இருபத்தியோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,744 
 

இருபத்தியோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா சொன்ன காணாமற் போன மனைவியின் கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் காலை எங்கள் விக்கிரமாதித்தர் வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தகாலை யாரோ ஒருவர் தலைவிரி கோலமாக வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் தயங்கித் தயங்கி நிற்க, ‘யார் நீங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தராகப் பட்டவர் அவரை விசாரிக்க, ‘நான் சிந்தாதரிப்பேட்டையிலிருந்து வருகிறேன். என் பெயர் நேற்றுவரை வெறும் நாராயணன்; இன்று நடுத்தெரு நாராயணன்!’ என்று வந்தவராகப்பட்டவர் மனம் நொந்தவர்போல் சொல்ல, ‘ச்சூச்சூச்சூ! அப்படியா, என்ன சமாசாரம்?’ என்று தம் ‘ச்சூச்சூச்சூ’வைக் கேட்டு விரைந்து வந்த நாயை விரட்டி விட்டு விக்கிரமாதித்தர் கேட்க, ‘ஐயோ, அதை நான் எப்படிச் சொல்வேன்?’ என்று அவர் தன் தலையில் தானே அடித்துக் கொள்ள, விக்கிரமாதித்தர் அதைத் தடுத்து, ‘சும்மா சொல்லுங்கள்?’ என்று அவரை உசுப்ப, அவர் சுற்றுமுற்றும் பார்த்துத் ‘திருதிரு’ வென்று விழித்துக் கொண்டே சொன்னதாவது:

‘விஷயம் உங்களோடு இருக்கட்டும்; வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். நானும் என் மனைவியும் சீர்மிகு சிந்தாதரிப்பேட்டையிலே ஒரு சின்னஞ்சிறு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மலரும் மணமும் போல, நகையும் நங்கையும்போல, அதுபோல இதுபோல, இன்னும் என்னென்னவோ போல வாழ்ந்து வந்தோம். அங்ஙனம் வாழ்ந்து வந்தகாலை எந்த விதமான தவமும் செய்யாமலே எங்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அந்த மகவுக்கு இன்னும் எண்ணி ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என் மனைவி காணாமற் போய்விட்டாள் ஐயா, காணாமற் போயே போய்விட்டாள்!’

இவ்விதமாகத்தானே அவர் மனைவி காணாமற் போன கதையைச் சொல்லிக்கொண்டு வந்தகாலை, துக்கம் வழக்கம்போல் வந்து அன்னார் தொண்டையை அடைக்க, அதைக் கண்ணிரால் கரைத்து வெளியேற்றுவதற்காகவோ என்னவோ, அவர் தன் கதையை நிறுத்திவிட்டு ‘ஓ’வென்று அழுது புலம்ப, ‘அழாதீர்கள் ஐயா, அழாதீர்கள்!’ என்பதாகத் தானே விக்கிரமாதித்தர் அவரைத் தேற்றி, ‘என்றிருந்து காணவில்லை, எப்பொழுதிருந்து காணவில்லை?’ என்று அன்னார் முதுகைத் ‘தடவு, தடவு’ என்று தடவிக் கொடுத்துக் கொண்டே கேட்க, ‘என்னத்தைச் சொல்வேன், நான்? இன்றிலிருந்துதான் அவளைக் காணவில்லை ஐயா, இன்றிலிருந்துதான் அவளைக் காணவில்லை. காலை மணி ஒன்பது இருக்கும். வழக்கம்போல் எனக்குச் சமைத்துப் போட்டாள். சாப்பிட்டுவிட்டு நான் வேலைக்குப் போனேன். அங்கே சர்வ வல்லமையுள்ள யாரோ ஒரு தொழிலாளி, ‘இந்த வருடம் முப்பது சதவிகிதம் போனஸ் கிடைக்குமா, நாற்பது சதவிகிதம் போனஸ் கிடைக்குமா?’ என்று நினைத்துக் கொண்டிருந்தகாலை முதலாளி ‘அச்’ என்று ஒரு தும்மல் தும்ம, ‘நான் போனஸைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த காலை நீங்கள் எப்படித் தும்மலாம்? வாபஸ் வாங்கினால் தான் ஆச்சு!’ என்று தொழிலாளி தன் முஷ்டியை உயர்த்த, ‘இதென்ன வம்பு? நான்தான் தும்மிவிட்டேனே! அதை எப்படி வாபஸ் வாங்குவேன்? இன்னொரு முறை வேண்டுமானால் தும்மச் சொல்; யாரிடமிருந்தாவது ஒரு சிட்டிகை ஓசிப் பொடி வாங்கிப் போட்டுத் தும்மி வைக்கிறேன்!’ என்று முதலாளி சொல்ல, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாபஸ் வாங்காவிட்டால், இதோ, இப்போதே, இந்தக் கணமே வேலை நிறுத்தம்!’ என்று அந்தத் தொழிலாளி தன் ‘எவரெடி போர்க்கொடி’யை உயர்த்திப் பிடிக்க, அந்தக் கொடியின் கீழ் எல்லாத் தொழிலாளரும் உடனே திரண்டு, உண்ணாவிரதம், உண்டிக் குலுக்கல் ஆகிய போர் முறைகளைக் கையாள, ஏற்கெனவே பல நெருக்கடிகளுக்கு ஆளாகி, ‘எப்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும், கம்பெனியை இழுத்துப் பூட்டலாம்’ என்று காத்திருந்த முதலாளி, இதுதான் சமயமென்று ‘கதவடைப்பு’ செய்ய, அதைப் பார்த்துவிட்டு, நான் வீட்டுக்குத் திரும்பி வருவேனாயினன். அங்ஙனம் திரும்பி வந்தகாலை வீடு பூட்டியிருக்க ‘எங்கேயாவது அரட்டையடிக்கப் போயிருக்கிறாளோ, என்னவோ?’ என்று நான் வாயிலிலேயே காத்திருப்பேனாயினன். மணி பத்தும் ஆயிற்று, பதினொன்றும் ஆயிற்று, பன்னிரண்டும் ஆயிற்று. அவள் வரவில்லை; வரவே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்துப் பார்த்தேன்; ‘அவள் எங்கே போனாளோ, நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். நல்ல வேளையாக என்னிடம் மாற்றுச் சாவி ஒன்று இருந்தது. அதைக் கொண்டு பூட்டைத் திறந்து உள்ளே போனேன். ‘கடிதம் ஏதாவது எழுதி வைத்து விட்டுப் போயிருப்பாளோ?’ என்று மேஜை, டிராயர் ஆகியவற்றைக் ‘குடை, குடை’ என்று குடைந்து பார்த்தேன்; ஒன்றும் கிடைக்கவில்லை. ‘ஒருவேளை தூக்குப் போட்டுக்கொண்டிருப்பாளோ?’ என்று ஏணைக் கயிற்றைப் பார்த்தேன்; அதில் ஏணைதான் தொங்கிக் கொண்டிருந்தது; அவள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. ‘கிணற்றில் விழுந்து விட்டிருப்பாளோ?’ என்று புழக்கடையில் இருந்த கிணற்றில் குதித்துப் பார்த்தேன். அதில் சேறுதான் இருந்தது; அவள் இல்லை. இப்படியாக எல்லாச் சோதனைகளையும் செய்து முடித்த பிறகு, ‘உள்ளே தூக்குப் போட்டுக் கொண்டு, உள்ளே கிணற்றில் குதித்துவிட்டு, அவள் வெளியே போய் எப்படி வீட்டைப் பூட்ட முடியும்?’ என்று தோன்ற, ‘அட, சீ! என்ன மூளை, நம் மூளை!’ என்று என் மூளையை நானே ‘மெச்சிக்’ கொண்டு அவள் சொந்தக்காரர் வீடுகளுக்கெல்லாம் சென்று ஜாடைமாடையாக விசாரித்துப் பார்த்தேன்; ‘வரவில்லை’ என்று சொன்னார்கள். கடைசியாக எதற்கும் உங்களைப் பார்த்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யலாம் என்று இங்கே வந்தேன். என் மனைவியை மட்டுமல்ல; மானத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று வந்தவர் சொல்ல, ஒரு கணம் யோசித்த விக்கிரமாதித்தர், மறுகணம் ‘கவலைப்படாதீர்கள்!’ என்று சொல்லிக்கொண்டே காரிலிருந்து அன்றைய தினசரிப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டு புரட்டிப் பார்க்க, ‘என்ன பார்க்கிறீர்கள்?’ என்று வந்தவர் கேட்க, ‘அதை இப்போது சொல்ல மாட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே அவர் தம் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏறுங்கள், காரில்!’ என்று வந்தவரைக் காரில் ஏற்றிக் கொண்டு, ‘முதலில் சித்ரா டாக்சீசுக்குப் போ!’ என்று பாதாளத்துக்குக் கட்டளையிடுவாராயினர்.

சொன்னது சொன்னபடி பாதாளம் காரைக் கொண்டு போய் சித்ரா டாக்சீசுக்கு முன்னால் நிறுத்த, ‘இறங்குங்கள், இங்கே!’ என்று விக்கிரமாதித்தர் வந்தவரை இறக்கி, ‘அதோ, கொளுத்தும் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க நிற்கிறதே ஒரு கியூ-அந்தக் கியூவில் உங்கள் மனைவி தன் குழந்தையுடன் நிற்கிறாளா, பாருங்கள்!’ என்று சற்றுத் தூரத்தில் நின்ற கியூவைச் சுட்டிக் காட்ட, வந்தவர் ஓடிப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, ‘இருக்கிறாள்; அந்தக் கியூவில்தான் இருக்கிறாள்!’ என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்ல, ‘இப்போது சொல்கிறேன்-நான் பத்திரிகையில் பார்த்தது இன்று இங்கே என்ன புதிய சினிமாப் படம் வந்திருக்கிறதென்பது. அதில் இங்கே, இன்ன படம் என்பது தெரிந்தது. இப்போதெல்லாம் கணவன்மாரை வேலைக்கு அனுப்பியதும், அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் அவர்களுக்குத் தெரியாமல் ‘மாட்டினி ஷோ’வுக்குச் சென்று வருவதுதானே மனைவியரின் ‘நித்திய கடமைக’ளில் ஒன்றாயிருக்கிறது? அந்தக் கடமையை நிறைவேற்ற உங்கள் மனைவியும் இங்கே வந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்; நினைத்தது சரியாகிவிட்டது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அது தெரியாமல் போச்சே எனக்கு!’ என்று வந்தவர் வியக்க, ‘எப்படித் தெரியும்? உங்களுக்கும் நாம் வேலைக்குப் போனதும் நம் மனைவி மாட்டினி ஷோவுக்குப் போவாள் என்று தெரியாது; உங்கள் மனைவிக்கும் உங்களுடைய கம்பெனியில் இப்படித் திடீர் வேலைநிறுத்தம் நடக்கும் என்று தெரியாது!’ என்று விக்கிரமாதித்தர் சிரிக்க, ‘நன்றி, நான் வருகிறேன்!’ என்று அதுவரை நடுத்தெரு நாராயணனாக இருந்தவர், வெறும் நாராயணனாகி வீடு திரும்புவாராயினர்.”
இருபத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான இந்திரா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *