சீதாப்பாட்டி விட்ட சவால்!

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,095 
 

அப்புசாமி கோபாவேசமாகக் கத்தினார்: “சரிதான் போடா! பெரிய சந்தன வீரப்பன் இவுரு! உன் மாட்டை அவுத்து விட்டுடுறேன் பார். அப்பத்தாண்டா உனக்கு புத்தி வரும்.”

பால்கார நாதமுனி, மாட்டுக்கு ‘சத்தக்’ என்று ஊசி போட்டான்.

பால்காரர்கள் இரண்டு வகை. பருத்திக் கொட்டை வைத்துச் சில பால்காரர்கள் பால் கறப்பார்கள். சில பேர் ஊசி போட்டுப் பால் கறப்பார்கள்.

ஸிரிஞ்சை மாட்டின்மீது வைத்து ஓர் அழுத்து அழுத்திவிட்டுக் காதில் பென்சில் வைத்துக் கொள்வதுபோல அதை வைத்துக் கொண்டு விட்டு அப்புசாமியின் ·பைலை எடுத்துக் கொண்டான் நாதமுனி.

“யோவ்! தாத்தா! இன்னாடா சொன்னே? மவனே! என் மாட்டை நீ அவுத்து விட்டுடுவியா? ஹஹஹ! இவுரு பெரீய பேட்டை தாதா. என் மாட்டை அவுத்து விட்டுடுவாராம்…” நாதமுனி ஆங்காரச் சிரிப்புச் சிரித்தான்.

அப்புசாமி பதிலடி (அடி கொடுக்கிறதாவது! பதில் வார்த்தை) கொடுப்பதற்குள் சீதாப்பாட்டி அவசரமாக உள்ளேயிருந்து வந்தாள். “ப்ளீஸ்! நீங்க உள்ளே வாங்க. ஹி இஸ் எ பக்கா குண்டா. அவன்கிட்ட என்ன பேச்சு.”

பட்டாசுக் கிடங்கில் விழுந்த தீப்பொறி மாதிரி பால்கார நாதமுனி காதில் சீதாப்பாட்டியின் வார்த்தை விழுந்தது. உடனே ராஜு சுந்தரத்தின் ‘பத்திகிச்சி பத்திகிச்சி’ மாதிரி பத்திகிச்சி பால்கார நாதமுனிக்கு.

“இந்தாமே கெய்வி! மரியாதி குடுத்து மரியாதி வாங்கு! குண்டா அண்டான்னே… கீசிடுவேன் மகளே கீசி!”

சீதாப்பாட்டி அவனுக்குப் பதில் சொல்லாமல் அப்புசாமியைப் பார்த்தாள். தலையை லேசாக அசைத்தாள். அதற்கு அர்த்தம்: “பொறுத்தது போதும். பொங்கி எழு! ·பியர் நாட் மை ஹார்ட்! வெளுத்துக் கட்டுங்க அவனை!”

அப்புசாமி அந்த ஒரு வார்த்தைக்குத்தான் காத்திருந்தார். “டாய்!” என்று கேட்டுக்கு உள்ளிருந்து கொண்டு போர்க் குரல் கொடுத்தார்.

“என் பெண்டாட்டியையாடா கீசிடுவே! உன் முகரையிலே என் கையை வைக்க! ஒரு தலாக் குடுத்தா நீ மலாக் ஆயிடற கசுமாலம்… உதார் காட்டறயாடா உதார்! சோமாரி!”

“அட! இவுரு இன்னா இன்னாவோ வூடு கட்டறாரே! டேய் கெழவா! தில்லு இருந்தாக் கேட்டுக்கு வெளியே வாடா, உன்னைக் கொத்துக்கறி செஞ்சு உப்புக்கண்டம் போட்டுடுவேண்டா… (எழுதக்கூடாத பல கெட்ட வார்த்தைகள் பட்டண ரெளடி ·பிரேஸஸ்)”

அப்புசாமி ஜகா வாங்கவில்லை. “என்னை என்னடா பண்ணிடுவே. ‘ஏண்டா நீ மாட்டைக் கொண்டு வந்து எங்க வீட்டு வாசல்லே கட்டறியேன்னு கேட்டால் உனக்கு ஆங்காரம் வருது. நம்ம மெட்ராஸைச் சிங்காரச் சென்னை ஆக்கணும்னு நாலாப்பக்கமும் பாலத்தைக் கட்டுவமா, பள்ளத்தைத் தோண்டுவமான்னு அவனவன் மண்டையை உடைச்சிகிட்டு இருக்கான், நீ மாட்டைக் கொண்டுவந்து கட்டி அசிங்கம் பண்றியேடா நாயி! வூட்டுலே கட்டறதுக்கு வக்கில்லைன்னு வூரார் பிளாட்பாரத்திலே கொணாந்து கட்டறியாடா வூதாரிப் பயலே! உப்புப் போட்டுத் துன்றியாடா நீ… இல்லே… சாணி துன்றியா சாப்பாட்டுக்குப் பதிலா?” அப்புசாமி கேட்டைப் பிடித்துக் கொண்டு ஆர்ப்பரித்தார்.

பால்கார நாதமுனியின் சர்வீஸில் இப்படி எல்லா ஜனங்களுக்கு எதிரே அவனை மானம் போகிற மாதிரி எவரும் கேட்டதில்லை.

“அடே மவனே! கெயவா! சாணி துன்றியான்னாடா கேட்டே! ஒன்னை ஒடம்பு மேலே கழுத்தில் லாமப் பண்ணி உள்ளே அடைக்கறேண்டா சாணி! (அந்த மவனே இந்த மவனே! அப்புறம் பல தத்தகாரங்கள்!)” நாதமுனி தொடையைத் தட்டிச் சவால் விட்டான்.  

அப்புசாமி சிரித்தார், குமரி முத்துவும் தலை குனியும்படி. “என்னை நீ கொலை பண்ணிடுவியாடா. முடிஞ்சா செய்டா கம்மனாட்டி! உன் ரவுடித்தனமெல்லாம் என்கிட்டே வெச்சுக்காதே. கொலை பண்ணிடுவியோ கொலை? என் கை என்ன பூப்பறிச்சிகிட்டிருக்கும்னு நினைச்சிகிட்டியாடா? மாங்காத் தலையா? மீசை வெச்சிகிட்டவனெல்லாம் வீரப்பன் ஆயிட முடியாதுடாக் கிக்கோரி புள்ளே சக்கோரி!”

கிக்கோரி புள்ளே சக்கோரி!

இந்த மூன்று வார்த்தையை அப்புசாமி சொன்னதும் நாதமுனியின் ரத்த நாளங்களிலே வீரிய கந்தகமிலம் ஏழெட்டு லிட்டர் பாய்ந்தது போலிருந்தது. “ஏண்டா, கிக்கோரி புள்ளைன்னாடா சொன்னே… உன்னியெ இப்பவே…”

ஒரே உதையில் கேட்டை உதைத்துத் தள்ளிக்கொண்டு புயலாய்ப் புகுந்து அப்புசாமியைக் கைகொடுத்து பியூட்டியா அலேக் செய்தான்.

(கிக்கோரி என்ற பழைய கால பாக்ஸரான ரெளடியுடன் நாதமுனியின் அம்மாவுக்குக் கள்ளத் தொடர்பு உண்டு என்று அந்த வட்டாரத்தில் ஒரு கிசுகிசு உண்டு.)

சீதாப்பாட்டி, “ப்ளீஸ்! ப்ளீஸ்! அவரை விட்டுடுங்க. வயசானவர், வயசானவர். அவருக்காக நான் அபாலஜி கேட்டுக்கறேன்” என்று கெஞ்சினாள்.

அப்புசாமி, நாதமுனியின் தூக்கிய கையில் ஆன்ட்டென்னாவில் மாட்டிக் கொண்ட ஆடிக் காத்தாடி மாதிரி தொங்கிக் கொண்டிருந்தார். “சீதே! சீதே! ஐயோ… ஹா! ஹா! ஊ….வ்…”

சீதாப்பாட்டி தடாலென்று நாதமுனியின் காலில் விழுந்தாள். கட்சி தாவியவர் தாய்க்கட்சிக்குத் திரும்பி பழைய தலைவர் காலில் விழுவது போல. “விட்டுடுப்பா அவரை… விட்டுடுப்பா ப்ளீஸ்…””

நாதமுனி அப்புசாமியைத் தூக்கி ஒரு புறம் கடாசிவிட்டு “சொல்லி வைடி கெயவி! நம்ம கைலே அடுத்தவாட்டி வேலை வெச்சுக்கினா… இவன் உடம்புலே தலை இருக்காது. உன் கயுத்துலே கயிறு இருக்காது. ஆமா.”

அப்புசாமி கராத்தேக்காரன் நொறுக்கிய கள்ளிக்கோட்டை டைல்ஸ் மாதிரி பீஸ்பீஸாக விழுந்து கிடந்தவர், தன்னைத் திரட்டிக் கொண்டு முக்கி முனகியவராக எழுந்தார். “அடியே கியவி! என்னாலே… என்னாலே… முடியாதுடிம்மா.”

“உதயமூர்த்தி என்ன சொன்னார்… உன்னால முடியும் தம்பி என்றார்” என்றாள் சீதாப்பாட்டி. “த கிரேட் ஸேஜ், வாரியர், ·பிலாஸ·பர் ஸ்வாமி விவேகானந்தர் என்ன சொன்னார்… விழுவது எழுவதற்காக என்றார். பரவாயில்லை. யு வில் டெ·பனட்லீ சக்ஸீட். ஐ அஷ்யூர் யூ நகரத்தைச் சுத்தப்படுத்தணும்கற நோபிள் காஸ¤க்காக நீங்கள் மார்ட்டிர் ஆனாலும் பரவாயில்லே… டக்!”

சீதாப்பாட்டி கணவரை மெதுவே தூக்கி விட்டுத் தன்மீது அதிகம் பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக அணைத்தவாறு உள்ளே கூட்டிச் சென்றாள்.  

சீதாப்பாட்டியின் அமைதியான வாழ்க்கையில் சில தினங்களுக்கு முன் ஒரு சோதனை – சோதனை என்பதை விட ஒரு சாலஞ்ச் – சவால் – குறுக்கிட்டது.

பா.மு.கழகத்தினர் (பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தினர்) மாசா மாசம் நடத்தும் ஹோம்லி கெட் டு கெதர் பா(ர்)ட்டி சீதாப்பாட்டியின் வீட்டில் கூடுவதாக இருந்தது.

ஒரு பிரத்தியேக அலவன்ஸ் கொடுத்து மொட்டை மாடியை அப்புசாமியைக் கொண்டு சீதாப்பாட்டி சுத்தம் செய்து வைத்திருந்தாள்.

கிரி மியூஸியத்திலிருந்து வாடகை ஷாமியானாகளும், நாற்காலிகளும் வந்தாயிற்று. எல்லா ஏற்பாடுகளும் நடந்திருந்தும் சீதாப்பாட்டியின் முகம் ஒரே கடு கடு, சிடு சிடு.

பால்கார நாதமுனி அவள் வீட்டு வாசலில் மாட்டைக் கட்டியிருந்ததே காரணம்.

அது தரையை கன்னாபின்னாவென்று அசுத்தம் செய்திருந்தது. அவ்வப்போது குற்றால நீர்வீழ்ச்சி மாதிரிக் கோமியத்தை அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சுருக்கமாக, வாசல்புறம் கூரையில்லாத மினி மாட்டுக் கொட்டையாகக் காட்சி அளித்தது.

“மாட்டுக்காரனைக் கூட்டிட்டு வாங்க சொல்றேன்” என்று கணவனை ஏவினாள்.

அப்புசாமி அவசரமாகத் தூது சென்றார். பெட்டிக் கடை அருகே சூடாக பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்த நாதமுனி பேச்சுவார்த்தைக்கு வந்தான்.

ஆனால் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போக முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டான். “உங்க பாட்டன் வூட்டுப் பிளாட்பாரமா? பொதுவிடம், கார்ப்ரேஸன்காரன் வந்து கேக்கட்டும். நீங்க ஒண்ணியும் என்னைக் கேக்கத் தாவலை?” என்று சொன்னதோடு இலவச இணைப்பாக ஒரு கன்னுக்குட்டியையும் கொண்டு வந்து கட்டிவிட்டுப் போய்விட்டான்.

‘வாசல்புறம் இத்தனை அசுத்தமாக இருந்தால் வருகிறவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்று புழுங்கிய சீதாப்பாட்டி, பணம் போனால் போகிறது என்று ஓட்டல் அசோகாவின் மினி ஹாலில் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிவிட்டாள். 

அவளுக்கு அதனால் நாலாயிரத்து நானூறு ரூபாய் அதிகச் செலவு.

ஓட்டலில் கூட்டம் முடிந்து கிழவிகளெல்லாம் சீதாப்பாட்டியிடம் விடை பெற்றுச் சென்றார்கள். அப்புசாமி, “அடியே சீதே! ஓட்டல் பில்லு எவ்வளவு?” என்றார்.

“ஏன் கேக்கிறீங்க. ஆர் யூ கோயிங் டு பே?” என்றாள் சீதாப்பாட்டி எரிச்சலுடன்.

“நானா? அவ்வளவு துட்டுக்காரனா என்னை என் பொண்டாட்டி வெச்சிருக்கலியே…” என்றார்.

“கேவலம் ஒரு மாட்டுக்காரனை விரட்ட முடியாததாலே நாலாயிரத்து நானூறு ரூபாய் உனக்குப் பணால்! உன் மூக்கைப் பால்கார நாதமுனி நல்லா உடைச்சான்” என்று கெக்கலித்தார்.

கணவனை வைத்த கண் வாங்காமல் அமைதியாக ஏறிட்டாள் சீதாப்பாட்டி. “சாலஞ்ச்! இப்போ சொல்றேன் கேட்டுக்குங்க. எனக்கு நஷ்டமான அந்த நாலாயிரத்து நானூறு ரூபாயை அந்தப் பால்காரன்கிட்டேயிருந்து நான் வசூலித்துக் காட்டறேனா இல்லையா பாருங்க. சாலஞ்ச்!”

“அடி சக்கை!” என்று அப்புசாமி ஒரு விசில் அடித்தார். என்னை மாதிரி சவால் விடறியா சவால்.

“நீங்களும் இந்த பிராஜக்டில என்னோடு ஒத்துழையுங்க. ஒரு ஹாண்ட்ஸம் மணி உங்களுக்குத் தர்றேன்.

ஸே… தெளஸண்ட் ரூபீஸ்?” என்றாள்.

“ஓ! ஆயிரம் ரூபாய்! சபாஷ்! கூட்டணிக்கு நீயாக வந்து ஐயாகிட்டே கெஞ்சறே?”

“எப்படி வேணும்னா இன்ட்டர்ப்பெரட் பண்ணிகுங்க. நாம எதிர்க்கட்சியானாலும் கணவன், மனைவி என்கிற ஓட்டும் உறவும் இருக்கில்லையா” என்ற சீதாப்பாட்டி பால்காரனை எப்படி வெற்றி கொள்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள். அதன் விளைவுதான் அப்புசாமி எல்லார் எதிரிலும் பால்காரனைக் கன்னா பின்னா வென்று திட்ட வேண்டும் என்பது.  

பால்கார நாதமுனி அவரைத் கொலை செய்துவிடுவதாக ஆர்ப்பரித்தான்.

வாக்குவாதம் நடந்த மூன்றாவது நாள் அப்புசாமி விடியற்காலை வாக்கிங் புறப்பட்டார்.

கார்ப்பரேஷனில் ரோடு விளக்கு அணைக்கும் தொழிலாளிகள் ரொம்ப சுதந்திரமானவர்கள்.

ஒரு நாள் பகல் பூராவும் ஜெகஜ் ஜோதியாக விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். ஒரு நாளைக்கு விடியற்காலை மூணு மணிக்கே அணைச்சிடுவாங்க.

அன்று அப்புசாமி நாலரை மணிக்கு வாக்கிங் போனவர் போனவரே. நகரசபைச் சிப்பந்தி காலை விளக்குகளை நாலு மணிக்கே அணைத்துவிட்டு மாங்காடு போய் விட்டார்.

விடியற்காலை இருளில் கரைந்த அப்புசாமி விடிந்து பத்து மணியாகியும் வரவில்லை.

சீதாப்பாட்டி முகத்தில் கலவரம், துக்கம். பாத்திரம் தேய்த்து வீடு மெழுக வந்த வேலைக்காரி “ஏம்மா ஒரு மாதிரி இருக்கிங்க” என்று பாட்டியைக் கேட்டே விட்டாள்.

“ஐயா விடியற் காலையிலே வாக்கிங் போனார். இன்னும் காணோமே.”

“அவரு எங்கனாச் சுத்திட்டு வருவாரும்மா. நீங்க எப்பவும் கவலைப்பட மாட்டீங்களே” என்றாள் வேலைக்காரி.

“யூர் ஆர் ஸென்ட் பர்சன்ட் கரெக்ட். பட். பால்கார நாதமுனியை மாடு கட்டினதுக்காக டே பி·போர் எஸ்டர்டே திட்டிட்டாரில்லையா? அவன் வின்டிக்டிவா ஏதேனும் பண்ணாம இருக்கணுமேன்னுதான் ஐயம் வொரீட்.”

“அவனாண்டை போய் ஐயா ஏன் மோதினாரு! பொல்லாத ஆளாச்சே அவன். கிக்கோரி புள்ளே சக்கோரியாச்சே. அப்பனோட ரவுடித்தனம் ரத்தத்திலே ஓடுது அவனுக்கு. நீங்க எதுக்கும் போலீசில ஒரு வார்த்தை சொல்லி வையுங்க அம்மா.”

“நீயும் வர்ரியா ஸ்டேஷனுக்கு. நான் ரொம்ப வீக்கா ·பீல் பண்றேன். கார் கூட டிரைவ் பண்ண முடியாது. ஆட்டோவிலே போய் விடலாம். நான் மயக்கம் கியக்கம் போட்டுட்டால் வில் யூ ஹெல்ப் மீ.”

“இன்னா பெரிமா இப்படியெல்லாம் பேசறீங்க. ஐயா கிடைச்சிடுவாரு.”

சீதாப்பாட்டியைக் கைத்தாங்கலாக வேலைக்காரி ஆட்டோவுக்கு அழைத்துப் போனாள்.

ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டரே இருந்தார். சீதாப்பாட்டிக்கு நன்கு தெரிந்தவர். ஆகவே வரவேற்பு பலமாக இருந்தது.

கேஸ் விவரத்தைக் கூறி தன் பயத்தையும் கூறினாள். சப்-இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டு, “பால்கார நாதமுனியால் உங்கள் புருஷன் உயிருக்கு அபாயம் ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கறீங்களா மேடம்.”

“அதை நீங்கதான் கண்டுபிடிக்க வேண்டும். ஐ ஹாவ் மை ஓன் டெளட்ஸ். இந்த காஸெட்டுல தற்செயலாக அந்தப் பால்காரனின் வாய்ஸ் பதிவாயிருக்கு. திஸ் இஸ் ·பார் யுவர் ரெ·பரென்ஸ் ப்ளீஸ்.”

பால்காரச் சண்டையின் போது முன்னேற்பாடாக டேப்ரிகார்டரை ஆன் செய்து புடவைத் தலைப்பில் சீதாப்பாட்டி மறைத்துக் கொண்டிருந்தாள். சீதாப்பாட்டி இப்போது டேப்பை ஆன் செய்தாள். அப்புசாமி – நாதமுனி விவகாரம் வெகு ஆழமாகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. “தில்லு இருந்தா கேட்டுக்கு வெளியே வாடா. உன்னைக் கொத்துக்கறி செஞ்சு உப்புக் கண்டம் போட்டுடு வேண்டா… அடே மவனே! கெயவா! ஒன்னை உடம்பு மேலே கழுத்தில்லாமப் பண்ணி உன்னே அடைக்கறேண்டா சாணி…”

சப்-இன்ஸ்பெக்டரிடம், பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சீதாப்பாட்டி வேலைக்காரியின் உதவியோடு (சப்-இ. எதிரில்) இரண்டு தடவை சீதாப்பாட்டி மயக்கம் போட்டுவிட்டாள்.

“மேடத்தைப் பார்த்து அழைச்சிட்டுப் போம்மா” என்று சப்.இ.வாசல்வரை வந்து வழி அனுப்பி வைத்தார்.

பால்கார நாதமுனிக்கு விசேஷ பூஜை நடந்து கொண்டிருந்தது போலீஸ் ஸ்டேஷனில்.

“ஐயையோ! சாமி சத்தியமா நான் அவரை ஒண்ணியும் பண்ணலீங்க. நான் அவரைப் பார்க்கவே இல்லீங்கோ. அய்யய்யோ… அய்…அய்…அய்…”

தனது மாட்டைச் சித்திரவதை பண்ணி, அதற்கு ஓரொரு வேளையும் ஊசி போட்டு ஒட்ட ஒட்டப் பால் கறந்த அவனிடமிருந்து அப்புசாமி பற்றிய விஷயத்தைக் கறக்க ஷி·ப்ட் முறையில் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.  

“நீ செய்த கொலை மிரட்டல் டேப்பாகியிருக்குது. உன் குரல்தானே இது. சொல்லுடா!”

போலீஸ் மிதி ணங்கென்று! சொல்லு பெரியவரை என்ன பண்ணினே? சொல்லிடு. வீட்டிலே எந்த இடத்திலே புதைச்சிருக்கே?”

“ஐயோ, ஐயோ, நான் பால்காரனுங்க. சாமியாருங்களைக் கேக்கிற மாதிரி கேட்கறீங்களே.”

லொட்!

“கேட்ட கேள்விக்குப் பதில். அவரை என்ன பண்ணினே?””

“ஐயோ. நான் ஒண்ணும் பண்ணலீங்க சத்தியமா…”

“சரி. சரி. உனக்கு மிளகாய்ப் பொடி வைத்தியம்தான் சரி. ஏட்டு! கொண்டாய்யா மிளகாய்ப் பொடி. எல்லாத் துவாரத்திலேயும் போட்டுக் கெட்னே பண்ணு.”

“ஐயையோ… வேணாம் சார். வேணாம். சாமி சத்தியமா…”

“ப்ளீஸ்” என்றாள் சீதாப்பாட்டி. “பால்கார மிஸ்டர் நாதமுனி கிட்டே நான் கொஞ்சம் பேசணுமே.”

“அங்கேதான் உட்கார வெச்சிருக்கோம் மேடம். நீங்களும் நாலு அடி போட்றீங்களா? இந்தாங்க லாட்டி!” என்று சப்-இன்ஸ்பெக்டர் ஒரு லாட்டியை சீதாப்பாட்டியிடம் தந்தார்.

“நோ நோ. அப்ஸல்யூட்லி நாட். நான் அவர்கிட்டே கெஞ்சிக் கேக்கறதுக்காக வந்திருக்கேன். ஒரு ·பைவ் மினிட்ஸ் அவர்கிட்டே தனியாப் பேச அனுமதிக்கணும்.”

“தாராளமாக.”

ரத்தக் காயம் ஏதும் ஏற்படாத மாதிரி சாமர்த்தியமாகப் போலீசார் நாதமுனிக்குப் பூஜை செய்திருந்தனர். அவனை யாராவது தூக்கிக் குலுக்கினால் உண்டிப் பெட்டி குலுங்குவது போல அவனுடைய உடைந்த எலும்புகள் குலுங்கும் சத்தம் கேட்டிருக்கும்.

பாட்டியைக் கண்டதும் குலுங்கக் குலுங்க அழுதான். “பெரீம்மா, நான் பெரீவரை ஒண்ணியும் செய்யலை. என் மாட்டுங்க மேலே சத்தியமாச் சொல்றேன்” என்றவாறு கீழே விழுந்து சீதாப்பாட்டியைக் கும்பிட்டான். எழுந்து தன் கன்னத்தில் போட்டுக் கொண்டான். “நான் அன்னைக்கிக் கோபத்திலே கொலைகிலைன்னு திட்டினேனே கண்டி அவரை நான் அப்புறம் பார்க்கக்கூட இல்லீங்க பெரீம்மா.”

சீதாப்பாட்டி முகத்தில் கனிவு சொட்ட, “அப்படியானால் என் ஹஸ்பெண்ட் எங்கே? இரண்டு நாளாக் காணோம்.”

“என்னை விட்டுடச் சொல்லுங்க. நான் தேடித்தர்றேன் தாயி.”

“ஐ பிடி யூ மிஸ்டர் நாதமுனி.”

நாதமுனி துடித்தான். “பெரீம்மா! எனக்கென்னங்க மிஷ்ட்டர் கிஷ்ட்டர் மரியாதி. அடே நாயின்னு கூப்பிடுங்க. ஐயோ செனி புடிச்ச மாதிரி அண்ணைக்கி என் வாயிலே கொலை கிலைன்னு வந்துடிச்சே” முகத்தில் அறைந்துகொண்டு அழுதான்.

“தட்ஸ் ஆல் ரைட் மை ஸன்” என்றாள் சீதாப்பாட்டி. “நீ விடுதலை ஆகிறதுக்கு நான் உதவி செய்கிறேன். ஆனால்… ஆனால்…””

“தாயி! நீங்க தெய்வம்.”

“தெய்வமாயிருந்தாலும் என் லாயருக்கு நான் ·பீஸ் கொடுத்தாகணும். நாலாயிரத்து நானூறு ரூபா வக்கீல்னு கேள்விப்பட்டிருப்பே.”

“ஐயோ தாயி! நான் கோர்ட்டுப் பக்கமே போனதில்லீங்க.”

“சரி. இப்பவும் கோர்ட் பக்கம் போகாம இருக்கறதுக்குத்தான் இந்த ·பீஸ். அந்த ரூபாயை உன் பையனோ, பெண்சாதியோ கொண்டு வந்து என்கிட்டே கொடுத்துட ஏற்பாடு பண்ணு. நான் லாயருக்கு அதைக் கொடுத்து உன்னை அக்விட் பண்ணறேன்.”

“அப்புறம் பிடிச்சுக்குவாங்களா தாயி.”

“நோ. நோ. நீ என் புருஷனைக் கொலை பண்ணியிருந்தாலும் பண்ணியிருப்பே. ஐ ஹாவ் மை ஓன் டெளட்ஸ்… ஆனால் ஆனால்…” பாட்டி, புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு விம்மினாள். “காலிலே விழுந்தவனை மன்னிக்கிறது பாரத தேசப் பத்தினிப் பெண்களோட பண்பாடு. கல்ச்சர். நொபிலிடி. பகைவனுக்கருள்வாய்னு நேஷனல் பொயட் பாரதி பாடியிருக்கார். ஸோ… உன்னைத் தூக்கிலே போடறதாலே என் புருஷன் திரும்பியா வந்துடப் போறார்.”

“தாயி! தாயி! நீங்க, நீங்க… தெய்வம்! தெய்வம்.” நாதமுனி மறுபடியும் விழுந்து கும்பிட்டான்.

“இன·ப்! இன·ப்!” என்றாள் சீதாப்பாட்டி. ரூபாய் மத்தியான்னத்துக்குள் வந்து சேர்ந்தால் லாயர் சாயந்தரமே உன்னை விடுவித்துவிடுவார்.”

“இதோம்மா… இப்ப… இப்ப… இந்த மினிட்டிலேயே தந்துடறேன். எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு அஞ்சாயிரம் லுங்கியில மடிச்சு வெச்சுத் தெச்சிருப்பேன் எப்பவும்” என்றான் லுங்கியின் முனையைக் கிழித்து பத்து ஐந்நூறு ரூபா நோட்டைப் பாட்டியிடம் தந்தான்.

சப்-இன்ஸ்பெக்டர் ராமாநாயுடு, சீதாப்பாட்டி கொண்டு வந்து தந்த கடிதத்தை இன்னொரு தரம் படித்தார். ஏட்டைக் கூப்பிட்டார். “இந்தாய்யா மொளகாப்பொடி! கேஸ் பிசுபிசுத்துப் போச்சு. அந்தப் பால்காரக் கழுதையை வெளியே துரத்துய்யா” என்று உத்தரவிட்டார்.

சீதாப்பாட்டி தந்த கடிதத்தில் கீழ்க்கண்ட வாசகங்கள் இருந்தன.

“என் பிரிய மனைவியாரான சீதேக்கியவிக்கு அப்புசாமி எழுதிக் கொண்டது.”

அடியே சீதேய்!

உன்னை விட்டு நான் ஓடிப் போறதுக்காக ரொம்ப வருத்தப்படறேன். ஆனால் எனக்குப் பால்கார நாதமுனியாலே அன்னைக்கி ஏற்பட்ட தலைகுனிவு என்னை ஓட வைக்குது. அவனுக்குப் பயந்துகிட்டு நான் ஓடலை தாயி. அவமானம் தாங்காம ஓடறேன்.

ஒரே ஒரு முடியைப் புடுங்கினாக்கூட – புடுங்கக்கூட வேணாம் – தானா உதுந்தாக்கூட கவரிமான் கவுந்தடிச்சுச் செத்துடுமாம்.

நான் மனுசன் தாயி மனுசன்! பி.பி.ன்னு டாக்டர் எச்சரிச்சாக்கூட உப்புப் போட்டுத்துன்னற மானக்கார மனுசன் தாயி நான்.

அந்தப் பால்காரக் கசமாலம் உன்னைக் கெட்ட வார்த்தையிலே அவளே இவளேன்னு எல்லார் எதிரிலும் திட்டினான்.

பெண்டாட்டியை அன்னியன் ஒருத்தன் கன்னாபின்னான்னு கண்ணெதிரே பேசறதைப் பார்த்துக்கிட்டுச் சும்மாயிருக்கிற சோதா ஒரு புருசனான்னு எனக்குத் தோணிப் போச்சு. அன்னிக்கி உன் மரியாதையை மானத்தைக் காப்பாத்த நான் ஒண்ணுமே செய்யலை.

நான் சன்னியாசியாக, கையிலே இருக்கிற பணத்திலே, டிக்கெட் கிடைக்கிற ஊருக்கு ஓடிப்போறேன்.

மனசுலே என்னிக்கி இந்தத் துக்கம் ஆறுதோ அன்னைக்கி வந்து உன்னைக் கண்டுக்கறேன்.

என்னை அனாவஷ்யமாகத் தேடாதே. பெட்ரோல் செலவு. (மறுபடியும் பெட்ரோல் விலை ஒசரப் போவுதாம்)

இப்படிக்கு உன்னை எப்பவும் பிரியாத கணவன் (தற்காலிகமாகப் பிரிந்திருக்கும் கணவன்) – அப்புசாமி.

பால்கார நாதமுனியோ, அவன் மாடுகளோ இப்போதெல்லாம் சீதாப்பாட்டியின் தெருப்பக்கமே வருவதில்லை.

அப்புசாமியை ஒரு நாலு நாள் செங்கல்பட்டிலுள்ள தூரத்து உறவினர் வீட்டில் சீதாப்பாட்டி தங்க வைத்திருந்தாள். ஐந்தாவது நாள் தானே போய் உறவினருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கணவனை அழைத்து வந்துவிட்டாள்.

“சீதே! நான் மட்டும் சன்னியாசிக் கடுதாசி எழுதித் தரலையின்னா… நீ ஜெயிச்சிருக்க முடியுமா?” என்று கெக்கரித்தார்.

“தாராளமாப் பெருமை அடிச்சுக்குங்க… பட்… நான் விட்ட சவாலை நிறைவேற்றிக் காட்டிட்டேன். நாலாயிரத்து நானூறு ரூபாயைப் பால்காரன் கிட்டேயிருந்து வசூல் பண்ணிட்டேன். அத்தோட பால்காரன் மாட்டைக் கொண்டு வந்து கட்டறதையும் நிறுத்தியாச்சு… ஆவரேஜ் பீபிள் ஒரு முயற்சியிலே… ஐ மீன் ஸிங்கிள் எ·பர்ட்டிலே… ஒற்றைக் காரியம்தான் பண்ணுவாங்க… பட் இன்ட்டலிஜென்ட் ·பாக்ஸ் ஒரு காரியம் பண்ணினா அதனாலே ரெண்டு மூணு அட்வான்ட்டேஜ் ஏற்படறாப்பலே பண்ணுவாங்க. அன்டர்ஸ்டாண்ட்?” என்று பெருமிதமாகச் சிரித்தாள்.

“அதெல்லாம் சரிம்மே. எனக்குத் தர்ரேன்னியே ஆயிரம் ரூபா. அதை வெட்டு மின்னே.”

சீதாப்பாட்டி சிரித்தாள். “ஐ ஷல் சப்மிட் யூ டீடெய்ல்ட் அக்கவுண்ட் ·பர் இட், நீங்கள் நாலு நாள் செங்கல்பட்டுலே ஸ்டே பண்ணினதுக்கு அவங்களுக்கு ஐந்நூறு ரூபா தந்தேன். டெய்லி ஸிக்ஸ் காப்பி சாப்பிட்டீங்களாமே… சொன்னாங்க. தென்… கன்வேயன்ஸ்… டு அண்ட் ·ப்ரோ பெட்ரோல் செலவு. தட்கம்ஸ்டு த்ரீஹண்ட்ரட் ருபீஸ். அப்புறம் நீங்க கேட்ட ஸ்னாக்ஸ், ஐஸ் க்ரீம், ஓட்டல் டி·பன் எட்ஸெட்ரா ஒரு டூ ஹண்ட்ரட்… மிஸலேனியஸ் ஒரு ஹண்ட்ரட். இன் டோட்டோ எல்லாமாகச் சேர்ந்து தெளஸண்ட் ஹண்ட்ரட் வரது. பார்க்கப் போனால் யூ வோ மீ ஹண்ட்ரட் ரூபீஸ்… அதை நான் இப்ப கேட்கலை. நெக்ஸ்ட் மன்த்திலே டெபிட் பண்ணிக்கறேன்.”

“அடியே பாவி! “அப்புசாமி வீறிட்டார். “உன்னை விட கிக்கோரி மகன் சிக்கோரியே பரவாயில்லேடி.

Print Friendly, PDF & Email

1 thought on “சீதாப்பாட்டி விட்ட சவால்!

  1. அப்புசாமி தாத்தாவோட கதைன்னாஇப்போல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்குது. அருமையா இருக்கு. சிரிச்சி சிரிச்சி வயிறு வலி எடுக்குது . அந்த அளவுக்கு கதை பிரமாதமா இருக்கு.. ஹ்ஹாஹ்ஹா … இன்னும் இது போல நகைச்சுவையான அருமையான கதைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *