ஒரு விஷயமாக!

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 12,228 
 

‘வாழ்க்கை என்பது சஸ்பென்ஸ்களின் தோரணம்!’ என்ற பொன்மொழியை எங்கோ, எதிலோ படித்திருக்கிறேன். நூற்றுக்கு நூறு அந்தப் பொன்மொழி சரியே!

மறுக்கிறவர்கள் தயவு செய்து டி.வி&யில் வரும் மெகா சீரியல் களைப் பார்க்கவும். ஒவ்வொரு எபிஸோடின் இறுதியிலும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் கட்டாயம் இருக்கும். அது சாதா சஸ்பென்ஸாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அது கூட நமது ஆவலை எக்கச்சக்கமாகத் தூண்டிவிட்டு விடும்.

உதாரணமாக, ஒரு ஆட்டோவில் இளம் பெண் ஏறுகிறாள். ஆட்டோக்காரர் அவளைத் திரும்பிப் பார்க்கிறார். தொடரும்.

அந்த ஆட்டோக்காரர் அவளை ஏன் திரும்பிப் பார்த்தார்? 24 மணி நேர சஸ்பென்ஸில் நமது தலை வெடித்துவிடும். அவர் பாவம், ‘எங்கேம்மா போகணும்?’ என்று சாதாரணமாகக் கேட்பதற்காகக் கூடத் திரும்பி யிருக்கலாம். ஆனால், சஸ்பென்ஸ் புத்தியிலேயே தோய்ந்து தோய்ந்து ஊறிப் போன நமது மூளைக்கு என்னென்னவோ தோன்றுகிறது.

அந்த ஆட்டோக்காரன்தான் அவளு டைய முன்னாள் காதலனோ? அல்லது, அவள் எடுத்துச் செல்லும் பையிலுள்ள நகை விஷயம் தெரிந்து, வழியில் கொலை செய்துவிடுவானோ? ஒருவேளை, அவள் தான் சின்ன வயதில் காணாமல்போன அவனது தங்கையோ? அல்லது, பெண் களை மும்பைக்குக் கடத்திச் சென்று சிவப்பு விளக்குப் பகுதிக்கு விற்கும் தாதாவின் அடியாளோ அந்த ஆட்டோக் காரன்?

இப்படியும் இருக்கலாம்… அவள் ஒழுக்கம்கெட்ட மனைவி. வேறு வீட்டிலே படுத்துக்கொண்டு இருந்தவள், வெளியில் வந்து ஆட்டோ பிடிக்கிறாள். யதேச்சையாக டிரைவர் திரும்ப, ஐயோ..! அவன் தான் அவளது கணவன். என்ன ஆகப் போகிறதோ?

இப்படியெல்லாம், நம் மனசில் சஸ்பென்ஸ்கள் தாமாக முளைக்கின்றன.

டி.வி&யில் மட்டுமல்ல; அன்றாட வாழ்க்கையிலேயே சஸ்பென்ஸ் கொடுக்கிறவர்கள் நிறையப் பேர்!

டெலிபோனில் கூப்பிட்டு, ‘‘ஒரு விஷயமாக உன்னை வந்து பார்க்க ணுமே!’’ என்பான். நமக்கு உடனே சஸ்பென்ஸ். ‘‘என்ன விஷயம், சொல் லேன்?’’ என்று பரபரப்போம்.

‘‘இல்லே. நான் நேர்லயே வரேன். நீ சாயந்திரம் எப்போ ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வருவே?’’

நாம் எரிச்சலில் வேண்டுமென்றே, ‘‘இன்னிக்கு ஆபீஸ்ல மீட்டிங். எப்போ வருவேன்னு உறுதியாச் சொல்ல முடியாது’’ என்போம். ‘‘ஏதாவது அவசர விஷயமா?’’

ஆசாமி அசரமாட்டானே! ‘‘சரி… நாளைக் காலைல நீ ஆபீசுக்குக் கிளம்பறதுக்குள்ள வரேன். நீ வழக்கமா ஒன்பது மணிக்குதானே கிளம்புவே?’’

‘‘நான் நாளைக்குக் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிடுவேன், எட்டு மணிக்குள்ளே!’’ & இதுவும் பொய்!

‘‘சரி, ஏழரைக்கு நான் உன் வீட்டில் இருப்பேன்!’’

மறுநாள் காலை எழுந்ததிலிருந்து நமக்கு ஒரே சஸ்பென்ஸ். ‘‘அந்தக் கேசவமூர்த்தி என்னவோ ஒரு விஷயமாப் பார்க்க என்னைப் பார்க்க வரேன்னான். என்னவா இருக்கும்?’’ என்று மனைவிக்கும் நம் சஸ்பென்ஸை ஒட்ட வைத்துவிடுவோம். அவளும் பாவம், தன் மூளைக்கு எட்டினதையெல்லாம் சொல்வாள்.

‘‘நம்ம வீட்டை விற்கப் போற விஷயத்தை அவர்கிட்டே சொல்லியிருந்தீங்களா?’’

‘‘ம்ஹ¨ம்! இன்னும் யார்கிட்டேயும் அது பத்தி நான் மூச்சுக்கூட விடலை!’’

‘‘ஏதாவது பணமுடையா இருக்கும். ஆயிரம், ஐந்நூறுன்னு கடன் கேட்க வராறோ என்னவோ?’’

‘‘அவனுக்கென்ன கேடு! மாசம் 70,000 சம்பளம் வாங்கறான்!’’

‘‘என்னவாவது குடும்ப விஷயமா அந்தரங்கமா உங்களிடம் யோசனை கேட்க வராறாயிருக்கும். அவர் கரெக்டா என்ன சொன்னார்… சொல்லுங்க?’’

‘‘ஒரு விஷயமா உன் னைப் பார்க்கணும்னான்!’’

மறுபடி மனைவியும் கொஞ்ச நேரம் மண்டையை உடைத்துக்கொண்டு விட்டு… ‘‘சரி சரி… குழப்பிக் காதீங்க! கொஞ்ச நேரத்துல அவரே வரப் போறாரே… தெரிஞ்சுடப் போறது!’’

ஆபீசில் கூடப் பக்கத்து நாற்காலி தோஸ்த் திடீரென்று கடிகாரத்தைப் பார்ப்பார். பதற்றத்துடன் எழுந்து, ‘‘முரளி! ஒரு விஷயமா நான் கொஞ்சம் வெளியிலே அவசரமா போக வேண்டியிருக்கு. மானேஜர் கீனேஜர் கூப்பிட்டார்னா, ‘ஒரு விஷயமா அர்ஜென்ட்டா போயிருக்கார். இப்ப வந்துடு வார்’னு சொல்றீங்களா?’’ என்று புறப்பட்டுப் போய் விடுவார்.

நமக்குத்தான் அவர் திரும்பி வருகிறவரை வேலையே ஓடாது. மூளைக்குள் சஸ்பென்ஸ் எலி புகுந்து பிராண்டிக் கொண்டு இருக்கும்.

‘என்ன அந்த ஒரு விஷயம்? ஏன் பதற்றத்தோடு புறப்பட்டார்? திரும்பி வந்ததும் அந்த ‘ஒரு விஷயம்’ பற்றி நம்மிடம் அவரே சொல்லுவாரா? நாமாகக் கேட்கலாமா? அது நாகரிகமா?’ என் றெல்லாம் எண்ணம் ஓடுகிறது.

சரி, இப்படியெல் லாம் சஸ்பென்ஸ் பட்டாசுகளை அவர்கள் ஏன் அனாவசியமாக நம் மீது கொளுத்திப் போடவேண்டும்?

அது அவர்கள் தப் பில்லை. அவர்களின் ‘ஒரு விஷயமாக’க் களுக்கு கிசுகிசு போல் நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது; வதந்தி போல் நிரா கரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

‘‘ஒரு விஷயமா நேட்டிவ் பிளேஸ் போகணும்’’ என்று நண்பர் சொன்னால், நாம் உடனே ‘‘என்ன விஷ யமா?’’ என்று கேட்க வேண்டிய அவசியமோ, சஸ்பென்ஸில் புழுங்க வேண்டிய தேவையோ இல்லை. ‘நீ ஒரு விஷயமா போனா என்ன, ரெண்டு விஷயமா போனா என்ன?’ என்று ஜடம் மாதிரி இருந்து விட வேண்டியதுதான். ‘ஆனால், அப்படி இருந்து தொலைக்க முடிய வில்லையே! அதானே பிரச்னை’ என்கிறீர்களா?

இதற்கு ஒரே ஒரு எளிய வைத்தி யம் சொல்லட்டுமா? முள்ளை முள்ளால்தானே எடுக்கவேண்டும்? எனவே, அந்த மாதிரி ‘ஒரு விஷய’ப் பேர்வழிகளிடம் நாமும் அதே மாதிரி ‘ஒரு விஷய’மாகப் போட்டுத் தாளித்துவிட வேண்டியதுதான்!

‘ஒரு விஷயமா நான் 4 மணிக்கு டவுன்ல ஒருத்தரைப் பார்க்க வரேன்னு சொல்லியிருந்தேன். அடடா..!’ என்று பக்கத்து ஸீட் நண்பர் சொன்னால், நாமும் உடனே ‘‘ஆமாம். நான்கூட ஒரு விஷயமா மானேஜர்கிட்டே பேசணும்’’ என்று சும்மாவானா சொல்லி வைக்கலாம்.

மறுநாள் நண்பர் ஆவலாக,‘‘மானே ஜர்கிட்டே என்னவோ ஒரு விஷ யமாப் பேசணும்னு சொன்னியே… பேசிட்டியா? என்ன விஷயம்?’’ என்பார்.

நாம் அலட்சியமாக, ‘‘நேத்து பேசணும்னுதான் இருந் தேன். அதுக்குள்ளே வீட்டிலேர்ந்து வொய்ஃப் ஒரு அவசர விஷயமா போன் செய்தாள். புறப் பட்டுப் போய்விட்டேன்!’’ என்று சொல்ல வேண்டும்.

‘‘அப்படியா? மனைவிக்கு உடம்புக்கு ஒண்ணு மில்லையே?’’

‘‘ம்ஹ¨ம்! நான் போறப்போ வீடு பூட்டியிருந்தது. பக்கத்து ஃப்ளாட் காரங்ககிட்ட சாவி கொடுத்து, ஒரு விஷயமா அவசரமா வெளியே போயிருக்கிறதா சொல்லச் சொல்லியிருந் தாள்!’’ என்று ‘ஒரு விஷ யத்தை டெவலப் செய்ய வேண்டும்.

நண்பர் முகத்தில் ஏமாற்றம். நமக்கோ ஆனந்தம்! ‘ம்க்கும்! நீர் மட்டும் அந்த ‘ஒரு விஷயம்’ பற்றிச் சொல்ல மாட்டீராம்! நான் மட்டும் சொல்லணுமாக் கும்!’ என்று மனசுக்குள் மகிழலாம்.

இன்னும் இந்தக் கட்டுரையை நீள, அகல, ஆழ மாக எழுத ஆசை. ஒரு விஷயமாக என்னையும், என் மனைவியையும் என் மாமனார் தாம்பரம் வரச் சொல்லியிருக்கிறார். ஆகவே, புறப்படுகிறேன்!

– 24th ஜனவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *