கொம்பியூட்டர் விற்பனைக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 22,055 
 

இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன். என்ரை அவகொஞ்ச நாளா இஞ்சாருங்கோ எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம் சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்போனால் எனக்குச் சொல்லுறதுக்கு ஒரு விசயம்கூட இல்லாமல் வெக்கமாக்கிடக்கப்பா, இப்படியே போனால் ஒரு சனமும் எங்களை மதியாதுகள். புதுசா ஒரு கொம்பியூட்டர் வகுப்புத் தொடங்குதாம், நீங்கள் அதுக்கெண்டாலும் போங்கோ அப்பதான் நாங்களும் கொஞ்சம் தலை நிமிரலாம் எண்டு ஒரே ஆக்கினை. எனக்கும் விசயம் நல்லாத்தான் தெரிஞ்சுது. எண்டாலும் ஒரு சின்னப்பயம், நானும் கடைசியிலை நீர் சொல்லுறதும் நல்லாத்தான் கிடக்கு, ஆனாலும் எனக்கு இந்த வயசிலை தனியப்போக வெக்கமாக்கிடக்கப்பா நீரும் வாறதென்றால் சொல்லும் இரண்டுபேருமாகப் போவம் எண்டன்.

ஒருவழியா அல்டியிலையிலை அங்கபோட(மலிவு விற்பனை) போட்டிருக்கிறானெண்டு அறிஞ்சு ஓடிப்போய் ஒரு கொம்பியூட்டரையும் வாங்கிக்கொண்டுவந்து வரவேற்பறையிலை வாறவையளுக்கெல்லாம் வடிவாத் தெரியிறமாதிரி சோக்கேசுக்குப் பக்கத்திலை வச்சுப்போட்டு வகுப்புக்கும் போகத் தொடங்கினம். பிறகென்ன வீட்டிலை எனக்கும் அவவுக்கும் கதைச்சுமாளாது. நித்திரையிலை திடுக்கிட்டு எழும்பி இஞ்சருமப்பா இவள் சின்னவளின்ரை அடுத்த பிறந்தநாளுக்கு அவளின்ரை படமெல்லாம்போட்டு அந்தமாதிரி ஒரு காட் அடிக்கிறன். அதோட பாருமன் சனமெல்லாம் என்ன கதைக்குதுகள் எண்டு சொல்லி வாய்மூடமுந்தியே மனுசி உங்களுக்கு உதைச்சொல்லுறதுக்கு இந்த நடுச்சாமந்தான் கிடைச்சுதே என்று எரிஞ்சு விழுந்தாலும் பிறகு நானும் கொஞ்ச நாளாப் பாக்கிறன் நித்திரையிலையும் இன்ரநெற், சற் எண்டு எல்லாம் பிசத்திறியள், ஒரேயடியாப் படியாதையுங்கோப்பா எனக்கெண்டால் பயமாக்கிடக்கு எண்டா. எனக்கெண்டால் வாத்தி கெதியில ஈமெயில், மற்றது கொம்பியூட்டருக்காலை கதைக்கிறதுகளை படிப்பிச்சுப்போட்டுதென்றால் தபால் செலவு, ரெலிபோன் காசெல்லாம் சரியான மிச்சம்தானென்று ஒரே புளுகந்தான். ஆனாலும் நாள்ப் போகப்போக வாத்தி என்னடா என்றால் வைனறி சிஸ்டம், டொஸ், கியூபேசிக், காட்வெயார், சொப்ற்வெயார் என்று என்ரை கொம்பியூட்டரிலை இல்லாத விசயங்களா ஏதோ கதையளந்து கொண்டு போகுதே தவிர எப்பத்தான் எங்களுக்குத் தெரிஞ்ச விசயங்களைச் சொல்லித்தரப்போகுதோஎண்டு எனக்கு ஓரே சந்தேகந்தான் !

பொறுக்கேலாமல் கடைசியிலை வெள்ளையும் சொள்ளையுமாக வந்திருக்கிற, வகுப்பிலை அடிக்கடி வாத்தி கேக்கிற கேள்விகளுக்கு டக்,டக் எண்டு பதில் சொல்லுற சின்னவனை எனக்குப் பக்கத்திலை கூப்பிட்டிருத்தி எடதம்பி உந்தாள் எப்படா படமடிக்கவும், ஈமெயில் எழுதவும் சொல்லித்தரும் எண்டு கேட்டன். அண்ணை உங்களுக்கு விசயம்தெரியாதே உந்தாள் இருவது,முப்பது வருசத்துக்கு முந்திப் படிச்சவர், அப்ப எல்லாம் விண்டோஸ், ஈமெயில் எல்லாம் வரேல்லை, அதாலை அவருக்கு அவ்வளவாத் தெரியாது, அதுதான் அந்தாள் உதுகளைப் படிப்பிக்குதில்லை…. எங்களைப்போல ஆக்கள் கேள்வி கேட்டு மடக்கிப் போடுவம் எண்டு பயம் எனக்கும் பெடியன் சொல்லுறது சரிபோலத்தான் கிடந்துது. சும்மா சொல்லக்கூடாது உவன் முந்தியொருநாள் சொன்னவன் தானாகவே கண்டுபிடிச்சு பாட்டெல்லாம் டவுண்லோட் பண்ணிக் கேக்கிறனான் என்று, அவன் சொன்னால் சரியாத்தான் இருக்கும். ஒருவிசயத்தைச் சொல்ல மறந்து போனன்.

எங்கடைவகுப்பிலை ஒரு சின்னப் பொடிச்சியும் படிச்சவள். அவள் டஸ், புஸ் எண்டு வாத்தியை இங்கிலீசிலையெல்லாம் கேள்வி கேக்கிறவள். அவள் இங்கை ஒரளவு சின்னவயசிலை வந்து கொஞ்சக்காலம் டொச்சுப் பள்ளிக்கூடத்திலையும் படிச்சதிலை நாங்கள் ஏதாவது கேட்டாலும் சட்டுப்புட்டெண்டு டொச்சிலைதான் பதில் சொல்லுறவள். இதுகளாலை அவளோட கதைக்கிறதெண்டால் எனக்கு சரியான பயம். அவள் ஒருநாள் சின்னவனிட்டை எனக்கு ஒரு டவுட் சொல்லித்தாறியளோ? என்றாள். சின்னவனெண்டால் முகமெல்லாம் பல்லாக ஏனில்லை? எண்டு கேட்டுப்போட்டு எங்களையெல்லாம் விலாசமாத் திரும்பிப்பாத்தான். பொடிச்சி, நான் இங்க போனமுறை மாஸ்டர் கொம்பியூட்டரிலை சொல்லித்தந்த விசயத்தை வீட்டிலை போய் வடிவாச்செய்து பாப்பமெண்டு என்ர டடி எனக்கெண்டு புதுசா வாங்கின கொம்பியூட்டரிலை செய்து பாத்தால் அந்த விசயமொண்டும் எங்கட கொம்பியூட்டரிலை வரமாட்டனெண்டுது, அதில எல்லா புது புறோகிறாமும் இருக்கு….. அப்பிடி இருந்தும் இது வருதில்லை, அதுதான் எனக்கு ஏனெண்டு விளங்கமாட்டுதாம். எண்டாள்.

நீங்கள் கொம்பியூட்டரிலை டிஸ்கற்றைப் போட்டனிங்களே எண்டு சின்னவன் கேக்க ஓமோம் அதெல்லாம் புதுசா வாங்கி வைத்திருக்கிறன் எண்டாள். நீங்கள் புது டிஸ்கற்றைப்போடுறது சரி சிஸ்டர் ஆனால் இங்கை வேலை செய்யேக்கை பாவிச்ச டிஸ்கற்றை உங்கட வீட்டுக் கொம்பியூட்டரிலை போட்டனிங்களோ எண்டான். பொடிச்சி முழியை உருட்டினாள். அவளதைப் போடல்லைப் போல கிடக்கு. சின்னவனுக்குத் தான் சிக்கலைக் கண்டுபிடிச்சதில ஒரே பெருமை. அதைப் போட்டால்தானே சிஸ்டர் இஞ்ச நீங்கள் மெமரி பண்ணின விசயம் உங்கட கொம்பியூட்டரிலை வரும் எண்டு கர்மசிரத்தையாக விளங்கப்படுத்தினான் பொடியன்.

அப்பத்தான் எனக்கும் உப்பிடியும் ஒரு விசயம் இருக்கே எண்டு விளங்கினாலும், பொடிச்சி இப்படி ஒரேயடியாக் கவிண்டதிலை நல்ல சந்தோசம். சிலுக்குமாதிரி மினுக்கிக்கொண்டு திரிஞ்சவவுக்கு நல்லா வேணும் எண்டு நினைச்சுக் கொண்டன்.

வகுப்பிலை நடந்ததுகளைச் சொல்லுறதெண்டால் விடிய விடியச் சொல்லலாம். இப்பிடித்தான் ஒருத்தர் லுப்ஸ்தானா பைலட் போல கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு பிறீப்கேஸ் எல்லாம் கொண்டு வாறவர். வாத்தி படிப்பிக்கத் தொடங்கினதும் கடகட எண்டு அங்காலை இங்காலை திரும்பாமல் ஏதோ எழுதிக்கொண்டே இருப்பார்.

எனக்கெண்டால் அண்ணை நீங்கள் எந்த பிளேனுக்கு பைலட் எண்டு கேக்கத்தான் விருப்பம். ஆனாலும் எந்தப் புத்திலை எந்தப்பாம்பு இருக்குமோ எண்டு பயம். அவர் ஒருநாள் சின்னவனைப் பார்த்து கலோ பிறதர் நான் கனநாளா ரீ – ஒன்லைன் எடுத்து வச்சிருக்கிறன் ஆனாலும் ஈ மெயில் அட்றஸ் இல்லாததிலை ஒருதருக்கும் ஒரு லெட்டர் கூட எழுத ஏலாமல் கிடக்கு, நீரெப்படி அட்ரஸ் எடுத்தனீரென்று சொல்லினீரெண்டால் நல்லது என்று சின்னவனைக் கேட்டார்.

அவன் டக்கென்று nadaraja@t-online.de எண்டு உங்கடபேர்தான் உங்கட விலாசமா இருக்கும் அண்ணை எண்டான். அது எப்படி பிறதர் அப்பிடிக் குடுக்கச்சொல்லி நான் அவங்களுக்குச் சொல்லாமல் ………… எண்டு இழுத்தார். எல்லாருக்கும் அப்படித்தானண்ணை முதல்லை அவை அவையிண்டை பேரைத்தான் குடுப்பினம், பிறகு தாங்கள் தாங்கள் விரும்பினபடி மாத்தலாம். எண்டதைக் கேட்க எங்கடை வீட்டிலைமட்டுமில்லை எல்லா வீட்டிலையும் கதை உப்பிடித்தான் போகுது எண்டு எனக்கு ஒரு ஆறுதல். இதுக்கிடையிலை சின்னவளின்ரை பிறந்தநாளும் கிட்டவந்துட்டுது. எனக்கென்றால் காட் அடிக்கேலாமல் போடுமோ எண்டு ஒரே கவலை ! இவரை விட்டா சரிவர மாட்டாரப்பா…கேளுங்கோ எண்டு மனுசியும் ஒரே பேச்சு !

அடுத்த வகுப்பில வாத்தி வந்து எக்செல் எண்டு தொடங்க பொறுங்கோ மாஸ்டர், நீங்கள் எப்ப எங்களுக்கு காட் அடிக்க, பிறின்ற் அடிக்க எல்லாம் சொல்லித்தரப்போறியள் எண்டன் நான். அந்த ஆள் என்னடா என்றால் உதுகளைப் படிக்கிறதுக்கென்றால் என்னட்டை வராதையுங்கோ பக்கத்து வீட்டுப் பொடியளைக் கேளுங்கோ. எண்டு சொல்ல எல்லாரும் சிரிக்க எனக்கெண்டால் நடுரோட்டிலை வேட்டி அவிண்டதுபோல ஒரே வெக்கமாப்போச்சு. அடுத்த வகுப்பிலை சின்னவனைக் கேட்டன் எட தம்பி உந்தப்பெட்டியை ரைப்றைட்டர் போல எண்டாலும் பாவிக்கலாமென்றால் என்ரை பெட்டியுக்கை எங்கை பேப்பரைப் போட்டு எப்படி அடிக்கிறதெண்டே தெரியேல்லையடா …… சோதனையும் கிட்டவந்திட்டுது ஒரு நாளைக்கு என்ர வீட்டை வந்து உதுகளையெல்லாம் வடிவா ஒருக்கால் சொல்லித் தாடா மேனை. பிறகு உந்தாள் கொம்பியூட்டரிலை விடையளை எழுதிப் பிறின்ட் அடிச்சுத்தாங்கோ எண்டு சொல்லி ஒரேயடியாக் கவுத்தாலும் கவுத்துவிட்டிடும், அதோட எனக்குப் பாடங்களிலையும் கனக்க டவுட் கிடக்கு ஒருநாளைக்கு வந்தாயெண்டால் எல்லாத்தையும் ஒரேயடியா முடிச்சிடலாம் எண்டன். அவனென்றால் எனக்கண்ணை நேரங்கள்தான் கொஞ்சம் பிரச்சனை என்று பிசகு பண்ணினாலும் ஒருவழியா சனிக்கிழமை வாறன் என்றான். விசயத்தைக் கேட்ட மனுசிக்கெண்டால் புளுகந்தாங்கேல்லை நாங்களப்பா பிழை விட்டிட்டம், முந்தியே வாத்திக்குத் தண்டத்துக்கு காசு குடுக்காமல் இவன் பெடியனைக் கேட்டே அலுவலை முடிச்சிருக்கலாம். பாவம் பொடி வீடு தேடி வருகுது, நீங்கள் சனிக்கிழமைக்கு ஒரு உடன் ஆட்டிறைச்சிப் பங்குக்குச் சொல்லுங்கோ, தனிய இருக்கிற பொடியனப்பா…..வாய்க்கு ருசியா நல்ல ஒரு பிரியாணி போட்டுக் குடுத்தால்தான் எனக்குத் திருப்தி எண்டா. சனிக்கிழமை காலமையிலயிருந்து எனக்கும் மனுசிக்குமெண்டால் கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை. ஒருவழியாச் சின்னவனும் வந்து சேர்ந்தான்.

வந்ததும் அண்ணை இண்டைக்கு நான் கொஞ்சம் கெதியா வேலைக்குப் போகணும், வேலை செய்யிற இடத்தில 2 பேர் சுகயீன லீவு நீங்கள் கெதியா உங்கட டவுட்டுகளைக் கேட்டியள் என்றால் விசயத்தை முடிச்சிட்டு நான் கிளம்பிடுவன் என்றான். எனக்கெண்டால் கடைசியிலை இண்டைக்கும் விசயம் கோவிந்தா தானோ எண்டு அழுகையே வந்திடும்போலக் கிடந்துது, எண்டாலும் சமாளிச்சுக்கொண்டு தம்பி அப்படியென்றால் பாட விசயங்களைப் பிறகு பாப்பம், முதல்லை காட் அடிக்கிறதைக் காட்டும் எண்டன். அவனெண்டால் சரியண்ணை படம் போட்டுக் காட் அடிக்கிறதெண்டால் உங்கடை ஸ்கானர், பிரிணடர் எல்லாம் நல்லா இருக்கவேணும் அப்பத்தான் காட் வடிவா வரும் எண்டு சொல்லிக்கொண்டு கொம்பியூட்டருக்குக் கிட்டப் போட்டு அண்ணை ஸ்கானரையும், பிரிண்டரையும் எங்கைவச்சிருக்கிறியள் எண்டான். எனக்கெண்டால் ஒண்டுமே விளங்கேல்லை உதிலைதானேயடா தம்பி எல்லாம் கிடக்கு எண்டன். அண்ணை அப்ப நீங்கள் ஸ்கானர், பிரிணடர் இரண்டும் வாங்கேல்லையோ எண்டான். என்னடா தம்பி அல்டிக்காரன் இப்பிடியும் ஏமாத்துவானோ பெட்டியிலை கொம்பிளீற்றா எல்லாம் கிடக்கெண்டான் எண்டா என்ர மனுசி. அப்பிடியில்லை அக்கா பொதுவா உதுகளை நாங்கள் தனியா வேண்டிப் பூட்டவேணும் எண்டு பொடியன் சொல்ல கேட்டீங்களே விசயத்தை வாத்தி எங்களுக்கு உதுகள் ஒண்டையும் சொல்லித்தரேல்லை தம்பி டக்கெண்டு எப்படிக் கண்டுபிடிச்சிட்டுது. எண்டு மனுசி சொல்லிக்கொண்டு உள்ள போய் பிரியாணிக் கோப்பையோட வந்தா. எனக்கு சின்னவளுக்கு பிறந்தநாள் காட் அடிக்க ஏலாது எண்டு விளங்கியிட்டுது. அண்டைக்கு அதுக்குப்பிறகு நடந்ததுகள் எதுவுமே மூளைக்கை ஏறேல்லை. இதுக்கிடையில கொஞ்சம் கொஞ்சமா என்ரை மூத்தவன் பக்கத்துவீட்டுப் பொடியளையெல்லாம் கூட்டிக் கொண்டுவந்து ஏதோ எல்லாம் செய்து கொம்பியூட்டரிலை கார் ஓட்டத் தொடங்கிவிட்டான். அவன் அதிலை போர்மிலா 1 காரை அடிபடாமல் லாவகமாக ஓடுறதைப் பாக்க எனக்கெண்டால் திரும்ப ஒரே சந்தோசம். எனக்கல்லோ தெரியும் நான் இங்க கார் ஓட்டப் பழகேக்கை பட்ட கஸ்டங்கள். இதுக்கிடையிலை மனிசி ஒருகுண்டைத் தூக்கிப்போட்டுது. இன்னும் 3 மாதத்திலை சோதினையும் வரப்போகுது, உந்தாள் இசகுபிசகான கேள்விகளைப்போட்டு பெயில் விட்டால் பிறகு சொல்லி வேலையில்லை! நான் இப்பவே வகுப்பைவிடப்போறன் என்று. நானெண்டால் ஒரு முடிவுகாணாமல் விடுறதில்லை எண்டு போய்க்கொண்டிருந்தன். என்ரை மகனெண்டால் பள்ளிக்கூடத்தால வந்தால் முந்தினபோல வெளியில விளையாட ஓடாமல் ஒரேயடியாக் கொம்பியூட்டரில இருந்து ஏதேதோ செய்தபடி. எனக்குத்தான் இழவு இதொண்டும் விளங்காட்டிலும் அவனாவது நல்லா கொம்பியூட்டரைப் படிச்சு முன்னுக்கு வந்திடுவானெண்டு எனக்குச் சந்தோசம். நெடுக இப்படி கொம்பியூட்டருக்கை இருந்து கஸ்டப்பட்டுப் படிக்கிறான் எண்டு மனுசியும் முட்டைக்கோப்பி, சத்துமா எண்டு செய்துகொடுத்து மகனைப் பராமரிச்சபடி. சரி உவன்ரை கெட்டித்தனத்துக்கு உவனையெண்டாலும் ஒரு நல்ல கொம்பியூட்டர் வாத்தியிட்டை சேர்த்துவிடுவமெண்டு புதுசா ஒரு மாஸ்டரைத் தேடிக்கோண்டிருந்தன். அப்பத்தான் ஒருகிழமையா லீவிலை வீட்டை வந்து நிண்டான் என்ர மருமகன். அவன் ஓருநாள் மெதுவா மாமா நான் ஒருவிசயம் சொல்லுறன் கோவிக்கமாட்டியளோ எண்டு பெரிய பீடிகையெல்லாம் போட்டான். நானேதோ மருமகன் ஆரையோ காதலிக்கிறான் போல, அதுதானே இப்ப பொடியள் வழக்கமாச் செய்யிறது, அதைச்சொல்லத்தான் தயங்கிறான்… எண்டு நினைச்சு, எதெண்டாலும் தயங்காமச் சொல்லடா மேனை, நானுண்ட மாமா அல்லோ எண்டன். அவன் மாமா உவன் உங்கடை மூத்தவனை ஏன் ஒரேயடியா வீடியோ கேம் விளையாட விட்டுக் கெடுக்கிறியள்? நான் புத்தி சொன்னால் அவன் அப்பாதான் நல்லா கொம்பியூட்டரில இரடா எண்டு விட்டவர் எண்டு சொல்றான், உப்பிடியே இவன் உதுக்கு அடிமையாகிப் படிப்பில கோட்டைவிடப்போறான்…..எண்டு ஏதேதோ சொல்லிக்கொண்டே போனான். அப்பத்தான் எனக்கு ஓடி வெளிச்சுது தம்பியாண்டான் கொம்பியூட்டரிலை இருந்து நெடுகச் செய்ததொண்டும் பிரயோசனமான விசயமொண்டுமில்லை எண்டது!! என எனக்கு வந்த விசரிலை கொம்பியூட்டரைக் கழட்டிப் பழையபடி பெட்டியிலை போட்டு மூடி வச்சிட்டு கொம்பியூட்டர் விற்பனைக்கு உண்டு எண்டு பேப்பரிலை விளம்பரத்தையும் போட்டிட்டு எவன்ரை தலையிலை உந்தப் பெட்டியைக் கட்டலாமெண்டு இப்ப கொஞ்ச நாளாப் பாத்துக் கொண்டிருக்கிறன்.

ஆக்கம்: பொன். அம்பலத்தார்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *