சிங்கப்பூருக்கு சில கழுதைகள்

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 25,482 
 

பகீரென்றது.

சென்னை ஹெட் ஆபீசிலிருந்து ஜெனரல் மேனேஜரே திடுதிப்பென்று என் மொபைலுக்கு ஃபோன் செய்வார் என்று கனவிலும் நினைத்ததில்லை. “நான் ஜி.எம். பேசறேன் மிஸ்டர் பல்ராம்! எப்படி இருக்கீங்க?” என்று அவர் கேட்டபோது, படபடப்பு. குப்பென்று வியர்த்தது. ..

“மிஸ்டர் பல்ராம், எனக்குக் கொஞ்சம் கழுதைகள் தேவைப்படறது. வாங்கி அனுப்ப முடியுமா?…”

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. “கழுதைகளா..? என்ன ஸார் சொல்றீங்க?”

“ஆமாம் மிஸ்டர் பல்ராம்! உங்க வேலூர்ப் பக்கமா கார்ல நான் திருவண்ணாமலை போறப்பல்லாம் தெருக்கள்ல கழுதைகள் சர்வ சாதாரணமா மேயறதைப் பாத்துருக்கேன். அதனாலத்தான் ஒங்க உதவியைக் கேக்கலாம்னு தோணுச்சு. எனக்கு மூணு ஆண் கழுதை, ரெண்டு பொண் கழுதைகள் வேணும்!…”

“ஸார்! நீங்க சொல்றது வாஸ்தவம். வெல்லூர்ல ரோட்டுல நாய்களுக்கு சமமா கழுதைகள் தேமேன்னு திரியறதை நானும் பாத்துருக்கேன்!”

“ஆங், அதான்! நம்ம கம்பெனியின் வேலூர் பிராஞ்சிலேயே நீங்கதான் ஆல்ரவுண்டர்னு ஹெட்டாபீஸ் வரைக்கும் பேசறாங்களே..! அதனாலதான் இந்த அஸைன்மெண்டை ஒங்களுக்குக் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சேன். என்னோட ஃபிரண்ட் ஒர்த்தர் சிங்கப்பூர்ல இருக்கார். அவர் நாய், பூனை, கிளி, புறான்னு நெறைய பறவைகள், பிராணிகளையெல்லாம் அங்கே வளர்த்துகிட்டிருக்கார். இப்ப திடீர்னு கழுதை வளர்க்கணும்னு அவருக்கு மசக்கை! சிங்கப்பூர்லேருந்து எனக்கு ஃபோன் பண்ணி, தமிழ்நாட்டுலேர்ந்து கொஞ்சம் கழுதைகள் வாங்கி எனக்கு ஃபிளைட்டுல அனுப்ப முடியுமான்னு கேக்கறார். அப்பதான் எனக்கு வேலூர் ஞாபகம் வந்துச்சு.. பணத்தைப் பத்திக் கவலையில்ல. நம்ம ஆராவமுதுகிட்டே சொல்லிடறேன். வேணுங்கற பணத்தை சஸ்பென்ஸ் அக்கவுண்டுல வாங்கிக் கோங்க. மொத்தம் அஞ்சு கழுதைக. அதுல மூணு ஆண், ரெண்டு பெண்.. எல்லாம் குட்டிகளா இருக்கணும்கிறது முக்கிய கண்டிஷன். அதுலயும் பால் குடி மறந்த குட்டிகளா இருக்கணும்… புரிஞ்சதா?”

“இவ்ளோதானே? ஓ.கே. ஸார்! டன்!” என்று தலையைப் பலமாக ஆட்டினேன்..

ஜுஜுபி அஸைன்மெண்ட் என்று நான் நினைத்தது தவறு என்பதும் அஷ்டமத்து சனிதான் ஜி.எம்.மின் தொலைபேசி அழைப்பின் வாயிலாக என்னைத் தேடி வந்தது என்பதும் அப்போது எனக்குத் தெரியவில்லை!

2.

ஒரு வாரம் ஓடி விட்டது.

ஐஸ்வர்யா காபி பார் முன்னால் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஜோ பல விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்.. ஜோவிடம்தான் எனக்கு முதல் தகவல் கிடைத்தது. `

`ஃபில்டர்பெட் ரோட்டுக் கோடியில சுருட்டுக்காரத் தெரு கீதில்ல, அங்கே ஆரம்பிக்கிற மலை உச்சியில எப்பமும் வத்தாத ஊத்து ஒண்ணு கீது தெரியுமா? அதில் ஊறி வழியற தண்ணி பூமியை நோக்கி வரசொல்ல, அங்கங்க டோபிங்க அழுக்குத் துணியைத் துவைச்சுகினு இருப்பாங்க. அவங்க அழுக்குத் துணி மூட்டையை மலை மேலக் கொண்டு போறதுக்கும், துவைச்சுக் காய வெச்ச துணிங்களைக் கீயே கொண்டு வர்றதுக்கும் கழுதைங்களைத்தான் யூஸ் பண்றாங்க பல்ராமு ஸார்,. அங்கே போய் வெசாரிச்சுப் பாரேன்!”

ஃபில்டர்பெட் தெருவின் கோடிக்கு என் மோட்டார் சைக்கிளை விரட்டினேன். அங்கிருந்தவர்களை வழி விசாரித்து அந்தச் சின்னக் குன்றின் மேல் ஏறினேன்.

குன்றின் உயரப் பகுதியிலிருந்து ஊற்று நீர் சின்னக் கால்வாய் போல வளைந்து வளைந்து ஓடி வந்து கொண்டிருந்தது. அந்தக் கால்வாயின் கரையில் துணிகளைப் பாறைக் கல்லில் ஓங்கி அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த சிலர் கண்ணில் பட்டார்கள். மனதில் குபுக்கென்று ஒர் சந்தோஷம்…

என்னைப் பார்த்துவிட்டு துவைத்துக் கொண்டிருந்த சிலர் வேலையை நிறுத்தி என் மீது கேள்விக் குறியோடு பார்வையை வீசினார்கள்… “ஆரு ஸார் நீ? இன்னா இவ்ளோ தூரம்? ஆரைத் தேடி வந்தே?” என்று ஒருவர் கேட்டார்.

அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். பின், வழக்கமான பல்லவியை ஆரம்பித்தேன்.

முழுவதையும் கேட்டுவிட்டு, “கயுதை வாங்க வந்தியா? அதுக்கு டோபிகானாவுக்கு வந்து இன்னா செய்ய? வண்ணாங்குளம் போ!. நாங்களே அங்கத்தானே கழுதையை வாங்கிக்கினு வாரோம்!…” என்றார்கள் அவர்கள்.

“வண்ணாங்குளமா? அது எங்கே இருக்கு?” என்றேன் நான்.

“திருணாமலை போற பஸ்சுல ஏறி கண்ணமங்கலம் தாண்டி அடுத்த ஸ்டாப்புதான் வண்ணாங்குளம். அங்கே எறங்கி சதானந்தம்னு கேளுப்பா. நம்ம மச்சான்தான் அவரு. வேலூரு தன்ராசு அனுப்புனாருன்னு சொன்னா வேணுங்கற உதவி செய்வாப்புல.”

“ரொம்பத் தேங்க்ஸுங்க”

அப்பனே விநாயகா, இந்த முயற்சியில் நான் வெற்றி பெற வேண்டும். ஜி.எம். கேட்ட கழுதைக் குட்டிகளை வாங்கிக் கொன்டுபோய் அவரிடம் சேர்க்கவேண்டும்.. அதற்கு எனக்கு அருள் புரியப்பா! என்று முறையீட்டு விண்ணப்பம் சமர்ப்பித்து விட்டு, அதன் பிறகே பஸ் ஸ்டாண்டுக்குப் போய் திருவண்ணா மலை பஸ்சைப் பிடித்தேன்.

சுமார் முக்கால் மணி நேரம் பயணித்தபின் வண்ணாங்குளம் வந்தது. இறங்கினேன்.

பெயர்க் காரணம் உள்ள ஊர். சலவைத் தொழிலாளர்கள் அந்த ஊரில் அதிகம் வசித்தார்கள். அவர்கள் துணி வெளுக்க ஒரு பெரிய குளமும் அங்கே இருந்தது. அந்தக் குளம் எப்போதும் வற்றாதாம். அங்குதான் சதானந்தம் இருப்பார் என்று சொன்னார்கள். இருந்தார்.

தாடி மீசை, வேட்டி உடுத்து மேலுடம்பில் வெள்ளைத் துண்டு ஒன்றைச் சுற்றி ஒரு பீடியைப் புகைத்தபடி, குளத்தங்கரையில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார். குளத்தின் கரையில் நிறையப்பேர் துணி வெளுத்துக் கொண்டிருந்தார்கள். “இங்கே சதானந்தம்னு…” என்று நான் அவரிடம் கேட்டபோது, “நான் தாங்க சதானந்தம். நீங்க ஆருன்னு தெரியலியே..?” என்று அவர் கூறியபடி எழுந்தார்.

“வேலூர் தன்ராசு அனுப்பிச்சாருங்க” என்று துவங்கி, கடந்த ஒருவாரமாக இரவு பகல் தூக்கமில்லாமல் நான் கழுதை வாங்க அலைந்து திரிவதை அவரிடம் சொன்னேன்.

“ப்பூ.. இதுதானா? பிஸ்ஸாத்து வேலை! இதுக்குப் போயி இன்னாத்துக்குக் கவலைப் படறே சாமி. கழுதைக் குட்டிக கெடைச்சாச்சுன்னு வெச்சுக்க…” என்று கூறி சதானந்தம் என் வயிற்றில் பால் வார்த்தார்.

“மூணு ஆண், ரெண்டு பெண் குட்டிகள் எனக்கு வேணும்.. பால்குடி மறந்ததா இருக்கணும்.. தெரிஞ்சதா மிஸ்டர் சதானந்தம்?”

“ரொம்பச் சரி. அட்வான்ஸைக் கொடுத்துப்புட்டுக் கௌம்பு சாமி!. இன்னிக்கு திங்களா?. மூணு நா களிச்சு வெசாளக் கௌமைக்கு இதே நேரம் இங்கே வா!. குட்டிக ரெடியா இருக்கும்!”

முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை சதானந்தத்திடம் கொடுத்துவிட்டு மிகவும் தெம்பாய் பஸ் வரும் சாலை நோக்கி நடந்தேன். மனசு லேசாகியிருந்தது.

3.

வண்ணாங்குளம் கிராமத்தின் குளத்தங்கரைத் திடலில் வளர்ந்திருந்த மரங்களில் கட்டிய கயிறுகளின் இன்னொரு முனையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு சாதுவாய் நின்று கொண்டிருந்த கழுதைகளைப் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி..!. பக்கத்தில் சதானந்தம் பத்மாசன கோலத்தில் தரையில் அமர்ந்து பீடி புகைத்தபடி காட்சி கொடுத்தார்.

“இன்னா சாமி, பாத்துக்கினியா? சொன்ன வாக்குத் தவற மாட்டான் இந்த சதா. வெசாளக் கௌமைன்னு ஒனக்குத் தவணை சொன்னேனா? சொன்னது சொன்னபடி அஞ்சு குட்டிகளையும் தயார் பண்ணிட்டேன்ல…” சிரித்தார் சதானந்தம்.

“ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் சதானந்தம் ஸார்! ” எனக்கு நா தழுதழுத்தது.

“டேங்ஸெல்லாம் வேணாம் சாமி, ரூவாயைக் கொடுத்துப்புட்டு குட்டிங்களை ஓட்டிக்கினு போ!…”

“அதுக்கென்ன ஸார், பணம் ரெடியா இருக்கு!” என்று பர்ஸை எடுத்தேன்.

இடைச் செருகலாய் ஒரு குரல். சதானந்து, “ஒரு நிமிட் இப்பிடி வர்றியா..?”

திரும்பிப் பார்த்தேன். தாடியும் மீசையுமாக, நேரே சாராயக் கடையிலிருந்து வரும் ஆசாமி போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபர். சதானந்தத்தின் தோள் மீது கை போட்டு அவரை அழைத்துக் கொண்டு போனார். சற்றுத் தள்ளி நின்று இருவரும் ரகசியம் பேசினார்கள். கொஞ்ச நேரத்தில் சதானந்தம் மட்டும் திரும்பி வந்தார். அவர் முகம் இறுகியிருந்தது.

சதானந்தம் பேச ஆரம்பித்தார். “சாமி, இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ் துட்டு!. குட்டிகளைக் கொடுக்கறதுக்கில்லை!”

“என்ன சதானந்தம் ஸார். யார் பேச்சையோ கேட்டுகிட்டு இப்பிடி டமால்னு சொன்னா எப்படி? காசு கூடுதலா வேணும்னா கேளுங்க. பேசித் தீர்த்துக்குவோம். அதை விட்டுட்டு…”

“ஆருக்கு வோணும் சாமி ஒன் காசு? லட்ச ரூவா கொடுத்தாக்கூட குட்டிகளை ஒனக்குத் தர மாட்டேன். கௌம்பு! கௌம்பு!”

“ஏன் ஸார், ஏன் ஸார்?” பதறினேன் நான்.

“ஏனா? எனுக்கு வெசயம் புரிஞ்சு போச்சு. பேண்டு, சட்டை உடுத்திகிட்டு வெள்ளைக்காரன் மாதிரி கால்ல பூட்ஸ் போட்டு வந்தப்பவே எனக்கு சந்தேகம்தேன். இப்பத்தானே புரியுது..”

“என்ன புரியுது..?’

“நீ வேலூர் மிஷன் ஆசுபத்திரிலேர்ந்துதானே வர்றே? அங்க எங்க குட்டிகளைக் கொண்டு போயி, அறுத்துக் கூறுபோட்டு டெஷ்ட்டு பண்ணப் போறே. டாக்குட்டரு படிப்பு படிக்கிற புள்ளைங்க ஆராய்ச்சி பண்றதுக்காக குட்டிகளை வாங்க வந்துருக்கே. இந்த மாதிரி பிஞ்சுக் குழந்தகளை வித்துத்தான் சோறு திங்கணும்கிற அவசியம் எனக்கில்ல. இந்தப் பாவப்பட்ட பணம் எனக்கு இன்னாத்துக்கு சாமி? நீ போயிகினே இரு. நல்லவேளை, மாரியப்பன் வந்து சொன்னப்பறம்தான் என் மர மண்டைக்கு வெசயமே வெளங்குச்சு.. மனுசனாப் பொறந்தா காசு பணம் வேணும்னு பாவத்தைச் சம்பாதிக்கலாமா, தப்பில்ல?”

“அப்படியெல்லாம் இல்லீங்க மிஸ்டர் சதானந்தம். நான் சி.எம்.சி. ஆஸ்பிடல்ல வேல பார்க்கலை. இதோ பாருங்க என் விஸிட்டிங் கார்டு. மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கம்பெனியிலதான் வேலை செய்யறேன். கார்டைப் படிச்சுப் பாருங்க. சத்தியமா சென்னைல இருக்கிற என் மேலதிகாரியின் சிங்கப்பூர் நண்பர் அவரோட தோட்டத்துல வளர்க்கறதுக்காகத் தான் இந்தக் கழுதைக் குட்டிகளை வாங்கறேன். ப்ளீஸ் நான் சொல்றதை நம்புங்க!”

“டவுனுக்காரங்க காரியம் ஆவணும்னா எப்பிடி வேணா டபாய்ப்பாங்க.. நம்பறதுக்கு நாங்க இன்னா காதுல பூ சுத்திகினா இருக்கோம்?” என்றார் மாரியப்பன், இடைச் செருகலாக.

என் பேச்சு, கெஞ்சல், விளக்கம் எதுவும் அந்த கிராமத்து மனிதர்களிடம் எடுபடவில்லை.

“ஒரே பேச்சு. மனுசனுக்குப் பணம் காசு முக்கியமில்லே. வார்த்தைதான் முக்கியம்! நீ வந்த வழியைப் பாத்துப் போயிகினே இரு!” துண்டை உதறித் தோளில் போட்டபடி மாரியப்பனுடன் கிளம்பினார் சதானந்தம்.

4.

பத்து நாட்கள் ஓடின.

பெட்டிக் கடை ஜோ ஒரு தகவல் சொன்னார்: “மனசு ஒடைஞ்சு போவாதே பல்ராமு ஸார்! பொய்சாத்தி சந்தைல கழுதை வாங்கி விக்குற வெயாபாரி சங்கிலியை இன்னிக்கு நம்ம கடைக்கு வரச் சொல்லியிருக்கேன். அவர் வீடு நம்ம சாதுகார மடத் தெருவுலதான்’ இருக்கு. நீ கவலைப் படாதே!”

“அவருகிட்டே நான் சி.எம்.சி. ஆஸ்பத்திரி ஸ்டாஃப் இல்ல. அறுத்து பரிசோதனை பண்றதுக்காக கழுதை வாங்கலைன்னு சொல்லிட்டீங்களா மிஸ்டர் ஜோ?”

“அடாடா…எல்லாம் சொல்லிப்புட்டேன், நீ கவலைப் படாதே ஸாரு!”

சங்கிலி வந்தார். இளைஞராக இருந்தாலும் வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரிய அடிக்கடி சிரித்தார். அறிமுகப் படலத்துக்கப்புறம் சங்கிலி பேசினார்: “எல்லா வெசயத்தையும் ஜோசப்பு ஸார் எங்கையில சொல்லியாச்சு.. பிரச்னையை நம்ம கையில உட்டுட்டு நீ நிம்மதியா இரு. இன்னா?. ஆனா ஒரு விசயம்… ஒரே நேரத்துல நீ கேக்கற மூணு ஆண் குட்டியும் ரெண்டு பொண் குட்டியும் கெடைக்கறது கஸ்டம். ஒண்ணு ஒண்ணா வாங்கி ஒரு வாரத்துல சேர்த்துப்புடுவோம், இன்னா சொல்றே?”

திடீரென்று எனக்கு அதில் உள்ள ஒரு சிரமம் என் மூளைக்குள் நூறு வாட் பல்ப்பை எரியவிட்டது.

“இதோ பாருங்க சங்கிலி ஸார், ஓவ்வொரு குட்டியா நீங்க வாங்கித் தர்றது பத்தி ஆட்சேபனையில்ல. கழுதைக் குட்டியை வீட்டுல எப்படிக் கட்டிப் போடணும், என்ன தீனி வைக்கணும், கழுதை உதைக்கும்னு சொல்லுவாங்களே, அப்படி உதைக்காத படிக்கு அதோடு எப்படிப் பழகணும்கிறது எல்லாம் எனக்குத் துளிக்கூடத் தெரியாது… ஸோ, நீங்களே ஒவ்வொரு குட்டியா வாங்கினதும் உங்க வீட்டுல கட்டி வெச்சுக்குங்க. தீனி போடுங்க. செலவெல்லாம் தந்துடறேன். அஞ்சு குட்டிகள் சேர்ந்ததும் சென்னைக்கு அனுப்பற வரை நீங்க கூட இருந்து எனக்கு உதவி செய்யணும்….சரியா?”

பழுப்பேறிய தன் பற்களைக் காட்டிச் சிரித்தார் சங்கிலி. அப்புறம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தணிந்த குரலில் என்னிடம் கேட்டார்: “செல பேரு திருஷ்டி களிக்கறதுக்கு கழுதைங்களைப் பலி கொடுக்கறது வளக்கம். நீங்க பலி கொடுக்கறதுக்காவ இதைக் கேக்கலைதானே?”

தலையில் மடேர் மடேரென்று அடித்துக் கொண்டேன்.

அப்படி இல்லை என்று மறுத்து விளக்கமாக என் தரப்பு விஷயங்களைச் சொல்லி அவருக்குப் புரிய வைக்க எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. பெட்டிக் கடைக்கார நண்பர் ஜோவும் துணைக்கு வந்து அடித்துப் பேசியதில் சங்கிலி நம்பினார்.

தொடர்ந்து ஒவ்வொரு உருப்படிகளாக சங்கிலி வாங்கிய தகவல் வந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது நான் சாதுகார மடத் தெருவின் கோடியில் இருந்த சங்கிலியின் வீடு தேடிப் போய்ப் பார்த்து உறுதி செய்து திரும்பி வந்தேன். தன் வீட்டு புழக்கடையில் கழுதைக் குட்டிகளைக் கட்டிப் போட்டிருந்தார் சங்கிலி. எப்போது ஐந்து குட்டிகள் சேரும் என்கிற பதைப்பு ஒவ்வொரு முறை திரும்பி வரும்போதும் எனக்கு இருந்தது.

5.

“பேஷ், பேஷ்! நான் கேட்ட மாதிரி பால்குடி மறந்த கழுதைக்குட்டிக கெடைச்சுட்டுதா? வெரி குட்! இன்னிக்கே ஒரு வேன் அரேன்ஜ் பண்ணி பின் ஸீட்டைக் கழட்டிட்டு நம்ம வேலூர் பிராஞ்ச் ஆபீஸுக்கு அனுப்பி வைக்கிறேன். அதுகளை ஏற்றி சென்னைக்கு அனுப்பி வெச்சிடுங்க. எனக்கு ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் ஒரு பண்ணை இருக்கு. அங்கே ஆட்கள் இருக்காங்க. அங்கே கழுதைக் குட்டிகளை வெச்சுக்கலாம்னு இருக்கேன். ஃப்ளைட்டுல அனுப்பற பேப்பர்ஸ் ரெடிபண்ணினதும் சிங்கப்பூருக்கு அனுப்பிடுவேன். எனிஹவ் ரொம்பத் தேங்க்ஸ் மிஸ்டர் பலராம்!”

ஜி.எம்.மின் குரல் என் காதில் தேனாய் விழுந்தது. இரவு பதினோரு மணிக்கு வேன் வேலூருக்கு வந்து சேர்ந்தது. டிரைவர் மற்றும் அவருடன் வந்த ஒரு கிளீனர் இருவருக்கும் சாலையோர கையேந்தி பவனில் பரோட்டா, சிக்கன் குருமா, முட்டை ஆம்லெட் என்று விருந்தோம்பி (ஹெட்டாபீஸிலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே..?) பின்பு, வேனுடன் கழுதை புரோக்கர் சங்கிலியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். உடன் நண்பர் ஜோவும் நான் கேட்டுக் கொண்டதன் பேரில் வந்தார்.

ஐந்து கழுதைகளையும் சங்கிலி வீட்டுப் புழக்கடையில், அழுது வடியும் 25 வாட் பல்ப் ஒளியில் ஒருசேரப் பார்த்தபோது ஆனந்தத்தில் எனக்கு விக்கி விக்கி அழத் தோன்றியது. கடைசியில் நான் சாதித்தே விட்டேனா? ஜி.எம். எனக்கு இட்ட உத்தரவை நிறைவேற்றி அவர் மனதில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உண்மையாகவே எனக்குக் கிடைத்து விட்டதா?

அப்போது இரவு மணி 12-30.

கழுதைக் குட்டிகளை வேனில் ஏற்றும் படலம் துவங்கியது.

வேனின் பின்புறம் திறந்து வைத்து ஒரு கழுதைக் குட்டியை நான், சங்கிலி, ஜோ, கார் டிரைவர், கிளீனர் என்று ஐந்து பேரும் பிடித்துத் தூக்கி காரின் உட்புறம் தள்ளினோம். ஆனால்அது மக்கர் பண்ணி, முன்புறம் உதைத்து, ரிவர்ஸில் போன வேகத்தை விட வேகமாக தர தரவென்று, பின்புறமாகவே வெளியே வர முயற்சி மேற்கொண்டது. நாங்கள் உள்ளே தள்ள, அது வேகமாக பின்புறம் ரிவர்ஸ் எடுக்க, சரியான தள்ளு முள்ளு! ஐந்து கழுதைக் குட்டியையும் வேனில் ஏற்றி விட்டுப் பார்த்தால், எல்லோருடைய உடம்பிலும் குளித்தது மாதிரி வியர்வை!.

வேன் கிளம்பியது.

வாட்சில் மணி பார்த்தேன். பின்னிரவு மூன்று மணி.

“பல்ராம், நீ ஜெயிச்சிட்டேடா!” என்று ஒரு குரல் எங்கிருந்தோ ஒலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். அது வேறு எங்கிருந்தும் இல்லை. என்னிடமிருந்தேதான் என்பது புரிந்தது. ஜோவுக்கு குட் நைட் சொல்லி அவரை அனுப்பிவிட்டு, ரூமுக்குப் போய் படுக்கையில் விழுந்தேன் – அப்பாடா என்று நிமதிப் பெருமூச்சுடன்.

ரொம்ப நாளைக்கப்புறம் அயர்ந்து தூங்கினேன்.

6.

கழுதைக் குட்டிகள் தனக்குக் கிடைத்த அன்றே போன் போட்டு தேங்க்ஸ் சொல்லி விட்டார் ஜி.எம்.. அதற்கப்புறம் ஆபீசில் தினமும் கடுமையான வேலையில் மூழ்கிவிட்டதில் கழுதைகள் பற்றிய நினைப்பே இல்லை.

ஒரு வருஷம் ஓடியது.

வேறு வேலையாக சென்னைக்குப் போக வேண்டியிருந்தது. ஹெட்டாபீசுக்குப் போனபோது திடீரென்று கழுதைகள் ஞாபகம் வந்தது.கழுதைகள் சிங்கப்பூருக்குப் போயிருக்கும். விமானத்தில் போகக் கொடுத்து வைத்த அதிர்ஷ்டக்காரக் கழுதைகள்! என்று நினைத்துக் கொண்டேன்.

ஜி.எம்.மைச் சந்தித்து ஆபீஸ் வேலை பற்றிப் பேச நேர்ந்தது. கடைசியில் தயங்கித் தயங்கிக் கேட்டேன். ஸார், அந்தக் கழுதைகள் சிங்கப்பூரில் நல்லா இருக்கா?

“ஹா ஹ் ஹா” என்று தொப்பை குலுங்கச் சிரித்தார் ஜி.எம்.

“ஓ! அது ஒஙக்ளுக்குத் தெரியாதா? அதெல்லாம் என்னோட ஈ.சி.ஆர். பண்ணையில நல்லாத் தீனி தின்னுட்டு கொழு கொழுன்னு இருக்கு மிஸ்டர் பலராம்! இன்னும் ஃப்ளைட்டில் அனுப்ப முடியல. ஃப்ளைட் கார்கோவுல கழுதைகளை ஏத்திக்க ரூல்ஸ் இடம் கொடுக்கலைன்னு சொல்லிட்டா. அதனால கப்பல்ல அனுப்பலாமான்னு யோசிச்சிகிட்டிருக்கேன்!” என்றார்.

காலம் ஓடியது. மதுரை பிராஞ்சுக்கு என்னை மாறுதல் செய்தார்கள். அங்கே நான் போனபிறகு கழுதைகளை மறந்தே போய் விட்டேன்.

சில வருடங்கள் கழித்து மதுரை பிராஞ்ச் ஆபீசுக்கு ஜி.எம். இன்ஸ்பெக்ஷன் வந்தார். “அடடே மிஸ்டர் பல்ராம், நீங்க மதுரையிலா இருக்கீங்க? நீங்க வாங்கி யனுப்பிச்ச கழுதைகள்ல ஒண்ணு குட்டி போட்டுடுச்சு.. அக்கம் பக்கத்துல இருக்கிற ஜனங்க கழுதைப் பால் கேட்டு கியூவில வந்து நிக்கிறான்னா பார்த்துக்குங்களேன்! கழுதைப் பாலை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குரல் காத்திரமா இருக்குமாம், தெரியுமோ ஒங்களுக்கு?” என்று சொல்லி பக பகவென்று சிரித்தார் ஜி.எம்.

அவர் குரல் கணீரென்று மிகவும் பலமாக ஒலித்ததில், அவர் சின்னக் குழந்தையாக இருந்தபோது அவருடைய பெற்றோர் கழுதைப் பால் கொடுத்திருக்கலாம் என்று எனக்கு உறுதிபடத் தோன்றியது!

7.

முன்னிரவு நேரம்.

வேன் ஒரே சீராக சாலையில் போய்க் கொண்டிருந்தது. டிரைவருக்குப் பக்கத்தில் கிளீனர் அவருக்குப் பக்கத்தில் கதவோரத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். வேனின் பின்புறம் ஐந்து கழுதைகளும் ஒரு பால்குடி மறவாத குட்டிக் கழுதையும் நெருக்கியடித்து பக்கம் பக்கமாய் நின்றிருந்தன.

யோசித்துப் பார்த்தேன். சில வருஷங்களுக்கு முன் நடந்ததெல்லாம் கனவு போல் இருந்தது.

இந்தக் கழுதைகள் பால்குடி மறந்தவையாய் இருந்தபோது படாதபாடு பட்டுக் கண்டுபிடித்து வேலூரிலிருந்து சென்னைக்கு ஒரு நாள் நள்ளிரவில் அனுப்பி வைத்த அனுபவம் இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைத்தது.

மதுரையில் உள்ள கிளை அலுவலகத்தில் வேலை பார்த்த எனக்கு நேற்று ஜி.எம்.மிடமிருந்து திடீரென்று ஃபோன் வந்தது. சில வருடங்களுக்கு முன் வேலூரில் நான் பணியாற்றிய போது வந்ததே அதே மாதிரி.. பரபரப்புடன் போனைக் காதில் வைத்து, எஸ் ஸார்! என்றேன்..

“மிஸ்டர் பல்ராம், ஒங்க உதவி தேவைப்படுதே, உடனே நீங்க சென்னைக்கு வர முடியுமா..?”

“ஷ்யூர் ஸார். இன்னிக்கு ராத்திரியே கௌம்பி, நாளைக்கு ஹெட் ஆபிஸில் இருப்பேன் ஸார்!” என்றேன்.

“குட்… வாங்க! மத்ததை நேரில் பேசிக்கலாம்!” என்றார் ஜி.எம்.

நேரில் ஜி.எம். மைச் சந்தித்தபோது, “வெரி ஸாரி மிஸ்டர் பல்ராம்! ஒங்களுக்கு மறுபடியும் தொல்லை தர்றேன். ஸம் இயர்ஸ் பேக், நீங்க வெல்லூர்ல இருந்தப்ப எனக்கு கழுதைக் குட்டிக வாங்கி அனுப்பி வெச்சீங்க ஞாபகம் இருக்கா?”

“நல்லா ஞாபகம் இருக்கு ஸார்! அதுகளை ஃப்ளைட்டுல அனுப்ப முடியல்லை, ஷிப்புல அனுப்பப் போறேன்னு சொன்னீங்க.. அதுகளை அனுப்பிட்டீங்களா ஸார்?”

“அது விஷயமாத்தான் மிஸ்டர் பல்ராம், ஒங்களை அவசரமா வரச் சொன்னேன். ஃபிளைட்டில் கழுதைகளை ஏத்த மாட்டேங்கறாளேன்னு ஷிப் வழியா அனுப்பிச்சுரலாம்னு முடிவு செஞ்சு, அதுக்கு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சேனா? அங்கேதான் எனக்கு கழுதை மாதிரி விஷயம் ஒதைக்க ஆரம்பிச்சுது. என்னன்னா, நீங்க கழுதை வாங்கின தொகையைப் போல பத்து மடங்கு சார்ஜ் ஆகுமாம் கப்பல்ல அனுப்ப! நான் என்னோட சிங்கப்பூர் நண்பன்கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவனுக்கு மனசு விட்டுப் போச்சு. எனக்கு இதுவரை ஆன செலவுத் தொகையை அனுப்பி வெச்சிட்டு, இதுக்கு மேலே இந்தக் கழுதைகளுக்கு நான் செலவு பண்ணத் தயாரில்லைன்னு சொல்லி போனை வெச்சிட்டான். எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம கழுதைகளை என் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் இருக்கும் பண்ணையில் வெச்சு பராமரிச்சு வந்தேன். அதுல ஒரு கழுதை குட்டி போட்டுச்சு. இனிமே என்ன பண்ண்றதுன்னு புரியலை. அதுகளை என் பண்ணைக்கு வெளியே விரட்டி விடச் சொன்னேன். என்ன விரட்டினாலும், எத்தனை தூரம் கொண்டு போய் விட்டு வந்தாலும் பண்ணை நுழைவாயில் கேட் கிட்டேயே திரும்பத் திரும்ப வந்து பரிதாபமா நிக்கறதுகள்.. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க?”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று பாஸ் விரும்புகிறார்?

“பயப்படாதீங்க மிஸ்டர் பல்ராம். முன்னே எப்படி வேலூரில் இந்தக் கழுதைகளை ஏற்றி இங்கே மெட்றாசுக்கு அனுப்பினேளோ, அதே மாதிரி இதுகளை வேனில் ஏற்றிக்குங்க. வேன்ல நீங்களும் போங்க. எங்கே விட்டாலும் இந்தக் கழுதைக திரும்பி ஈ.சி. ஆர் ரோடுக்கு வந்துடப்படாது. மகாபலிபுரம் இல்லாட்டி, பாண்டிச்சேரி போகிற வழியில் நிறைய மரம் செடி கொடிகளும் தண்ணீரும் இருக்கிற எடமாப் பாத்து எறக்கி விட்டுப்புட்டு, திரும்பிப் பாக்காம வந்துடுங்க. நீங்க ஆரம்பிச்ச விவகாரத்தை நீங்களே முடிச்சுட்டா நல்லதுன்னுதான் ஒங்களை வரவழைச்சுட்டேன். தப்பா நெனச்சுக்க மாட்டேளே?”

அதன் விளைவுதான் இந்த முன்னிரவு நேரத்தில், கழுதைகளுடன் ஓர் இனிய பயணம்!

மகாபலிபுரம் தாண்டி பாண்டிச்சேரி போகும் வழியில், அவற்றை நட்ட நடுச் சாலையில், இரக்கமேயின்றி இறக்கி விட்டோம்.

வேனில் ஏறித் திரும்பியபோது, “அடச் சீ, போங்க கழுதைகளா!” என்று வாய் சொன்னது. அதே நேரம், சொல்ல முடியாத ஓர் சோகம் எங்கிருந்தோ வந்து என் மனதில் அழுத்தமாக உட்கார்ந்து கொண்டது!

(ஆனந்த விகடன் தீபாவளி மலர் சிறுகதை)

Print Friendly, PDF & Email

2 thoughts on “சிங்கப்பூருக்கு சில கழுதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *