‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 13,570 
 

”ஏகாம்பரம், பேப்பரில் பார்த்தாயா! சினிமா ஸ்டார் கங்காதேவி கல்யாணத்திலே பத்தாயிரம் பேருக்குச் சாப்பாடாம். காலையிலே ஆரம்பித்த பந்தி ராத்திரி பன்னிரண்டுமணி வரைக்கும் நடந்ததாம். தெரியுமா உனக்கு?”

”சரிதாண்டா, இதைப் போய் ஒரு பெரிய அதிசயமாகச் சொல்ல வந்துட்டே! சினிமா ஸ்டார்தானேடா? செலவழிக்கட்டுமே; நானும்கூட சினிமா ஸ்டாராக இருந்தா பத்தாயிரம் பேர் என்ன, பத்து லட்சம் பேருக்குச் சாப்பாடு போடுவேன். அந்தக் கல்யாணத்திலே எத்தனை பேர் சாப்பாடு இல்லாம திரும்பிப் போனாளாம், தெரியுமா?” என்று வந்தவரை மடக்கி விடுவார் ஏகாம்பரம்.

திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலையைப் போட்டபடியே தெருவில் போவோர் வருவோரை எல்லாம் அழைத்து அவர்களுடன் வம்பளப்பதுதான் அவருடைய தினசரி வேலை.

”தெரியுமா சேதி? சினிமா ஸ்டார் வீட்டுக் கல்யாணத்தில் ஒரே கலாட்டாவாம், ரொம்ப பேர் சாப்பிடாமலே திரும்பிப் போய்விட்டாளாம்” என்று சொல்லிக்கொண்டு வருவார் இன்னொருவர்.

”ஆமாம், ஏதோ முடிந்தவரைக்குந்தானே போடுவாங்க. சினிமா ஸ்டார்னா அதுக்காக எவ்வளவு பேருக்குத்தான் சாப்பாடு போட முடியும்? போய்யா, வேறே வேலையில்லை?” என்று அவரையும் மடக்கி அனுப்பிப்பார் ஏகாம்பரம்.

சிறிது நேரத்துக்கெல்லாம் மற்றொருவர் வந்து, ”கேட்டயா அக்கிரமத்தை! திருவல்லிக்கேணி ரங்காச்சாரி இருக்கானே, அவன் லஞ்சம் வாங்கறானாம்பா! பெரிய யோக்கியன் மாதிரி வேஷம் போட்டானே!” என்பார்.

”லஞ்சம் வாங்காமெ என்னடா செய்வான்? நீ அவன் நிலைமையில் இருந்தால் லஞ்சம் மட்டுமா வாங்குவே? கூடக் கொஞ்சமும் வாங்குவே. போடா, ஏதோ ஏழை பிழைச்சுட்டுப் போவான்னு விடுவியா? இதை ஒரு பெரிய சேதியா ‘டாம் டாம்’ போட வந்துட்டியே! வேணும்னு ஒரு தடவைக்கு வெத்திலை சீவலை எடுத்துண்டு போ” என்பார்.

அவர் போனதும் வேலுசாமி என்பவர் ரங்காச்சாரிக்காகப் பரிந்துகொண்டு வருவார். ”பாவம் ஸார். அந்த ரங்காச்சாரி! ‘பேமிலிமேன்’ அவன் ஏதோ ‘சம்திங்’ வாங்கிட்டான்னு இந்த ஆசாமி ஊர் முழுவதும் சொல்லிக்கொண்டு திரியறான்! இவனுக்கு என்ன ஸார் வந்தது? இவன் மட்டும் வாங்க மாட்டானா? பெரிய அரிச்சந்திரன் மாதிரி பேசறானே?” என்பார் அவர்.

ஆனால், அவரையும் மடக்காமல் விடமாட்டார் ஏகாம்பரம். என்ன இருந்தாலும் ரங்காச்சாரி செய்தது தப்புதான் என்றும், மனுஷனுக்கு நாணயந்தான் முக்கியம் என்றும் தர்க்கம் செய்து அனுப்பி விடுவார்.

வேலுசாமி போனதும் வேறு ஒரு வேலைகெட்ட சாமி வருவார்.

”ஏகாம்பரம்! புதுப் படத்திலே ஒளரங்கசீப் முருகேசன் நடிப்பைப் பார்த்தீங்களா? அமர்க்களப்படுத்தி இருக்கான்யா? டயலாக்கை அப்படியே நீர்வீழ்ச்சி மாதிரி கொட்டறான்!”

”போய்யா, பெரிய நடிப்பைக் கண்டுட்டீர்! ஒரு காலத்தில் நான் அமெச்சூர் நாடகத்தில் நடித்ததைவிடவா? என் நடிப்பை நீர் பார்த்ததில்லை! இதென்னய்யா டயலாக் வேண்டியிருக்கு? நடிப்பு இல்லாதவனுக்குத்தானே டயலாக்? நான் வாயைத் திறக்காமலே நடிச்சு, பாக்கறவங்க கண்ணிலே தண்ணி வரவழைப்பேன்” என்பார் ஏகாம்பரம்.

இவர் போன பிறகு ஒளரங்கசீப் முருகேசன் நடிப்பு நன்றாக இல்லை என்றும், நடிக்கத் தெரியாமல் டயலாக்கை மட்டும் ஒப்பித்தால் போதுமா என்றும் சொல்லிக்கொண்டு வருவார் வேறொருவர்.

ஏகாம்பரம் அவரைமட்டும் சும்மா விட்டுவிடுவாரா என்ன?

”ஆமாம், இவரு கிழிச்சுப்பிடுவாரு. இந்த அமெச்சூர் நடிகன்களெல்லாம் இந்த ஒளரங்கசீப் நடிப்பைப் போய் பார்க்கணும். இன்னைத் தேதிலே அவனை விட்டா நடிக்கறத்துக்கு வேறே ஆள் ஏதய்யா? முகபாவத்திலே யாரு வேணாலும் நடிச்சுடலாம். டயலாக் பேசத் தெரிய வேண்டாமா?” என்று ஒரு போடு போடுவார் ஏகாம்பரம்.

”பார்த்தீரா ஏகாம்பரம், ‘ஸம்மிட்’ மகாநாட்டு லட்சணத்தை? அமெரிக்காகாரன் ரஷ்யாமீது பறந்து வந்து வேவு பார்த்திருக்கான். பத்து மைல் உயரத்திலே பறந்த அந்த விமானத்தை ரஷ்யாக்காரன் சுட்டுத் தள்ளியிருக்கான்… பின்னே, சுடாமல் விடுவானோ? குருஷ்சேவ் செய்ததுதான் ‘ரைட்’! பொல்லாத ஆளாச்சே அவன்” என்று வருவார் பரமசிவம்.

”என்னய்யா சொல்றீர்? குருஷ்சேவ் செய்தது ரைட் என்கிறீரா? எப்படிய்யா நியாயம்? இவனுக்கும் சாமர்த்தியம் இருந்தா அமெரிக்காவிலே போய் வேவு பார்க்கட்டுமே?” என்று சொல்லி, குருஷ்சேவுக்குப் பரிந்துகொண்டு வந்த பரமசிவத்தைக் கோபமாகப் பார்ப்பார் ஏகாம்பரம்.

சற்றைக்கெல்லாம் சாம்பசிவம் வருவார்.

”என்ன இருந்தாலும் குருஷ்சேவ் செய்தது தப்புதான் சார். வேவு பார்க்கவந்த விமானத்தைச் சுடலாமா? நீங்க சொல்லுங்க, ஏகாம்பரம்” என்பார் அவர்.

இந்தச் சமயத்தில் இன்னொருவர் வந்து சேருவார். அவர், ”ஏன் சுடக் கூடாது? அமெரிக்காக்காரன் மட்டும் அங்கே திருட்டுத்தனமாப் போகலாமா? அதான் சுட்டான்” என்பார்.

இம்மாதிரி சமயங்களில் ஏகாம்பரத்திற்கு யாரை மடக்குவது என்று தெரியாமல் போய்விடும். ஒருவர் குருஷ்சேவ் செய்தது தப்பு என்கிறார். இன்னொருவர் ஐக்தான் தப்பு என்கிறார். ஏகாம்பரமோ இரண்டு பேரையுமே மடக்க ஆரம்பித்து விடுவார்.

”என்னய்யா சொல்றீங்க ரெண்டு பேரும்? அமெரிக்கா ப்ளேனை விட்டதும் சரிதான். ரஷ்யா அதைச் சுட்டதும் சரிதான். இதெல்லாம் அரசியல் விளையாட்டய்யா. நீங்க யார் இதை எதிர்த்துப் பேசுவதற்கு?” என்று இருவரையும் எதிர்த்து மடக்கிப் போட்டுவிடுவார்.

இப்படி யார் வந்து எதைச் சொன்னபோதிலும் ஏகாம்பரம் அவர்களை எல்லாம் மடக்கிப் போட்டுப் பேசுவதே வழக்கமாகிவிட்டது. இதனால் எதிர்வாதம் செய்யும் ஏகாம்பரத்தின் குணத்தை அறிந்தவர்கள் அவரிடம் வரும்போதே தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லாமல் நேர்மாறாகச் சொல்லிக்கொண்டு வருவார்கள். ஏகாம்பரமோ அதை அறியாமல் அவர்கள் கூறும் அபிப்பிராயத்தை எதிர்த்துப் பேசுவதாக எண்ணிக்கொண்டு தம்மையறியாமல் வருபவர்களின் அபிப்பிராயத்தையே ஒப்புக்கொண்டு விடுவார்!

– கேரக்டர், 9வது பதிப்பு-1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *