கனவுமாமணி அப்புசாமி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,372 
 

அப்புசாமி இரண்டு மூன்று நாளாகவே மனைவியைப் பலவிதமான கோணங்களில் எட்ட இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் கவனித்துக் கொண்டிருந்தார்.

“வாட் ஹாப்பண்ட் டு யூ… ரெண்டு நாளாக உங்கள் பார்வையே சரியில்லை. எதையோ பார்த்துப் பயந்துகிட்ட மாதிரி முழிக்கிறீர்கள ?” என்றாள் சீதாப்பாட்டி. “என்னவாவது வம்புகிம்பிலே மாட்டிக் கொண்டிருக்கிறீர்களா? யாருக்காவது பைசா தரணுமா?”

அப்புசாமி தலையை இல்லையென்று ஆட்டினார்.

“ஒண்ணுமில்லே… வந்து வந்து… ஒரு பயங்கரக் கனா கண்டேன்… ஆனால் அந்தக் கனவை அமிதாப்பச்சன் மாதிரி கோடி ரூபாய் குடுத்தாலும் உன்கிட்டே சொல்ல மாட்டேன்,” என்றார்.

“மை டியர் சார்! அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம். நான் பத்துப் பைசாகூட உங்களுக்குத் தர மாட்டேன். அயம் லீஸ்ட் பாதர்ட் எபெளட் யுவர் கனவு எபிஸோட்ஸ்!” என்றவள், “சுருக்கமாகச் சொல்றதுன்னா சொல்லுங்க..” என்றாள்.

அப்புசாமி தலை தொங்கியவராக, “விடியற்காலை கரெக்டா நாலரை மணிக்கு அந்தக் கனவு வந்து தொலைஞ்சிட்டுது…” என்றார்.

“என்ன பெரீய கனவு? உங்களை யாரோ மர்டர் பண்ணிட்டாப்பலேயும், உங்க தலை உங்க கையிலேயே சுத்தற மாதிரியும் வந்ததாக்கும்? மந்திரஜாலம் மாயாஜாலம்னு எதையாவது டி.வி.யிலே படுக்கறதுக்கு முன்னே பார்த்தீங்கன்னா அப்படித்தான் கனவு வரும்…”

அப்புசாமி நீ… ண்… ட… பெரு மூச்சு விட்டார்.

“சீதே! அது மட்டும் நடந்ததோ… நான்… நான் உசிரோடேயே இருக்க மாட்டேன்…”

“வாட் ஹாப்பண்ட் ஐ ஸே… டிப்ரஸ்ட் ஸோ மச்?” என்று அபூர்வமான அக்கறையுடன் கேட்டது கார்ட்லெஸ் போனுக்கு… பொறுக்கவில்லை போலும்.

டீபாயின் மீதிருந்த அது அலறோ அலறல்.

“எஸ்….” என்று சீதாப்பாட்டி, கணவனுக்குத் தரவேண்டிய காதை கார்ட்லெஸ¤க்குத் தந்துவிட்டாள்.

மறுமுனையில் யாரோ சுவையான மகிழ்ச்சியான செய்தியைச் சீதாப்பாட்டிக்குச் சொன்னார்கள் போலிருக்கிறது. மகா மலர்ந்த முகத்துடன் சீதாப்பாட்டி… “டெ ·பன்ட்லி! நாட் அட் ஆல்… எஸ்… எஸ்.. கலைமாமணி… இது எனக்கு தரும் ஆனர்… ஸீ யூ…”

சீதாப்பாட்டி டெலிபோனில் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புசாமியின் முகம் காந்திப்போன கரிவடாத்தின் நிறத்தை அடைந்தது. மூன்றாண்டுக் கடுங்காவல் தண்டனை என்ற அறிவிப்பைக் கேட்ட முதுபெரும் அரசியல்வாதிகளின் முகம் போல வெளிறிற்று.

உடம்பெல்லாம் வைரஸ் ஜுரம் வந்த மாதிரி குளிரும் நடுக்கமுமாயிற்று. மனைவியின் முன்னிலையிலிருந்து உடனே வெளியேறாவிட்டால் மூச்சே விட முடியாது போல் தோன்றியது.

தடாலென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அவரது அவசர ஆலோசனை மையமான ரசகுண்டுவின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.

‘தாத்தா அபூர்வமாக வந்திருக்கிறாரே’ என்று வட்டவட்டமாகப் பெரிய வெங்காயத்தை அழகாக நறுக்கி பஜ்ஜி போடத் தொடங்கினாள் ரசகுண்டுவின் மனைவி ருக்மிணி.

“பஜ்ஜியா?” என்றார் உற்சாகமில்லாமல். சாதாரணமாக கூச்ச நாச்சமில்லர்மல் ஒரு டஜன் வெட்டுவார்.

இப்போது? ஊஹ¥ம்.

“தாத்தா, வாழக்கா வேணும்னா ரெண்டு போடச் சொல்லட்டுமா?” என்று உபசரித்தான் ரசகுண்டு.

“டேய் ரசம்! எனக்கு பஜ்ஜி வேண்டாண்டா.. யாரோ பாடினாங்களே, ‘பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் பஜ்ஜி… சே! சே! பவளவாய்ச் செங்கண்ணுன்னு.. அந்த மாதிரி இந்திரலோகம் பெறினும் வேண்டாத நிலைலே இருக்கேண்டா…”

“என்ன தாத்தா… டப்பாக் கணக்குலே ·பெவிகால் வேணும் போலிருக்கே… இப்படியா உடைஞ்சு போவீங்க… என்னாச்சு… வாங்க வாக்கிங் போய்கிட்டே பேசலாம்…” என்று தாத்தாவைக் கூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான்.

ருக்மிணி, ஒரு டஜன் வெங்காய பஜ்ஜியை ஒரு டிபன் போணியில் போட்டுத் தாத்தாவிடம் நீட்டி, “தாத்தா! நீங்க பஜ்ஜி சாப்பிடாம போனால் என் மனசுக்குச் சமாதானமே ஆகாது. கையிலே எடுத்துக்குங்க. வழியிலே தின்னுண்டே போங்கோ. ருசி ரொம்ப நல்லாருக்கும்…” என்று அன்பைப் பொழிந்தாள்.

“மகராஜியா இருடிம்மா.. உனக்குக் கொடுக்கணும் பட்டம் பதவி எல்லாம். நீ கருணை மணி…” என்றார் நாத் தழுதழுக்க…

ஆனால் அடுத்த கணமே முகத்தை மூடிக்கொண்டு, “ரசம்! ரசம்! என்னாலே தாங்க முடியலைடா… தாங்க முடியலைங்கறதைவிட தாங்க முடியாது. உங்கிட்டே பஞ்சாங்கம் இருக்கோ…”

“பஞ்சாங்கமா?” சிரித்தான் ரசம். “என்ன தாத்தா! கம்ப்யூட்டருங்க கல்யாணம் பண்ணி வைக்கற காலத்திலே வந்து பஞ்சாங்கம் கேட்கறீங்கோ… இன்ட்டர்நெட்டு, அவுட்டர்நெட்டுன்னு உலகம் எங்கேயோ போயிட்டது. நீங்க பஞ்சாங்கம் கேட்கறீங்க?”

“அடேய்! எந்த நெட்டு வந்தாலும் பஞ்சாங்கத்தையும் அந்த நெட்டுலே காட்டற காலம்டா இது. நம்ம கலாசாரம் பண்பாடு… ஐயோ.. ஐயோ.. கலா கலா கலா..” என்று அலறினார்.

“தாத்தா! என்னாச்சு! என்னாச்சு! கலா! கலான்னு கதறுகிறீங்க…” பரபரத்தான் ரசம்..

“தப்பாச் சொல்லிட்டேண்டா.. சொல்லக் கூடாத வார்த்தையை நானே சொல்லிட்டேண்டா…”

ரசகுண்டு தாத்தாவைத் தோளைப் பற்றி அழைத்துக்கொண்டு வாசலுக்குச் சென்றான்.

“பஞ்சாங்கம்! கேட்டேனேடா. உடனே பார்த்தாகணும்டா…”

“எதைப் பார்க்கணும்…”

“பஞ்சாங்கத்தைடா…”

“சுத்த அறுவையாயிருக்கீங்களே தாத்தா.. பஞ்சாங்கத்தைப் பார்க்கணும் சரி. பஞ்சாங்கத்திலே எதைப் பார்க்கணும்? எதைப் பார்க்கணும்னாலும் எங்க வீட்டிலே பஞ்சாங்கமில்லை… நீங்க விஷயத்தைச் சொல்லுங்க.. நானே ஆயிரம் பஞ்சாங்கத்துக்குச் சமம்.”

அப்புசாமி கடற்கரையில் உட்கார்ந்து வெங்காய பஜ்ஜிகளைச் சாப்பிட்டவாறே தனது மனசைத் திறந்து கொட்டித் தள்ளிவிட்டார்.

ரசகுண்டு பொறுமையாக அவரது வருத்தாந்தங்களைக் கேட்டுவிட்டுச் சிரித்தான் பெரிசாக.

“உனக்குச் சிரிப்பா இருக்கு! எனக்குக் அரிப்பாயிருக்குடா! நீ இதைத் தடுக்கணும்டா…”

“தாத்தா! நீங்க துக்கப் படக்கூடாததற்குத் துக்கப்படறீங்க… பாட்டிக்கு என்ன குறை? எப்பவுமே கெட்டிக்காரிதான். சமூக சேவை செய்யறாள். பா.மு.கழகத் தலைவி. பாட்டிகள் முன்னற்றத்துக்காக ஆலிண்டியாவிலே இப்ப பாடுபடற ஒரே கழகம் பாட்டியோட கழகம்தான்!”

“அதாண்டா நான் கவலைப்படறேன்!” என்று ஒரு பெருமூச்சைக் கடல் காற்றில் கலந்து அதை மேலும் உப்பாக்கினார்.

கடற்கரையில் கிடைக்கும் மணல், கிளிஞ்சல், பிளாஸ்டிக் பைகள், காலி ஐஸ்கிரீம் கப்புகள் போன்றவை தவிர்த்த எல்லாப் பொருள்களையும் (சுண்டல், முறுக்கு, மாங்கா, டீ, காப்பி, சுக்காப்பி) வாங்கித் தந்து போனஸாக ஆறுதல் வார்த்தைகள் பலவும் சொல்லி அவரைத் தேற்றினாள்.

“சாதாரணமாகவே கிழவிக்குக் கர்வம் தாளாது. இதுவும் சேர்ந்துட்டுதுன்னா.. அடேய் ரசம்! நான் என்னடா பண்ணுவேன்..”

“தாத்தா! நீங்க கனவுதானே கண்டிருக்கீங்க… நடந்துட்டதுபோல ஏன் பயப்படறீங்க… அப்படி ஏதாவது நடந்துட்டால் அதைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம்… நான் இருக்கேன் கவலைப்படாதீங்க… நான் கொஞ்சம் பெரம்பூர் வரை போகணும்… அதோ பஸ் வருது.. புறப்படறேன்”னு நறுக்கென்று அறுத்துக்கொண்டு விட்டான்.

பஸ் ஸ்டாண்டில் அப்புசாமி அனாதைமாதிரி நின்று கொண்டிருந்தார். ஓரிரு பஸ்கள் வந்து போனதுகூட அவருக்குத் தெரியவில்லை.

அந்த அளவுக்கு இடிந்து போயிருந்தார்.

அந்தக் கனவு ஏன் வந்தது? சே! அதுவும் விடிகாலையில்…

“பெரீவரே!” என்ற குரல் அவரை இந்த மண்ணுலகத்துக்கு அழைத்தது. “என்னைத் தப்பா நினைச்சிக்காதீங்க…” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த ஆள் பருமனாக கண்ணியமான சலவைச் சட்டையும், வேட்டியும் தோள் மேலே மடித்த துண்டுமாக, நடிகர் மீசை முருகேசன் மாதிரியான சிரிப்புடன் தெரிந்தார்.

“யாரு நீங்க?” என்றார் அப்புசாமி ஆச்சரியத்துடன்.

“நீங்க தம்பிகூட பேசிக்கிட்டிருந்ததெல்லாம் என் காதிலே விழுந்தது. மணல்லே உங்களுக்குப் பின்னாலேதான் நான் உட்கார்ந்துகிட்டிருந்தேன்.”

“ஒட்டு கேட்டீங்களாக்கும்?”

பெரிதாகச் சிரித்தார். “ஆலிண்டியா ரேடியோ நியூஸ் படிக்கற மாதிரிப் பெரிசாப் பேசினீங்க. தானாக காதுலே விழுந்ததைத்தான் சொல்றேன்.”

“இங்கே பாருங்க! நீங்க என்கிட்டே நைஸாப் பேசி என்னை எங்கயாவது கடத்திக்கிட்டு போகணும்னு மட்டும் நினைக்காதீங்க…” என்றார் அப்புசாமி. “அப்படியே நீங்க கடத்திக்கிட்டுப் போனாலும் எனக்குத் தினமும் பதினைஞ்சு ரூபா பேட்டா உங்களால் தர முடியுமான்னு யோசிச்சிகிட்டுக் கடத்துங்க..”

கடகடவெனச் சிரித்தார் மீசைக்காரர்.

“அண்ணே! நீங்க நினைக்கிற மாதிரி நான் கடத்தலுகாரன் இல்லே. என் மேலேயிருக்கிற கரைத் துண்டைப் பார்த்தீங்களா?”

“ஓ! சாரு அரசியல்வாதியோ… அதான் கரைத் துண்டு.”

“வெறும் கரைத்துண்டு இல்லேண்ணா.. அக்கறைத் துண்டு! இந்தச் சமுதாயத்திலே நாறி நாற்றமெடுத்து நடுத் தெருவில் நிற்கும் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமல்ல புழுங்கிப் புழுங்கி புகையாகவே பூமியிலே நீண்ட நித்திரை கொள்ளும் நிலக்கரியினை வைரமாக ஒளி விடச் செய்யக்கூடிய தேவதூதன் நான்.”

“ஓ! கிறிஸ்துப் பிரசாரகரா?”

“இல்லே தோஸ்து! நான் இனம், மொழியாகிய தடை கல்களைத் தாவி விட்ட மேதாவி. நலிவுற்றோர் மேம்பாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர்… ந.மே.க. தலைவர் மேதாவி என்றால் நலிந்த உலகம் அறியுமே. நீர் பொலிவற்று, நலிவுற்று இருப்பதால் உமக்கு எனது உதவிக்கரம் நீட்டுகிறேன்… உமக்கு வேண்டியது என்ன?” என்றார் மீசை.

“அவளுக்கு அது கிடைச்சுட்டுதுன்னா தலைகீழா நடப்பாள். என் மதிப்பு பாதாளத்துக்குப் போய்விடும்.”

“அன்பார்ந்த முதியவரே, மனைவிக்கு ஒரு புகழ் கிடைத்தால், ‘இவள் கணவன் என்னோற்றான் கொல்’ என்று இறும்பூது எய்துவதுதானே தமிழன் பண்பாடு.”

“ஐயா! அது நல்ல பெண்டாட்டிங்களுக்கு. இவள் ரவுடி அய்யா, ரவுடி.”

“சரி.. உம் கனவில்தானே உம்ம மனைவிக்கு கலைமாமணி பட்டம் கிடைத்தது. நடப்பு வாழ்க்கையில் அந்தப் பட்டம் அளிக்கப்படவில்லையே. பட்டியலில் பெயர் இல்லையே.”

“உங்களுக்குத் தெரியாது. கடைசி நிமிடத்தில் ஏதாவது கோல்மால் பண்ணி தன் பெயரைச் சேர்த்துக் கொண்டுவிடுவாள்.”

“சரி. உமது அச்சம் அநியாயமாயிருந்தாலும் உமக்காக ஒப்புக் கொள்கிறேன். ஒரு விஷயத்தை இரு முறைகளில் அணுகலாம். ஆக்க முறையிலும் அழிவு முறையிலும். நீர் சொன்னது அறிவுமுறை. நான் சொல்லப்போவது ஆக்க முறை. உமது மனைவிக்கு கலைமாமணி பட்டம் உமது கனவில்தான் வந்தது. அதை நீர் அழிக்க விரும்புகிறீர். ஆனால் நான் ஆக்க முறையிலான யோசனை ஒன்று கூறுகிறேன்.”

“சொல்லுங்க, சொல்லுங்க” என்றார் அப்புசாமி அலட்சியமாக.

“உமக்கே நான் ‘கலைமாமணி’ பட்டம் வாங்கித் தந்து விடுகிறேன்… கலைமாமணிக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் சிபாரிசுக் கமிட்டியில் நான் ஓர் உறுப்பினன் என்பதைத் தாழ்மையாக இங்கே சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“ஐயோ, நிஜம்மாகவா?” அப்புசாமி தடால் என்று பஸ் ஸ்டாண்டில் பல பேர் எதிரிலும் விழுந்தார். அவருக்கு ஏதோ வலிப்பு வந்து விட்டதாச் சிலர் நினைத்து அருகில் ஓடி வந்தனர். ஒரு பெண்மணி தனது ஆபீஸ் பிளாஸ்கிலிருந்த, தான் குடிக்க மறந்த அல்லது குடிக்கப் பிடிக்காத திரவத்தை அவர் மீது ஊற்றினாள்.

அப்புசாமி எழுந்து கொண்டார் என்பதை விட மீசை மேதாவி அவரை அள்ளி எடுத்துத் தமதாக்கிக் கொண்டார்.

அண்ணாநகரிலுள்ள தனது முகவரியைக் கொடுத்தார்.

“காலையில ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுங்கள்” என்று அன்பு கனியக் கூறி அப்புசாமிக்குப் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

தினமும் அப்புசாமி விடியற்காலை ஐந்து மணிக்கே மேதாவியின் வீட்டுக்குச் செல்வதைத் தமது தலையாய, உடம்பாய, பணியாக வைத்துக் கொண்டு நாட்கள் ஏழாயின.

அப்புசாமியின் உற்சாகத்தில் எட்டு கிலோ ஏறியது. ஆனால் எடையில் ஒன்பது கிலோ இறங்கிவிட்டது.

காலை ஐந்து மணிக்கே டாண் என்று மேதாவி வீட்டில் அவர் இருக்க வேண்டுமாதலால், பஸ் கிடைக்காமல், நடந்தேதான் செல்லும்படி இருந்தது. ஆகவே சேதாரம் இல்லையென்றாலும் தேய்மானம் இருக்கத்தானே இருக்கும்.

ஐந்து மணிக்குப் போனதும் மேதாவியின் வீட்டுக் கதவில் தொங்கும் பையிலிருந்து பால் கார்டை எடுத்துக் கொண்டு பால் பூத்துக்குப் போய் இரண்டு லிட்டர் பால் வாங்கி வந்து விட வேண்டும்.

அது முடிந்ததும், வேலிப்பக்கம் உலர்ந்து கொண்டிருக்கும் நீல நிறத் துணியைக் கொண்டு மேதாவி சாரின் டூ வீலரை, தூசி துளியுமில்லாமல் துடைக்க வேண்டும்.

அப்புறம் ஒட்டடைக் கம்பால் வீட்டைச் சுற்றி ஒட்டடை அடித்துவிட்டு, கடினமான மாட்டுக் கொட்டகை சேவை தொடங்க வேண்டும்.

மேதாவியின் இங்கிலீஷ் பசு மகாத் திமிரானது. சாணியை எடுத்து சுத்தம் செய்யலாம் என்றால் காலை எடுக்கவே எடுக்காது. ‘ஆதிக்கத் திமிர் இன்னும் போகலையேடி உனக்கு?’ என்று திட்டிக் கொண்டே மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்துவிட்டு அதற்குப் பருத்திக் கொட்டை அரைப்பார். மிஷினில் அரைத்ததானால் அது சாப்பிடாது.

சில பேர் கைக்குத்தல் அரிசிதான் சாப்பிடுவது என்று வழக்கமுடையவர்களைப் போல் மேற்படி மாடு, கையால் அரைத்த பருத்திக் கொட்டையைத்தான் சாப்பிடும்.

இதற்குள் மணி எட்டாகிவிடும். உடனே மிஸஸ் மேதாவி ஜன்னல் வழியே ஒரு பூக்கூடையை அப்புசாமி பக்கம் எறிவாள்.

அப்புசாமி கூடையை எடுத்துக் கொண்டு, அக்கம்பக்க அவென்யூக்களில் நடந்து அத்துமீறி அவர்கள் வீட்டுச் செடிகளிலிருந்து பூப்பறித்து வர வேண்டும்.

சில பங்களாக்களில் மனிதர்கள் உறுமுவார்கள். சிலவற்றில் நாய்களிருக்கும்.

அப்புசாமி உயிரையும் கூடையையும் பிடித்துக் கொண்டு, மேதாவியின் மனைவியான புண்ணிய லோகவாசியாவதற்காகப் பூ சேகரிக்கும் சேவையைச் சலிப்பின்றி செய்து வந்தார். இதெல்லாம் இன்டோர் ஷ¥ட்டிங் மாதிரி.(அவுட்டோர் வேலைகளாக கரெண்ட் பில்லின் வித்தியாசத்துக்குப் போராடல், டெலிபோன் பில் கட்டுதல், ரேஷன் வாங்குதல், நகரசபை அலுவலகம் சென்று ஓட்டர் லிஷ்ட்டில் பெயர் இருப்பதை செக் செய்தல், இந்த மாதிரி மனுஷ ஜென்மங்களுக்கு மிகக் கடினமான வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது.

‘கலைமாமணிப் பட்டியலில் என் பெயரைச் சேர்த்துவிட்டீர்களா? சேர்த்துவிட்டீர்களா?’ என்று அப்புசாமி தினத்துக்கு நூறு தடவையாவது மேதாவியைக் கேட்டார்.

அவர் அலுத்துப் போய், “பெரியவரே, என் மேலே நம்பிக்கை வையுங்கள். நீர் என் ஆப்த சினேகிதர் ஆகிவிட்டீர்… பாரதியாரின் ‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்’ மாதிரி எங்க வீட்டுக்கு நண்பனாய், சேவகனாய் வேலை செய்து வர்ரீங்க… நீங்க தினமும் ‘கலைமாமணிக்கு என் பெயரை சிபாரிசு செய்துவிட்டீங்களான்னு கேட்க வேண்டிய அவசியமே இல்லை… வாசலிலே நிறுததியிருக்கிறேனே சைக்கிள். அதில் இருக்கிற மணியை அடிச்சீங்கன்னாப் போதும். நீங்க வாய் விட்டுக் கேட்டதாக நினைச்சிக்கிறேன்” என்றார். புது உத்தி சொல்லித் தந்தார்.

தினமும் காலையில் நாலு மணிக்கெல்லாம் எழுந்ததாலும், வயசையும் சக்தியையும் மீறி மேதாவியின் வீட்டுத் தொண்டுகள் செய்ததாலும் அப்புசாமிக்குக் கடும் ஜலதோஷமும் ஜுரமும் வந்துவிட்டது.

மூன்று நான்கு நாட்கள் மேதாவி வீட்டுப் பக்கமே போகவில்லை.

மேதாவியிடமிருந்து அன்று அப்புசாமிக்குப் போன் வந்தது.

சீதாப்பாட்டிதான் எடுத்தாள்.

“பெரியவர் இல்லீங்களா?”

“மே ஐ நோ ஹ¥ இஸ் காலிங்?” என்றாள் சீதாப்பாட்டி.

“மேதாவின்னு சொல்லுங்க.”

“ஐ ஸீ… ஹி இஸ் லெய்ட் அப் வித் ·பிவர். முக்கிய சமாசாரம் ஏதாவதென்றால் சொல்லுங்க. ஐ ஷல் கன்வே இட் டு ஹிம்” என்றாள்.

“ஒரு நிமிஷம் வந்து பேசச் சொல்லும்” என்றார் மேதாவி. “நான் செகரட்டேரியட்லேருந்து பேசறேன். ரொம்ப அர்ஜண்ட்.”

சீதாப்பாட்டி எரிச்சலுடன், “ப்ளீஸ் ஹோல்ட் ஆன்” சொல்லிவிட்டு அப்புசாமியிடம் தகவலைச் சொன்னாள். “செகரெட்டேரியட்டிலிருந்து ஒன் மிஸ்டர் மேதாவி பேசணுமாம்… ரொம்ப முக்கியமாம்… நான் கார்ட்லெஸை இங்கே கொண்டு வர்ரேன்…” என்று கார்ட்லெஸை அப்புசாமியிடம் தந்தாள்..”

அப்புசாமி ஆர்வத்துடன், “மேதாவி சாரா? என்னாச்சு? நான் வரலைனுதும் ஏதோ எனக்குக் கோபம்னு தப்பா நினைச்சுகிட்டீங்களா? ஜுரம், தலைவலி, மூட்டுவலி, கைகால் குடைச்சல். இன்னும் என்னென்னவோ…”

“ரொம்ப சந்தோஷம், பெயரை லிஸ்ட்டுலே சேர்த்துட்டீங்களா?”

“அதைத்தான் சொல்ல வர்ரேனுங்க.. நடுவர் குழு வரைக்கும் போயிட்டுது.”

“சபாஷ்! சபாஷ்!” என்று குதூகலித்தார் அப்புசாமி. “ஆனந்தமென் சொல்வெனே…” என்று பாட வேண்டும் போலிருந்தது.

“நடுவர் குழுவுலே ஒரே ஓர் ஆளு எடக்குப் பண்றாரு! நீட்டா எழுதியே குடுத்துருக்காரு!”

“என்னன்னு.”

“இங்கிலீஷ் நல்லா வரும் போலிருக்கு. இங்கிலீஷ்லேயே மொதல்வர் கலைஞருக்கு, பொளந்து கட்டி எழுதித் தள்ளியிருக்காரு!”

“ஓ! என்னன்னு.”

“நீங்க ஒரு குட் ·பர் நத்திங் ·பெலோவாம்.. எக்ஸன்ட்ரிக் ·பெலோன்னு ஏழெட்டு இடத்திலே குறிப்பிட்டிருக்காங்க… சமூகத்துக்கோ வீட்டுக்கோ எந்த உருப்படியான காரியமும் நீங்க செய்ததில்லையாம்.. கடைசியாக மிரட்டியிருக்காங்க.’இந்த முட்டாள்தனமான கிழவனுக்கு கலைமாமணி பட்டம் கொடுத்தால் தான் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவாராம். கோட்டை முன்னாலே அவரும் அவருடைய கழகப் பொம்பளைங்களும் சாகிறவரை உண்ணாவிரதம் இருப்பாங்களாம்…”

“என்னது? என்னது?” என்று பதறினார் அப்புசாமி கலவரக் குரலில். “கழகம், பொம்பிளைகள்… இன்னாங்கோ அந்தப் பொம்பிளை பேரு என்ன? சீதேக் கியவியா?”

“பேரு சீதாலச்சுமியாம். பாட்டிங்க முன்னேற்றத்துக்குன்னு ஏதோ கழகம் நடத்தறாங்களாமே… அதுக்குத் தலைவியாம். ரொம்ப ஸ்டிரிக்டான ஆசாமியாம். அந்த ஒரு பொம்பிளையைச் சரிக்கட்டிடீங்கன்னு ஒங்களுக்கு கலைமாமணி பட்டம் கடைச்ச மாதிரிதான்…”

படால் என்று போனை உடைப்பது போல் அப்புசாமி வைத்துவிட்டு மனைவியைச் சுட்டுவிடுவது போல பார்த்தார். “அடியே கொலை பாதகி! நீ கலைமாமணி சிபாரிசுக் கமிட்டியிலே உறுப்னிரா? எனக்கு எதிரா நீதான் வேலை செய்தியா? சீ! நீயெல்லாம் ஒரு பெண்டாட்டியா?”

சீதாப்பாட்டி சிரித்தார். “மிஸ்டர். உங்க இளிச்சவாய்த்தனத்தை அந்த மேதாவி நல்லா யுடிலைஸ் பண்ணிக்கிட்டான். வேலைக்காரன் ஊருக்குப் போய்விட்டதாலே உங்களுக்கு நாக்குலே தேன் தடவி எல்லா வேலையையும் பத்து நாளைக்கு வாங்கிக்கிட்டிருக்கான்.”

“சீதே! நீ நல்லாயிருப்பியாடி?”

“செர்ட்டன்லி!” என்றாள் சீதாப்பாட்டி.

“தகுதியில்லாதவங்களுக்கு அந்தப் பட்டம் வந்துடக் கூடாதுன்னுதானே ஒரு பரிந்துரைக் குழு அமைச்சிருக்காங்க. என் டியூட்டியை நான் ஸின்ஸியராச் செய்திருக்கேன். தட்ஸ் ஆல்… பட்டம் எதுவும் கிடைக்கலையேன்னு நீங்க வருத்தப்பட வேண்டாம். அந்த மேதாவியைக் கொண்டே உங்களுக்கு ஒரு பட்டம் குடுத்துடச் சொல்றேன்.”

“என்ன பட்டம்?” என்றார் அப்புசாமி ஆவலுடன்.

“காலைலே தினமும் எழுந்து அவர் வீட்டுக்குப் போய் வேலையெல்லாம் செஞ்சிருக்கீங்க இல்லையா? அதனாலே… ‘காலை மாமணி’ன்னோ ‘வேலைமாமணி’னோ குடுத்துடச் சொல்றேன். இல்லாட்டா, ஒரு கனவை நம்பித் தானே மடத்தனமா இத்தனை கஷ்டப்பட்டீங்க. அதனாலே கனவுமாமணின்னு குடுத்துடச் சொல்றேன்.”

“அதைவிட உன்னைக் கொலை பண்ணிட்டுக் ‘கொலைமாமணி’ங்கற பட்டத்தை வாங்கிக்கறேன்!” என்று படுக்கையில் தொப்பென விழுந்தார் அப்புசாமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *