ஊட்டாபாக்ஸ் ராகவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 28,046 
 

ராகவன் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அவருக்கு வயது 68.

பாளையங்கோட்டை அருகே திம்மாராஜபுரம் என்கிற கிராமத்தில் அந்தக் காலத்தில் வில்லேஜ் முன்சீப்பாக இருந்தவர். அவருக்கு ஐம்பது வயதாக இருக்கும்போதே அவர் மனைவி இறந்து விட்டாள். ஒரேபெண் காயத்ரிக்கு திருமணமாகி தற்போது அமெரிக்காவில் இருக்கிறாள்.

இப்போது தனியாக திம்மராஜபுரத்தில் வசித்து வருகிறார்.

யாராவது அவரிடம் மரியாதை நிமித்தம் ஒரு உபசரணைக்காக எதையாவது சொன்னால் அதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்.

எங்கு சென்றாலும் அவரை எவராவது, “காப்பி சாப்பிடுகிறீர்களா?” என்றால் உடனே, “ஆஹா சாப்பிடறேனே…சூடா கொடுங்கோ, என்பார். காப்பி வந்ததும் அதைச் சுட சுட ரசனையுடன் மெதுவாக உறிஞ்சி சாப்பிடுவார். அதன் பின்பு காப்பியின் தரத்தை விமர்சனம் செய்வார்.

அடுத்தவர்கள் வீட்டிற்கு போனால், “சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்” என்று ஒரு மரியாதைக்கு எவரேனும் உபசரித்தால் உடனே, “சரி சாப்பிட்டுவிட்டுப் போகிறேன், தட்டு வைங்கோ” என்று சொல்லி சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்புவார். நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு வக்கணையாக சாப்பிடுவார்.

அதன் பிறகு சாப்பாட்டை விமர்சனம் செய்வார்.

உறவினர்கள் வீட்டில் எந்த மாதிரியான விசேஷமாக இருந்தாலும், பத்திரிக்கை வைத்தால் அல்லது போனில் அழைத்தாலும் போதும், இரண்டு நாட்கள் முன்னமேயே சென்றுவிட்டு, விசேஷம் முடிந்து அங்கேயே இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருவார். அவ்விதம் அவர்களுடன் இருக்கும்போது அவர் வாய்க்குள் செல்லும் எதையும் நேர்மையாக விமர்சனம் செய்வார்.

அவருக்கு வாய் நீளம் என்று சுவையாக சமைக்கத் தெரியாதவர்கள் எரிச்சலடைவார்கள். நன்றாக சமைப்பவர்கள் அவரின் விமர்சனத்தை ஒரு சான்றிதழாக எடுத்துக்கொண்டு மகிழ்வார்கள். .

எனினும் எல்லா உறவினர்களும் அவர் வயது கருதி அவரை மறக்காமல் தன் வீட்டு விசேஷங்களுக்கு கூப்பிட்டு விடுவார்கள். அவரும் விட்டுக் கொடுக்காமல் நிகழ்ச்சிக்கு சென்று விடுவார். அவர் எந்தவிதமான மரியாதைகளையோ, உபசரணைகளையோ சென்ற இடத்தில் எதிர் பார்க்கமாட்டார். கூடத்திலோ, ரேழியிலோ ஒரு மூலையில் துண்டை விரித்து, தன் கைகளையே தலையணையாக வைத்துக்கொண்டு தூங்கி விடுவார்.

ஒருவேளை எவரேனும் அவரை மறந்துபோய் கூப்பிடாவிட்டாலும், “பாவம் உனக்கு எத்தனை வேலைகளோ, என்ன கூப்பிட மறந்துட்ட” என்று தானாகவே சென்று ஈஷிக்கொள்வார்.

அப்படித்தான் பெங்களூரில் இருக்கும் அவர் அக்காவின் பேரன் வெங்கடேசன் வீட்டிற்கு ஒரு வாரம் சென்றிருந்தார். அவனுக்கு புதிதாக திருமணம் ஆகியிருந்தது. அங்கிருந்த ஒரு வாரத்தில் அடிக்கடி அவர்களுடன் வெளியில் சென்று விதவிதமான ஹோட்டல்களில் சாப்பிடும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. ராகவன் மிகவும் குஷியானார்.

பெங்களூரிலேயே சொந்தமாக ஒரு கம்பெனி நடத்திக் கொண்டிருந்த வெங்கடேசனின் மச்சினர் ஸ்ரீகாந்த், ராகவனின் சாப்பாட்டு ரசனைகளையும் அது குறித்த அவருடைய நேர்மையான விமர்சனங்களையும் மிகவும் ரசித்தார். அறுபத்தியெட்டு வயதிலும் ஷுகர், பி.பி என்று எதுவும் இல்லாது வக்கணையாக ரசித்துச் சாப்பிடும் அவரை ஸ்ரீகாந்த்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. ராகவனைப் பற்றி நிறைய கேட்டறிந்து அவர் திம்மராஜபுரத்தில் தனிமையில் சும்மா இருப்பதை புரிந்துகொண்டார்.

ஒரு வாரம் சென்றதும் ராகவன் ஊருக்கு கிளம்பும் தினம் வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வந்த வெங்கடேசனுக்கு ராகவனைப் பற்றி போதிய முழுவிவரம் தெரியாது.

ரயில் புறப்பட கார்டு பச்சைக்கொடி காட்டியதும், ஒரு மரியாதைக்காக, “பத்து, பதினைந்து நாட்கள் சேர்ந்தாற்போல் நீங்கள் இங்கு இருக்கிறமாதிரி வந்திருக்கலாம்” என்றான்.

உடனே ராகவன், “நான் உன் முன்னாடிதான உன்னோட லேப்டாப்பில் ரயிலுக்கு ரிசர்வ் செய்தேன். அப்போதே நீ சொல்லியிருக்கலாம். டிக்கட் ரிசர்வ் செய்ததும், என் உடைகளையெல்லாம் எடுத்து பெட்டியில் அடுக்கினேன், அப்போதாவது நீ சொல்லியிருக்கலாம்; அப்பவும் நீ சொல்லல; அப்புறம் நான் குளித்து ட்ரஸ் மாற்றிக் கிளம்பினேன்; அப்போதும் நீ எதுவும் சொல்லாம பேசாம இருந்துட்ட; அதுக்கப்புறம் ரயில்வே ஸ்டேஷன் வர, ஆட்டோ பிடிக்கப் போனேன், அப்போதும் நீ கம்முன்னு இருந்த; வாயே தொறக்கல; கடைசியா உன்னோட குடும்பத்துல எல்லார்கிட்டையும், நான் போய்ட்டு வரேன்னும் சொல்லிகிட்டுதான கிளம்பினேன்; அப்பவும் எதுவும் சொல்லாம வாய பொத்திகிட்டு இருந்த; ஆட்டோல நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் வந்தோம்; அப்பவும் வாயில கொழுக்கட்டை வச்சிருந்த மாதிரி எதுவும் சொல்லாம வந்த; இப்போ என்னடான்னா நான் ரயில்ல ஏறி உட்கார்ந்து கார்டும் பச்சைக்கொடி காண்பிச்சாச்சு. ரயில் இப்ப மூவ் ஆகபோகிறது. இப்பப் போயி, இன்னும் பத்துப் பதினைந்து நாள் இருந்துட்டுப் போகலாம்னு சொல்றீய… இது உனக்கே நல்லாயிருக்கா வெங்கடேசு” என்றார்.

‘செத்தான்யா சேகரு. ஏண்டா இவரிடம் போய் இப்படிச் சொன்னோம்’ என்று தன்னையே மனதிற்குள் நொந்து கொண்டான் வெங்கடேசன்.

ரயில் மெதுவாக கிளம்பியது.

இரண்டு வாரங்கள் சென்றன…..

திம்மராஜபுரத்தில் ராகவன் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் நேரம். ராகவன் வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு விசிறியால் முதுகைச் சொறிந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் வீட்டின்முன் படகு போன்ற ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து வெங்கடேசன், அவன் மனைவி, மச்சினர் ஸ்ரீகாந்த் மூவரும் இறங்கினார்கள்.

ராகவன் “வாங்கோ, வாங்கோ” என்று வாய்நிறைய உபசரித்து அவர்களை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

-௦-

இரண்டே மாதங்கள்தான்….

ராகவன், தற்போது பெங்களூரில் மிகவும் பிஸியாகிவிட்டார். ஊட்டாபாக்ஸ் என்கிற கம்பெனிக்கு ஸ்ரீகாந்த்தான் ஓனர். அந்தக் கம்பெனிக்கு வரும் பலவித உணவுப் பதார்த்தங்களை நாக்கைச் சப்புக்கொட்டி ரசித்து சாப்பிட்டு அதன் தரத்தை விமர்சிப்பது மட்டும்தான் ராகவனுடைய வேலையே. அவர் டேஸ்ட்டர் என்கிற பதவியில் அமர்ந்து தற்போது மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்குகிறார். அதுதவிர கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸில் ஏ.ஸி. ரூமில் நிரந்தர வாசம். சாப்பாட்டு செலவு கிடையாது. ருசி பார்த்துச் சொல்வதுதான் அவர் தொழில், வீராத் கோய்லியை பாட்டிங் செய்யச் சொல்வதைப் போன்று. இது அவருக்கு விருப்பமான ஒரு தினசரி செய்கை. திம்மராஜபுரம் வீட்டிலிருந்து வாடகைவேறு வருகிறது.

ஊட்டா என்றால் கன்னடத்தில் உணவு அல்லது சாப்பாடு. அந்தக் கம்பெனி கொடுத்த விசிட்டிங் கார்டைத்தான் தற்போது அனைவரிடமும் பெருமையாக நீட்டுகிறார். அதில், ‘ராகவன், டேஸ்ட்டர், Ootabox, www.ootabox பெங்களூரு’ என்கிற முகவரியுடன் தற்போது அமர்க்களமாக இருக்கிறார்.

நல்ல சந்தர்ப்பங்கள் அமைந்தால் எந்த வயதிலும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு ராகவன் ஒரு உதாரண புருஷர்.

ஊட்டாபாக்ஸ் ராகவன் என்றால்தான் தற்போது எல்லோருக்கும் அவரைத் தெரிகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *