கெட்டவனே வெட்கமே இல்லாம இதப் போய் பார்த்துகிட்டு இருக்கியே” என்று என் மனம் சொல்லவந்ததை நான் சட்டை செய்யவில்லை. பெங்களுருவில் இது போன்ற பெண்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். ஆனாலும் இந்த cross cultural shock என்னைப் போன்ற ஊரான்களிடம் இருந்து வெளியேறுவது கடினமாகத்தான் இருக்கிறது. சற்றே சுதாரித்துக் கொண்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தேன், எதிர்பார்த்தது போலவே அனைவரின் டார்கெட்டும் அந்த நால்வர் தான். என் பக்கத்தல் உட்கார்ந்தவர் வாய் பிளக்காத குறையாக பார்த்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் ஓய்ந்தவனாய், ஜன்னலைப் பார்த்துகொண்டிருந்தேன். நிலவு பிரகாசமாகத் தெரிந்தது. பேருந்தின் வேகத்திற்கு நிலவு ஈடு கொடுத்துக்கொண்டிருந்தது. நீ அழகா.. நாங்கள் அழகா என்பது போல் நிலவும், அந்த நால்வரும் ஒரு சேர என் முன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

பேருந்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரே ஒரு மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட தேகமாய் அவர்கள் என் முன்னே மின்னிக்கொண்டிருந்தனர். அக்காலத்தில் மன்னர்கள் நிலவு வெளிச்சத்தில் சோம பானம் அருந்துவார்களாம். இங்கே எனக்கான நிலவின் போதை அந்த பெண்களின் வடிவத்திலா வரவேண்டும்? எல்லோருக்கும் பாட்டில்களில் போதை வரும், எனக்கு இந்த north indian ‘beti’களில் போதை வருகிறது. பார்க்க பார்க்க ஏக்கம் பீறிட்டதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

அவர்களின் ஒவ்வொரு செய்கைகளும் எனக்கு அபிநயம் பிடிப்பதைப் போல் இருந்தது. அப்போது தான் கவனித்தேன் காற்றில் காதில் மாட்டியிருந்த ஹெட் போன் கீழே விழுந்திருந்தது. எடுத்து மாட்டினேன். அரைகண்ணால் தலையை சாய்த்துக்கொண்டு அவர்களையே பார்த்துகொண்டு பாடல் கேட்க முற்ப்பட்ட நேரம் இப்படியா அமையும். பாடல் இப்படி தான் ஒலித்தது.
“பாவை கண்டாலே நிலவு நெளியாதோ…
அழகை பார்த்தாலே அருவி நிமிராதோ…
கண்ணாடி உன்னை கண்டு கண்கள் கூசும்
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது.”
“ஆடை கூட பாரமாகும் பாட்டு என் அடிவயிற்று பாரத்தை இன்னும் அதிகபடுத்தியது.

இதெல்லாம் XX, XY, androgens, Testosterone, Dihydrotestosterone, Androstenedione, and Dihydroepiandrosterone (DHEA) போன்ற ஹார்மோன்களால் உருவாகும் இயற்கை என்று சுஜாதாவையோ, ‘உயிர்மொழி’ ஷாலினியையோ துணைக்கு அழைத்தால் நீங்கள் நம்பப்போவதில்லை.

சக பயணிகள் ஒன்று போல நெளிந்துகொண்டிருந்தார்கள். வைத்த கண் வாங்காமல் ஒரு போதையில் தான் அவர்களும் இருந்திருக்கக்கூடும். வாணியம்பாடியில் ஏறிய ‘பர்தா’ அணிந்த பெண் அவர்களைப் பார்த்தும் பார்க்காமலும் அனுமானித்துக் கொண்டிருந்தாள். அவள் கஷ்டம் அவளுக்கு.

ஒரு டோல்கேட் சந்திப்பில் பேருந்து நின்றுகொண்டிருந்தது. பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. காற்றில் கலைந்திருந்த முடியை சரிசெய்த பின்பும் முகத்தில் ஒரு தெளிவு இல்லை. ஒரு நிமிடம் பெண்களை வேகவைத்து தின்ற நொய்டா மனநோயாளியின் முகமும், காலையில் பேப்பரில் பார்த்த ‘பெண்ணை நரபலியிட்ட சாமியாரின்’ முகமும் வந்து போனது குற்ற உணர்சியாகத்தான் இருந்தது. கண்ணாடியில் ‘நீ நல்லவனா கெட்டவனா என்று கேட்டு பார்த்தேன்… அதே தான்… அதே பதிலைத் தான் சொன்னது.

பேருந்தின் சக பெண் பயணிகளும் அவர்களை உற்று நோக்கத் தவறவில்லை. தன்னை கட்டிப் போட்டிருக்கும் சேலையையும், தாலியையும் உச்சு கொட்டிப் பார்த்திருப்பார்களோ என்னவோ. அதிலும் ஒரு நடுத்தரப் பெண்மணியின் பார்வை நூற்றாண்டுகளின் கதைகளைப் பேசிற்று. சக வயதையொத்த ஒரு இளம்பெண், தோலுரிக்கப்பட்ட பிராய்லர் கோழியையும், தோலுரித்து தொங்கவிட்டுருக்கும் ஆட்டையும், பலியிடயிருக்கும் ஆடு புரியாமல் பார்க்குமே, அதைப் போல பார்த்துக்கொண்டிருந்தாள்.

இப்போது அவர்களின் உடல் சலித்துப்போயிருந்து. என்னுடன் ஓடி வந்த நிலா… இப்போது காணவில்லை… எந்த திருப்பத்தில் அந்த போதையை கைவிட்டேனோ… இறங்கும் இடம் வரும்போது இவர்களையும் கைவிடத்தான் போகிறேன் என்பதை உணர்ந்தபோது மனம் ஆசுவாசம் ஆனது. இறங்கும் இடத்தில போதை இறங்கியிருக்குமா என்று தெரியவில்லை…

வேலூரில் காட்பாடிக்கு செல்லும் பேருந்தில் அவர்கள் ஏறிகொண்டிருந்ததை கடைசியாகப் பார்த்தேன். காட்பாடி ஜங்ஷனில் இருந்து ரயிலில் சென்னைக்குப் புறப்படுவார்களோ என்று உத்தேசித்துகொண்டிருந்தேன்.

நான் தக்கோலம் இறங்கி, கல்லாற்றுப் படுகையில் என் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். “வெளியே சென்று திரும்பிய பெண் ஆடையை உதறி சரி செய்து அணிந்தாள், ஆயிரம் ஆயிரம் கண்கள் உதிர்ந்து கீழே விழுந்தன” என்று யாரோ, எங்கேயோ எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. ‘போதை’ தெளிந்தது போல இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *