எசமான் தேசத்தின் இரண்டாவது புயல்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 66,351 
 

எசமான் தேசத்தின் இந்த ஆண்டில் இது இரண்டாவது புயல். புயல் என்றவுடன் கடலில் வருவது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது நாட்டில் வரும் புயல். சின்னச் சின்னதாய் நிறைய பிரச்சினைகள் அன்றாடம் வருவது எசமான் தேசத்தில் பழகிப் போன ஒன்றுதான். ஆனால், இது வழக்கமான பிரச்சினை அல்ல – உண்மையிலேயே புயல்தான்.

இந்த ஆண்டின் முதல் பிரச்சினை ரூபாய் நோட்டு வடிவத்தில் வந்தது. எல்லா குடிமக்களும் நைட் டூட்டி முடித்து விட்டு, பகலில் தூங்கிக் கொண்டிருந்த போது அப்படி ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசு எப்போதும் அன்றைய நாளின் சூலம் பார்த்து, நியுமராலஜி பார்த்துதான் அறிவிக்கும். அப்படித்தான் ரூபாய் நோட்டு அறிவிப்பும் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகலில் வந்தது. எசமான் தேசத்தின் ஓனர் ”வாயிலிருந்து குரல்” நிகழ்ச்சியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எசமான் தேசத்து மக்கள் எப்போதிருந்து பகலில் தூங்குகிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? எங்கள் ஓனர் ஒருமுறை டாலர்புரிக்கு டீ சாப்பிடச் சென்ற போது கையெழுத்தான ஒப்பந்தங்களின் வழியாகத்தான் இது நடந்தது. டாலர்புரியில் இருக்கும் நிறுவனங்கள் பகலில் இயங்கும் போது, எசமான் தேசத்தில் இரவாக இருக்கும். எனவே, நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் எல்லா அரசு நிறுவனங்களும் அப்போதிருந்து இரவில் இயங்கத் துவங்கி விட்டன.

ஓனர் அப்படி என்னதான் அறிவித்தார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? எசமான் தேசத்தில் புழங்கும் ரூபாய் நோட்டுகளில் பண மதிப்பை மாற்றும் அறிவிப்புதான் அது. ”ஜீரோ சச்சா” என்று பெயர் சூட்டப்பட்ட அந்த திட்டம் என்னவென்றால் ஒவ்வொரு ரூபாய் நோட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் மதிப்போடு மூன்று ஜீரோவை சேர்த்துக் கொள்வதுதான். நீங்கள் பத்து ரூபாய் வைத்திருந்தால் அதன் மதிப்பு 10000 ரூபாய். 100 ரூபாய் வைத்திருந்தால் அதன் மதிப்பு 100000 ரூபாய். எங்கள் மக்களுக்கு ஏக சந்தோஷம். எல்லாரும் வைத்திருந்த பணம் அனைத்தும் பல மடங்கு மதிப்பு உயர்ந்ததால் நாடு முழுவதும் ஒரே குதூகலம். பேச்சு புக்கின் வழியே ஸ்மைலிகளை அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து பழகிய எசமான் மக்கள் அன்று உண்மையிலேயே சந்தோஷப் பட்டதால் தெருவெங்கும் திருவிழாவாக மாறியது.

கோலாகலமாக துவங்கிய மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பத்து ரூபாய் நோட்டு எப்படி பத்தாயிரம் ரூபாய் மதிப்பு பெற்றதோ, அதே போல பத்து ரூபாய் மதிப்புள்ள டீ, காபி என அனைத்தும் பத்தாயிரத்துக்கு மாறிவிட்டது. கடைசியில் யோசித்துப் பார்த்தால் பெரும் தொகைகளின் பெயர்களை நாங்கள் வைத்துக் கொண்டோமே தவிர, வேறு எந்த மாற்றமும் நடந்து விடவில்லை. ஆனால், உலக அரங்கில் எசமான் தேசம் ஒரே இரவில் பணக்கார நாடாகவும், ஒரு டீயை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் கோடீஸ்வரர்களை குடிமக்களாகக் கொண்ட நாடாகவும் மாறியது. உலக கோடீஸ்வர நாடுகளில் ஒன்றாக எசமான் தேசத்தை மாற்றிய அதிபரை உலக பத்திரிகைகள் பாராட்டின.

அதிபரைப் பாராட்டும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜே.எஸ்.டி வரியில் விலக்கு என்பதால், நாங்கள் எல்லாரும் பாராட்டிக் கொண்டே இருக்கிறோம். ஒரு டீயை மூன்று பேர் பகிர்ந்து சாப்பிடும் நேரங்களில் பேச்சு புக்கில் ஓனர் முயற்சிகளுக்கு லைக்குகளை அள்ளிப் போடுவோம்.

எசமான் தேசத்தின் இந்த வருடத்தின் முதல் புயல் பற்றி பேச ஆரம்பித்ததால், சொல்ல வந்த இரண்டாவது பிரச்சினை பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன் பாருங்கள்.

எப்போதும் பிரச்சினைகள் எங்கள் ஓனரிலிருந்து தான் துவங்கும். இது எசமான் தேசத்து மரபு. ஆனால், இந்த முறை அவருக்கே தெரியாமல் நாட்டின் இன்னொரு மூலையிலிருந்து துவங்கியது. இந்தப் பிரச்சினைக்குக் காரணம் ஒரு பெண்.

ஒரு பெண் எப்படி நாட்டையே உலுக்கிய பிரச்சினைக்கு காரணமானாள் என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? கொஞ்சம் பொறுங்கள். விரிவாகவே சொல்கிறேன்.

அவள் பெயர் லூசி. எசமான் தேசத்தின் எல்லா பெண்களையும் போல, பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, நாட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்தவள்தான் லூசி. குடும்பப் பொறுப்பை பெண்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எசமான் தேசத்தின் எழுதப் படாத விதி. ஆண்கள் குழந்தைகளையும், வீட்டையும் பராமரிப்பார்கள். அதனால் இல்லதரசன் என்ற பெயர் ஆண்களுக்கு உண்டு. எங்கள் நாட்டு அருவிகள், மலைகள், ஆறுகள் என அனைத்தின் பெயரும் ஆண்களின் பெயரில் இருப்பது – நாங்கள் ஆண்களை தெய்வமாகப் போற்றுவதன் வெளிப்பாடுதான் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஆண்களும் முன்பு போல இப்போது இருப்பதில்லை. பண்பாட்டைக் காப்பாற்ற எந்த ஆண் விரும்புகிறார்? எல்லாம் சாஸ்திர விரோதம். கலி காலம். வீட்டைப் பெருக்கி, சுத்தமாக பராமரித்து, குழந்தைகளை கவனித்து, நல்ல முறையில் வளர்த்து, நாட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் குழந்தையாக மாற்றுவதெல்லாம் இப்போது குறைந்து வருகிறது. பெண்களோடு சரி சமமாகப் போட்டி போட்டுக் கொண்டு வேலைக்குப் போவது, கார் ஓட்டுவது, பகலெல்லாம் தெருவில் சுற்றுவது . . . இப்படி எங்கள் நாடும் மாறிவிட்டது.

சரி விடுங்கள். . .இதைப் பற்றி பேசினால் என் தாத்தா ஞாபகம் வந்து விடும். அவரெல்லாம் அந்த காலத்தில் எங்கள் பாட்டி பெற்றுப் போட்ட பத்து குழந்தைகளையும் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டதால் தான் எங்கள் குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது. அப்படி வீட்டில் இருக்கும் ஆண்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால்தானே குடும்பம் தழைக்கும்? என்ன நாகரீகமோ. . .

சரி பிரச்சினைக்கு வருவோம். லூசி கல்லூரிக்குப் போகும் காலம் வரை வழக்கம் போல எல்லா பெண்களையும் போல ஜாலியான ஆளாகத் தான் இருந்திருக்கிறாள். ஆண்களைப் பார்த்தால் கேலி செய்வது, ஆண்களின் உடையைப் பார்த்து அறிவுரை வழங்குவது என வழக்கமான பெண்ணாகத்தான் இருந்தாள்.

லூசி செல்போன் வாங்குவதற்குப் போன கடையில் ஆண்கள் யாரும் வேலை செய்யாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. எல்லா ஆண்களையும் போல வீட்டில் இருக்காமல், இப்படி வேலைக்குப் போவதால்தான் புதுப் புது பிரச்சினைகள் வருகின்றன

லூசி அமைதியாகத்தான் செல்போன் கேட்டிருக்கிறாள். ஒன்றிரண்டு செல்போன் மாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கூட அவள் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. கடையில் வேலை பார்த்த பையனை திரும்பி திரும்பி பார்த்திருக்கிறாள். அவன் உடை அரை குறையாக இருந்திருக்கும். இல்லையென்றால் ஒரு பெண் எதற்கு, முகம் தெரியாத ஆணை பார்க்கப்போகிறாள்?

அவன் கழுத்தையே பார்த்துக் கொண்டிருந்ததாக அவள் தோழிகள் சொல்கிறார்கள். தீடீரென்று தான் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. லூசி பாய்ந்து போய் அவன் கழுத்தைக் கடித்து விட்டாளாம். ரத்தம் பீய்ச்சி அடிக்கும் நிலையில் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.

லூசியை உடனடியாகக் கைது செய்து மனநோய் மருத்துவமனைக்கு கொண்டு போய் விட்டார்கள். அவளிடம் நடந்த விசாரணையில் இது எப்படி நடந்தது என்று புரியவில்லை என்றே சொல்லியிருக்கிறாள். அவனுடைய தொண்டைப் பகுதியைப் பார்க்கும் போது எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்றுதான் அவள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாளாம்.

பிரச்சினை இங்கிருந்துதான் ஆரம்பமானது. அவளுக்கு உணவு கொடுக்கப் போன ஒரு வயதான ஆணையும், மனநோய் மருத்துவராக அவளிடம் பேசுவதற்காகச் சென்ற இன்னொரு ஆணையும் அதே போல குரல்வளையைக் கடித்திருக்கிறாள் லூசி. தொடர்ந்து இரண்டாவது நாளும் அங்கிருந்த இரண்டு ஆண் பணியாளர்களின் குரல்வளையை கடித்து துப்பியிருக்கிறாள். லூசி கடிப்பதை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவமனையின் இன்னொரு பெண் பணியாளர் மயங்கி விழுந்து விட்டாள். அந்த அளவுக்கு லூசியின் நடவடிக்கை அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

ஆதர் சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டத்தை துவங்கின. (பெண்களை மாதர் என்று அழைப்பது போல, ஆண்களை ஆதர் என்று எசமான் தேச மக்கள் அழைக்கின்றனர்).

ஆன் லைன் டி.வி. விவாதத்தில் கூட, லூசிக்கு கோபம் வருகிற மாதிரி கடிபட்ட ஆண்கள் நடந்திருப்பார்கள் என்று சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தார்கள். அவர்கள் கழுத்துப் பகுதியில் ஏற்கனவே ஏதாவது ரத்தக் கசிவு இருந்திருக்கலாம், அதற்கு உதவி செய்வதற்காக லூசி பார்த்ததை கடித்ததாக பரப்பி விடுவது ஆதர் சங்கங்களின் வேலையாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் விவாதித்தார்கள்.

ஆனால், இதெல்லாம் இரண்டே நாளில் முடிவுக்கு வந்து விட்டது. லூசி கடிப்பதைப் பார்த்து மயங்கி விழுந்த பெண், சரியாகி எழுந்த பிறகு அருகில் இருந்த ஆணின் குரல்வளையைக் கடித்து விட்டாள். லூசி போலவே பார்க்கிற ஆண்களின் குரல்வளையைக் கடிக்கும் வெறி இந்தப் பெண்ணுக்கும் வந்து விட்டது.

நாட்டிலேயே சிறந்த பெண் மருத்துவர்களைக் கொண்ட குழு இரண்டு பெண்களையும் பரிசோதித்தனர். அக்குழுவிற்காக அழைக்கப்பட்ட ஒரே ஒரு ஆண் மருத்துவரும் லூசி பற்றி கேள்விப் பட்டவுடன், தன் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று லீவு போட்டு விட்டார். இரவு முழுவதும் நடந்த பரிசோதனைகள் கடைசியில் உண்மையை வெளிப்படுத்தின.

லூசி ஆண்களை வெறும் கழுத்தோடு பார்க்கும் போது ஒரு புது வகை ஹார்மோன் அவள் உடலில் சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களின் கழுத்தைப் பார்த்தவுடன் உடலில் சுரக்கும் ஹார்மோன் அவளை கடிக்கத் தூண்டுகிறதாம், இப்படி கடிப்பதைப் பார்க்கிற பெண்களுக்கும் இந்த நோய் பரவுவதும் ஊடகங்களில் வெளியானது. எசமான் தேசமே பெண்களைக் கண்டால் பயந்து, வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டது.

ஆண்கள் வெளியில் வரவே பயந்தார்கள். லூசியைத் தொடர்ந்து நாட்டின் பல பெண்கள் அவளைப் போலவே ஆண்களின் குரல்வளைகளைக் கடிக்க ஆரம்பித்தார்கள். சுதந்திர எசமான் தேசத்தின் தெருக்களில் ஒரு ஆண் வெறும் கழுத்தோடு நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஆதர் சங்கங்கள் போராட்டம் நடத்தியும், அரசு பல திட்டங்களை அறிவித்தும் விஞ்ஞானிகளால் பெண்கள் கடிப்பதைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

உண்மையில் ஹார்மோன் சுரந்து வெறி ஏற்பட்டு ஆண்களைக் கடிப்பவர்கள் யார், பொழுதுபோக்குக்காக வெறி ஏற்பட்டதைப் போல நடித்து கடிப்பவர்கள் யார் என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு, ஆண் கடிபடுவது அதிகரித்து விட்டது. சில பகுதிகளில் சின்னப் பையன்களையும், வயதான கிழவர்களையும் கூட கடிபடுவதில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

இப்போது லூசி தெளிவாகி விட்டாள். ஒரு ஆணின் குரல்வளையைப் பார்த்ததும் தனக்கு ஏற்படும் மன மாற்றங்களை அவளே பேசத் தொடங்கி விட்டாள். ஆடம்ஸ் ஆப்பிள் எனும் ஆணின் தொண்டை வீக்கத்தைப் பார்த்தவுடன், தன் உடலில் கடிக்கும் வெறி ஏற்படுவதை தான் உணர்வதாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் துவக்கத்தில் கூறிய லூசி, ஆணின் தொண்டையில் இருக்கும் ஆடம்ஸ் ஆப்பிள் – ஆதாமுக்கே ஏவாள் என்னும் பெண்ணால் கொடுக்கப்பட்டது தான் என்பதால், அதனை பெண்கள் கடித்து துப்புவது குற்றமில்லை என்று அறிவித்தாள். ஆண் குரல்வளைகள் பெண்ணுக்கு உரிமையானதுதான் என்றும், குரல்வளைகளைக் கடித்த ஆதாரங்கள் பழைய நூல்களிலும் உள்ளதாக பெண்கள் பேசத்துவங்கினர்.

ஏற்கனவே, பாதுகாப்பற்று இருந்த ஆண்கள், இந்த அறிவிப்புக்குப் பிறகு இன்னும் அச்சம் கொண்டனர். தேசம் எங்குமே ஆண்களை பார்க்க முடியவில்லை. பல வீடுகளில் மனைவிகளே கூட கணவர்களைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தனர். அன்பில் தேடுகிறார்களா, கடிக்கத் தேடுகிறார்களா என்று புரியாத கணவர்கள் ஆண்களுக்கான நிவாரண முகாம்களை அமைத்துக் கொண்டு, ஒளிந்து வாழ முயன்றார்கள்.

ஆதர் சங்கங்கள் கூடி, கடைசியாக ஆண்களைக் காக்க ஒரு வழி கண்டுபிடித்தனர். ஆண்கள் வெறும் கழுத்தோடு தெருக்களில் திரிவது ஆபாசமானது, எசமான் தேசத்து முன்னோர்கள் எல்லாரும் இந்த ஆபாசத்தை மறைக்கத்தான் டை கட்டினார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். ஆண்களின் நிர்வாணமான குரல்வளைதான் பிரச்சினைக்கு காரணம் என்றால் அதை மறைப்பதில் தவறில்லை. ஆண்கள் தங்கள் குரல் வளையை துணி கொண்டு மறைத்துக் கொள்வதால், இந்தக் கடியில் இருந்து தப்ப முடியும் என்றால் அதைச் செய்வதுதான் அறிவியல் பூர்வமானது என்று முடிவு செய்யப்பட்டது.

எசமான் தேசத்து நிறுவனங்கள் தொண்டையை இறுகப் பற்றிக் கொள்ளும் த்ரோட்டின்ஸ் உடையை அறிமுகப்படுத்தின. எல்லா ஆண்களும் த்ரோட்டின்ஸ்களை வாங்க கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு அலைந்தனர். த்ரோட்டின்ஸ் அணிந்த பிறகு ஆண்களால் நிம்மதியாக தெருக்களில் நடமாட முடிந்தது.

த்ரோட்டின் அணியாத போதும், த்ரோட்டின் லேசாக விலகும் போதும் ஆண்கள் அவ்வப்போது கடிபடுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

எசமான் தேச ஓனர்தான் இந்தப் பிரச்சினைக்கான முடிவைக் கண்டுபிடித்தார். அந்தத் திட்டத்தின் பெயர் “நம் தொண்டை, நம் உரிமை”. ஆண் குழந்தைகள் பிறந்தவுடன் தொண்டைக் கவசம் (ஆதர் கார்டு) ஒன்றை மருத்துவமனைகளே வழங்கி விடும். அப்புறம் ஆண் குழந்தைகளின் தொண்டை வளர்ச்சியின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆதர் கார்டுகளை புதுப்பித்துக் கொள்வது குடும்பத் தலைவியின் கடமை. ”ஒவ்வொரு ஆணும் தம் தொண்டை பாதுகாப்பினை , சுதந்திரம் என்ற பெயரில் பறி கொடுத்து விடாதீர்கள்” என்பதுதான் எசமான் தேசத்தின் இன்றைய முழக்கம்.

இது ஓரளவு பிரச்சினையை கட்டுப் படுத்தியிருந்தாலும், எசமான் தேசத்து ஆண்கள் எப்போதும் கடித்து துப்பப் படும் குரல்வளை பற்றிய அச்சத்தோடுதான் இப்போதும் வாழ்கிறார்கள்.

அண்டை நாடான இந்தியா பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் ஒன்றாக இருப்பதைப் போல, எசமான் தேசம் ஆண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிவிட்டது.

(செம்மலர் இதழில் வெளிவந்த சிறுகதை நவம்பர் 2019)

Print Friendly, PDF & Email

1 thought on “எசமான் தேசத்தின் இரண்டாவது புயல்!

  1. சிரித்துக் கொண்டே படித்தேன். குலுங்க குலுங்க சிரித்து ரசிக்கும் சித்திர உருவகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *