தேவை, அண்ணாசாலையில் ஒரு ஏர்போர்ட்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 11,339 
 

பரிசோதனைக் குழாய் பேபியின் (Test tube baby) விரல் சூப்பல்…. ஒரு பட்டனை அமுக்கினால் உலகையே பஸ்பமாக்கும் மேல் நாட்டு அணுசக்தி சிவகாசிகள்…

கைக்கடிகாரத்தில் காலண்டரை வைத்ததோடல்லாமல் உங்கள் பிறந்தநாளை இசை அமைத்து வாழ்த்துடன் நினைவூட்டும் ஐப்பான் வாமனர்களின் எலெக்ட்ரானிக் தளங்கள்…. எங்கோ நடக்கும் விம்பிள்டனை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் ஈஸிசேரில் அமர்ந்து முறுக்கு சாப்பிட்டுக்கொண்டே பார்க்கும் மமதையான முன்னேற்றம்….

இப்படி விஞ்ஞானம் நம்மோடு ரத்தத்தின் ரத்தமாக சர்வ சாதாரணமாக ஊறிவிட்ட இந்த நூற்றாண்டில் இன்னமும் நம்மை அண்ணாந்து பார்த்து வாயைப் பிளக்கவைக்கும் ஒரே விஷயம் ஆகாயவிமானம் தான்…

வேடிக்கைப் பார்ப்பது வேறு ; விமானத்தில் ஏறிப் பறப்பது என்பது வேறு! பண்டிகை நாட்களில் பரணிலுள்ள சாமான்களை எடுக்க ஏணியில் ஏறும் போதே பயத்தில் பித்த அமிலம் பரவலாக வாயில் சுரக்க ஆரம்பிக்கும் என் போன்றவர்களுக்குத்தான் தெரியும் பத்தாயிரம் அடி உயரத்தில் பறப்பதில் உள்ள பீதி. விமானம் என்ன, வெஸ்ப்பாவா லாம்பரட்டாவா பாதி வழியில் தகராறு செய்தால் நிறுத்தி Spark Plug-ஐச்சுத்தம் செய்து போடுவதற்கு? ஏதாவது நிகழ்ந்தால் எமலோகம்தான்!

மேலே, பறப்பவர்கள் மீது பாசக் கயிற்றை வீசுவதில் எமதர்மனுக்கு ஒரு லாபம் வேறு இருக்கிறது. அனாவசியமாக எருமையில் ஏறி நம்மை அழைத்துச்செல்ல பூலோகத்துக்கு ஒரு நடை வரவேண்டியது இல்லை .

கிட்டத்தட்ட எமலோகத்துக்கு அருகிலேயே பறப்பதால் இருந்த … ஸாரி… பறந்த இடத்திலிருந்து நம்மை ஒரு பொடிநடை நடத்தியே அழைத்துச் சென்றுவிட முடியும்!

யானை அரை விலை என்றால் அங்குசம் முழு விலை என்பது போல, சென்னையிலிருந்து விமானத்தில் பெங்களூர் செல்ல அரை மணி நேரம் ஆனால், மயிலாப்பூரிலிருந்து மீனம்பாக்கம் செல்ல ஒண்ணரை மணி நேரம் ஆகிறது !

பேசாமல் விமான நிலையத்தை எல்லோருக்கும் வசதியாக மவுண்ட்ரோடுக்கு மாற்றக்கூடாதா? டேக் ஆஃப்பின் போது எல்.ஐ.ஸி. மீது மோதாமல் பைலட் சற்று பவ்யமாக ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன பெரிய பிரச்னை இருக்கமுடியும்?

நல்லவேளையாக இந்தியன் ஏர்லைன்ஸே ப்ளேனில் நாம் இவ்வளவு எடை லக்கேஜ்தான் சுமக்கலாம் என்று கண்டிப்பாக நிர்ணயித்துவிடுகிறார்கள்.

இல்லையென்றால் நம்மவர்கள் சும்மா இருப்பார்களா…? மல்லேஸ்வரம் அத்தைக்குப் பிடித்த மாவடு மூன்று ஜாடிகள் (அதுவும் மூடி இல்லாமல் துணியால் முக்காடு போட்ட ஜாடிகள்), அத்திம்பேருக்காகவே நமது வீட்டில் பிரத்யேகமாகக் காய்த்த பலாப்பழம் என்று நம்மிடம் திணித்து பாசஞ்சர் விமானத்தை பார்சல் விமானமாக்கிவிடுவார்களே!

ஆறரை மணி விமானத்துக்கு நாலரைக்கே சென்று தொலைக்க வேண்டுமாம். ஹூம்! ரயில் வண்டியாக இருந்தால் கிளம்பிவிட்டாலும் நுரைதப்ப ஓடிக் கடைசிப் பெட்டியில் தொத்திக்கொள்ளலாம். அட, மிஞ்சிமிஞ்சிப் போனால் டாக்ஸி வைத்துக்கொண்டு தாம்பரத்தில் பிடித்துவிடலாமே! ஆயிரம் சொல்லுங்கள், ரயிலில் உள்ள சலுகைகள் விமானத்தில் உண்டா, என்ன?

என்னைத் துணையாக நம்பி பெங்களூருக்கு என்னோடு பயணம் செய்த அனந்தராமன் தம்பதியினரை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன். அனந்தராமன் எனது தந்தையின் நெருங்கிய நண்பர். பல்லவனில் கூட ஏறுவதற்குப் பயந்து கொண்டு பாதி நாட்கள் பிளாட்பாரம் ஓரமாகவே ஃபர்ஸ்ட் லைன் பீச்சிலுள்ள தனது அலுவலகத்துக்கு நடந்து செல்லும் பரம சாத்வீகர். நானாவது பரவாயில்லை. இதற்கு முன்பு நான்கு தடவை வானத்தில் சஞ்சரித்துள்ளேன். அனந்தராமனுக்கு இந்தப் பயணம் ஒரு கன்னி முயற்சி. பஸவங்குடியில் உள்ள இரண்டாவது பெண்ணின் மூன்றாவது பிரசவத்துக்காக அர்ஜெண்டாக அனந்தராமன் தம்பதியினர் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். ஏர்போர்ட்டில் நுழையும் போதே அனந்தராமனின் முகத்தில் ஆயுள் தண்டனைக் கைதியின் அவஸ்தை தெரிந்தது . மிஸஸ் அனந்தராமனுக்கு ப்ளேனைப் பற்றிய பயம் இல்லை. குனிந்தத் தலை நிமிராமல் செல்பவளுக்கு வானில் விமானம் என்று ஒன்று பறக்கிறது என்று தெரிந்திருக்க நியாயமில்லை.

ஏர்போர்ட் கட்டடத்தின் நுழை வாயிலில் நாங்கள் கால் வைத்தவுடன் ஆட்டோமேடிக்’ கதவுகள் தானாகத்திறந்து கொண்டன. அச்சம் கலந்த வியப்போடு அனந்தராமன் என்னைப் பார்த்து, “இதில் ஏதோ சூது இருக்கிறது” என்று விழிகளால் தெரிவித்தார். முன்னதாகவே வந்துவிட்டதால் மூவரும் ஏர்போர்ட் லவுஞ்ச் இருக்கைகளில் அமர்ந்தோம்.

ஏற்கெனவே பயணம் பற்றிய பீதியில் இருந்தவருக்கு அனாவசியச் சந்தேகங்களைக் கிளப்பி சாதா பீதியை அதி பீதியாக ஆக்கினாள் மிஸஸ் அனந்தராமன். “பாதி வழியில் ப்ளேன் நின்னுபோச்சுன்னா என்ன பண்ணுவா?” இது அனந்தராமனின் மன உளைச்சலுக்கு சாம்பிளான ஒரு கேள்வி.

அப்போது பெங்களூர் செல்லும் பயணிகளை, ‘செக்-இன்’ செய்து கொண்டு உள்ளே வருமாறு ஒலிபெருக்கி அழைத்தது.

செக்-இன் செய்து கொள்ள ஓடினோம். அதாவது, நீங்கள் புகை பிடிப்பவரா இல்லையா, சைவமா அசைவமா (அனந்தராமன் இரண்டும் இல்லை….. வைணவம்..) என்று தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் விமானத்தில் இடம் தருவார்கள். அனந்தராமன் ஓர சீட்டு கேட்டார். “வெற்றிலை துப்பவா?” என்று கேட்டேன். “இல்லை, வேடிக்கைப் பார்க்க” என்றார் சிரித்துக்கொண்டே. முதன் முறையாக மனிதர் சிரித்தாரே என்று சந்தோஷப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது அது விரக்தியில் வந்த சிரிப்பு என்று.

இதற்குள் பக்கத்தில் ஒருவர் வந்து அனந்தராமனைப் பார்த்து, “இன்ஷூரன்ஸ் செய்து கொள்ள பிரியப்படுகிறீர்களா?” என்று கேட்க, பதிலுக்கு அனந்தராமனும் எதற்கு” என்று வெகுளித்தனமாக வினவ, வந்தவரும் விவரம் புரியாமல் “ஒரு வேளை விபத்தில் நீங்கள் இயற்கையெய்தும் பட்சத்தில்…” வந்தவர் முடிப்பதற்குள், அனந்தராமன் நெற்றியில் முத்து முத்தாக வேர்க்க ஆரம்பித்துவிட்டது. எல்லோர் முன்னிலையிலும் அனந்தராமன் அவசரப்பட்டு அழுதுவிடுவாரோ என்ற பயத்தில், அவரைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு அடுத்தகட்டமான செக்யூரிட்டி பரிசோதனைக்கு விரைந்தேன்.

செக்யூரிட்டி பரிசோதனை ‘ஹைஜாக்’ ஆபத்துக்குப் பயந்து உள்நாட்டுப் பயணங்களுக்குக்கூட ஏர்போர்ட்டில் நம்மை உரித்துப் பார்த்துவிடுகிறார்கள்…

மிஸஸ் அனந்தராமனின் எல்.ஜி.பெருங்காயப் பையைப் பிரித்த பெண் போலீசுக்கு அதில் இருந்த ஜாடியிலிருந்து வந்த மாவடு வாசனை மசக்கை சப்புக்கொட்ட வைத்தது. போலீசாக இருந்தால் என்ன, அவளும் பெண்தானே!

செக்யூரிட்டி தாண்டியதும் ஒருவர் ‘ஹேர் ட்ரையர்’ போன்ற உபகரணத்தோடு நின்றுகொண்டிருந்தார். பெருமாள் கோவிலில் சடாரி வைப்பது போல, அந்த உபகரணத்தை நமது உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை வைத்துப் பார்க்கிறார். துப்பாக்கி, கத்தி போன்ற இரும்பு ஆயுதங்கள் நம்மிடம் ஒளிக்கப்பட்டு இருந்தால் இந்த உபகரணம் பீப் பீப்’ என்று ஒலி கொடுத்துக் காட்டிக்கொடுத்துவிடுமாம்.

அனந்தராமனைப் பரிசோதனை செய்யும் போது அந்த உபகரணம் தொடர்ச்சியாகப் பலவிதமான ஒலி அளவுகளில் பீப் பீப்’ செய்து ஒரு இசை சம்மேளனமே நடத்தியது. அனந்தராமன் ‘பாண்ட்டிலும் சொக்காயிலும் அவ்வளவு குண்டூசிகள். பத்தாத குறைக்கு உடம்பெல்லாம் உலோக தாயத்துகள். சந்தேகித்த அதிகாரியை ஒருவிதமாகச் சமாதானம் செய்து அனந்தராமனை என் பக்கம் அழைத்துக்கொண்டேன்…

விமானத்தின் வாயிலில் நின்று கொண்டு கரம் குவித்து வரவேற்ற விமான பணிப் பெண்ணின் இணக்கமான தோற்றத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அனந்தராமன் அவளிடம், “மொதல் தடவையா ப்ளேன்ல போறேன்…. பைலட்டிடம் மெல்லவே ஓட்டச் சொல்லுங்கோ” என்று பவ்யமாகச் சொன்னார். அவள் புன்னகைத்தாள். உட்கார்ந்தவுடன் எல்லோரையும் ‘பெல்ட்’ போட்டுக் கொள்ளும்படி இனிமையான ஒரு பெண் குரல் பணிவாக மன்றாடியது. “பங்கஜம் கூடவா பெல்ட் போட்டுக்கணும்… லேடீஸ் ஆச்சே!” என்று அனந்தராமனின் அறியாமை தலை விரித்தாடியது.

இருவரிடமும் ஸீட் பெல்ட்டைக் காட்டி, அதைப் போட்டுக் கொள்ளும் விதத்தையும் கற்பித்தேன். மின்சார நாற்காலியில் மரண தண்டனைக்கு அமர்ந்தவனைப் போல அனந்தராமன் பெல்ட்டை மிகமிக இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கலவரத்தில் மௌனம் அனுஷ்டித்தார். சிதார், சரோட் ஷெனாய் போன்ற வாத்தியங்களால், நிலைய வித்வான்கள் பிரமுகர்கள் மறைவுக்குச் சோக கீதம் வாசிப்பார்களே, அதுபோன்ற ஒரு இசை விமானத்துக்குள் வியாபித்தவுடன் அவர் முகத்தில் கலவரம் அதிகமானது.

பணிப் பெண் எல்லோருக்கும் மிட்டாய் வழங்க ஆரம்பித்தாள். மிஸஸ் அனந்தராமன் பஸவங்குடி பேரனுக்காக அள்ளி எடுத்து மடிசார் தலைப்பில் முடிந்து கொண்டாள்.

போயிங் சிறிது தூரம் ஆறுமாத பிள்ளைத்தாய்ச்சி போல ஒய்யாரமாக அன்ன நடை பயின்றது.

ஒரு திருப்பம் வந்தவுடன் சிறிது நின்று பெருமூச்சுவிட்டு, கர்ஜித்துக்கொண்டே ஓட ஆரம்பித்தது.

கர்ஜனை பிளிறலாகி, முடிவில் ஊளையிட்டுக்கொண்டே சென்ற போயிங், திடீரென்று ஊனமாகியது. விமான பணிப்பெண் சில பாதுகாப்பு விதிகளைப் போதித்தாள்.

ஜன்னல் வழியாகக் காஞ்சீபுரத்தை எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்ட மிஸஸ் அனந்தராமன் “ஏன்னா, இதுல சின்ன காஞ்சீபுரம் எது?” என்று அனந்தராமனைக் கேட்க, அவரும் பிலாஸபிகலாக “அசடே! கீழ பூமிலதான் சின்ன காஞ்சீபுரம், பெரிய காஞ்சீபுரம்னு பாகுபாடு…. மேலேருந்து பாரு… எல்லாமே சின்ன காஞ்சீபுரம்தான்…” – கூறி, என்னைப் பெருமிதமாகப் பார்த்தார்.

பத்து நிமிடப் பிரயாணம் மனிதரின் பயத்தைச் சிறிது போக்கியிருக்கிறது போலும்.

நடுவில் ஜூஸ் என்ற பெயரில் எங்களுக்கு எல்லாம் ஒரு அஜீர்ண மிக்சர் வழங்கப்பட்டது.

“ஏன்னா! மாப்பிள்ளை ஸ்டேஷனுக்கு வருவார் இல்லே…?” – மிஸஸ் அனந்தராமன் குட்டி தூக்கம் முழித்துக் கேட்பதற்கும், ஐ.ஸி.538 போயிங் விமானம் பெங்களூர் மண்ணை மன்னிக்கவும் பெங்களூர் வானைத் தொடுவதற்கும் சரியாக இருந்தது.

ஏரோப்ளேன் இறங்கோப்ளேனாக மாறப் போவதை அறிவித்து அவரவர்கள் மறுபடி பெல்ட்டைக் கட்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

ஒரு வேலை மிச்சம் என்று நினைத்தாரா, இல்லை மறந்துவிட்டாரா தெரியவில்லை. அனந்தராமன் டேக் – ஆஃப்பின் போது கட்டிய பெல்ட்டை அவிழ்க்காமலே பயணம் செய்திருக்கிறார்!

விமானம் மெல்ல சரிந்து, ரன் – வேயில் வாகாகத் தவழ்ந்து சென்று நின்றது. அனந்தராமன் தம்பதியினரை வரவேற்க அவர்களது மாப்பிள்ளை ஆட்டோ சகிதமாக வந்திருந்தார்.

பிரியும் நேரத்தில் அனந்தராமனைப் பார்த்து, “என்ன சார். திரும்பிப் போறச்சே ஏரோப்ளேனா, இல்லை… நான் முடிக்கவில்லை. மனிதர், “நடந்தே மெட்றாசுக்குப் போனாலும் போவேனே தவிர ஏரோப்ளேன் சத்தியமா இனி ஏறமாட்டேன்..!” என்று முந்திக்கொண்டார்.

அனந்தராமனின் ஆட்டோ, ப்ளேனைவிட மோசமான வேகத்தில் பறந்தது. ‘இதற்குப் பிறகு ஆட்டோவில் போவதில்லை’ என்று முடிவு செய்து பெங்களூரில் எல்லா இடங்களுக்கும் அனந்தராமன் நடந்தே சென்றதாகப் பிறகு கேள்விப்பட்டேன்!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *