நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 25,344 
 

“ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?”

சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான்.

அவன் அப்படி ஒன்றும் குண்டு இல்லை, வெறும் நூறு கிலோ தான். அவன் உயரத்துக்கு, வயதுக்கு சரியான எடை என்றால், அறுபது கிலோ தான் இருக்கணும்.

சின்ன வயசுல அவன் இவ்ளோ குண்டு இல்லை, வேலைக்கு போக ஆரம்பித்த மூன்றே வருடங்களில் கடகடவென ஊதிவிட்டான்.

இப்போது அவனுக்கு கல்யாணத்துக்கு பெண் தேடுகிறார்கள் – உடல் பருமன் குறைத்தால்தான் பெண் வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்பது உறைத்தது.

அரிசியை அறவே ஒதுக்கிவிடுமாறு ஒருத்தர் சொன்னார், செய்தான். காய்கறிகளை அப்படியே சாப்பிடச் சொன்னார் இன்னொருவர், செய்தான். காய்கறிகளை வேகவைத்துதான் சாப்பிடணும்-னார் ஒருத்தர், செய்தான்.

பழங்களை தேடித்தேடி சாப்பிட்டான். சப்பாத்தி, ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் என எதையும் விட்டு வைக்கவில்லை, எல்லாம் சாப்பிட்டு பார்த்தான் – ம்ஹூம், ஒன்றும் உதவவில்லை, ஆறு மாதங்கள் ஆயினும் அவன் எடை நூறைவிட்டு இறங்குவேனா என்றது.

நொந்து வெந்து விட்டான் சரவணன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான், இன்னும் கடுமையாக.

இம்முறை உணவுக் கட்டுப்பாட்டுடன், கடுமையான உடற்பயிற்சியும் சேர்ந்துகொண்டது. ஜாங்கிங், வாக்கிங், பார்க்கிங் (விடுங்க, ஒரு ஃப்ளோல வந்துடுச்சி) என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஜிம்மே பழியாகக் கிடந்தான். வெய்ட் லிஃப்டிங் போட்டியில் சேராததுதான் குறை, அவ்வளவு கடுமையாக பயிற்சி செய்தான். மற்றொரு ஆறு மாதங்கள் ஆயிற்று, ஆனால் அவன் உடம்பு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

தனக்கு வாய்த்தது இவ்வளவுதான் என கடைசியில் வெறுத்துப்போய் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட்டான்.

பழையபடியே தன் உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்க ஆரம்பித்தான்.

இரு மாதங்கள்கூட ஆகவில்லை, சடசடவென அவன் எடை குறைய ஆரம்பித்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, பயந்துபோய் டாக்டரைப் பார்த்து எல்லாவித செக்கப்-ம் செய்துகொண்டான். சொல்லி வைத்தது போல (யார் சொல்லியது என்றெல்லாம் கேட்கக்கூடாது) எல்லா டெஸ்டும் நார்மல் என்றது. ‘கொஞ்சம் நாள் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றார் டாக்டர்.

கொஞ்சம் வாரங்கள் ஆச்சு, அவன் எடை மென்மேலும் குறைந்தது. முடிவாக சில வாரங்கள் கழித்து எடை குறைவது நின்றுபோனதாக உணர்ந்தவன், மீண்டும் செக்கப்-க்கு டாக்டரிடம் போனான்.

அதிசயம், ஆனால் உண்மை – அவன் எடை இப்பொழுது எவ்வளவு தெரியுமா? பாதிக்குப் பாதியாகி ஐம்பது கிலோவாயிருந்தது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. டாக்டர் சொன்னார் “சிலருக்கு உடம்பு ரொம்ப மெதுவாகத்தான் எதிர் செயலாற்றும். பயப்பட ஒன்றுமில்லை”.

அவனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு. ஆனால் கல்யாணத்தை ஏழு மாதம் தள்ளி வைக்கச் சொன்னான்.

ஏனென்றால் ……….

“ஸார், ஒரு பத்து கிலோ வெய்ட் ஏத்தணும், என்ன பண்ணலாம்?”

Print Friendly, PDF & Email

1 thought on “நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *