ஐடியா அய்யாச்சாமியின் ஆபரேசன் வீடியோ!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,822 
 

“என்னண்ணே… உற்சாகம் கரைபுரண்டு ஓடுது?” என்றபடி வந்த அப்புராஜை ஒரு மெகா புன்னகையோடு எதிர்கொண்டார் அய்யாசாமி.

“கரமட்டுமாடே பொரளுது? கைப்பிடிச் சொவரு, தடுப்புச் சொவரு எல்லாம் தான் பொரளுது. “லம்ப்ப்பா’ துட்டடிக்க, “ஆபரேசன் வீடியோ’ன்னு ஒரு சூப்பர் ஐடியா புடிச்சிருக்கேம்லா?

ஐடியா அய்யாச்சாமிஅ… பம்பம் பஜக் ஜம்…” கண் சிமிட்டினார் அய்யாசாமி.
“ஐடியா’ என்றதும், உஷாரானான் அப்புராஜ்.

“ஒர்க் அவுட் ஆயிடுமாண்ணே?” அவன் கேட்க, அவருக்கு கோபம், “ஜிவுக்!’

“ஆக்கங்கெட்ட கூவ… ஆரம்பிக்கும் போதே கட்டய போடுதியேல…” எரிச்சலானார்.

“அதில்லண்ணே… ஐடியாவை நல்லா பிளான் பண்ணி செய்யணுமுல்லா, அதுக்காவ கேட்டேன். சாரிண்ணே…” சுருதி குறைந்த குரலில் சொன்னான் அப்புராஜ்.

“சாரிய கண்டுபுடிச்சவன வெளக்குமாத் தாலயே சாத்தணும். எனக்கு சாரியே புடிக்க மாட்டேங்கு… ஆ… ஊன்னா உடனே ஒரு சாரி…” அய்யாசாமி உணர்ச்சிவசப்பட, அவர் அருகே சென்று கொண்டிருந்த புடவை கட்டிய நடுத்தர வயது பெண் ஒருத்தி காதில் அது விழுந்து, அந்த அம்மணி டென்ஷன் ஆனாள்.

“கட்டையில போறவனே, சாரிய கண்டுபிடிச்சவன எதுக்குடா வெளக்குமாத்தால சாத்தணும்? உங்க வீட்டுல எந்த பொம்பளயும் சாரி கட்டுறதில்லையா?” என்று ஆரம்பித்து, அவள் சகட்டுமேனிக்கு விளாச, விஷயம் ஈவ்-டீசிங், ஆணாதிக்கம் ரேஞ்சுக்கு திசை திரும்புவதைக் கண்டு, “டர்ர்ர்’ராகிப் போனார் அய்யாசாமி.

“ஐ யாம் சாரி மேடம்… நான் சொன்னது அந்த சாரி இல்ல… இந்த சாரி… அதாவது ஐ யாம் சாரி… ரியலி ஐ யாம் சாரி…” என்று பம்மி பதுங்கி நகர்ந்தார். அப்புராஜ் தொடர்ந்தான்.
இருவரும் பழைய ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் வந்து பெஞ்சில் அமர்ந்தனர்.

“நம்மூரு சாமியாடி சொடலமுத்து இருக்கானே… அவன் ஒரு போலி சாமியாடிடே… சாமி வந்தமாறி ஆடி, பொம்பளயளுக்கு திருநீறு பூசுத சாக்குல கண்ட எடத்துலயும் தொடுதான். சாமியாடுத வேகத்துல கைபடுதுன்னு பொம்பளையளும் நெனச்சுக்கிறாவ. இத நாம வீடியோ புடிக்கிறோம்… ஆதாரம் சேகரிக்கிறோம்…”

“இதுல நமக்கு, எப்படிண்ணே துட்டு கெடைக்கும்?”

“அங்கனதாம்ல அய்யாவோட ஐடியா நிக்குது. அ… பம்பம் பஜக் ஜம்… இந்த ஆபரேசன் வீடியோல மூணு பிரிவு இருக்கு. மொதல்ல சாமியாடி திருநீறு பூசுறத ரகசியமா வீடியோ புடிக்கிறோம். இது ஆபரேசன் சூட்டிங்கு… ரெண்டாவதா அந்த வீடியோ கேசட்ட அவன்கிட்ட காட்டி இருபதாயிரம் ரூபாய் துட்டு கேட்டு பேரம் பேசுதோம். அப்பதான் அவன் பத்தாயிரமாவது தருவான். இது ஆபரேசன் பேரம். மூணாவது ஆபரேசன் டெலிகாஸ்ட்டு. அதாவது, அந்தாளு துட்டு தரலைனா அந்த கேசட்ட அப்பிடியே லோக்கல் கேபிள், “டிவி’யில குடுத்து, அஞ்சோ பத்தோ வாங்குறோம். எப்படி நம்ம ஐடியா? அ… பம்பம் பஜக் ஜம்.”

“சூப்பருண்ணே… ஆமா… இதுக்கு வீடியோ கேமரா வேணுமே…”

“எம்புட்டோ ஐடியா புடிக்கிறோம். இதுக்கொரு ஐடியா புடிக்க மாட்டோமா? ஏ.ஜி.கே., வீடியோஸ் வச்சிருக்கானே கோபாலகிருஷ்ணன், அந்தப் பய ஒங்க மைனி அலமேலுவோட சொந்தக்கார பயதானே? அவங்கிட்ட, “வர்ற வெள்ளிக்கிழமை ஒரு கல்யாண வீட்டுக்குப் போணும்டே, கவரேஜ்க்கு வீடியோ கேமரா வேணும்…’ன்னு கேட்டேன். தாரேன்னிருக்கான். நம்ம ஆபரேசன் வீடியோ முடிஞ்சு, “லம்ப்ப்பா’ ஒரு அமவுண்ட் அடிச்சதும், அவனுக்கு எதாவது காபி, டீ செலவுக்கு குடுத்திருவோம், எப்படி? அ… பம்பம் பஜக் ஜம்…”

“பிரமாதம்ணே… ஐடியா போடுறதுல ஒங்கள மிஞ்ச ஒலகத்துலயே ஆளு கெடையாது. என்னமா ஸ்கெச்சு போட்டிருக்கிய…” அவரை புகழ்ந்து தள்ளினான் அப்புராஜ்.

வெள்ளிக்கிழமை மாலை.

மாடசாமிக் கோவிலில் சுடலை சாமியாடி விபூதி பூசிக் கொண்டிருக்க, பெண் பக்தர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு சில ஆண் பக்தர்களின் போக்குவரத்தும் இருந்தது.

கோவிலுக்கு சற்று தள்ளி மைதானம் போலிருந்த இடத்தில் வீடியோ கேமரா சகிதம் அய்யாசாமி ஆஜர்; கூடவே அப்புராஜ்.

“இந்தக் கோவிலு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கறது நமக்கு வசதியா போச்சுடே அப்பு. அந்தா இருக்கே கல்லு குவியலு, அதுக்குள்ள இந்த வீடியோ கேமராவை செட் பண்ணிட்டா அது பாட்டுக்கு படம் புடிச்சுகிட் டிருக்கும்…” என்ற அய்யாசாமி அங்கிருந்த கற்குவியலுக்குள் ஆங்கிள் பார்த்து கேமராவை வைத்தார்.

“அ… பம்பம் பஜக் ஜம்… சொடல சாமியாடிகிட்டே திருநீறு பூசுதது கிளியரா ரெக்காடு ஆவுதுடே… ஆபரேசன் சூட்டிங்கு சக்சஸ்சு… சக்சஸ்சு…” வெற்றிக் களிப்புடன் அப்புவின் கையைப் பிடித்து குலுக்கோ குலுக்கென்று குலுக்கினார்.

“சரி, வாடே… நாம ஒரு ரவுண்டு கோவிலு பக்கமா போயிட்டு வருவோம். அதுவரை இது ரெக்கார்டு ஆவட்டும். அப்புறமா இந்த கேசட்டை எடுத்து, லூஸ் மோஷன்ல போட்டா, அவனோட லீலை எல்லாம் அப்பட்டமா தெரியும்…”

“அண்ணே… அது லூஸ் மோஷன் இல்ல, ஸ்லோமோஷன்…”

“எதோ ஒரு மோசன்… இப்ப நமக்கு அதுவாடே முக்கியம்? நமக்கு நம்ம ஆபரேசன் தான் முக்கியம்!” என்ற அய்யாசாமி, அவனை அழைத்துக் கொண்டு கோவில் பக்கம் போய்விட்டு, மீண்டும் வந்தபோது ஷாக்!

அந்த கற்குவியலுக்குள் அவர்கள் வைத்துச் சென்ற வீடியோ கேமரா அங்கில்லை. அய்யாசாமி பதறினார். அவர் நெஞ்சுக்கு உள்ளே ஷேர் ஆட்டோ, “தடமுடா’ என ஓடுவது போலிருந்தது.

“அப்பூ… கேமராவ காணோம்ன்னு… நா பதறிகிட்டிருக்கேன், நீ அங்கன என்னதால வாய் பாத்துகிட்டிருக்க?” என்று அதட்டியபடி அப்புவிடம் திரும்ப, “அங்கிட்டு பாருங்கண்ணே… மைனி வருது…” என்று அவன் மேலும் கிலியை கிளப்பினான்.

அப்புராஜ் சுட்டிக்காட்டிய திசையில் அலமேலுவும், பக்கத்து வீட்டுப் பெண்ணும் வந்து கொண்டிருந்தனர்.

“ஏல, இந்த ராட்சசி இங்க எதுக்கு வர்றா?”

“மைனி கூட வர்ற கோமதியக்கா அடிக்கடி திருநீறு பூச இங்க வரும்ண்ணே… மைனி அதுக்கு தொணைக்கி வருதுன்னு நெனைக்கேன்…” அப்புராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அலமேலுவின் பார்வை வளையத்தில் அய்யாசாமி சிக்கினார்.

அவரது, “திருதிரு… திருதிரு’ முழியை வைத்து, எதோ வில்லங்கம் என ஊகித்த அவள், அவரை நெருங்கினாள்.

“என்ன இங்கிட்டு?”

என்ன பதில் சொல்லி சமாளிப்பது என மூளையை கசக்கினார் அய்யாசாமி.

“கேக்கமுலா, வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு?” அலமேலுவின் குரலில் சில சென்டிகிரேடுகள் கூடின. அவர் திருதிரு முழியைத் தொடர, அலமேலு திரும்பி அப்புவைப் பார்த்தாள்.

“எதுக்கு இங்கிட்டு வந்திய?” அலமேலு கேட்ட தொனியிலேயே அரண்டு போன அப்புராஜ், அப்ரூவர்ராஜ் ஆனான்.

ஆபரேசன் வீடியோவின் முழுத் தகவலையும் அப்புராஜ் கக்க, அலமேலு ரவுத்திரமானாள். சட்டென அய்யாசாமியின் கையைப் பற்றி, அவரை ஓடி விடாமல் தடுத்தாள்.

“ஐடியா ஐடியான்னு சொதப்புறதே முழு நேர வேலையாப் போச்சு ஒமக்கு… தொலைஞ்சி போன கேமராவுக்கு துட்டை யாரு அழுவுறது?” என்றாள் கோபமாக. அய்யாசாமியின் அடிவயிற்றில் லூஸ் மோஷனுக்கான அறிகுறிகள் ஸ்லோமோஷனில் தோன்ற ஆரம்பித்தன.

“ப்ளீஸ் அலமு… ஐயாம் வெரி சாரி… இனிமே நோ ஐடியா, நோ சொதப்பல். என்னை விட்டுடேன். திஸ் இஸ் பப்ளிக் ப்ளேஸ். மெனிமெனி பீப்புள் வேடிக்கை பார்த்திங்… அலமு, அலம்ஸ்…” என்றபடி அவள் பிடியில் நெளிந்தார்.

அங்கே கிடந்த தீப்பந்தக்கட்டை ஒன்று அலமேலு கண்ணில் பட, மின்னல் வேகத்தில் அதை எடுத்து, அவர் மண்டையில், “மொடேர்… மொடேர்’ என, ரெண்டு போடு போட்டாள். எந்த ரியாக்ஷனும் இன்றி பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொண்டார் அய்யாசாமி.

“அடிச்சாச்சுல்லா? உட்ரு…” என்று அவர் சொல்ல, கோவிலின் உள்ளிருந்து ஓடிவந்தான் கோபாலகிருஷ்ணன்.

“இன்னிக்கு முகூர்த்த நாள் இல்லையே, கல்யாண கவரேஜ்ன்னு வீடியோ கேமரா கேக்கிறாரேங்கிற சந்தேகத்துல ஒரு ஓட்ட கேமராவ குடுத்திட்டு பின்னாலயே வந்து பார்த்தேன். அவரு கல்லுக்குள்ள கேமராவ வச்சதும் எவனாவது எடுத்திட்டு போயிறப் போறான்னு நான் தான் கேமராவ எடுத்துக் கிட்டேன்… அவர உட்ருக்கா…” என்றான்.

“கோபாலகிருஷ்ணா… நீ ஒரு நிமிஷம் முன்னாடியே வந்திருக்கப்படாதாடே…’ என்று மனதில் நினைத்தபடியே அவனைப் பார்த்த அய்யாசாமியை இழுத்துக் கொண்டு போனாள் அலமேலு. “அலம்ஸ்… என்ன விட்டுடு… அதான் அடிச்சாச்சே… ப்ளீஸ் அலமு…” என்று அய்யாசாமி கேட்க, “வாய்யா… அடிபட்ட தலைக்கு சாமியாடி சொடலகிட்ட திருநீறு பூசிட்டு போலாம்…” என்றபடியே நடந்தாள் அலமேலு.

– ஆழ்வார்குறிச்சி ஜே.டி.ரஞ்சிதா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *