குடிகாரன்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 25,012 
 

கட்டிய கணவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடுவதற்கு ஏன் எந்த கவிஞனுக்கும் மனது வரவில்லை. கட்டிய கணவனை வாய் நிறைய திட்டும் என் அருமை மனைவி சோற்றைப் போட்டுவிட்டு திட்டினால் என்னவாம். அவள் உடனடியாக என்னிடம் 3 சத்தியங்களை செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் மனிதனாக இருக்க மாட்டேன்.

1. அவள் என்னை அடிக்‍கக் கூடாது. 2. அவள் என்னை அடிக்‍கக் கூடாது. 3. அவள் என்னை அடிக்‍கக் கூடாது.

கர்த்தரின் கருணையால் மட்டுமே இன்று வரை உயிர் வாழ்கிறேன் என்றால் அதில் வியப்பில்லை.

அன்று ஒருநாள் பாவமன்னிப்பு கோரச் சென்ற என் மனைவியிடம் பாதிரியார் ஜார்ஜ் இவ்வாறு கூறியதாகக்‍ கேள்விப்பட்டேன்.

“ஒரே விஷயத்துக்‍காக 77 முறையெல்லாம் மன்னிக்‍க முடியாதும்மா” என்று கூறி வேதனைப்பட்டிருக்‍கிறார்.

“இனிமேல் உன் கணவனை …..தெரியாமல்….. அடித்துவிட்டேன் என்று பொய் சொல்லி பாவ மன்னிப்பு கேட்காதே, இதைக்‍ கேட்டு கேட்டு எனக்‍கு சலிப்பாக இருக்‍கிறது” என்று புலம்பியிருக்‍கிறார்.

அவள் யார் பேச்சைத்தான் கேட்டிருக்‍கிறாள்.

என் மனைவியைப் போலவே என் விரல்களும் என் சொல் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறது. கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருக்கும் என் விரல்களைப் பார்த்து நான் பயத்தால் நடுங்குகிறேன் என்று நினைக்கிறாள் என் மனைவி. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குடிக்க வேண்டும் என்ற என் விரதத்தை என்று நான் மீறுகிறோனோ அன்று என் கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது. ஆனால் 50 சதவீத நடுக்‍கத்திற்கு அவள்தான் காரணம். 2 நடுக்கங்களும் ஒரே நேரத்தில் கலந்து வருவதால் உண்மை நிலவரம் யாருக்கும் தெரிவதில்லை.

நாளை முதல் குடிக்கக் கூடாது என்று கர்த்தர் முன் சத்தியம் வாங்கியிருக்கிறாள் அவள். பாவம் அவள் ஏமாந்துவிட்டாள். நாளை என்ற ஒன்று வருவதே இல்லை……. இன்று மட்டுமே நிஜம்…… என்று ஓஷோ சொல்லியிருக்கிறார். இது எங்கே அவளுக்குத் தெரிய போகிறது. எப்படியோ நான் நாளைக்குத்தான் குடிக்கக் கூடாது. என் சத்தியத்தை நான் மீறப் போவதில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும் உடம்பை இறுக்கமாக வைத்துக் கொண்டு படுக்கைக்கு சென்று உட்கார்ந்து கொள்ள வேண்டும். அவள் சாப்பிடக் கூப்பிடுவாள் (எப்பொழுதாவது). ஏதேனும் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்து பெர்பர்மென்ஸ் செய்து விட வேண்டியதுதான்.

இரவு நேரம்……

கதவை திறந்தே வைத்திருந்தாள். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல் நேரே என் அறைக்குச் சென்றேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த நன்றி கெட்ட பூனை ‘மியாவ்’ என்று கத்தி காட்டிக் கொடுத்துவிட்டது. அடுத்த ஞாயிற்றுக் கிழமை அவள் சர்ச்சுக்குச் சென்றபின் அந்த பூனை வாயில் சூடு வைத்தால்தான் சரிப்படும்.

என் அறையின் ஸ்விட்சை போட்ட பின்தான் சில விஷயங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. என் அறையில் ஏன் கேஸ் அடுப்பு, சிலிண்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன என்பதைப் பற்றி கடுமையாக யோசித்த பின்பே என்னால் உணர முடிந்தது. அது என் அறை இல்லை என்று.

பின் 4 முறை முயற்சி செய்து சரியாக எனது அறைக்குள் நுழைந்து சாதனை படைத்தேன். 3வது முறையாக நுழைந்தது நிச்சயமாக குளியல் அறையாகத்தான் இருக்க வேண்டும். நல்லவேளை கடவுள் கருணையால் நான் 5 அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன்.

ஆனால் இந்த மனைவிகள் எல்லாம் மிக வேகமானவர்கள். எனக்கு முன்பே என் அறைக்குள் அவளால் எப்படி வர முடிந்தது? அவள் கூறுகிறாள் சமையல் அறையில் விழுந்து நெளிந்து கிடக்கும் 3 சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக புதிய பாத்திரங்களை வாங்கிக் கொடுக்க வேண்டுமாம். அது அவள் அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த சீதனமாம். மேலும் குளியல் அறையில் எந்த மடையனோ வாந்தி எடுத்து வைத்திருக்கிறானாம்.

கர்த்தரே என் கைக்கு ஒரு புத்தகம் கூட சிக்க மாட்டேன் என்கிறதே. இந்த நேரத்தில் நான் படிப்பது போல் நடித்தால் அவள் நம்புவாளா?.

நம்பும் படியாக நடிக்க வேண்டும்.

நல்ல வேளையாக அந்தப் புத்தகம் என் கண்களில் சிக்கியது. அது பைபிளா, டிக்ஷனரியா என்று சரியாகத் தெரியவில்லை. எதுவானாலும் பரவாயில்லை என புத்தகத்தைத் திறந்து வைத்து படிக்க ஆரம்பித்தேன்.

அவள் பேய் போல் கத்தினாள்.

‘முட்டாளே, அந்த பெட்டியை மூடப் போகிறாயா இல்லையா……..’

—————–

அவளுக்குத்தான் எவ்வளவு கோபம் வருகிறது? கோபப்படுவதற்கு எனக்கு மட்டும் உரிமை இல்லையா? இல்லை தகுதிதான் இல்லையா? விடக்கூடாது, இந்த சோகத்தை குடித்துத்தான் மறக்க வேண்டும். குடித்துவிட்டு உண்டு இல்லை என்று செய்து விட வேண்டும். எனது வெறித்தனத்தை எல்லாம் இன்று வெளிப்படுத்தத்தான் போகிறேன். என் உண்மையான கோபத்தை இன்றுதான் வெளிப்படுத்தப் போகிறேன். என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாள். எவனாவது ஒரு சோம்பேறி எனக்கும் கிடைக்காமலா போய்விடுவான். வைத்துக் கொள்கிறேன் இன்று……….

இரவு மணி 9:30 – இடம் : டாஸ்மாக் பார்

ஆம்லேட் போடுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டைகளுக்கு அடியில் கிடந்தேன்…

கர்த்தர் எவ்வளவு கருணையுள்ளவர். அருகில்தான் கரி மூலம் எரிய வைக்கப்படும் அடுப்பும், அதன் மேல் ஏழுக்கு 4 சதுர அடி பரப்பளவில் ஒரு தோசைக்கல்லும் போடப்பட்டிருந்தது. என் மூக்கை குறிபார்த்து குத்தியவனை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.

முகமெல்லாம் ஒரே காயம். இந்த முகத்துடன் எப்படி மனைவியின் முகத்தில் முழிப்பது. அவள் காயங்களுக்கு மருந்து போடுவாளா அல்லது மேலும் காயங்களை ஏற்படுத்துவாளா என்று புரியவில்லை. இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒரே வழிதான் உண்டு. வேகமாக வீட்டிற்குச் சென்று ஏதேனும் ஒரு மருந்தை எடுத்து முகத்தில் உள்ள காயங்களுக்கு தடவி விட்டுக்கொண்டு படுத்துவிட வேண்டியதுதான். விடிந்ததும் காயம் எல்லாம் ஆறிவிடும். அவளையும் ஏமாற்றிவிடலாம்.

வழக்கம்போல் கதவு திறந்தே கிடந்தது. எனது துணிச்சல் மிகுந்த தேடலின் விளைவாக அந்த மருந்தை கண்டுபிடித்துவிட்டேன். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். காயம் சற்று அதிகம்தான். என்னால் நிலையாக நிற்க முடியவில்லை என்றாலும் ஒரு வழியாக மருந்தை முகமெல்லாம் பூசிக் கொண்டேன். படுக்கையை கண்டுபிடித்து படுத்தும் விட்டேன்.

எனக்கு ஒரே மகிழ்ச்சி. இன்று அவள் எழுந்து கொள்ளவே இல்லை. நினைத்தது எல்லாம் எப்படி இன்று மட்டும் நடக்கிறது என்று எனக்கே புரியவில்லை. இன்று மட்டும் தூங்குவதற்கு முன் அவளின் கொடூரமான கத்தலை நான் கேட்கவே இல்லை. இரவு இவ்வளவு அமைதியானதா? எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

விடியற்காலை.

அவள் கொடூரமாகக் கத்தினாள்.

‘எந்த மடையன் கண்ணாடியில் ஃபேர் அண்ட் லவ்லியை தடவி வச்சது’

‘ஐயோ கர்த்தரே’

Print Friendly, PDF & Email

3 thoughts on “குடிகாரன்

  1. Dear சூர்யா, உங்கள் தொடர்புக் கொள்ள உங்கள் செல் பேசி எண்ணை தரவும்…

  2. அன்புள்ள ஆசிரியருக்கு
    நான் படித்த இந்த காமெடி ரொம்ப அருமையாக இருந்தது தொடர்ந்து பல காமெடிகள் வாழ்த்துக்கள்.
    இப்படிக்கு
    rose mary

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *