கறுப்பனின் காதலி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 11,691 
 

”இந்தக் கிராம வாழ்க்கையே எனக்கு அலுத்துப் போச்சு. பக்கத் திலே ஏதாவது டவுனுக்குப் போய் வாழணும் போல இருக்கு” என்று தனது நீண்ட நாளைய ஆவலைத் தன் காதலன் கறுப்பனிடம் தெரி வித்தது பழுப்பி.

”நாம ரெண்டு பேரும் செங்கல் பட்டு ஜங்ஷனுக்குப் போய் அங்கேயே தங்கிடலாமே!” என்றது கறுப்பன்.

”செங்கல்பட்டு ஜங்ஷனா? எனக்குக்கூட ரயில் பார்க்கணும் போல ஆசையாயிருக்கு. அங்கே பெரிய பெரிய ரயில் எல்லாம் வருமா?”
”ஆமாம். திருவனந்தபுரம் எக்ஸ் பிரஸ், போட் மெயில், தூத்துக்குடி, திருநெல்வேலி எல்லாம் வரும். காலையிலே இட்லி, பகல்லே சாப்பாடு, சாயந்திரம் டிபன் இவ் வளவும் அங்கேயே கிடைச்சுடும் நமக்கு. கண்ட இடத்திலே அலைய வேணாம். ரயில்லே போறவங்க, வரவங்களை வேடிக்கை பார்த் துக்கிட்டிருந்தா பொழுது தமாஷா போயிடும்” என்றது கறுப்பன்.

”காலையிலே இட்லியா! நமக்கு எப்படி கிடைக்கும்?” என்று வியந்தது பழுப்பி.

”சுத்தப் பட்டிக்காடா இருக்கியே நீ! ரயில்லே போறவங்க சாப்பிடற மிச்சமெல்லாம் பிளாட்பாரத்திலே தானே வந்து விழணும்? உஷாராக் காத்திருந்து கவ்வணும். செங்கல் பட்டு ஸ்டேஷன்லே கொஞ்சம் போட்டா போட்டி அதிகம்! ம்… எத்தனை நாய்ங்க இருந்தா என்ன? அது அதுக்கும் ஆண்டவன் படி அளக்காமலா இருக்காரு?”

”டாணாக்காரு நம்பளை வெரட்டினா..?”

”வெளியிலே ஓடறாப்பலே ஓடி இன்னொரு பக்கமா உள்ளே நுழைஞ்சுட வேண்டியதுதான். நமக்கென்ன பிளாட்பாரம் டிக்கெட்டா வாங்கணும்?”

”ரயில் ரொம்பப் பெரிசா இருக் குமாமே? எஞ்சின் நிறையப் புகை விடுமாமே?”

”ஆமாம். நீ வந்து பாரேன். புகைவிடாத மின்சார ரயில்கூட விடப் போறாங்களாம். இன்னும் நாலு வருஷத்திலே அதையும் பார்த்துடலாம் நீ!”

”இன்னிக்கே செங்கல்பட்டுக்கு புறப்பட்டுட்டா என்ன?” என்று கேட்டது பழுப்பி ஆர்வத்தோடு.

”இப்பவா? ராகு காலத்திலேயா? ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலே புறப்பட்டா நாய் படாத பாடு படு வாங்கன்னு பழமொழியாச்சே! நாளைக்கு திங்கட்கிழமை, ஒன்பது மணிக்கு மேலே புறப்படுவோம்” என்றது கறுப்பன்.

”அது மனுசங்களுக்காக ஏற்பட்ட பழமொழி. நமக்கில்லை! நீ புறப்படு” என்றது பழுப்பி.

”சரி, இதோ கிளம்பிட்டேன்” என்றது கறுப்பன்.

கறுப்பனும் பழுப்பியும் செங்கல் பட்டை நோக்கி ஓடத் தொடங் கின. கொஞ்ச தூரம் ஓடியதும் கறுப்பன் ஊர் எல்லையில் சாலை ஓரமாக ஓரிடத்தில் போய் நின்று விட்டது.

பழுப்பி திரும்பிப் பார்த்த போது கறுப்பன் ஒரு கல்லுக்கு அருகில் நின்றிருந்தது.

”என்ன, அதுக்குள்ளே நின் னுட்டே? கால் வலிக்குதா?”

”இதான் நம்ம கிராமத்து எல்லைக் கல்லு. கடைசியா ஒரு தடவை…”

”சே…!” – பழுப்பி வெட்கத் துடன் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது.

பழுப்பியும் கறுப்பனும் செங் கல்பட்டு ஜங்ஷனை அடையும் போது இரவு மணி 9. அப்போது தான் அங்கே ஒரு எக்ஸ்பிரஸ் வந்து நின்றுகொண்டிருந்தது.

”நல்ல நேரத்திலேதான் நாம வந்திருக்கோம். இப்பப் பாரு பஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மென்ட் டிலிருந்து என்ன மாதிரி சாப் பாடெல்லாம் வந்து விழப் போகுதுன்னு! வா, ஸ்டேஷனுக் குள்ளே போவோம்!” என்றது கறுப்பன்.

”ஐயோ! எனக்கு பயமா இருக்கு..!”

”பயப்படாம வா! இன்று முதல் இது நம்ம ஸ்டேஷன்!”

”மத்த நாய்ங்க நம்மைக் கண்டா சும்மா விடுமா?”

”அந்த நாய்ங்க என்ன இந்த ஸ்டேஷனை குத்தகையா எடுத் திருக்கு? ஜங்ஷன்ங்கறது பொது இடம். அங்கே யாரும் வரலாம், போகலாம். அது மட்டுமா? இந்த நாட்டிலே எவனும் எந்த இடத்திலேயும் போய்ப் பிழைப்பு நடத்தலாம்னு அரசி யல் சட்டத்திலேயே எழுதி வெச்சிருக்கு, தெரியுமா..?”

ரயிலில் உட்கார்ந்திருந்த ஓர் அம்மாள் ”ஜூ… ஜூ…” என்று பழுப்பியைக் கூப்பிட்டு இலையை வீசி எறிந்தாள்.

அந்த இலையில் புளியோத ரையும், தயிர் சாதமும் நிறைய இருந்தன். கறுப்பன், பழுப்பி இரண்டும் அதை ஒரு கை பார்த்துவிட்டு பிளாட்பாரத் தின் கோடியில் போய், வேலி ஓரமாகப் படுத்துக்கொண்டன.

”ரயில் ரொம்பப் பெரிசா இருக்கே! என்ஜின்தான் கறுப்பா உன்னாட்டம் இருக்கு” என்று கறுப்பனைக் கேலி செய்தது பழுப்பி.

”நான் கறுப்புதான். நான் என்ஜின்! நீதான் ரயில் பெட்டி!” என்றது கறுப்பன்.

”ஓகோ! மெதுவா காதல் பேச்சுக்கு வந்துட்டியா? இத பாரு! இந்த சினிமாப் பேச்செல் லாம் எனக்குப் பிடிக்காது. என்கிட்டே ஏதாவது தப்பா நடந்துகிட்டியானா இந்தத் தண்டவாளத்திலேயே உயிரை விட்டுடுவேன்!”

”ஐயையோ! அப்படியெல் லாம் செஞ்சுடாதே! மணி பத் தாகப் போகுது. ஒரு பக்கமாப் போய்ப் படுத்துத் தூங்குவோம். காலையிலே சீக்கிரம் எழுந்தி ருக்கணும். அஞ்சு மணிக்கெல் லாம் முதல் ரயில் வந்துடும்” என்றது கறுப்பன்.

முதல் ரயிலை வரவேற்க பழுப்பியும் கறுப்பனும் காலை யிலேயே எழுந்து தயாராகப் பிளாட்பாரத்தில் போய்க் காத் துக்கொண்டு நின்றன.

பத்து நிமிஷத்துக்கெல்லாம் ரயில் வந்து நின்றது. கறுப்பனும் பழுப்பியும் பிளாட்பாரத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை ஓடி ஓடி அலைந்தன. ரயிலில் வந்த பிரயாணிகள் இட்லியும், வடையும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இலைகளை அந்தப் பக்கத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். பிளாட் பாரம் பக்கமாக ஓர் இலை கூட விழவில்லை.

அனுபவம் மிக்க பழைய ரயிலடி நாய்கள் மட்டும் இலைகளை எதிர்பார்த்து அந்தப் பக்கத்தில் போய்க் காத்துக்கொண்டிருந்தன. வெகு நேரம் ஆகியும் கறுப்பனுக்கும் பழுப்பிக்கும் ஒரு துண்டு இட்லி கூடக் கிடைக்கவில்லை. ரயில் புறப்படும் நேரமாகி விட்டது. இச்சமயம் யாரோ ஒருவர் ஒருவர் இலை நிறைய இட்லிகளை வைத்து அந்தப் பக்கத்தில் வீசி எறிந்தார். அதைப் பார்த்துக்கொண்டு இருந்த பழுப்பி ஆவலுடன் குறுக்கு வழியாகப் பாய்ந்து அந்தப் பக்கத்தை அடைய ரயில் மீது தாவியது. அதே சமயம் கூவென ஊதிக் கொண்டே ரயில் வேகமாகப் புறப்பட்டுவிடவே, பழுப்பி கீழே குதிக்க பயந்து, ரயிலி லேயே நின்றுவிட்டது.

”பழுப்பி… பழுப்பி! ரயிலோடு போயிட்டியா? என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டியா?” என்று துக்கம் பொங்க அலறியது கறுப்பன். சற்று நேரம் பிளாட்பாரத்திலேயே அழுதுவிட்டு, பின்பு வருத்தத்துடன் கிராமத்துக்கே திரும்பிப் போய்ச் சேர்ந்தது.

எழும்பூர் ஸ்டேஷனில் போய் இறங்கிய பழுப்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. பயந்து கொண்டே வாலை உடலோடு ஒட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்று நாலா திசையிலும் பார்த்தது. ரயிலை விட்டு இறங்கிய பிரயாணிகள் பஸ்சும் டாக்ஸியும் பிடிப் பதில் முனைந்திருந்தார்கள்.

‘நான் எங்கே போவது? பட்டணத்தில் எனக்கு யாரை யும் தெரியாதே!’ என்று பழுப்பி கவலைப்பட்டது.

”கவலைப்படாதே! நான் காப்பாத்தறேன் உன்னை” என் றது ஓர் அபயக்குரல். அந்தக் குரல் வந்த திசையில் பழுப்பி அதிசயத்துடன் திரும்பிப் பார்த்தபோது, குப்பைத் தொட்டி ஓரமாக, ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்த ரௌடி நாய் ஒன்று, மைனர் ஒருவன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொள்வது போல் தன் காதுகள் இரண்டையும் தூக்கி நிறுத்திக்கொண்டு கடைக் கண்ணால் பழுப்பியைக் கவ னித்துக் கொண்டிருந்தது. நல்ல வாட்ட சாட்டமாக இருந்த அந்த ரௌடி நாயைக் கண்ட பழுப்பி பயந்து கொண்டே, ”நீ யார்? உன்னை நம்பலாமா?” என்று கேட்டது.

”கவலைப்படாதே! உன்னை என் கூடவே ராஜாத்தி மாதிரி வச்சுக் காப்பாத்தறேன். சரி, காலையிலே ஏதாவது சாப்பிட் டயா? இல்லேன்னா சொல்லு. இதோ, எதிரிலேயே உடுப்பி ஓட்டல் இருக்குது…”

”ஒரே பஸ்சும் டாக்ஸியுமா ஓடுதே! அந்தப் பக்கம் எப்படிப் போறது?”

”என்னை ‘ஃபாலோ’ பண்ணு! எனக்கு இதெல்லாம் தண்ணி பட்ட பாடு. டாக்ஸிக்கும் பஸ் சுக்கும் பயந்தா பட்டணத் திலே வாழ முடியுமா?” என்று கூறிக்கொண்டே எதிர்த் திசைக்குப் பாய்ந்து சென்றது சடையன். பழுப்பி அதைப் பின்பற்றியது. பழுப்பிக்கு டிபனை முடித்து வைத்துவிட்டு, அங்கிருந்து தன்னுடைய பேட்டைக்கு அழைத்துச் சென்றது சடையன்.

ஒரு வாரம் சென்றது. பழுப் பிக்கு சடையனின் நட்பு, சிந்தாதிரிப்பேட்டை வாசம் இரண்டுமே பிடித்துவிட்டன.

”ரொம்ப நல்ல மாதிரி நீ! பட்டணத்து ரௌடியாச் சேன்னு முதல்ல பயந்தேன்” என்றது பழுப்பி, சடையனைப் பார்த்து.

”ரௌடிங்கதான் இந்தக் காலத்திலே யோக்கியனுங்க. சரி, பீச்சுக்குப் போய் வரலாமா?” என்று கேட்டது சடையன்.

”ஓ, இப்பவே புறப்படலாம்” என்று கிளம்பியது பழுப்பி.

பழுப்பி பின்தொடர்ந்து வர, சடையன் மாப்பிள்ளை போல் மிடுக்கு நடை போட்டுச் சென்றது. இப்படி ஓர் அழகி யோடு தான் பீச்சுக்குப் போவதை எண்ணியபோது அதற்குப் பெருமை தாங்க வில்லை.

”அம்மாடி! எவ்வளவு பெரிசு கடல்! செங்கல்பட்டு ஏரியை விடப் பெரிசா இருக் குதே!” என்றது பழுப்பி.

”ஏரித் தண்ணீரைக் குடிக் கலாம். இதை வாயில் வைக்க வழங்காது. ஒரே உப்பு!” என்றது சடையன்.

”இதென்னா இவ்வளவு கார் நிக்குது இங்கே, வரிசை வரிசையா?”

”இவங்கள்ளாம் பட்டணத் துப் பணக்காரங்க. காத்து வாங்குறதுக்காக வந்திருக் காங்க.”

”எல்லா காருக்குள்ளேயும் நாய்ங்க இருக்குதே?”

”அதெல்லாம் இங்கிலீஷ் நாய்ங்க. அல்சேஷன்னு பேரு. பணக்காரங்க வீட்டிலேதான் வளரும் அதெல்லாம்!”

”ஏன் இங்கிலீஷ் நாய்ங்களை வளர்க்கறாங்க? தமிழ் நாய்ங்க வீட்டைக் காக்காதா?”

”நமக்கு இங்கிலீஷ் தெரி யாதே!”

”அதுங்களுக்கு மட்டும் தெரியுமா?”

”பேசினா புரிஞ்சுக்கும்.”

”இங்கிலீஷ் நாய்ங்க குரைச் சாத்தான் திருடன் ஓடிப் போவானா? நாம குரைச்சாப் போக மாட்டானா?…”

”அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ இன்னா நீ… என்னையே கிராஸ் பண்றே?”

”அதுங்க கழுத்திலே என்ன அது?”

”லைசென்சு.”

”அப்படீன்னா..?”

”லைசென்ஸ் இருந்தாத்தான் மெட்ராஸிலே இருக்கலாம்…”

”இல்லாட்டி….?”

”கார்ப்பரேஷன்லே புடிச்சுக் கிட்டுப் போய் கொன்னு போட்டுடுவாங்க.”

”ஐயையோ! கொன்னுடு வாங்களா? எனக்குப் பயமா யிருக்கே! நீ லைசென்ஸ் இல் லாம எப்படி இருக்கே. உன் னைப் புடிச்சுக்கிட்டு போகலையா?”

”கார்ப்பரேஷன்காரன் வர நேரம் எனக்குத் தெரியும். அவங்க வரப்போ நான் எங்கே யாவது போய் ஒளிஞ்சுக்கு வேன்.”

இரண்டு மூன்று தினங்கள் சென்றன. ஒரு நாள் காலை, உடுப்பி ஓட்டல் முதலாளி எங்கோ வெளியே புறப்பட்டார். சடையனும் அவரோடு கிளம் பிற்று. போகும்போது, ”ஜாக்கி ரதை! முதலாளியோடு அடுத்த தெரு வரைக்கும் ஒரு கலியாணத் துக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று பழுப்பியிடம் கூறிக் கொண்டது.

சடையன் திரும்பி வந்த போது, லைசென்ஸ் இல்லாததற் காகக் கார்ப்பொரேஷன்காரர்கள் பழுப்பியைக் கயிற்றால் வளையம் போட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட சடையன் பதறியது; குரைத்தது; அலறியது; அழுதது. ஆனால் கார்ப்பொரேஷன் காரர்கள் பழுப்பியை விடவில்லை. பிடித்து வண்டிக்குள் போட்டுவிட்டார்கள். தனக்கும் லைசென்ஸ் இல்லாததால் சடையனால் பகிரங்கமாக வெளியே வந்து போராட முடியவில்லை.

தெரு நாய்களை ஏற்றிச் சென்ற அந்த லாரி குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது. அங்கேதான் அவற்றைக் கொல்லுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அந்த லாரியிலிருந்து பழுப்பி எப்படியோ தப்பிப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இன் னொரு லாரிக்குள் தாவி மறைந்துகொண்டது. மூட்டை கள் ஏற்றப்பட்டிருந்த அந்த லாரி சற்று நேரத்துக்கெல்லாம் புறப்பட்டு, செங்கல்பட்டில் போய் நின்றது. அவ்வளவுதான்; அதிலிருந்து கீழே குதித்த பழுப்பி ஒரே ஓட்டமாகத் தன் கிராமத்தை நோக்கி ஓட்டம் எடுத்தது. அங்கே எடுத்த ஓட்டம் கிராமத்தில் போய்தான் நின்றது.

பழுப்பியைக் கண்ட கறுப் பன், ”வந்துட்டியா? எப்படி வந்தே?” என்று கேட்டது மகிழ்ச்சி பொங்க.

”அது ஒரு பெரிய கதை! தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என்றது பழுப்பி.

”அதான் சொன்னேனே… ஞாயிற்றுக்கிழமை ராகு காலத் தில் புறப்பட்டால் நாய் படாத பாடு படுவாங்கன்னு! சரியாப் போச்சு பார்த்தியா பழமொழி? பட்டணத்திலேருந்தா வரே? பட்டணம் எப்படி இருக்குது?”

”நமக்கெல்லாம் பட்டணம் லாயக்கில்லே அத்தான்! அல் சேஷனுங்க வாழவேண்டிய இடம் அது” என்றது பழுப்பி.

– 12-11-1961

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *