ஒருவரிடமும் சொல்லாதீர்கள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 31,416 
 

எதற்கெடுத்தாலும் கணவனைப் பிடுங்கி, ‘அந்த கோர்ஸில் சேருகிறேன், இந்த கிளாசில் சேருகிறேன் என்று பேப்பரில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் போடுவது, பணத்தைக் கட்டுவது, பின் இரண்டு கிளாஸ் கூட அட்டெண்ட் பண்ணாமல் ஜகா வாங்கி விடுவது. நிறைய மனைவிமார்களிடம் இப்படி ஒரு பாஷன் இருக்கும் போலிக்கிறது!

என் மனைவி உஷா முதலில் யோகா கிளாஸ் என்றாள். ‘சரி, தொலை’ என்றேன். பின், ‘மெடிடேஷன் கிளாஸ் ஆரம்பித்திருக்கிறார்கள்… இங்கேதான் அருகில் பள்ளிக்கூடக் கட்டடத்தில்… மாலை ஒரு மணி நேரம் போய் விட்டு வந்து விடுகிறேன்” என்றாள்.

‘சரி, ஒழியட்டும்… நாத்தனாரையும், மாமியாரையும் பற்றிச் சதா கோள் சொல்வதும், எதிர் வீட்டுத் தொழிலதிபரின் பணக்கார மனைவி ஊர்மிளா தினம் தினம் மாற்றும் புதுப் புடவைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதுமான இவளுடைய மன உளைச்சல் குறையட்டும்’ என்று அனுப்பி வைத்தேன்.

ஒரு வாரம் கூடப் போயிருக்க மாட்டாள். “என்னைப் போன்ற குடும்பப் பிரச்னையுள்ள பெண்களால் மனம் ஒன்றித் தியானம் செய்ய முடியாது. இதெல்லாம், எதிலும் பட்டுக் கொள்ளாமல் ‘மேம்புல் மேயும்’ ரகப் பெண்களுக்குத் தான் லாயக்கு” என்று யாரோ தனக்கு வேண்டாத பெண்மணியைக் குத்திக் காட்டும் விதமாக என்னிடம் காரணம் சொல்லித் திருப்தியடைந்தாள்…

இப்படியே தான் ஏதோ ஒரு காரணத்தால் என் பாக்கெட்டெல்லாம் காலியாகிறது.

‘பெயிண்டிங் கிளாஸ்’ என்பாள் ஒரு நாள். ‘தையல் கிளாஸ்’ என்பாள் மறுநாள். “மெஷின் எம்பிராய்டரி சொல்லித் தருகிரார்களாம். நம் வீட்டு குஷனுக்கெல்லாம் புதிதாக உரை வாங்கி விடுங்கள். நாம் ஜம்மென்று எம்பிராய்டரி செய்து விடுகிறேன்” என்று என்னை விரட்டு விரட்டென்று விரட்டித் தையல் மெஷின் வாங்கினாள்.

சாதாரணத் துணிகளை வாங்கினால் தான் கஷ்டப்பட்டுப் போட்ட எம்பிராய்டரி எல்லாம் எடுப்பாகத் தெரியாது என்று பிரசித்தி பெற்ற மில்களின் துணிகளை மீட்டர் மீட்டராக வாங்கினாள். அதெல்லாம் இப்போது எங்கே என்று கேட்கிறீர்களா? தையல் மெஷினுக்குப் பக்கத்தில், டி.வி.யின் அட்டை பெட்டி ஒன்று வைத்திருக்கிறாள். அதைத் திறந்து பார்த்தல் தெரியும். ஆனால் நான் அந்தப் பக்கமெல்லாம் போவதில்லை. அதை போய்த் திறப்பானேன், வயிற்றுக்குள் கபகபவென்று ஏதோ உணர்ச்சி எழும்ப, அவளிடம் நறுக்கென்று ஒரு வார்த்தையில் நம் ஆத்திரத்தைக் கொட்டுவானேன்? பின் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஆபீஸ் காண்டீனில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வானேன்!

ஒரு நாள் என் மனைவி, “புதிதாகத் தொடங்கியுள்ள ஒரு யுனிவர்சிடியில் சேர்ந்து, பி.ஏ. படிக்கப் போகிறேன்” என்று என் மீது பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டாள்.

எனக்குப் பகீர் என்றது. படிப்பு என்றால் சும்மாவா? அதுவும் மூன்று வருடங்களுக்குப் படிக்க வேண்டுமே! இவளுக்கு உடம்பு வணங்குமா?

“இதை யார்கிட்டேயும் சொல்லாமல், நான் ரகசியமாக பி.ஏ. டிகிரி வாங்கிக் காட்டாவிட்டால், என் பெயர் உஷா இல்லை’ என்று சபதம் வேறு போட்டு விட்டாள்.

பார்த்தேன், கோர்ஸ் விவரங்களுக்காகவும், சிலபஸுக்காகவும், புத்தகங்களுக்காகவும் என்னையும் என் பர்சையும் நாயாய் அலைய வைப்பதை பார்த்தேன். அனுபவித்தேன். அன்றே தீர்மானித்து விட்டேன்.

உஷா புதிதாக ஏதாவது கிளாசில் சேரும்போது அதை பற்றித் தன் பிரண்ட்ஸ் யாரிடமும் சொல்ல மாட்டாள். இம்முறை நாமே இதை அம்பலப்படுத்திவிட்டால்?

அன்று ஆபீஸ் போனதும் முதல் வேலையாக என் நண்பர்கள் எல்லோரையும் கூட்டி விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டேன்.

“என் மனைவி உஷா பி.ஏ. கோர்ஸில் சேர்ந்திருக்கிறாள். இரவும் பகலுமாக விழுந்து விழுந்து படிக்கிறாள்”.

அன்று மாலையே என் டெக்னிக் நன்றாக வேலை செய்தது.

நான் எதிர்பார்த்தது போல் என் ஆபீஸ் நண்பர்கள் எல்லோரும் தவறாமல், தங்கள் மனைவிமார்களிடம் அறிவிக்க, அவர்கள், காய்கறிக் கடையிலும், கோயிலிலும், பார்க்கிலும், லைப்ரரியிலுமாக உஷாவைச் சந்திக்க நேர்ந்த இடங்களிலெல்லாம் இதைப் பற்றி விசாரிப்பதுமாக இருந்தார்கள்.

நான் விடாமல், எங்கள் வீட்டுக்கும், உஷாவின் அக்கா, தம்பி எல்லோருக்கும், உஷா பி.ஏ வில் சேர்ந்த விஷயத்தை, ஏதோ கல்யாணக் காரியம் போல் கார்டில் தெரியப் படுத்தினேன். அவர்களும் தாங்கள் கடிதம் எழுதும் போதெல்லாம், ‘உன் பி.ஏ. படிப்பு எதுவரை இருக்கிறது?’ என்று மறக்காமல் விசாரித்து எழுத ஆரம்பித்தார்கள்.

இப்படி அநியாயமாகக் கணவர் எல்லோரிடமும் தம்பட்டம் அடித்து விட்டாரே என்ற ஆத்திரத்தில், ‘தான் பெயில் ஆனால் எல்லோரும் தன்னைப் பார்க்கும் பார்வை எப்படியிருக்கும்? பாஸானால் எப்படியிருக்கும்?’ என்றெல்லாம் கற்பனை செய்து பார்த்து ராத்தூக்கம் இல்லாமல் சில நாட்கள் தவித்தாள் உஷா.

இதன் பலனாக, உஷா பி.ஏ. கோர்ஸில் சேர்ந்து ஒரு வைராக்கியத்துடன் உருந்து புரண்டு படித்து எப்படியோ பாஸாகி விட்டாள். எப்படி என் ஐடியா? ஆனால், இதை மட்டும் ஒருவரிடமும் சொல்லிவிடாதீர்கள், சார், ப்ளீஸ்!.

-ஆனந்த விகடன், 15-5-1988 இதழில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *