கம்பீரஜன்னி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 45,291 
 

எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.

அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், “கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். அவன் செய்து விடுகிற சில செயல்களைக் கவனிக்கையில், அயோக்கியன் – வீணன் என்றே அவனை மதிப்பிடத் தோன்றும்!” என்று சொல்லுவார்கள்.

கைலாசம் மற்ற எல்லோரையும் போல நடந்து கொள்வ தில்லை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகக் கற்றுக் கொள்ளவில்லை. தன் எண்ணங்களையே பெரிதாக மதித்து எப்படி எப்படியோ நடந்து வந்தான் அவன்.

எண்ணங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. எண்ணங் களும் வாழ்வின் ஒரு அம்சம் தான். ஆனால், எண்ணங்கள் தான் வாழ்க்கை என்று கருதினான் கைலாசம். அதனால், எண்ணங்களிலேயே வாழ முயன்றான் அவன்.

கைலாசம் ஒல்லியான நபர். ஐந்தடி உயரம்தான் இருப்பான். நடமாடும் எலும்புக்கூடு என்று அவன் தன்னைப் பற்றி எண்ணியதிலலை. வீமன், ஹெர்குலிஸ் என்றெல்லாம் கதைகளில் வருகிறார்களே அவர்களின் இந்த நூற்றாண்டு வாரிசு அவனே தான் என்பது அவன் எண்ணம்.

வீதி வழியே போகிறான் கைலாசம். மிடுக்காக, ஏறுபோல. அந்தக் காலத்து ராமனும் அவனும் இவனும் இப்படித்தான் நடந்திருப்பார்கள். இருந்தவளை, போனவளை, வந்தவளை, அவளை இவளை எல்லாம் வளை இழந்து விழித்துக் கொண்டு தவிக்கும்படி செய்த புண்ணியவான்கள்! இவனையும் அப்படித்தானே எல்லோரும் – பெண்கள் தான். மற்றவர்கள் பார்த்தால் என்ன; பாரா தொழிந்தால் அவனுக்கு என்ன? – கண்ணினால் விழுங்குகிறார்கள்.

கைலாசத்தின் கண்களில் தனி ஒளி சுடரிடுகிறது. முகத்தில் ஒரு பிரகாசம் ஜொலிக்கிறது. அவன் அழகில் மயங்கி, அவனை ஆசையோடு பார்க்கும் பெண்களைப் புன்முறுவலோடு கவனிக்கிறான்.

அழகியர் அனைவரினும் அற்புத அழகி என்று வியந்து போற்றப்பட வேண்டிய சுந்தரி ஒருத்தி எதிரே வருகிறாள்.

அவளுக்குத் தனது வீரபராக்கிரமத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆண்மை நினைப்பு அவனைத் தூண்டுகிறது. அவன் அங்கும் இங்கும் பார்க்கிறான். பெரிய பஸ் ஒன்று உறுமிக் கொண்டு போகிறது. அவனுக்கு வெகு சமீபமாக, ரஸ்தாவில் தான்.

ஏதோ எண்ணத்தில் திரிகிற அவன் ஒழுங்காக, ஒரமாய், நடைபாதையில் போகமுடியுமா? நடு ரோட்டில் ஜாம்ஜாமென்று அடிபெயர்த்துச் செல்லாமல் இருக்கிறானே, அது பெரிய விஷயம் இல்லையா? அது அந்த பஸ்ஸுக்கு எங்கே தெரிகிறது! கேவலம், பஸ் மிஸ்டர் கைலாசத்தின் அருகாக ஒடுகிறது.

முன்காலத்து ஆணழகன் அருகே, காளை அல்லது மதம் கொண்ட யானை, அல்லது சிங்கம் என்று எதுவோ ஒன்று வரும். அவனும், கடைக் கண் எறியும் காதல் பெண் கொஞ்சம் மகிழ்ந்து போகட்டுமே என்று, அதைச் சிறிது விசாரித்து அனுப்புவான்.

இப்போது உள்ளதைக் கொண்டு தானே ஊராள வேண்டும் கைலாசம்? அவன் தயங்குவானா என்ன? சிறு பொருளை எடுக்க நீட்டுவது போல் கையை அலட்சியமாக அனுப்புகிறான். வசதியான ஒரு இடத்தில் லபக்கென ஒரு பிடி. கம்பீரமாக நின்று அவன் பஸ்ஸை பற்றிக் கொள்கிறான்.

பஸ் முன்னே போக முடியாமல் திணறுகிறது. உறுமுகிறது. கனைக்கிறது. கர்ஜிக்கிறது. ஊகும். அசைய முடியவில்லை.

அது எப்படி முடியும்? அபிநவ பீமன் கைலாசம் விளை யாட்டாகப் பிடித்து நிறுத்துகிறபோது?

வீதி வழிப் போவோருக்கு நல்ல வேடிக்கை. சக்கரங்கள் சுழல்கின்றன. ரோடு பள்ளமாகிறது. ட்ரைவர் என்னென் னவோ பண்ணுகிறார். பஸ் நகரவில்லை.

ஹஹ் ஹஹ்ஹா! – கைலாசத்தின் பெரும் சிரிப்பு. வெள்ளி நாணயங்களைக் குலுக்கி விசிறி அடிப்பது போல.

எல்லோரும் அவனை அதிசயமாய்ப் பார்க்கிறார்கள். அவனுக்குப் பெருமை,

அந்தப் பெண் – அழகியர் திலகம்? கைலாசத்தின் கண்கள் தேடுகின்றன.

அவளுடைய அஞ்சன விழிகள் அவனையே மொய்த்து நிற்கின்றன. அந்தப் பார்வைதான் அவனுக்குச் சரியான பரிசு. ஆகவே, “ஐயோ பாவம் வழியே போ!” என்று அந்த பஸ்ஸை விட்டு விடுகிறான் கைலாசம்.

கைலாசத்தின் மூளை அதிசயமானது தான். அங்கு ஒரு எண்ணம், நீரில் குமிழிடும் சிறு வட்டம் போல், கனைக்கும். அதைத் தொடரும் மற்றொரு முறை முகிழ்த்திடும் நுரை மொக்குகள் போல் எண்ணத்திவலைகள் கூடும். நெரிக்கும். மலரென விரியும். சிரிக்கும்.

அன்றாட வாழ்வின் வெறுமையும் வறட்சியும் மாயமாய் மறைய, புதியதோர் வாழக்கை பசுமையாய், இனிமையாய், குளுமையாய், எழிலாய் அவனுள் உயிர்க்கும்.

இப்படி மலரும் எண்ணங்களில் வாழ்ந்தான் அவன். எண்ணங்களையே வாழ்க்கையாக மதித்தவன் கைலாசம்.

அவனை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அது அவன் தவறா? அதற்காக அவன் தன் இஷ்டம் போல் வாழ்வதை விட்டு விடுவானோ? எண்ணங்களே அவனுடைய உலகம்.

கைலாசம் நடையாழ்வானை நம்பி வாழ வேண்டியவன். எவ்வளவு தூரம் போக வேண்டுமாயினும் நடந்துதான் போவான். டாக்சிக்கும் ஆட்டோவுக்கும் கொட்டி அழ அவனிடம் பணம் ஏது? பஸ்ஸுக்குக் காசுதர மனம் இராது. அந்தக் காசுக்குக் காப்பி குடிக்கலாமே! ஆகவே, அவன் நடக்கிறான்.

அவனுடைய எண்ணங்கள் முடங்கியா கிடக்கும்? அவையும் துள்ளுகின்றன.

டாக்…. டாக் …. டாக் குளம்பொலி சிதற, கம்பீரமாகப் போகிறது குதிரை. மிக நேர்த்தியானது. கறுப்பு வெல்வட் போல் மினுமினுக்கும் உடல். மின்னித் துள்ளும் பிடரி மயிர். நெற்றியில் மட்டும், ஜோரான பொட்டுப் போல், வெள்ளை படிந்திருக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் சிறப்பு அது. மிடுக்கான குதிரை மீது எடுப்பாக சவாரி செய்கிறவன் –

தெருவே பிரமிக்கிறது. யாரது? தெரியாது? மிஸ்டர் கைலாசம். திருவாளர் கைலாசம்…. நம்ம கைலாசம்!

என்னதான் சொல்லும் – காரு கீரு எல்லாம் குதிரை பக்கத் திலே நிற்க முடியாது. குதிரைதான் ஜோர். ராஜரீகம். கம்பீரத் துக்கு எடுப்பு. கைலாசம் கடகடவெனச் சிரிப்பை உருள விடுகிறான். தங்க நாணயங்களைக் குலுக்கிச் சிதறுவது போல.

கைலாசம் சங்கோசப் பேர்வழி. அதிகாரிகளிடம், பெரிய மனிதர்களிடம், உருட்டல் மிரட்டல்காரர்களிடம் பேசவே பயப்படுவான். அதற்கு ஈடு செய்வது போல் அவன் எண்ணங்கள் சித்து விளையாடல் புரியும்.

“ஏயா, ரோட்டிலே போறவரே ரோடு என்ன உம்ம வீட்டுத் திண்ணையா? பேவ்மெண்டிலே ஏறி நட!” உத்திரவிட உரிமை பெற்றோரின் அதிகாரக் குரல் கனத்து ஒலிக்கிறது.

கைலாசம் பதறி அடித்து நடைபாதைக்குத் தாவுகிறான். அவன் எண்ணம் கொதித்துக் கூத்திடுகிறது. “சரிதாம் போய்யா! உம்ம ஊரு தடை பாதைகள் இருக்கிற லெட்சணத்துக்கு, அதுலே நடக்காதது தான் பெரிய குறையாப் போச்சுதாக்கும்! நீரு இறங்கி வந்து, தெருத் தெருவா நடந்து பார்த்தால் தானே உமக்குத் தெரியும்”

அப்படியும் இப்படியும் புரளும் கைலாசப் பார்வை தூரத்தில் வரும் ஒரு நபரை இனம் கண்டு கொள்கிறது. கடன்காரன்! இவனுக்கப் பத்து ரூபாய் கடன் கொடுத்தவன்.

– பிரமாதக் காசு! தா, தா, எப்ப தருவே என்று நச்சரித்துக் கொண்டு. கையிலே பணம் இருந்தால் திருப்பிக் கொடுத்து விட மாட்டேனா என்ன? மனுசனுக்கு இது தெரிய வேணாம்?

கைலாசம் பக்கத்துச் சந்தில் பாய்கிறான். கிளை வழிகள் பல அவனுக்கு அத்துபடி! ஆள் மாயமாய் மறைந்து விடுவானே. அவன் எண்ணங்கள் பறக்கின்றன.

“இந்தா ஸார் பத்து ரூபாய்! உங்களுக்குப் பணம் அதிகமாகத் தேவைப் பட்டாலும் கேளுங்க. தாறேன். ஐயாவாள் கிட்டே இப்போ பணம் நிறையவே இருக்குது”

ஏகப்பட்ட மணியார்டர் பாரம் வாங்குகிறான். தெரிந்தவர், உறவினர், என்றோ உதவி கோரியவர் என்று பலப் பலருக்கும் இஷ்டம் போல் பணம் அனுப்புகிறான் கைலாசம்.

“எல்லாரும் பிரமிக்கணும். எதிர்பாராது பணம் கிடைத்து, ஆச்சர்யப்படுவார்கள். பிறகு சந்தோஷப்படுவார்கள்”

ஆகா, எண்ணங்கள் எவ்வளவு இனியன எத்தனை சக்தி வாய்ந்தவை!

தடியன் ஒருவன் இடித்துக் கொண்டு போகிறான். “ஏய், என்ன கணாக் கண்டுக்கினு நடக்கிறியா? நேரே பார்த்துப் போ!” என்று உபதேசம் வேறு புரிகிறான்.

ஒகோ, இவ்வளவுக்கு இருக்குதா உனக்கு? கைலாசம் லேசாகத் தள்ளுகிறான். டமால்! தடியன் சாம்பல் பூசணிக்காய் மாதிரி விழுந்து சிதறுகிறான்.

“பேஷோ பேஷ்!” கைலாசத்தின் மனம் கெக்கொலி கொட்டிச் சிரிக்கிறது.

அவனுக்கு “இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்” அதனுடைய கோளாறுதான் விபரீதமான சித்தப் போக்கு. இப்படிச் சொன்னார்கள் சிலபேர்.

பையனுக்கு “கம்பீர ஜன்னி”; அதுதான் மன உதறலும் எண்ண உதைப்பும் அவனைப்பாடாய்படுத்துகின்றன என்று ஒருவர் சொன்னார்.

அவனோ தன் எண்ணங்களும் தானுமாகி, அந்த லயிப்பில் இன்ப சுகம் கண்டு வந்தான். எண்ணங்களால் அவன் விளை யாடினான். வஞ்சம் தீர்த்தான். காதல் புரிந்தான். வெற்றிகள் மேல் வெற்றி பெற்றான்.

அவன் பிறந்த ஊரில் அவனுடைய மாமா ஒருவர் இருந்தார். அவன் அம்மாவும் இருந்தாள். சிறிது நிலமும் இருந்தது. அப்போது அறுவடைக் காலம். பணம் புரளக்கூடிய சமயம். தனக்கு ஐம்பது ரூபாய் அனுப்பும்படி கைலாசம் அம்மாவுக்கு எழுதினான். பதில் மாமாவிடமிருந்து வந்தது. அவர் போதனைகள் வழங்கியிருந்தார். சம்பாதித்து அம்மாவுக்குப் பணம் அனுப்ப வேண்டிய வயதில் உள்ள பிள்ளை அம்மாவிடமிருந்து பணம் கேட்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கைலாசத்துக்கு மாமா மீது ஒரே கோபம். அவரே சாப்பிட்டு ஏப்பமிடப் பார்க்கிறார்” என்று நினைத்தான். அவர் மட்டும் இப்போ எதிரே இருந்தால், மண்டையிலே ஓங்கி ஒரு அறை கொடுப்பேன். ஐயோ அம்மா என்று அலறிக்கிட்டு விழனும் அவரு என்று எண்ணினான்.

– இப்ப எனக்கு வறட்சி நிலை. படுவறட்சி. பணம் கேட்டால் போதனை பண்ணுகிறாரு பெரியவரு. கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடு; சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு. சாத்தானுக்கு உரியதை சாத்தானுக்கே கொடு எனக்கு உரியதை எனக்குத் தருவதில் உனக்கென்ன தடை?

அவன் எண்ணங்கள் சூடேறி வெடித்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து கடிதம் வந்தது. மாமா ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டார்; மண்டையில் பலத்த அடி கட்டுப் போட்டிருக்கிறது என்ற செய்தியை அறிந்ததும் அவன் உள்ளம் கும்மாளியிட்டது.

“ஐயாப்பிள்ளை எண்ணினார். டகார்னு அங்கே பலித்து விட்டது. எண்ணங்கள் சிலசமயம் அப்படி அப்படியே நிறைவேறி விடும். எண்ணுகிறவர் உள்ளத் திண்மை உடையவர் என்றால் எல்லா எண்ணங்களும் சித்தியாகிவிடும்” என்று அவன் சொல்லிக் கொண்டான்.

அவனுடைய எண்ணங்கள் – எல்லாம் இல்லாவிடினும், ஒரு சிலவேனும் – எண்ணியவாறே எய்தும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு.

வழக்கமாக அவன் பார்வையில் படுகிற, பார்வைப் பரிமாற்றம் அளிக்கிற, பெண்களைப் பற்றி கைலாசம் எண்ணு வான். நிறையவே எண்ணி மகிழ்வான்.

“குண்டு மல்லி”யைப் பார்த்து ரொம்ப நாளாச்சே? “கொய் யாப்பழம்” இப்போதெல்லாம் தென்படவே காணோமே? “டொமட்டோ பிராண்டை இந்த வாரம் சந்திக்கவே இல்லையே? – இந்த ரீதியில் தான்.

ஆச்சர்யம்! அவனால் எண்ணப்படுகிற முட்டகோஸ் மூஞ்சி” அல்லது “குடமிளகாய் மூக்கு” அல்லது “அரிசி அப்பளாம்” அல்லது எவளோ, அவளே சில நிமிஷ நேரத்தில் அவன் எதிரே வந்து கொண்டிருப்பாள். ஸ்டைல் பண்ணிக் கொண்டு குறுகுறு பார்வை வீசியபடி. “எண்ணினேன். எதிரே வருகிறாய். வாழ்க!” என்று அவன் மனம் வாழ்த்தும்.

எந்தப் பெண்ணும் அவனைக் கண்டு மயங்கி விடுவாள்; அவன் ஆசையோடு எண்ண வேண்டியதுதான், அவள் வசப்பட்டு விடுவாள். இது கைலாசத்தின் “பெட் ஐடியா”!

“அவனுக்கு கற்பனை அதிகம்” என்றார்கள் அவன் நண்பர்கள். இது ஒரு மாதிரிப் பித்து”

அவன் வசித்த வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பெண் இருந்தாள். “மிஸ் யுனிவர்ஸ்” “மிஸ் இந்தியா” என்றெல்லாம் அவளை வியந்துவிட முடியாது. “மிஸ் அந்த வட்டாரம்” இத்தெருவின் இணையற்ற பியூட்டி” என்று கூடச் சொல்ல இயலாது. இருந்தாலும் அவள் வசீகர பொம்மையாக விளங்கினாள் கைலாசத்தின் கண்களுக்கு. அவளுடைய அடக்கம் ஒடுக்கம் வகையரா அவனுக்கு மிகுதியும் பிடித்திருந்தன.

இவளை அவன் அடிக்கடி பார்ப்பது உண்டு. அவளும் பார்ப்பது வழக்கம்தான். அதீதப் பார்வையில் பொருள் பொதிந்த தனிமொழி நீச்சலடிக்கிறது என்று கைலாசம் கருதினான். என்ன மொழி, தெரியாதா! காதல் மொழியேதான்.

அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு வெட்கம், கூச்சம், தயக்கம் எல்லாம் தான். அவன் தான் சங்கோஜி ஆயிற்றே! ஆகவே, தன் காதலைக் கொட்டி அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். தொடர்ந்து இரண்டு கடிதங்கள் அனுப்பினான். அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

அதற்காக அவன் எண்ணங்கள் வளராமல் ஒடுங்கியா கிடக்கும்? கைலாசம் அவளோடு கைகோத்து கடற்கரை மணலில் பிற்பகல் மூன்று மணிக்கு உலா போனான். இரவில் சினிமாவுக்குச் சென்று மகிழ்ந்தான். திருவான்மியூர், திருவொற்றி பூர் கடலோரத்தின் தனிமை இடங்கள் பலவும் அவ்விரு வரையும் அடிக்கடி காணும் பேறு பெற்றன. ஒரு ஒட்டலில் இரண்டு பேரும் தங்கினார்கள். இன்பமாவது இன்பம்! ஆகா ஆகாகா!

இவை எல்லாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் தான், அவன் எண்ணத்தில். எண்ணம் ஜிகினா வேலை செய்தது. அவனுக்கே பொறுக்கவில்லை. நண்பர்கள் பலரிடமும் இவற்றை சுவையாக அளந்து தள்ளினான் கைலாசம்.

இவ்விஷயம் அந்தப் பெண்ணின் தந்தை காதையும் எட்டி விட்டது.

அவர் முரடர். அந்த வட்டாரத்தின் ரெளடி. அவர் மகளை மிரட்டினார். உண்மை புலனாயிற்று. அந்தப் பெண் ரொம்ப சாது. அவள் பேரில் தவறே இல்லை. தந்தை நேரே கைலாசத் தைத் தேடி வந்தார். அவன் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் இரண்டு அறை கொடுத்தார். “அயோக்கியப் பதரே! உனக்கு ஏண்டா இந்தப் புத்தி? அறியாப் பெண் ஒருத்தி பேரை அநியாயமாகக் கெடுத்துக் கொண்டு திரிகிறாயே. இதிலே உனக்கு என்னடா லாபம்? அவள் வாழ்க்கையே கெட்டுப் போகு மேடா. இதுவா ஒரு விளையாட்டு? இனிமலோவது ஒழுங்காக நடந்து கொள்!” என்று முதுகில் இரண்டு குத்து விட்டார்.

“ஐயோ சாமி, செத்தேன்” என்று அலறி விழுந்தான் கைலாசம்.

“அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்! இனிமேல் பையன் தங்கக் கம்பி ஆகிவிடுவான், பாருங்கள்!” என்று உறுமி விட்டுப் போனார் முரட்டுப் பேர்வழி.

அந்த வேளைக்கு அப்பாவி கைலாசம் எண்ணங்களை வளர்க்கவில்லை. அந்த ஆசையும் எழவில்லை. சுடுகாட்டையும் தீயையும் நெடிது கிடத்தப்பட்ட தன் உடலையும் எண்ணி மகிழும் அளவுக்கு அவன் மனம் பக்குவம் அடைந்திருக்க வில்லையே! அவனுக்கு வாழ்க்கை தானே எண்ணங்கள் – எண்ணம் பூராவும் வாழ்க்கையைப் பற்றியது தானே?

”இப்படி அதிர்ச்சி வைத்தியம் செய்யக்கூடிய ஆசாமி யாராவது ஆரம்பத்திலேயே அவன் வாழ்வில் குறுக்கிட்டிருக்க வேண்டும். பையனின் “கம்பீர ஜன்னி” முற்றி வளர்ந்திருக்காது!” என்று ஒருவர் சொன்னார்.

தங்க நாணயங்களைக் குலுக்கி வீசுவது போல் கலகலக்கும் தனது “ட்ரேட் மார்க்” சிரிப்பைக் கொட்டவில்லை கைலாசம். பாவம்! அவன் ஆஸ்பத்திரியை நோக்கிப் போய் கொண்டிருந்தான்.

(தீபம்” – ஆண்டுமலர், 1966)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *