ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 32,154 
 

(சும்மா ஒரு மசாலா கதை)

மழை வர்ற மாதிரி இருக்குன்னு அப்பவே சொன்னேன்ல ராம், நீதான் கேட்காம கூட்டிட்டு வந்துட்ட. இப்ப பாரு எப்படி நனைஞ்சிட்டோம்ன்னு.

அதான் வீட்டுக்கிட்ட வந்துட்டோமே ஜானு, போய் துவட்டிக்கலாம்.

ஜானு மொத்தமாக நனைந்திருந்தாள். ராம் கொடுத்த துண்டினை எடுத்துத் தலைதுவட்டி விட்டு சேலை முந்தானையை எடுத்து பிழிந்து கொண்டிருந்தாள். சட்டென அவளின் தோள்மீது வேறொரு கை பட…

ஐயோ ராம், நான் பயந்துட்டேன்டா. இப்ப துவட்டிட்டு வரதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு,

மழையில நனைஞ்ச திராட்சை மாதிரி இப்ப எவ்வளவு அழகா இருக்க தெரியுமா! அப்படியே சாப்பிடனும்போல இருக்கு.

ஓஹோ,அப்படியா! ஜானகி வெட்கத்தால் முகம் சிவந்தாள். ராம் மெல்ல அப்படியே அவளது சேலையை கட்டியிருந்த சிகப்பு கொடிக்கு கொடுத்துவிட்டு அவளை அணைத்துக்கொண்டு ஜாக்கெட்டை நோக்கி நகர்ந்தான். மெல்ல கொக்கிகளை அவிழ்த்தப் படி அப்படியே…

ரகு..ரகு…கதவை சாத்திக்கிட்டு என்னடா பண்ற?, சட்டென அம்மாவின் குரல் கேட்க படித்துக் கொண்டிருந்த ‘மழையில் இச் இச்’ புத்தகத்தை தலையணையின் அடியில் வைத்துவிட்டு கதவைத் திறந்தான் ரகு.

எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்.கதவை மூடிக்கிட்டு என்னதான்டா பண்ற?

படிச்சிட்டு இருந்தேன்மா.

என்னத்த படிக்கிறியோ, இரண்டு வருஷமா அரியரையும் கிளியர் பண்ணமாட்ற, வேறு வேலைக்கும் போகமாட்ற.

காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா, இப்ப எதுக்குமா கூப்பிட்ட அத மட்டும் சொல்லு என்றான் ரகு.

சீனி இல்லடா ஊருல இருந்து உன் மாமன் வர்றேன்னு சொல்லிருக்கான். வந்தா காபி, டீ போட்டுக்கொடுக்க வேண்டாமா, அண்ணாச்சி கடை இல்ல பக்கத்து தெருவுல போய் வாங்கிட்டு வா.

எப்ப பார்த்தாலும் சீனி இல்ல, மொளகா இல்லைன்னு சொல்லிக்கிட்டு இரு. இப்ப அந்தாளு எதுக்கு இங்க வர்றாரு என கத்திக்கொண்டே வெள்ளை சட்டையை மாட்டிக்கொண்டு கெளம்பினான்.

இந்த சட்டை நல்லா தானடா இருக்கு.

அம்மா என்னைய பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்க. வெளிய எம்மேல எவ்வளவு ரெஸ்பெக்ட் வச்சிருக்காங்க தெரியுமா! எப்போதும் டீசண்டா போகணும்.

மளிகைக் கடைக்கு வெள்ளைசட்டை போட்டுக்கிட்டு போறவன் நீயாதான்டா இருப்ப என அம்மாவும் அலுத்துக்கொண்டாள்.

ரகுவும் அவனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவனது என்றால் அவனது இல்லை அவன் அப்பாவோட பைக். அவர் குளிக்கப்போன சமயங்களில் மட்டும் அவனோடது. ரகுவை விட பைக் தான் அவருக்கு முதல் பிள்ளை. பைக்கில் ஒரு கோடு விழுந்தாலும் ரகுவிற்கு அன்று சோறு கிடையாது.

மளிகை கடைக்கு வராவிட்டாலும் எப்படியும் கொஞ்ச நேரத்தில் அவன் பக்கத்து தெருவிற்கு வந்திருப்பான்,காரணம் காயத்ரின்னும் சொல்லலாம்,காதல்ன்னு சொல்லலாம். ரகு கடைக்கு போவதற்குள் அவனது ஃபிளாஷ்பேக்கை சொல்லி முடித்துவிடுகிறேன். காயத்ரி அவனுடன் 12 ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவள். அப்போதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை, படிப்பை முடித்துவிட்டு வந்தபின் எதார்த்தமாக கோவில் திருவிழாவில் பார்த்தபோது அசந்துவிட்டான். ’அட்டு ஃபிகரா’ இருந்தவ எப்படி மச்சான் அசத்தல் ஃபிகரா மாறுனா என நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருப்பான். நண்பர்களெல்லாம் வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிட இப்போது அவன்மட்டும் தனியாக புலம்பிக் கொண்டிருக்கிறான்.

கொஞ்சம் தாமதித்தாலும் வேறு எவனும் கரக்ட் பண்ணிவிடுவான் என்பது அவனுக்கு தெரியும் அதனாலேயே இப்போதெல்லாம் பிள்ளையார்கோவிலை சுத்துவதைப் போல இந்த ஏரியாவை சுற்றித் தீயாக வேலைசெய்து கொண்டிருக்கிறான், ஆனால் அவள் ரகுவை மனிதனாகக் கூட மதித்ததாக தெரியவில்லை. இவனும் விடுவதாக இல்லை.

இன்று அவளை வெளியில் காணவில்லை.அம்மா சரியாக அரைக்கிலோ சீனிக்கு 2௦ரூபாய் கொடுத்திருந்தாள். 2ரூபாய் கூட கொடுத்து அனுப்புனா கொறஞ்சா போய்டும் என அம்மாவைத் திட்டிக்கொண்டு மறுபடியும் வண்டியை எடுத்தான். போதாதற்கு காயத்ரி வேறு கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாள். ரொம்ப அழுத்தக்காரியாக இருக்கிறாளே இவள்.

அவளைப் பற்றி அவளோடு எதிர்காலத்தில் வாழப் போகும் வாழ்க்கையைப் பற்றி எண்ணற்ற கற்பனைகளைக் கொண்டிருந்தான் ரகு.இதையெல்லாம் அவளிடம் சொல்லவேண்டும்,அவளை ஆசை ஆசையாக காதலிக்கனும் என்பதெல்லாம் வரிசையாக தோன்றினாலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவள் முதலில் இவனை பார்க்கணுமே!. அவளுக்காகத் தான் இவன் மீன் குழம்பை பூனை சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான்….

அவள் மட்டும் காதலித்து விட்டால் அவளுடன் இங்குவந்து 1௦௦ தேங்காய் உடைக்கிறேன் என பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டான்…..

ஒரு வாரத்திற்கு பிறகு…

ரகு 1௦௦ தேங்காயையும் உடைத்துவிட்டு வந்தான். காயத்ரி அவனைப் பார்த்துக்கொண்டே கோவில் வாசலில் காத்திருந்தாள். எதற்காகவோ சிரித்துக்கொண்டிருந்தாள், காரணம் இருப்பதாக தெரியவில்லை.

வண்டியில் ஏறி ரகுவின் தோளைப்பற்றிக் கொண்டாள்.மாமா எங்க போறோம்?

நேரா தியேட்டருக்கு போறோம்டா.அப்படியே மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு,பார்க்கு போயிட்டு வீட்டுக்கு போறோம்.செம பிளான்ல செல்லம்….

என்ன படம் மாமா?

அது எதுக்குடா நமக்கு. நம்ப என்ன படமா பார்க்க போறோம் !!,ரகு சிரித்தான்..

நீ ரொம்ப பேட் பாய் மாமா,ரகுவின் கண்ணத்தைக் கிள்ளிக் கொண்டாள்.

ஒரு வாரத்திற்கு முன்பு-ரகு மளிகை கடைக்கு போன அதே நாளில்…

ஜான் வேகமா ஓட்டுடா…போலீஸ் பின்னாடி வந்துக்கிட்டு இருக்காங்க..இன்னும் வேகமா…

இதுக்கு மேல இந்த வண்டி போகாதுன்னே.வண்டியை நாளைக்கு தானே சர்வீஸ் பண்ணனும்ன்னு சொன்னீங்க, என்றான் மோகன்.

சரி சரி…வண்டிய திருவள்ளுவர் தெரு வழியாவிடு அந்த ரூட்ல சீக்கிரமா போயிடலாம்..நம்பல பத்தி போலீஸ்க்கு எப்படிடா தெரிஞ்சிருக்கும்.சீக்கிரமா போய் பணத்தை எடுத்துட்டு பசங்களோட கெளம்பிடனும்.இந்த குமார் வேற போனை எடுக்க மாட்டேன்கிறான்.பணம் இருக்க வரையும் குடிக்காதன்னு சொன்னாலும் கேட்கிறதில்லை,ஜான் புலம்பிக்கொண்டிருந்தான்.

மோகன் வண்டியை திருவள்ளுவர் தெருவிற்குள் செலுத்தினான்,தொலைவில் போலீஸ் வண்டி ஏதும் தெரியவில்லை,திசை தெரியாமல் அவர்கள் தடுமாறியிருக்கக் கூடும்.வண்டியை இன்னும் விரைவாக்கினான்.அந்த குறுகிய தெருவிற்குள் இந்த வேகம் பார்த்தவர்களை எல்லாம் சபிக்க வைத்தது.சட்டென சென்ற வேகத்தில் அந்த வழியே சென்றுகொண்டிருந்த பைக்கில் இடித்துவிட்டான்.

சின்னபையன் ன்னே நல்லா அடிபட்டிருக்கும் எனக்கூறி மோகன் வண்டியை நிறுத்த முயன்றான்.ஜான்,வண்டியை நிறுத்தினா நம்ப மாட்டிப்போம் நிறுத்தாமல் வேகமா போ என்றான்.இடதுபக்க கண்ணாடியில் அந்த பையன் சாலையில் எழ முடியாமல் படுத்துக்கிடந்தது மோகனுக்கு தெரிந்தது.

ஒருவழியாக குமார் போனை எடுத்துவிட,அவனை திட்டிக்கொண்டே இன்னும் 1௦ நிமிஷத்தில் வந்திடுவோம் பணத்தை எல்லாம் பேக் பண்ணிட்டு ரெடியா இருடா என்று போனை வைப்பதற்குள் மோகன் தடாலென பிரேக் அடிக்க ஜான் போனை கீழே நழுவவிட்டான்.

வரும்வழியில் காரில் இடித்துவிட்டுச் சென்ற அந்த பையன்தான் வண்டியை வேகமாக வந்து காரின் குறுக்கே நிறுத்திவிட்டான்.மோகன் காரில் இருந்து இறங்கினான்.

என்னயா,நீ பாட்டுக்க இடிச்சிட்டு கண்டுக்காம போவ.எந்த ஏரியா நீ.சொல்லுடா ,அந்த பையன் கத்தினான்.

தம்பி தெரியாம இடிச்சிட்டேன்பா..ஒரு எமர்ஜென்சி அதான் மன்னிச்சிக்க தம்பி என மோகன் சமாதனப் படுத்த பார்த்தான்.

கொஞ்சம் விட்ருந்தா.எனக்கு எமெர்ஜென்சி ஆகி 108ல கொண்டுபோயிருப்பானுங்க.அந்த பையன் கையில் இருந்த சிராய்ப்புகளைக் காட்டினான்.அவனது கத்தலில் கூட்டம் கூடத் தொடங்கியது.

கூட்டத்தைக் கண்டவுடன் ஜானும்,மோகனும் ஓட முற்படவே அந்த பையன் ஜானை லாவகமாக போய் பிடித்துக்கொள்ளவும்,போலீஸ் அங்கு வரவும் சரியாக இருந்தது….

—————————————————————————————————————————-அதேநாள் இரவு செய்தியில்…..

டி.எஸ்.பி.செல்லத்துரை-அந்த தனியார் வங்கியில் 5௦ லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர் கூட்டத்தின் தலைவன் ஜான் இன்று மேலராஜவீதி பக்கம் திரிவதாக தகவல் வரவே அங்கு சென்றோம்.அவனைப் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் மாயமாகிவிட்டார்கள்.நாங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தபோது….இதோ இந்த பையன்தான்..பெயர் ரகுபதி வேகமாக போய் தன்உயிரை பணயம்வைத்து அவர்களை மடக்கிபிடித்தார்.இந்த பையனை மாதிரி துடிப்பான இளைஞர்கள்தான் காவல் துறைக்கு தேவை.

இதைப்பற்றி குற்றவாளிகளை பிடிக்க உதவிய ரகுபதி கூறும்போது,நான் மளிகைக் கடைக்கு போயிட்டு திரும்பிவந்து கொண்டிருந்தபோது அந்த வண்டி என்னைக் கடந்து வேகமா போய்க்கிட்டு இருந்தது.அதைப் பார்த்தபோதே எனக்கு எதோ தப்பா பட்டது.அதான் வேகமா போய் அவங்களை மடக்கிப் பிடித்தேன்.நான் நெனைச்சது சரியாபோச்சு என்றார்.

ரகுபதியுடைய புகைப்படம் அடுத்தநாள் அனைத்து நாளிதழ்களிலும் கொள்ளையர்களை மடக்கி பிடித்தவீர இளைஞன் என்ற பெயரில் கட்டுரையுடன் வெளிவந்தது.சிலர் காவல்துறையில் இந்த இளைஞர் சேர்ந்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என ரகுபதியைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்தனர்.

மேலே சொன்ன ரகுபதி வேற யாரும் இல்லை,உருப்படாதவன் என அப்பாவிடம் தினமும் திட்டுவாங்கும்,16 அரியர்களை கிளியர் செய்யாத,காயத்ரியை தன் டைவா என சொல்லிக்கொள்ளும் நம்ப ரகுதான்.திடீர் என எப்படி ரகுவிற்கு இவ்வளவு வீரம் வந்தது..?????

ரகு காயத்ரியுடன் வண்டியில் செல்லும்போது அன்று உண்மையில் என்ன நடந்தது என நினைத்துப்பார்த்தான்.

நான் சீனி வாங்கிட்டு வண்டியை எடுத்துட்டு போய்க்கிட்டு இருந்தேனா.ஒரு கண்ணு தெரியாத பரதேசி காருல வந்து இடிச்சிட்டு நிற்காம போயிட்டான்.ஒரு நிமிஷம் எதுவுமே புரியல.தெளிவாகி எந்திரிச்சுப் பார்த்தா சட்டையெல்லாம் இரத்தம்.சீனி ரோட்டுல கொட்டிக்கிடக்கு,பைக்கில இண்டிகேட்டர் லைட் எல்லாம் உடைஞ்சு தொங்குது.சீனியைக் கூட சமாளிச்சிடலாம்.வண்டியை மட்டும் அந்தநிலைமைல அப்பா பார்த்தா என்னைய விஷம் வச்சே கொன்னுடுவாரு.அதான் விடக் கூடாதுன்னு அவங்களை துரத்துனேன்.நம்ப ஊருல நமக்கு தெரியாத ரூட்டா,அதான் குறுக்குசந்துல போய் கார் முன்னாடி நிறுத்துனேன்,அந்த டிரைவருக்கு அப்படியே அல்லுவிட்டுருச்சு.

காருக்குள்ள வேற ஒருத்தன் உட்காந்திருந்தான்.காசு எடுத்து வச்சிட்டு இங்கிருந்து நகருங்கடான்னு சொல்லலாம்ன்னு நினைச்சா அதுக்குள்ளே ரெண்டுபேரும் ஓட பார்த்தானுங்க.உள்ள உட்கார்ந்து இருந்தவனை ஒரே அமுக்கா அமுக்கிட்டேன்.அப்பறம் போலீஸ் வந்தபிறகுதான் அவனுங்க பேங்க்ல கொள்ளையடிச்ச குரூப்ன்னு தெரிஞ்சது.நைசா கழண்டுக்கலாம்ன்னு நெனைச்சா அந்த போலீஸ் கேமரா முன்னாடி இந்த பையன்தான் அவங்களை மடக்கி பிடிச்ச வீரன் அது இதுன்னு சொல்லிட்டார்.எனக்கு ஒன்னும் புரியல.சரி இதுவும் நல்லாத்தானே இருக்குன்னு நானும் ஒத்துக்கிட்டேன்.

அடுத்தநாள் பார்த்தா வீட்டுமுன்னாடி அவ்வளவு கூட்டம்.தெருவே என்னைய எதோ ஹீரோ மாதிரி பார்க்கிரானுங்க.அப்பத்தான் காயத்ரியும் வந்து கை கொடுத்து பேசுனா.அப்படியே பிளாஷ்பேக் முடிச்சா,இப்ப ரெண்டுபெரும் ஒண்ணா பைக்ல..சும்மா சொர்க்கத்துல இருக்க மாதிரி இருக்கு…

பூக்கடையில் இறங்கி பூ வாங்குவதற்காக பர்ஸை எடுத்தப் போதுதான் அது அன்று காரில் பிடித்த ஜானுடைய பர்ஸ் என்பது ஞாபகம் வந்தது.செலவுக்கு வேணாமா என நினைத்து சிரித்துக்கொண்டான்.

மாலையில் பார்க்கிற்கு சென்று திரும்பும்போது அடுத்த மாசம்னா இது மாதிரி சுத்த முடியாது செல்லம் வேலை நிறைய இருக்கு என்றான் ரகு..

என்ன வேலை மாமா.?

போலீஸ் ட்ரையினிங் போகலாம்ன்னு இருக்கேன்.டி.எஸ்.பி.செல்லத்துரை வர சொல்லியிருக்கார்,

காயத்ரி அவனை இருக்க அணைத்துக்கொண்டாள்…

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *