டேக் இட் ஹி… ஹி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 17,487 
 

நுனி விரலைக் கடித்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தேன். நகச்சுவைதான் தெரிந்ததேயன்றி நகைச்சுவையாக எந்த ஐடியாவும் வரமறுத்தது. கோடை காலப் புழல் ஏரியாய் என் மூளையின் ஹாஸ் ‘ஏரியா’வில் அப்படி ஒரு வரட்சி. ‘இன்னும் ஒரு வாரத்தில் கொடு’ என்று என் நண்பன் ராகவன் கெடுவோடு சொல்லிச் சென்று ஆறு நாட்களாகி விட்டன. நானும் நாடகத்துக்காக நகைச்சுவையான கரு கிடைக்குமா என்று காத்திருந்ததுதான் மிச்சம்! உருப்படியாக ஒன்றும் தோன்றமாட்டேன் என்றது.

”நான் வேணும்னா கிச்சு கிச்சு மூட்டி விடட்டுமா சொல்லுங்கோ” என்று பரிட்சைக்குப் படிக்கும் பாலகனைத் தூண்டுவதுபோல என் மனைவி என்னை சீண்டி கிச்சு கிச்சு மூட்ட அருகே வந்தே விட்டாள்.

”இன்னிக்கு ராத்திரிக்குள்ளே எழுதினாத்தான் ராகவன் ஸார்கிட்டே நாளைக்கு கார்த்தாலே கொடுக்க முடியும்.. வருஷப் பொறப்பன்னிக்கு டி.வி. சிறப்பு நிகழ்ச்சிக்காக கேட்டிருக்கார். நீங்க எழுதவே வருஷம் ஆயிடும் போலிருக்கே!” என்றாள் வனஜா.

”நாடகம் நல்லா சிரிப்பா இருக்கணும்னு ராகவன் சொன்னார். எனக்கு ஹாஸ்யமா ஒரு ஐடியாவும் வரலையேன்னு அழுகையா வருது வனஜா” என்றேன் பரிதாபமாக.

”ஏதோ ஆள் அழகோ, அந்தஸ்தோ இல்லேன்னாலும் நாலு பத்திரிகையிலே பேர் வர்ற மாதிரி என்னமோ கிறுக்கிக் கிட்டிருக்கீக்ளேன்னு இருந்தேன். இப்போ அதுவும் போச்சாக்கும்… அப்படி என்ன குடிமுழுகிப் போச்சாம் உங்களுக்கு… நல்லாதான் கவலையில்லாம சாப்பிடறீங்க…. குறட்டைவிட்டுண்டு தூங்கறதிலே குறைச்சலில்லே… அப்புறம் என்ன கேடாம்…

என்னை இப்படி வலுக்கட்டாயம் செய்தாலாவது ‘கிளுக் கிளுக்’ ஊட்டும்படி எழுத ஆரம்பிப்பேனோ என்று வனஜா நினைத்தாளோ என்னவோ….

அடுத்த நாள் தடியால் அடித்து கனிய வைத்த பழம் கணக்காய் ஒரு கத்தை பேப்பரை ‘கடி’யால் அடைத்து சிரிப்பு நாடகம் என்ற பெயரில் ராகவனிடம் கொடுத்து விட்டு வந்தேன்.

ராகவன் பாவம், என் மேல் அபார நம்பிக்கையோடுதான் அதைப் பெற்றுக் கொண்டார்.

அது ஏனோ தெரியவில்லை, சில நாட்களாக என் சிந்தையில் நகைச்சுவை உணர்வே இல்லாதது பெரிய விந்தையாக இருந்தது. இயல்பில் நான் சீரியஸ் சமாசாரங்களையும்கூட ‘சிரி’யஸாகவே பாவித்துப் பழக்கப்பட்டவன். இதற்காகவே யாராவது இறந்துவிட்டால் அவர் வீட்டிற்குப் போவதைக் கூடிய மட்டும் தவிர்ப்பேன். துக்கம் கேட்கப்போன இடத்தில் பக்பக்கென்று எதையாவது நினைத்து சிரித்து விடுவேன். ஆனந்தக் கண்ணீர் மாதிரி இது சோகச்சிரிப்பு என்று யாராவது சந்தேகமாகப் பார்க்கும் பட்சத்தில் சொல்லி, தப்பித்ததுண்டு. இப்படி யார் எரிச்சலைக் கொட்டிக் கொண்டேனோ தெரியவில்லை…. இப்பொழுது அந்த உணர்வே இல்லாமல் அலைகிறேன்.

”பொறக்கும்போது சம்பிரதாயத்துக்கு அழுததோட சரி; அப்புறம் அழுதே பார்த்ததில்லே! எப்பவும் சிரிப்புதான்!” என்று சிறு வயதிலேயே என் ‘கெக்கேபுக்கே’க்களுக்கு பொக்கே கொடுத்து வளர்த்து விட்டாள் என் தாய். சென்ற நாற்பதாண்டு காலமாய் அதை வளர்த்து வந்தவன், இப்பொழுது அது வாடிப் போய் இருப்பதில் வருத்தமுற்றிருந்தேன்.

வனஜா சொல்லுவதுபோல அப்படி ஒன்றும் கவலைப்படுவது போன்ற சம்பவம் சமீப காலத்தில் நிகழவில்லை. ஆறு மாதத்திற்கு முன் என் ஒன்று விட்ட தாத்தா உயிரைவிட்டார். ‘அப்பாடி, இனிமேல் அடிக்கடி பணம் கேட்டு நச்சரிக்க மாட்டார்; கவலை விட்டது’ என்றுதான் அதை எடுத்துக் கொண்டேனேயன்றி அவர் மறைவுக்கும் வருத்தப்படவில்லை.

ஆபீஸிலும் என்னை வைத்து வேலை வாங்குவது அவர்களுக்குத்தான் பிரச்னையே தவிர, வேலையால் எனக்கொன்றும் ப்ராள்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆக, அடிக்கடி கிண்டல் கேலியாக எழுதிக் கொண்டிருந்தவன் இப்பொழுது நகைச்சுவை சிந்தனைப் பஞ்சத்தால் ராகவன் கேட்ட நாடகத்தை எழுதித்தர இப்படி திணறவேண்டியதாயிற்று. காரணம் புரியாமல் தவித்தேன்.
எதையும் ‘டேக் இட் ஹி…ஹி…’ யாக எடுத்துக் கொள்பவன், இதை அத்தனை ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

நான் நினைத்தது போலவே ராகவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு போன் செய்தார்.

”உனக்கு என்ன ஆச்சு… உன்கிட்டேயிருந்து நான் கொஞ்சம் நல்ல சரக்காக எதிர்பார்த்தேன்…. இப்படி சொதப்பலா எழுதியனுப்பியிருக்கியே!” என்று ராகவன் சொன்னபோது எனக்கு பயம் கண்டுவிட்டது… என்னை விட பல மடங்கு வனஜா பயந்தாள். அக்கம்பக்கத்தில் தன் புருஷனைப் பற்றி பெருமையடித்துக் கொள்ள முடியாதே என்ற கவலை அவளுக்கு.

”சரி உங்க ஜாதகத்தை எங்க அப்பாகிட்டே காட்டறேன்” என்று எடுத்துக் கொண்டு போனாள். அவரோ, என்னுடைய இந்த நிலைக்கான காரணத்தை ஜாதகத்தில் ஆராயாமல் கண்டதையும் பார்த்து, என் கிரகநிலைப்படி தனக்கு தற்போது ஒரு கண்டம் என்று கணித்துவிட்டு கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.

யாரோ சொன்னார்களென்று சுவாமி சிரிமியோநந்தாவிடம் போனால் சரியாகிவிடும் என்று என்னை வனஜா அழைத்துக்கொண்டு திருவொற்றியூர் போனாள். நாங்கள் போவதற்குள் அவரை போலி சாமியார் லிஸ்டில் கைது செய்து விட, அவர் பிழைப்பே சிரிப்பாக சிரித்துவிட்டது.

வனஜா வல்லாரை அரைத்து விழுங்கச் சொன்னாள். ஆபீஸில் சம்பத், ‘பி.ஜி.உடோஸ்’ படிக்கச் சொன்னார். ஊஹும்… பாலைவனத்திலாவது ஊற்றுயிருக்கு… வரண்ட மனதில் ஒரு கீற்றுகூட சிரிப்புணர்வு ஏற்படவில்லை.

”சரி வேற வழியே இல்லே! சைக்கோ சாமிநாதனை பார்ப்போம் வாங்க” என்று வனஜா அழைத்தாள்.

”எந்த தியேட்டர்லே ஓடறது?” என்றேன் ஏதோ சிரிப்புப் படத்துக்கு கூப்பிடுகிறாளோ என நினைத்து.

”ஐயோ… சினிமாவுக்கு இல்லே… ‘சைக்கோ சாமிநாதன்’ பெரிய மனோ தத்துவ டாக்டராக்கும்!” என்றாள்.

”அடிப்பாவி… என்னை என்ன மனோ வியாதிக்காரன்னு நினைச்சியா… கிண்டலா?” என்றேன்.

”இதுவும் ஒரு வகையான மெண்டல் அப்செட்தான்… உங்களுக்கு என்ன! பேசாம வாங்கோ” அதட்டினாள்.

”என்னடி… பெரிய சைக்கியாடிரிஸ்ட்’னு சொல்றே! பீஸ் ரொம்பவும் தீட்டிடப் போறார்” என்று பயந்தேன்.

”அதெல்லாம் கம்மியாத்தான் வாங்குவார்” என்றாள் எல்லாம் தெரிந்தவள்போல.

”உனக்கு எப்படித் தெரியும்?”

”கல்யாணமாகிறதுக்கு முன்னாலே நான் அவர்கிட்டேதான் ட்ரீட்மெண்ட் எடுத்துண்டேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு என்னை மேலும் கலக்கி விட்டு சாமிநாதனிடம் அழைத்துச் சென்றாள்.

சைக்கோ சாமிநாதன் என்னை ஒரு பார்பர்ஷாப் சேரில் உட்கார வைத்து எதிரே இருந்த சக்கரத்தைக் காண்பித்தார்.

”கேள்விக்கு சரியா பதில் சொன்னா வீலை சுத்தலாமா டாக்டர்?” என்று .வி. ஆட்டம் நினைப்பில் கேட்டு வைத்தேன்.

”நிறைய டி.வி. பார்ப்பீங்க போலிருக்கு!” என்று அலுப்பாக சொல்லிவிட்டு எதிரேயிருந்த சக்கரத்தில் கவனம் செலுத்தி உற்றுப் பார்க்கச் சொன்னார்.
”ரிலாக்ஸ்….ரிலாக்ஸ்….” என்றவர் ”இப்போ நீங்க கொஞ்சம் பின்நோக்கிப் போறீங்க… பின்னோக்கிப் போறீங்க” என்றபடி என்னை மெஸ்மெரைஸ் செய்ய முயற்சிக்க, நான் நிஜமாகவே பின்னோக்கி சாய்ந்ததில் சேரிலிருந்து மல்லாக்கில் விழுந்து, பின்னால் மானிட்டர் போன்ற ஒரு காஸ்ட்லி கருவியைக் கீழே தள்ளி உடைத்தேன்.

டாக்டர் மனமும் உடைந்து விட்டது. என்னிடம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டு விட்டு, வனஜாவைக் கூப்பிட்டு தனியாக அழைத்துக் கொண்டுபோய் எதையோ சொன்னார்.

”ஓகோ அதுதான் காரணமா டாக்டர்… நான் கவனிச்சுக்கறேன்” என்று டாக்டரிடம் கூறியவள், என்னை ஓரக் கண்ணால் பார்த்தாள்… ”ஐயையோ என்ன மனசிதைவோ எனக்குத் தெரியவில்லையே” என்று பயப்பட ஆரம்பித்தேன்.

அன்று இரவு.

”எட்டு மணிலேர்ந்து எட்டரை வரைக்கும் தினமும் வாக்கிங் போறீங்க… அதே மாதிரி இரவு ஒன்பது மணிலேர்ந்து அரை மணி வாக்கிங்…. வெள்ளிக்கிழமை ராத்திரி ஒன்பதரை ‘டு’ பத்து வாக்கிங்.”
”இது என்னடி, பைத்தியக்காரத்தனமான ராத்திரி ரவுண்ட் அப்!”
”இந்த நேரங்கள்லே நீங்க டி.வி. பார்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்” என்றாள் கண்டிப்பாக.

”இது என்னடி பினாத்தல்?”

”ஆமாம் பினாத்தல்தான்! தினமும் எட்டு மணிக்கு ‘சிரிக்கப்போவது யாரு?” ஒன்பது மணிக்கு ‘காமெடி சூப்பர் மார்க்கெட்’, வெள்ளிக்கிழமை ராத்திரி ஒன்பதரை மணிக்கு ‘சிரிப்பதற்கு சிந்திக்காதே’ எல்லாமே பெனாத்தலான நாடகம்தான்… யாரும் அதை பார்த்துட்டு சிரிக்கலேன்னாலும் பேக்கிரவுண்ட் மியூஸிக் காட்டாம அவாளே ரெக்கார்ட்டெட் சிரிப்பை கெக்கேபுக்கேன்னு ஓடவிட்டுடறா.”

”காய் வாங்கப் போறயா’ன்னு வசனம் வந்தாலும் சிரிப்பு, ”செருப்பாலே அடிப்பேன்”னு யாராவது சொன்னாலும் சிரிப்பு… இந்த மாதிரி அசட்டுபிசட்டு டி.வி. டிராமாவ நீங்க அதிகமா பார்க்கிறதாலேதான் உங்களுக்கு சிரிப்பா சிந்திக்கவே முடியாம போயிருக்கும்னு டாக்டர் உறுதியா நம்பறாரு… அதனால இனிமே இந்த மாதிரி தத்து பித்து நாடகத்தை பார்க்கறதை நிறுத்தினாத்தான் உங்க நகைச்சுவை திரும்பவும் துளிர்விடும்னு டாக்டர் சொல்லிட்டார்!” என்றாள் வனஜா.

சைக்கோ சாமிநாதன் கில்லாடிதான் என்று எனக்கு தோன்றியது. அவர் பிரிஸ்கிரிப்ஷன் பிரகாரம் அந்த அச்சு பிச்ச நாடகங்களை தவிர்த்தவுடன் என்னிடம் மாற்றம் தெரிந்தது. ஏழையின் இரைப்பிலும் சிரிப்பைக் காண ஆரம்பித்துவிட்டேன்.

இன்னொரு சமாசாரம்… வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியில் வேறு வழியேயில்லை என்று நான் எழுதிக் கொடுத்த குப்பையை நாடகமாக ஒளிபரப்பினார்கள்…. ஒரே சிரிப்புத்தான் போங்கள்…. பார்த்தவர்களின் சிரிப்பென்று தவறாக நினைக்க வேண்டாம். அதுவும் பேக்கிரவுண்ட்லே அடிக்கடி ஒலித்த ரெக்கார்டட் சிரிப்புதான்!

– ஜூன் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *