காந்தி நம்ம தயாரிப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 14,279 
 

அன்றாடம் தியேட்டர் க்யூ’வில் கால் கடுக்க நின்று நமது அபிமான நட்சத்திரங்கள் நடித்த அட்டகாசமான திரைப்படங்களைப் பார்த்துப் புல்லரிப்பும் புளகாங்கிதமும் அடையும் என் போன்ற அன்பார்ந்த ரசிகர்களே!

ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் ஆங்கில காந்தி ‘ ரிலீஸ் ஆகியிருப்பது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே.

நமது இயக்குநர் திலகங்களையும், இயக்குநர் சாந்து களையும், இயக்குநர் பொட்டுகளையும் ஆங்கிலேயர் ஆட்டன்பரோ முந்திக் கொண்டது நமக்கெல்லாம் சற்று மனக்கிலேசத்தை வரவழைத்து விட்டது.

என் போன்ற சினிமா சிந்தனைச் சிற்பிகளே, யோசித்துப் பாருங்கள்.

பென்கிங்ஸ்லிக்குப் பதிலாக நமது அபிமானத்துக்குரிய கமலோ, ரஜினியோ அல்லது குறைந்தபட்சம் கார்த்திக்கோ காந்தியாக நடிக்க, அதை ஆட்டன்பரோவுக்குப் பதிலாக நமது மதிப்புக்குரிய இயக்குநர்கள் டைரக்ட் செய்திருந்தால் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்போம்?!

நமது அபிமான டைரக்டர்கள் நமக்காகப் பிரத்யேகமாக எடுத்த காந்தி’ திரைப்படத்தை எனது சொப்பன ப்ரீமியர் தியேட்டரின் இதய வெள்ளித் திரையில் ‘மனபுரொஜெக்டரின் வாயிலாகப் பார்த்தேன்…

‘காந்தியின் நிறம் கறுஞ்சிவப்பு’

இயக்குநரின் சினிமா சாதனைக் குல்லாயில் மற்றுமோர் இறகு என்று கூறலாம்.

எந்த ஒரு ஆடவரின் வெற்றிக்கும் பின்னணியில் காரணமாக ஒரு பெண் இருப்பாள்’ என்ற ஒரு தத்துவத்தை யதார்த்த ரீதியாக காந்தியின் நிறம் கறுஞ்சிவப்பு’ (இதை இனி சுருக்கமாக கா.நி.க. என்று கூறுவோம்.) படத்தில் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

மகாத்மா காந்தியின் வெற்றிக்குக் காரணம் அன்னை கஸ்தூரிபாதான் என்பதைப் பல காட்சிகளில் கண்களாலேயே காட்டி விட்டார் கஸ்தூரிபாவாக நடிக்கும் சரிதா . அதுவும் கா.நி.க -வின் கிளைமாக்ஸ் காட்சியில் காந்தி ஆங்கிலேயர்களுடன் சுதந்திரம் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போது ஓரமாக அமர்ந்து ராட்டை சுற்றும், சரிதாவின் இரண்டு பெரிய கருவிழிகளைக் காட்டி “தயவு செய்து சுதந்திரம் தா!” என்பது போன்ற பாவனையைப் பிரமாதமாக வரவழைத்திருக்கிறார் இயக்குநர். சரிதா ராட்டை சுற்றச்சுற்ற ஆங்கிலேயர்களின் தலை மெதுவாகச் சுற்ற ஆரம்பிப்பதாகக் காட்டி, கடைசியாக கிளைமாக்ஸில் ஆங்கிலேயர்கள் தலை சுற்றல் அதிகமாகி அதனால் மயங்கி மகாத்மாவின் காலடியில் விழுந்து சுதந்திரத்தை ‘சிம்பாலிக் காகக் கொடுத்துவிடுவது அற்புதமான காட்சி.

இந்த ராட்டை சுற்றலுக்காகவே சரிதா இந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகை என்று தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நிச்சயம்!

ஒரு காட்சியில் இந்தியாவிலுள்ள அத்தனை வீடுகளிலும் அடித்திருக்கும் வெள்ளைச் சுண்ணாம்பை மக்கள் சுரண்டி எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக கோபி’ ‘டிஸ்டம்பர்’ போன்ற வண்ணக் கலவைகளைப் பூசுவதை Subtitle ஆகக் காட்டி ‘வெள்ளையனே வெளியேறு’ பிரசாரத்தை டைரக்டோரியல் டச்சாக இயக்குநர் செய்திருப்பது அப்ளாஸ்’ நிச்சயம் வாங்கும். கஸ்தூரிபாவாக நடித்த சரிதாவுக்கு, படத்தில் முக்கியம் தந்துள்ளதால் காந்தியாக வரும் புதுமுக நடிகர் கௌரவ நடிகராக அவ்வப்போது வந்து போவதும் ரசிக்கவேண்டிய புதுமை.

‘கண்களால் சுதந்திரம் வாங்கிய கஸ்தூரிபா அன்னையே’ என்ற வாலியின் பாடலுக்கு எம். ஸ்.விஸ்வநாதனின் இசை குறிப்பிடத்தக்கது.

‘வயோதிகமே…. வா… வா…’

வயதான முதுமையிலும் இந்திய மக்களின் சுதந்திரத்துக்காகத் தளராமல் போராடும் காந்தியின் வாழ்க்கையைப் பொருத்தமான டைட்டிலில் எடுத்துள்ளார்கள். காந்தி தென் ஆப்பிரிக்காவுக்கு ‘கிழக்கே போகும் ரயிலில் ஏறிச் செல்லும் போது பிளாட்பாரத்தில் நின்று கொண்டு பதினாறு வயது’ கஸ்தூரிபா கண்களில் நீர் திரையிட, கையை மெல்ல ஆட்டும் காட்சி நம்மை நிச்சயம் நெகிழ வைக்கும்…

அப்போது கஸ்தூரிபாவோடு ஸ்டேஷனுக்குத் துணைக்கு வந்த ஆப்பக் கடை ராக்கம்மா, “அயுவாத புள்ள…! புருசன் மேல்படிப்புக்காக புகைவண்டில போகச் சொல்ல பொஞ்சாதி அயுதா பூமி தாங்காதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க புள்ளே” என்று சொல்ல, கஸ்தூரிபா அப்படியே ராக்கம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்கிற காட்சியில் உள்ள கிராமிய நெடி, நாசியில் நுழைந்து நம்மைத் தும்ம வைக்கும்….

காந்தியைப் பிரிந்த சோகத்தில் கஸ்தூரிபா வருத்தத்தோடு குஜராத் கிராமப்புற வயல் வரப்பில் நடந்துவரும் சமயம், மஞ்சள் கலர் புடவையும் மஞ்சள் கலர் ரவிக்கையும் அணிந்த கிராமியப் பெண்களும், மஞ்சள் கலர் கச்சமும் மஞ்சள் கலர் துண்டும் தலையில் கட்டிய கிராமிய ஆண்களும் கோரஸாகத் தெம்மாங்கு ஸ்டைலில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாட்டைப் பாடும் காட்சி கண்ணுக்கும் செவிக்கும் மற்றும் வாய், பாதம், விரல்கள், நகங்கள் போன்ற எல்லா அவயவங்களுக்கும் குளுமையாக விருந்தளிக்கிறது.

மிகமிகப் பொறுமையாக அவசரப்படாமல் மகாத்மா சுதந்திரம் வாங்கினார் என்பதை நமக்கு உணர்த்த வெள்ளையர்கள் ஸ்லோமோஷனில் தாவிக் குதித்து மிதந்து நடந்து வந்து சுதந்திரத்தைக் கொடுக்க, அதை காந்திஜியும் வெரிவெரி ஸ்லோமோஷனில் தாவிச் சென்று வாங்கும் காட்சியை இவ்வளவு சிறப்பாக வேறு யாரால் எடுக்கமுடியும்?

சுதந்திரம் வாங்கிக்கொண்டு வரும் காந்தியை நள்ளிரவில் இந்திய மக்கள் அட வாய்யா… என் பொக்கை கிழவா!’ என்று செல்லமாகக் கன்னத்தில் கிள்ளி கும்மியடித்தவாறு பாடி வரவேற்கும் காட்சிக்கு , கங்கை அமரனின் பாடலும் இளையராஜாவின் இசையமைப்பும் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கும்.

‘சுதந்திரம் கிடைச்சுப் போச்சு’

ஏ, பி, சி, சென்டர்களில் ஆரம்பித்து எக்ஸ், ஒய் , இஸட் சென்டர்கள் வரை எல்லா பட்டி தொட்டிகளிலும் சக்கைப் போடு போடக்கூடிய ஒரு ஜனரஞ்சகமான படம் இது. அப்பாவி காந்தியாக வரும் ஹீரோ நகைச்சுவை வெடிகளை அள்ளி வீசி ஆனந்த விகடன் கணக்குப்படி அறுபத்தேழரை மார்க்குகள் வாங்குகிறார்.

‘ரவுண்ட் டேபிள்’ பேச்சு வார்த்தையின் போது சதுரமான ஒரு பெரிய டேபிளைப் போட்டு ஸ்கொயர் டேபிள் கான்ஃபிரஃன் ஸாக அதைத் தனக்கே உரிய பாணியில் மாற்றி வேடிக்கையாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

சுதந்திரப் பேச்சுவார்த்தை நடக்கும் போது காந்தி வருகிறார்…. காந்தி வந்து கொண்டே இருக்கிறார்…. காந்தி வந்துவிட்டார்’ என்று காந்தியின் வருகையை வெள்ளையர்கள் சஸ்பென்ஸாகப் பேசிக்கொள்வது போல காண்பித்து, கடைசியில் கொட்டகையே அதிரும் வண்ணம் மகாத்மா காந்திக்குப் பதிலாக இந்திரா காந்தி (சிறுமி இந்திராவுக்கு நல்ல எதிர்காலம்….) நேருவின் கையைப் பிடித்துக் கொண்டு வரும் திடீர் திருப்பம் இயக்குநரின் சஸ்பென்ஸ் கலந்த நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு!

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்திலுள்ள மக்கள் மகாத்மாவின் அறிவிப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உப்புச் சத்தியாக்கிரகத்துக்குப் பதிலாக உளுத்தம் பருப்பு சத்தியாக்கிரகம் செய்ய முனைகின்றனர்… இந்தச் செய்தி கேட்ட காந்தி, கிராம மக்களின் அறியாமையைப் போக்குவதற்காக குஜராத்திலிருந்து தமிழ்நாட்டிலுள்ள அந்தக் கிராமத்துக்கு சைக்கிளில் ஏறி வேகமாக ஓட்டிக்கொண்டு “சத்தியாக்கிரகத்தை நிறுத்துங்கள்!” என்று கைகாட்டியவண்ணம் வந்து வேர்க்க விறுவிறுக்க கீழே விழுகிறார்…

தங்களது தவறைத் திருத்துவதற்காக குஜராத்திலிருந்து சைக்கிளில் வந்த காந்தியின் எளிமையான செயலைக் கண்டு மனம் நெகிழ்ந்த கிராம மக்கள் வாய்மூடி சோகமயமான மௌனத்தில் கீதம் பாடுகிறார்கள். உடனே காந்தி எழுந்து நின்று “அண்ணே , உப்பு சத்தியாக்கிரகம் செய்யறதை வுட்டுட்டு தப்பு சத்தியாக்கிரகம் செய்யறீங்களா… நியாயமா? என்று அந்த சோகத்திலும் அப்பாவித் தனமாக நகைச்சுவையை வசனத்தில் இழையோடவிட்டிருப்பது வசன கர்த்தாவின் தனி பாணி.

கிளைமாக்ஸ் காட்சியில் லண்டனில் உள்ள Hyde Park மைதானத்தில் நடுவே மேடை போட்டு அதில் காந்தியும் மற்றும் சக நடிகர்களும் அமர்ந்து கொண்டு எங்கள் அடிமைக் கதையைக் கேளு தாய்க்குலமே – வெள்ளைக்காரத் தாய்க்குலமே’ என்று பாட… லண்டனில் உள்ள அத்தனை பெண்களும் விழுந்து விழுந்து சிரித்து வயிற்று வலி தாங்காமல் தமது கணவன்மார்களை வற்புறுத்தி இந்தியாவுக்குச் சுதந்திரத்தைத் தந்துவிடும்படி வற்புறுத்துகிறார்கள்… சுதந்திரம் வாங்கும் மேற்கூறிய காட்சியைக் கனவுக் காட்சியாக அமைத்து இன்று நாம் சுதந்திரம் அடைந்திருப்பதாக நினைப்பது ஒரு கனவேயாகும்’ என்பதைப் படம் முடிந்த பிறகு எழுத்து வடிவத்தில் காட்டுவது பாராட்டப்பட வேண்டிய உத்தி!

‘சுதந்திரத்துக்கு நேரமாச்சு’

படத்துக்கு இந்த டைட்டில் அவ்வளவாக மனதில் பிடிபடவில்லை . வீரதீர காந்தி போல வேறு ஏதாவது டைட்டில் கொடுத்திருக்கலாம். இந்தப் படத்தின் ஹீரோவான நடிகர் திலகம் சிவாஜி, காந்தியாக வந்து கர்ஜிக்கிறார். வெள்ளையர்களை உணர்ச்சி வசனங்களாலேயே பயமுறுத்திச் சுதந்திரம் வாங்குகிறார்…

முன்பே கட்டபொம்மனாக நடித்து ஆங்கிலேயர்களை மிரட்டிய அனுபவம் வேறு இருப்பதால், காந்தி வேடத்தைப் பிய்த்து உதறுகிறார் சிவாஜி. சுதந்திரம் கிடைத்தவுடன் திரும்பி காந்தி ஒரு பார்வை பார்க்கிறாரே – ஆயிரம் எண்ணங்களை வெளிப்படுத்தும் அந்த உணச்சிகரமான பார்வையை சிவாஜியைத் தவிர யாரால் செய்து காட்ட முடியும்?

நேருவாக வரும் பிரபுவும், காந்தியாக வரும் நடிகர் திலகமும் சந்திக்கும் காட்சிகளில் ஒருவரையொருவர் மிஞ்சுகிறார்கள்.

ஒரு காட்சியில் இந்து – முஸ்லிம் கலவரத்தின் போது, காந்தியாக வரும் சிவாஜி ‘டைட் கவுன்’ போட்டுக்கொண்டு அறையில் ஆக்ரோஷமாக உலவிக் கொண்டிருக்கிறார்…. அப்பொழுது அவர் எதிரே அவரது மனசாட்சி தோன்றி முஸ்லிம் காந்தி, இந்து காந்தி என்று இரண்டாகப் பிரிக்கிறது. இரண்டு காந்திகளும் டி. எம். எஸ். குரலில் ஒரிஜினல் காந்தியான சிவாஜியைப் பார்த்து சக்கைப் போடு போடு காந்தி … வெள்ளைக்காரா… போடா போ…! என்று பாட்டுப் பாட, காந்தியான சிவாஜி உற்சாகமாக உறுமிக்கொண்டே ‘நவகாளி யாத்திரைக்குக் கிளம்பும் போது காளி சிலைக்கு முன் மண்டியிட்டு வணங்கிவிட்டுப் புறப்படும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

‘ஆட்டுக்கார அண்ணல்’

காந்தியின் வளர்ப்பு ஆடாக வரும் ஆடு, குதிரைகளின் மீது அமர்ந்து வரும் ஆங்கிலேயர்களைத் தனது கொம்புகளாலேயே அடித்து விரட்டும் காட்சி அட்டகாசமாகப் படமாக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் பின்னணியில் கொடுக்கப்படும் ட்ரம் இசை பிரமாதம்! ஒரு இடத்தில் தனது ஆசிரமத்துக்கு வந்த வல்லபாய் படேலிடம், தான் வளர்க்கும் ஆட்டின் அறிவுக் கூர்மையைக் காட்டுவதற்காக காந்தி ஆட்டிடம் புரட்சி நடந்த மாதத்தைப் படேலுக்குக்குக் கூறு!’ என்று கேட்க ஆடும், தலையை ஆட்டி விட்டு ‘மே..மே…’ என்று மே தினப் புரட்சியைச் சூசகமாகக் கூற, வல்லபாய் படேல் வியந்து போய் வாயைப் பிளக்கிறார்.

ஆடு கதர்க் குல்லாய் அணிந்து கொண்டு ராட்டை சுற்றுவதும், தக்ளி நூற்பதும் சற்று நம்ப முடியாததாக இருந்தாலும், ‘இந்தக் காட்சியை எப்படிப் படமாக்கினார்கள்’ என்று நாம் அயர்ந்து போகிறோம்!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *