சிதெய்ங் அப்புங்சாம்ங்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,547 
 

‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ என்று சீதாப்பாட்டியின் கண்கள் அப்புசாமியை வினவின எரிச்சலுடன். வேறொன்றுமில்லை. அப்புசாமி வழக்கமாகத் தான் படிக்கும் தமிழ் தினசரியைப் படிக்காமல் ஆங்கிலப் பேப்பரைத் தரையில் தாள் தாளாகப் பரத்திக் கொண்டு அதன் மேலேயே ஏறக்குறைய தவழ்ந்தவாறு செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தார். பேப்பர் கசங்கி இருந்தால் சீதாப்பாட்டிக்குப் படிக்கவே பிடிக்காது.

பாட்டி பல்லைக் கடித்துக்கொண்டு. “நான் இன்னும் பேப்பர் பார்க்கவில்லை. அதற்குள் யாரைக் கேட்டுக் கொண்டு எடுத்து இப்படி மர்டர் செய்கிறீர்கள்?” என்றாள்.

முன்னொரு நாள்கூட அப்புசாமி ஏதோ வண்டு ஒன்றை அடிப்பதற்காகப் பேப்பரை உபயோகப்படுத்தியதற்குப் பாட்டி மிகவும் கண்டித்தாள். “நீ பயப்படுவாயோ என்பதற்காக வண்டு அடிக்க வந்தேன் பார், நான் ஒரு மண்டு, இந்தா!” என்று தூக்கிப் போட்டார். இப்போது மறுபடி ரகளையா?

“எனக்குத் தமிழ்ப் பேப்பர் போடுகிறவன் இன்று சேற்றில் போட்டுவிட்டுப் போய்விட்டான். தணணி ஊற்றிக் கழுவி அதை உலரவைத்திருக்கிறேன். அதற்குள் இந்த ‘நக்ஸல்பாரி! சமாசாரம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தது. உன் பேப்பர் வந்தது. பார்க்கிறேன். அது பொறுக்கவில்லையா உனக்கு?” என்றார் சற்றுக் காரத்துடன்.

சீதாப்பாட்டி அசந்து போய்விட்டாள். “யூ ஆர் டாக்கிங் அபெளட் நக்ஸல்பாரி. ஆச்சரியமாயிருக்கிறதே”

“இதிலே என்ன ஆச்சரியம்? தினமும் பேப்பர் பார்க்கிறவனுக்கு நக்ஸல்பாரி விஷயம் தெரியாமலிருக்குமா? அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றார்.

அவரிடம் பாலிடிக்ஸ் பேசுவது தன் கெளரவத்துக்குக் குறைவு என்பதைப்போல் அலட்சியமான புன்னகையுடன் சீதாப்பாட்டி, “நக்ஸல்பாரி…” என்று சொல்லிவிட்டு மெளனமாக இருந்தாள் ஒரு நிமிடம். “உங்களுக்கு அந்தக் கேஸை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணினால் புரியாது.”

“ஏன் புரியாது? உனக்குத் தெரியாது என்று சொல். நான் சொல்லட்டுமா உனக்கு அது என்னவென்று? நக்ஸல்பாரிங்கறது நம்ம இடம். அதைச் சீனாக்காரன் பிடித்துக்கொண்டு போகமாட்டேனென்கிறான்.”

“நோ, நோ. யு ஆர் ராங்” என்று மறுத்தாள் சீதாப்பாட்டி.

“என்ன ராங்? நீ கண்டாயா ராங்கையும், ரைட்டையும். ‘நக்ஸல்பாரியில் சீனா’ என்று அவனவன் சீகாட்டை எழுத்தில் போடறானே, அது பின்னே என்னவாம்?”

“யு ஆர் தரலி ராங்… நக்ஸல்பாரிக்குச் சீனாக்காரன் வரவில்லை. ஆனால்…”

“அந்த ஆனால்… கீனால் எல்லாம் வேண்டாம். சீனாக்காரன் வந்திருக்கவும்தானே நியூஸ் இப்படி வருகிறது? உன்மாதிரி ஆள்களால்தான் நம்ம அரசியலே குட்டிச்சுவராய்ப் போகிறது. நம்ம எதிரி வாலாட்டுகிறான் என்றால் அவனை முளையிலேயே கிள்ளி எறியறதை விட்டுவிட்டு, சைனாக்காரனா இல்லையே… அவன் இந்தப்பக்கம் வரலையே… அந்தப் பக்கம் வரலையே… என்றா குழம்பிக்கொண்டு கிடப்பது! சைனாக்காரன் வாலாட்டுகிறான் என்ற சந்தேகம் எப்போ வந்துட்டதோ உடனே அந்தப் பயல்களை விட்டுவைக்கலாமா? ஏன் நம்மகிட்டே ஏரோப்ளேன் இல்லையா… டாங்கி இல்லையா, நம்மளுக்கு வீரமில்லையா… போதாக்குறைக்கு அவன் இப்போ அணுகுண்டு வெடித்துக் காட்டுகிறான்… அவன் சும்மா வெடித்துக் காட்டுகிறான். நாம இன்னா பண்ணனும்? ஒரு பத்து குண்டை எங்காவது இரவல் வாங்கியாவது கொண்டுபோய் வந்த பாவம் வரட்டும் என்று வீசிவிட்டு வந்துவிட வேண்டும்…”

சீதாப்பாட்டி சிரித்தாள். “ஐ அப்ரிஷியேட் யுவர் ஸ்பிரிட்… பட்… உங்களுக்கு அரசியல் அறிவு ஸீரோ என்பதைத்தான் உங்கள் ஆர்க்யுமெண்ட் காட்டுகிறது.”

அப்புசாமிக்குக் கோபம் வந்துவிட்டது.”ஓகோ… அப்படியானால் சீனாக்காரன் செய்யறதெல்லாம் சரி. அவன் தங்கம் என்கிறாயா நீ?”

“ஐ டின்ட் ஸே தட்… நான் எங்கே அப்படிச் சொன்னேன்? ஹ்யூமன் ரேஸ் ஸர்வைவ் ஆகவேண்டுமானால் நியூக்லியர் ரேஸை அவாய்ட் பண்ணித்தான் ஆக வேண்டும் என்கிறேன்.”

அப்புசாமிக்குச் சூடு பிடித்துவிட்டது. “அந்தக் கதையெல்லாம் வேண்டாம். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. சீனாக்காரன் மேல் நாம் படையெடுத்துப் போகிறது தப்பு என்கிறாயா, சரி என்கிறாயா?”

“நோ கமெண்ட்” என்றாள் சீதாப்பாட்டி.

“கெக்கே!” என்று கொக்கரித்தார், அப்புசாமி தனக்கு மாபெரும் வெற்றி கிடைத்துவிட்டதாக. “எப்படி உன்னை மடக்கினேன் பார்த்தாயா? என்கிட்டே வந்து அரசியல் விஷயம் பேசினால் நீ ஜெயிக்கமுடியுமா? இங்கிலீஷ் பேப்பரை நீ எங்கே கவனமாகப் படிக்கிறாய்? சும்மா ஒரு ஸ்டைலுக்காகப் புரட்டிவிட்டு அடுக்கி அடுக்கி வைக்கிறாய்…”

சீதாப்பாட்டி அவரிடம் மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்க நேரமில்லாதவளாக, “இப்போது எனக்கு உங்களுடைய ராட்டன் பாலிடிக்ஸைக் கேட்டுக்கொண்டிருக்க டைம் இல்லை. ஹோட்டல் அரிஸ்ட்டோவுக்கு நான் போகவேண்டடும்” என்றவள் சட்டென்று ஏதோ தவறுதலாகச் சொல்லிவிட்டவளைப் போல, “ஓ, ஸாரி… அரிஸ்ட்டோ இல்லை… வந்து… பா.மு.கழகத்துக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு ஹாண்ட் பாக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

வாசற்படி இறங்கியவள் திரும்ப ஏதோ நினைத்துக் கொண்டு மறுபடி மேலே படி ஏறிவந்து. “டெலிபோன் ஏதாவது வந்தால் நீங்கள் அடெண்ட் செய்ய வேண்டாம். ஜஸ்ட் இக்னோர் இட். எடுத்துப் பேசவேண்டாம். என்ன. தெரிகிறதா?” என்றாள்.

“ஏன்? நான் பேசினால் உன் டெலிபோனைக் கடித்துச் சாப்பிட்டு விடுவேனா? பேப்பரைப் படித்தால் தின்று விடுவேனோ என்கிற பயம் டெலிபோனில் பேசினால் கடித்து விழுங்கிவிடுவேனோ என்ற பயம்… மகா அற்பியாக இருக்கிறாயே?” என்றார் அப்புசாமி கோபத்துடன்.

“நோ, நோ. அதற்கில்லை” சீதாப்பாட்டி குரல் ஏனோ தடுமாறியது. “ஏதற்காகப் பாவம் உங்களுக்கு வீண் டிரபிள் என்றுதான்…” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டாள்.

சீதாப்பாட்டி புறப்பட்டுச் சென்ற ஐந்தாவது நிமிடம் டெலிபோன் மணி அடித்தது. ஒரு விநாடி எடுப்பதா வேண்டாமா என்று யோசித்துவிட்டு அப்புசாமி கடைசியில் கையில் எடுத்தார். அவர் “ஹலோ…” என்று குரல் கொடுக்க யோசித்துக் கொண்டிருப்பதற்குள் மறுமுனையிலிருந்து. கரகரத்த ஓர் ஆண்குரல் ஆங்கிலத்தில் “ஸ்பீக்கிங் ·பரம் ஹோட்டல் அரிஸ்ட்டோ… இஸ் இட் சிதெய்ங் அப்புங்சாம்ங்…?” என்று கேட்டது.

அப்புசாமி புரியாமல். “என்னது?” என்றார் அதட்டும் குரலில்.

அழுத்தமாக மறுகோடிக் குரல், “இஸ் இட் சிதெய்ங் அப்புங் சாம்ங்?” என்று கேட்டது.

“சாங்குமில்லை கோங்குமில்லை. இது ராங்கு நம்பர்” என்று சொல்லி, பட்டென்று டெலிபோனைக் கீழே வைத்து விட்டவரின் காதில் இன்னமும் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஸ்பீக்கிங் ·ப்ரம் ஓட்டல் அரிஸ்ட்டோ. இஸ் இட் சிதெய்ங் அப்புங்சாம்ங்?”

பளிச்சென்று நெருடியது அப்புசாமிக்கு. சீதாகூடக் கிளம்பும்போது ஓட்டல் பெயரைச் சொன்னாள் போலிருந்ததே.

“சிதெய்ங் அப்புங்சாம்ங்.”

ஒருகால் ‘சீதா அப்புசாமி’ என்பதைத்தான் டெலிபோன் குரல் அப்படிக் கூப்பிட்டதோ…

டெலிபோனில் பேசிய ஆளின் உச்சரிப்பு சைனாக்காரன் மாதிரி இருந்ததே.

அப்புசாமிக்கு லேசாக வியர்த்தது.

ஓட்டல் அரிஸ்ட்டோவுக்குப் போகிறேன் என்று முதலில் சொல்லிவிட்டு அவசர அவசரமாகச் சீதே, ‘இல்லை. இல்லை. நான் பா.மு.கழகத்துக்குப் போகிறேன்’ என்று தடுமாற்றத்துடன் சொன்னது… ‘டெலிபோன் வந்தால் எடுக்க வேண்டாம்’ என்று அக்கறையாகச் சொன்னது…

இதெல்லாம் ஏன்? ஏன்?

இப்போது டெலிபோனில் கூப்பிட்ட குரலின் உச்சரிப்பு சைனாக்காரனுடையதுப் போலிருந்ததே…அது ஏன்? நக்ஸல்பாரி விஷயமாகக் கொஞ்ச நேரம் முன்னால் அவளிடம் பேசியபோது, ‘சீனா மேல் படையெடுப்பு நடத்தவேண்டும்?’ என்று கேட்டதற்கு மெளனம் சாதித்து மெதுவே நழுவினாளே? ஏன்?

ஓட்டல் அரிஸ்ட்டோவிலிருந்து வந்த மர்மக் குரல் யாருடையது? அந்தக் குரலுக்குடையவனைப் பார்ப்பதற்குத்தான் இவள் போயிருக்கிறாள். அது ஏன்? அவனது உச்சரிப்பு சைனாக்காரனுடையதைப் போலிருந்ததே? அதன் மர்மம் யாது? அவன் ரகசிய சைனா ஏஜண்டா? அவனைச் சீதாப்பாட்டி சந்திக்க வேண்டிய முகாந்தரம்?

அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது.

அவர் சீதாப்பாட்டிக்குத் தெரியாமல் பார்த்த ஒருசில மட்டகரமான சைபர் சைபர் படங்களில் எப்படியெல்லாம் பெண் ஒற்றர்கள் பயங்கரமான சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பதெல்லாம் அவரது நினைவுத் திரையில் ஓடின.

அப்புசாமி மேல் துண்டினால் முகத்தில் பொடித்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டார்.

சீதையும்கூட ஓர் உளவாளியாக இருப்பாளோ?

சைபர் படங்கள் அவர் மனத்திரையில் மீண்டும் ஓடின உளவு வேலைக்கு அநேகமாக அழகான பெண்களைத்தான் எதிரிகள் நியமிக்கிறார்கள். சீதையும் ஒரு பெண்தான், கிழவியாயிற்றே. சைனாக்காரனுடைய இடுங்கிய கண்ணுக்குச் சீதை ஒரு பேரழகியாகக்கூடத் தோன்றியிருக்கலாம். என்ன கண்ராவியோ, யார் கண்டது?

எதிரிகளுக்கு உளவாளியாயிருப்பது கொடிய தேசத் துரோகம் என்பது சாதாரணக் கிணற்று வாளிக்குக்கூடத் தெரியுமே. அறிவாளியான சீதேக்கு இது தெரியாதிருக்குமோ?

சீதை ஒரு சீன உளவாளி என்பதை அவரால் கற்பனை செய்து பார்க்கவே கூசியது.

மத்தியானம் மூன்று மணி.

வாசலில் கார் சத்தம் கேட்டது. அப்புசாமி சரேலென்ப் பீரோவுக்குப்பின் பாய்ந்து சென்று மறைந்துகொண்டார்.

சீதாப்பாட்டி காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தாள். அவள் கண்கள் மேஜை டிராயர் கலைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மிரட்சி அடைகின்றனவா என்று மறைவிலிருந்து அப்புசாமியின் கண்கள் கூர்ந்து கவனித்தன.

சீதாப்பாட்டி, “மைகாட்… இதென்ன என்று ரூம் இப்படி ஒரேடியாக ரேன் செக் ஆகியிருக்கிறது… எதைத் தேடியிருக்கிறார் பாழாய் போகிற மனுஷன்…” என்று முணு முணுத்தது அப்புசாமியின் காதில் விழுந்தன.

அவ்வ்ளவுதான். அப்புசாமி, “ஆ, தேள்!” என்று அலறியவாறு பீரோ மறைவிலிருந்து வெளியே வந்தார்.

திடீரென அப்புசாமி வரவும், சீதாப்பாட்டி பயந்து போய் ‘வீல்’ என்று கத்திவிட்டு அப்புறம்தான், “என்னது இது சைல்டிஷ் ப்ளே…” என்று கண்டித்தாள்.

அப்புசாமி சீதாப்பாட்டியைப் பார்த்து அர்த்தம் பொதிந்த சிரிப்பொன்றை வீசினார். பிறகு, மர்மமான புன்னகையுடன், “கேவலம் ஒரு பீரோவுக்குப் பின்னால் மறைந்துள்ள விஷயங்களே நமக்குத் தெரிவதில்லை. அப்படியிருக்க ஒரு பெண்ணிடம் மறைந்துள்ள விஷயங்கள் – அல்ல… அல்ல விஷங்கள் நமக்கு எப்படித் தெரியும்?” என்றார்.

“என்ன உளறுகிறீர்கள்?” என்றாள் சீதாப்பாட்டி.

“ஹ… ஹ! ஆமாம். நான் உளறுகிறேன். நீ உளவுகிறாய்”

சீதாப்பாட்டி அப்புசாமியைக் கூர்ந்து பார்த்தாள். “ஐ காண்ட் காட்ச் யூ… நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே” என்றாள்.

“நான்கூடத்தான் உன்னைக் காட்ச் பண்ணமுடியவில்லை… ஆனால், சீதே நீ செல்லும் பாதை அவ்வளவு… ஊஹ¥ம்… நான் ஒரு மடையன். அந்த வளையம் விஷயத்தை உன்னிடமே கேட்கிறேனே…”

“வளையம்?” என்ற சீதாப்பாட்டி, நெற்றியைச் சுருக்கியவள் மறுகணம், ‘களுக்’ என்று சிரிப்புடன், ‘யூ மீன் லூப்…?” என்றாள். “அதைப்பற்றி உங்களுக்கென்ன விசாரம் வந்தது? குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை எங்கள் பா.மு.கழகம் ப்ராபகண்டா பண்ணலாம் என்று இப்போதுதான் ஒரு டிஸிஷன் எடுத்தோம். அதற்குள் உங்களுக்கு நியூஸ் வந்துவிட்டதே, ஆச்சரியம்தான்.”

“என்னமாக மழுப்புகிறாள்?” என்று உள்ளுக்குள் பொருமிக்கொண்டார் அப்புசாமி.

சீதாப்பாட்டியின் நடவடிக்கைகளை அப்புசாமி மிகவும் நெருக்கமாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். மறுநாள் காலை எட்டு மணிக்கே ஓட்டல் அரிஸ்ட்டோவுக்கு அப்புசாமி சென்று அந்த ரகசிய தளத்தை மேலெழுந்தவாரியாக நோட்டம் விட்டார்.

மிகப் பிரம்மாண்டமான பெரிய ஓட்டல். மேற்கத்திய முறையில் படாடோபமாக இருந்தது. வாசலிலிருந்த கூர்க்கா அப்புசாமியைப் பார்த்து, “கெளன்…?” என்றான். “சும்மா காப்பி சாப்பிட வந்தேன்… ஆமாம் இங்கே காப்பி என்ன விலை?” என்று மெதுவே துப்பறிய எண்ணினார்.

“தமில் மாலும் நை… போ… அப்பாலே..” என்று கூர்க்கா விரட்டினான்.

கூர்க்காவைப் பாத்தாலே ஒரு சைனாக்காரன் மாதிரி தான் இருந்தது அப்புசாமிக்கு.

“நான் ஒண்ணும் ரகசிய போலீஸ் அல்ல. வெறுமே ஒரு காப்பி சாப்பிட வந்தேன். ஏண்டா பீடை என்னை விரட்டுகிறே?” என்று அவனை அப்புசாமி முறைத்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பெரிய கார் ஓட்டலுக்குள் வந்தது.

அப்புசாமியின் கூரிய கண்கள் உள்ளே வந்த காரின் என்களைக் கவனித்துக்கொண்டன. அதுமட்டுமல்ல, காரை ஓட்டிவந்த ஆளையும் கவனித்தன.

அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது.

அசல் சீனாக்காரன் ஒருத்தன்தான் காரை ஓட்டி வந்தவன். டிப்டாப்பாக உடை அணிந்திருந்தான். கையில் ஒரு சிறிய சூட்கேஸ். கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான்.

அப்ப்சாமி சரேலென்று கூர்க்காவிடமிருந்து விலகி, அவன் பார்க்காத நேரம் அங்கே இருந்த அடர்த்தியான செடி மறைவில் ஒளிந்துகொண்டார்.

கையில் ஏதாவது ஒரு சாதாரண ஆயுதம்கூடத் தனக்கு இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது. சைனாக்காரன் யார் வரவுக்கோ காத்திருப்பவனைப் போல நின்றிருந்தான். அப்புசாமியின் கண்கள், சைனாக்காரனைக் கவனித்த நேரம் வாசலில் நின்ற கூர்க்காவின் நடத்தையையும் பதிவு செய்து கொண்டன.

இடுப்பைச் சுற்றித் தடவி டிராயர் பாக்கட்டிலிருந்து ஒரு சிறு குழல் போன்ற பொருளை எடுத்தான் கூர்க்கா, வலக் கையில் அதை வைத்து இடக் கையால் ஒரு தரம் திறந்தான். நாற்புறமும் பார்வையைச் சுழற்றினான். பிறகு சர்ரென்று மூக்கில் உறிஞ்சிக்கொண்டான். ‘பொடி போடத்தானா இந்தப் பாடு?’ என்று அப்புசாமி சாதாரண நிகழ்ச்சியாக அதை எடுத்துக்கொளள்வில்லை. சைனாக்காரன் ஒருவன் உள்ளே வருவதற்கும், இவன் இப்படி வாசலிலிருந்து பொடி போடுவதற்குமுள்ள தொடர்பு என்னவாக இருக்கும்? அவரது மூளை யோசித்தது. நிச்சயம் இது ஏதோ ஒரு சமிக்ஞைதான். சந்தேகமில்லை.

அடுத்த விநாடி அவர் கண்ட காட்சியால் முச்சுத்திணறியது அவருக்கு.

ஓட்டலுக்குள் அமைதியாக இன்னொரு கார் நுழைந்தது. அவருடைய அருமை மனைவி சீதா, கள்ளங்கபடமற்ற முகத்துடன் காரைச் செலுத்திக் கொண்டு உள்ளே வந்தாள். காரிலிருந்து அமைதியாக இறங்கினாள். சைனாக்காரனும் அவளும் தணிவான குரலில் பேசிக் கொண்டு ஓட்டலுக்குள் நுழைந்தனர்.

அப்புசாமிக்கு ரத்தம் கொதித்தது. அடி, தேசத்துரோகி… நான் கணக்குப்போட்டது இவ்வளவு சரியாக நடக்கிறதே! நீ ஒரு பயங்கரவாதிதான். அவருக்கு வியர்த்தது.

ஓட்டல் அறைகளின் ஜன்னல்களையெல்லாம் அப்புசாமியின் கண்கள் கவனித்தன. படக் படக்கென்று அந்த அறையின் ஜன்னல்கள் திறந்தன.

அதோ… அந்த நாலாம் எண் அறை.

அப்புசாமி விருட்டென்று ஓட்டலுக்குள் நுழைய எண்ணினார். அவர் மறைந்திருந்த செடிகளுக்கு அருகிலேயே கூர்க்கா நின்றிருந்தான்.

அப்புசாமி கூர்க்காவின் கவனத்தைத் திருப்புவதற்காக அருகிலிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து வாசற்புறம் நுழைவாசலில் பொருத்தியிருந்த டூம் விளக்கின்மீது அடித்தார். கூர்க்கா, விளக்கருகே ஓடினான். அப்புசாமி புதர்களிடையே குனிந்துகொண்டு ஓட்டலுக்குள் நுழைந்துவிட்டார்.

நாலாம் நம்பர் அறைச் சுவரோடு தன்னை ஒட்டிக்கொண்டு அவர் மெதுவே எட்டிப்பார்த்தார். ஜன்னல் தாழ்வாக இல்லாததால் ஒன்றும் தெரியவில்லை. வென்டி லேட்டர் வழியாகப் பார்க்கலாம். அதற்கு வழி…

“யோவ். யாருய்யாது அங்கே சுவர்கிட்டே…” என்று அதற்குள் ஒரு குரல் அதட்டியது.

அப்புசாமி சரேலென்று பாய்ந்து ஓட்டலுக்கு வெளியே வந்துவிட்டார்.

அடுத்து என்ன செய்யவேண்டும் என்று பரபரத்தது அவர் மூளை.

உள்ளே இருந்த சைனாக்கார ஆசாமியின் கார் மரத்தடியில் நின்றிருந்தது.

அப்புசாமி தேசத்துக்காக எந்தச் சோதனையையும் மேற்கொள்ளும் ஆவேசத்தில் இருந்தார்.

சரேலென்று சைனாக்காரனின் காருக்குப் பின்னாலிருந்த டிக்கிப் பகுதியில் ஏறி மறைந்து கொண்டுவிட்டார்.

அடேயம்மா… எவ்வளவு நேரம்!

சுமார் இரண்டு மணி நேரம் கழித்துக் காலடியோசை கேட்டது.

சீதாப்பாட்டியும் அந்தச் சைனாக்காரனும் ஏதோ பேசிக்கொண்டு வந்தனர். டிக்கியின் இடைவெளி வழியாக அவரது கூரிய கண்கள் அவர்களைக் கவனித்தன.

பாட்டி ஏதோ ஓர் உறையை அனாயாசமாக அவனிடம் நீட்டினாள். அதை அவன் ஒரு தரம் கீழே போட்டுவிட்டு பிறகு, சிரிப்புடன் பொறுக்கி எடுத்துத்தன் சூட்கேஸ¤க்குள் போட்டுக் கொண்டான்.

சீதாப்பாட்டியின் கார் கிளம்பியது. அவனுடைய கார் கொஞ்ச நேரம் கழித்துப் புறப்பட்டது.

அப்புசாமி டிக்கிக்குள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். தேசத்தின் எதிர்காலமே அவரது கையிலிருப்பதைப் போன்ற உணர்வு மட்டும் அவருக்கு ஏற்படாதிருந்தால் மூச்சு முட்டி செத்தே இருப்பார்.

ரகசியத் தஸ்தாவேஜுகளுடன் இந்தப் பயல் எங்கே புறப்படுகிறான்? ஒருகால் விமானதளத்துக்கோ…

எவ்வளவு நேரம் ஓட்டிக்கொண்டிருக்கிறான்…

அப்புசாமிக்கு மூச்சுத் திணறியதால் டிக்கிக்குள்ளிருந்த ஓர் இரும்புக் கருவியை எடுத்து லொட் லொட்டென்று ஓசைப்படுத்தினார். அதே இரும்புக் கருவியால் அவனைச் சமாளிப்பது என்றும் தீர்மானித்தார்.

டிக்கியில் அவர் தட்டிய மர்மச் சத்தம் எழுந்த இரண்டாவது நிமிடம் கார் நின்றது.

அப்புசாமி தன் எதிரியைத் தாக்கத் தயாராக இருந்தார்.

காலடியோசை. கதவு திறந்ததோ இல்லையோ, அப்புசாமி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மோதினார் அந்தச் சைனாக்காரன் மேல்.

அவன் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை, தன் காரில் ஒருத்தர் ஒளிந்திருப்பாரென்று.

கீழே விழுந்த அவனை அப்புசாமி, புரட்டு புரட்டென்று புரட்டி, “ஏண்டா சைனாப் பயலே… உளவு வேலைக்கா வந்தாய்…? மரியாதையாகக் கொடு அந்தப் பெட்டியை… சிதெய்ங் அப்புங்சாம்ங் கொடுத்த காகிதம் எங்கே… கொடு அதையெல்லாம்…”

அப்புசாமி அந்தச் சைனாக்காரனைப் பதில் பேசவிடாமல் புரட்டி புரட்டி அடித்த அடியிலோ அல்லது அதிர்ச்சியிலோ மூச்சுப் பேச்சில்லாமல் அவன் விழுந்து விட்டான்.

ஜன சந்தடியில்லாத ரோடு அது.

அப்புசாமியின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. தனது கைக்குட்டையை எடுத்து அவன் வாயில் திணித்தார். பின்னங்கை இரண்டையும் எதில் கட்டுவதென்று அவருக்குத் தெரியாமல் தயங்கியது ஒருகணம் தான். சர்ரென்று தன் வேட்டியின் ஒரு பகுதியை நீளமாகக் கிழித்து. தேசத்தின் மானமே போகும்போது வேட்டி எதற்கு? அவன் கைகளைக் கட்டினார்.

கார்க் கதவை திறந்து டிரைவர் ஸீட் அருசில் காலடியில் வைத்திருந்த அவனது சூட்கேஸைக் கைப்பற்றிக்கொண்டார்.

அருகில் எலக்ட்ரிக் ரயில், ஓட்டமும் நடையுமாகப் பாலம் ஏறி. புறப்பட்டுக்கொண்டிருந்த ரயிலில் தாவி ஏறிக்கொண்டார். டாக்ஸி கீக்ஸியில் போனால் ஒருகால் சைனாக்காரன் காரில் பின்னால் துரத்த ஏதுவாகும் என்றே அவர் எலக்டிரிக் டிரெயினில் பறந்தார்.

பெட்டியைச் சட்டென்று திறந்துவிட, அப்புசாமி அத்தனை முட்டாளில்லை.

ஓற்றர்கள், உளவாளிகள், இவர்களது கைப்பெட்டிகள் எத்தனை பயங்கரமானவை என்பதை அவர் பல படங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறார். திற்ந்ததும் சரேலன்று ஒரு விஷப்புகை, அல்லது துப்பாக்கி குண்டு…

இதை இப்படிச் சட்டென்று திறக்கக்கூடாது.

“வாட் இஸ் திஸ்…” என்ற சீதாப்பாட்டி உண்மையில் அதிர்ந்து போனாள், பெட்டியை அப்புசாமி டொக்கென்று அவளெதிரில் மேஜைமீது வைத்ததும்.

அப்புசாமிக்கு ஆத்திரம் தாளவில்லை. வெடித்து விட்டார். “சீ… தேசத் துரோகி… என்னோடு பேசாதே!” என்று வீறிட்டார்.

“வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங்… இந்தப் பெட்டி உங்களுக்கு எப்படிக் கிடைத்தது!”

“உன் சதிக் கூட்டாளியின் மண்டையில் போட்டுக் கிடைத்தது!”

“மை காட்! யார் மண்டையையாவது உடைத்து விட்டீர்களா என்ன?”

“ஏன்… உன் துரோக நெஞ்சம் அழுகிறதா? என்னிடம் துப்பாக்கி இல்லையே உன்னைச்சுட்டுத்தள்ள. சரி, முதலில் இந்தப்பெட்டியைத் திற…” சொல்லும்போதே அப்புசாமி சீதாப்பாட்டியைக் கூர்ந்து ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவள் கை மறைவாக மேஜையிலிருந்து ஏதேனும் ஆயுதத்தை எடுக்கிறதோ என்று பார்த்துக் கொண்டார். சொந்தக் கணவனேயானாலும் ஒற்றப் பெண்கள் சுட்டுத்தள்ள அஞ்சாத கிராதகிகளாயிற்றே!

சீதாப்பாட்டி அப்புசாமி வைத்தப்பெட்டியை டக்கென்று திறந்தாள்.

“இதெல்லாம் என்ன விசித்திரமான ஆயுதங்கள்?” என்று அதட்டினார் அப்புசாமி.

“உங்கள் தலை!” என்றாள் சீதாப்பாட்டி. “டென்ட்டல் சர்ஜன் டாக்டர் வாங்மின் சின்னுடைய மெடிக்கல் கிட் இந்தப் பெட்டி…”

“என்னது?” என்றார் அப்புசாமி.

“ஆமாம். பல் டாக்டர் வாங்மின் சின்னுடைய மருத்துவப்பெட்டி இது. எனக்கு ஒரு பல் கட்டிவிட்டார்.”

“பல் கட்டிவிட்டாரா?” அப்புசாமிக்கு மயக்கம் வருவது போலிருந்தது. “உனக்குப் பல் கட்டிவிட்டாரா?”

“எஸ்… நான் பல் கட்டிக்கொள்வது சொஞ்சம் ஸீக்ரெட்டாக இருக்கட்டும் என்பதற்காக ஹோட்டல் அரிஸ்ட்டோவில் ஒரு ரூம் ·பிக்ஸ் பண்ணி பல் டாக்டரை வரவழைத்துக் கட்டிக் கொண்டேன்.”

“பொய்! நீ சொல்வது பச்சைப் பொய்… இந்தக் கருவிகள் மூலம் நீ ஏதோ சமிக்ஞைகள் கொடுக்கிறாய் சைனாவுக்கு. என்னை நீ ஏமாற்ற முடியாது” வீறிட்டார் அப்புசாமி.

“அப்ஸர்ட்…” என்று சீறின சீதாப்பாட்டி “பயங்கரமாக என்னென்னவோ நீங்கள் உளறுவதால் உங்களுக்கு சரியாக எக்ஸ்ப்ளெய்ன் செய்துவிடுகிறேன். எங்கள் பா.மு.க.வில் சமீபத்தில் ஒரு பல்லழகுப் போட்டி நடக்கப்போகிறது. அதில் நான் கலந்துகொள்ள…”

“என்னது பல்லழகுப் போட்டியா?”

“எஸ்… எனக்கும் பார்வதி ராமநாதனுக்கும் தான் கீன் கன்டெஸ்ட். கீழ்வரிசையில் கடைவாய்ப் பக்கம் ஒரே ஒரு பல் எனக்கு இல்லை என்கிறது யாருக்கும் தெரியாததால் எல்லோரும் எனக்கே வின்னிங் சான்ஸ் அதிகம் என்கிறார்கள். எனக்கும் ஒய் நாட் இதில் நாம் ஜெயிக்கக்கூடாது என்று தோன்றியது. இல்லாத ஒரே ஒரு பல்லை ரகசியமாகக் கட்டிக்கொள்வது என்று டிஸைட் பண்ணினேன். யூ புவர் ஜேம்ஸ் பாண்ட்!” சிரித்தாள் சீதாப்பாட்டி.

“சிய்தேங்!” என்றார் அப்புசாமி குரலில் உஷ்ணமாக. “இப்போதும் சொல்கிறேன். நான் ஒன்றும் இளிச்சவாயன் அல்ல, தெரிந்துகொள். உன் குடுமியை உன்னை அறியாமல் என் கையில் கொடுத்திருக்கிறாய்… புரிகிறதா!”

“உங்கள் நான்சென்ஸ் என்னவென்று புரியவில்லையே…” என்று மேலும் சிரித்தாள் சீதாப்பாட்டி.

“சிரிக்காதே. நீ பொய்ப் பல் கட்டிக்கொண்டிருக்கிறாய் என்பதை பா.மு. கழகத்தின் சுவரில் கொட்டை கொட்டையாகக் கரியில் நாளைக்கே எழுதிவைப்பேன்! தெரிந்துக்கொள்!” என்றார்.

“ஓ! மை காட்!” என்று சீதாப்பாட்டி உண்மையில் அசந்துபோய்விட்டாள். ப்ளீஸ் ப்ளீஸ்… ·பர்கிவ் மி…” என்று அவள் குரல் குழைந்தது.

அப்புசாமி வெற்றிப் பெருமிதத்துடன் தன் மனைவியைப் பார்த்து, “லஞ்சம் என்ன கொடுக்கிறாய், நான் இவ்வளவு பாடுபட்டதற்கு?” என்றார்.

“வாட் எவர் யூ லைக்…” என்றாள் சீதாப்பாட்டி.

“அட்வான்ஸாக இப்போதைக்கு ஒரு நூறு ரூபாய் தள்ளு! ஏதாவது சைபர் படத்துக்குப் போய்வருகிறேன்” என்றார் அப்புசாமி.

!ஹண்ட்ரட் ருபீஸா… ஒரு சினிமாவுக்கா?”

அந்த அதட்டலுக்கு அப்புசாமி மசியவில்லை.

“கேள்வி! கேட்காதே! நீ ஒரு பல்லி என்பதை மறக்காதே!” என்று அதட்டினார் அப்புசாமி.

“எஸ்… எஸ்… இதோ தந்தேன்…” என்று சீதாப்பாட்டி நூறு ரூபாயை அவசரஅவசரமாக எடுத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *