இன்று போய் நாளை வாராய்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 6,868 
 

நடுராத்திரி ஒரு மணி இருக்கும்..தடதடவென்ற சத்தம்..

“அம்மா..பயம்மா இருக்கு..!”

கிரி அம்மாவின் இடுப்பை இறுக்கிக் கட்டிக் கொண்டான்..

“என்னடா பயம்..?? மேல பரண்ல எலிதான்! எதையோ போட்டு உருட்றதாயிருக்கும்…!
இதுக்கு போய் பயப்படுவாளா…?? பேசாம கண்ண மூடிட்டு தூங்கு..”

“அம்மா..! அம்ம்மா.! எலி எப்பிடி மேல ஏறித்து..? அதான் சாத்தியிருக்கே…!”

“எலிக்கு எல்லாம் தெரியும்…”

அதற்குள் பக்கத்தில் படுத்திருந்த பாரு ‘ப்ச்ச்..ச்ச்ச்.’ என்று அதட்டினாள்..

“கிரி..வளவளன்னு பேசாத.. எல்லாரும் முழிச்சுக்கறா பாரு..காலம்பற பேசிக்கலாம்.இப்போ பயப்படாம அம்மாவ கட்டிண்டு தூங்கு”

எலி குடைவதை நிறுத்தவில்லை…கிரிக்கு தூக்கம் வரவில்லை..

காலையில் முதல் வேலையாய் அப்பா படித்துக் கொண்டிருந்த பேப்பரைப் பிடித்து இழுத்தான்..

“அப்பா..அப்பா..எலி…”

“எங்கடா?? எலியா??”

“ஆமாப்பா…! மேல…பயம்மா இருக்குப்பா…”

“விஜி…! விஜி! கிரி என்னமோ சொல்றானே…!”

“ஆமான்னா..! மறுபடியும் அந்த குட்டி பிசாசு மேல போய் ரகள பண்றது போல இருக்கு…”

எலிப்பொறிக்கெல்லாம் மசியவில்லை..மசால்வடை மட்டும் காணாமல் போயிருக்கும்…..

“இரு..இந்த தடவ விடப்போறதில்ல..ஒரு வழிபண்ணியே தீரணும்…!”

இதுவரை மூன்று தடவையாகிவிட்டது….

எலியை பிடிக்க பரணில் ஏறி ஒரு தடவை முதுகு பிடித்துக் கொண்டு வலி உயிர் போனதுதான் மிச்சம்..
இன்னொரு தடவை ஏணியில் சறுக்கி கால் சுளுக்கிக் கொண்டது.

இந்த தடவை நானா ? எலியா ?? பார்த்துவிடு ! என்று உள்ளிருந்து ஒரு குரல் உரக்க ஆணையிட்டது..

“அப்பா.! நேத்து ஒரு எலி சமையலறையிலேந்து ஓடித்து…அதாதான் இருக்கும்.”

ஜக்கு டி.வி.பார்த்துக்கொண்டே டிராயிங் ரூமிலிருந்து கத்தினான்.

“போடா.. போய் அந்த ஏணியக் கொண்டா..!”

யாரும் அசைவதாய் இல்லை…

பாரு தான் ஓடிப்போய் ஏணியைக் கொண்டுவந்து பரண்மேல் சாத்தினாள்..

“எதுக்கு நீங்க மறுபடியும் ஏறிண்டு?? கோபாலனக் கூப்பிடுங்கோ… ஒரு நிமிஷமா அடிச்சு விரட்டிடுவான்…”

விஜிக்கு எப்போதுமே கணவர்மேல் அத்தனை நம்பிக்கை போறாது….!

சபேசன் மளமளவென்று ஏணி மேல் ஏறி விட்டார்..

“அதானே பாத்தேன்.யாரு போனதடவ மேல ஏறினது..?? கதவு சரியா மூடலன்னா எலி, பெருச்சாளி எல்லாம் வரும்…சரி.! பாரு ! அந்த கம்ப தா ! ஒரே அடி..!”

எம்.ஜி.ஆர்., வீரப்பா ரேஞ்சுக்கு கொஞ்ச நேரம் ஒரே அடிதடி சத்தம்..

“எலியையும் காணம்..ஒண்ணையும் காணம்..!”

“அப்பா! மூலைல ஒளிஞ்சிண்டிருக்கும்… அப்புறம் ராத்திரி கடமுடன்னு சத்தம் போட்டா பயம்மா இருக்கும்ப்பா..”

மெள்ள ஜக்கு எழுந்து வந்தான்.

“அப்பா..நீ மேல ஏறறச்ச ஒரு எலி உள்ளேந்து கீழ குதிச்ச மாதிரி இருந்தது..!!”

“ஏண்டா..முதலியே சொல்லக்கூடாது…?? பாவம் அப்பாவ அனாவசியமா சிலம்பாட்டம் ஆட வச்சிட்டியே..!!

சரி பாத்து எறங்குங்கோ..! பாரு..ஏணிய கெட்டியா பிடிச்சுக்கோ….!!

“ஐய்யோ..! இருடா..சபேசா. ! எறங்கிடாத!”

“ஏன்? என்னாச்சு பாட்டி..??”

“நானும் எத்தனவாட்டி சொல்லி சொல்லி அலுத்தாச்சு.. போன பொங்கலுக்கு கேட்டேன்.இதோ அடுத்த பொங்கல் வந்தாச்சு..!”

“பாட்டி.. கொஞ்சம் புரியும்படியா சொல்லு..!”

“வெங்கலப்பான.! என்னோட பொறந்தாத்து சீரு…! கல்லுகுண்டாட்டம்..அடியே பிடிக்காது..!!”

“அதுக்கென்ன??”

“சபேசா..! அங்கதான் எங்கியோ வச்ச நியாபகம்….!இந்த தடவ தேடி எடுத்து தந்துட்டுதான் கீழ எறங்கணும்… இல்லைனா சக்கரப் பொங்கலுக்கு நாக்க நீட்டிண்டு வந்தா தெரியும் சேதி!!”

***

“அம்மா..! அதப்போய் எங்கன்னு தேடறது?? பரண க்ளீன் பண்ணி எத்தன நாளாச்சு ?? தலையெல்லாம் ஒரே ஒட்டட..!”

“ஒரு கள்ளிப் பெட்டி இருக்கும்பாரு! அதுக்குள்ள வச்ச ஞாயாபகம்..!!”

பாட்டிக்கு தொண்ணுறு வயசாகப் போகிறது. ‘எனக்கு மூணு வயசிருக்கறச்சே ‘என்று ஆரம்பித்தால் அல்சைமரெல்லாம் கிட்ட அண்ட முடியாது…!”

கொஞ்ச நேரத்துக்கு மேலேயிருந்து பேச்சு மூச்சைக் காணம்….

“டேய்..! கிரிக்கண்ணா…! நீ காணும் , காணும்னு அழுதியே , உன்னோட ரிமோட் கண்ட்ரோல் கார்..! இங்க இருக்குடா..”

தெரியாத்தனமாய் சபேசன் வாயைத்திறந்தது அவருக்கே வினையாக வந்து முடியும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால்’ கப்சிப்’ பெற்று கீழே இறங்கி வந்திருப்பார்..

ஒரு வெண்கலப்பானையோடு சனி பகவானும் அவரை விட்டிருப்பான்…

“ஐய்யா..! அப்பா ! அதோட என்னோட ரோபோ நாய்க்குட்டியும் இருக்கும்பாரு…!”

“நெறய பொம்மை இருக்குடா..!”

“அம்மா..! அம்மா ! என்ன மேல ஏத்திவிடும்மா..! நானே தேடி எடுத்துப்பேன்…”

“ஐய்யோ! நீயா ?? அதுக்கு எலியே தேவல..”

சபேசன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஜம்மென்று மேலே வந்து குதித்தான் கிரி..

“ஐய்யா..! எல்லாமே இங்கே இருக்கே…காணம்னு ஏம்மா பொய் சொன்ன..??”

அங்கேயே ஒவ்வொன்றாக எடுத்து பரப்பி வைத்து விளையாட ஆரம்பத்தான்..

இங்கு சபேசன் வீட்டு பரணைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு அவசியம்.

“சொந்த வீடு ! தனிவீடு !”

என்று விஜி ஜெபிக்க ஆரம்பித்ததுமே சபேசன் கண்டிஷனாய் சொல்லிவிட்டார்..

கையிருப்பு , கடன் , உடன் எல்லாம் சேர்ந்து எப்பவோ வாங்கிப்போட்ட ஒரு கிரவுண்டில் ஆயிரம் சதுர அடி வீடுதான் கட்டமுடியும் என்றும் , இரண்டு மூணு வருடங்களுக்கு அப்புறம் இன்னொரு ரூமோ , மாடியோ கட்டிக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாய் கூறி விட்டார்.

விஜி விடுவாளா ??”

“சாமானெல்லாம் வச்சா கீழ கீக்கிடமா. போய்டுமே..மனுஷா நடக்க எடம் வேண்டாமா ?? பெரிய *பரண் கட்டினாத்தான் நான் வருவேன்…”

வீட்டில் பாதிக்கு பாதி பரண்.ஒரு குடித்தனமே பண்ணலாம்..

ட்யூப் லைட் , எலிவராமல்(?) இருக்க பூட்டு போட்டு வசதியான கதவு , ஏறுவதற்கு வசதியாக பெரிய ஏணி……

“இப்போ வேண்டாம்..எதுக்கும் இருக்கட்டும்.’ என்று கீழே இருப்பதைவிட மேலே இருக்கும் சாமான்களே அதிகம்…

இப்போது தொடரலாம்….

***

“அக்கா..! இதோ இருக்கு உன்னோட டெலக்ஸ்கோப்..! பாவம்! தொலஞ்சு போச்சுன்னு அழுதியே!”

“வாவ்..தாங்ஸ்டா கிரி!

அப்பா ! என்னோட ‘ரென் அண்ட் மார்ட்டின் ‘அங்கதான் ஒரு பெட்டிக்குள்ள இருக்கும். நீல ட்ரங்க் பெட்டி…! ப்ளீஸ்ப்பா! கொஞ்சம் பாரேன்..”

“நான் பாக்கறேங்க்கா.”

குடுகுடுவென்று தேடி பெட்டியைக் கண்டுபிடித்துவிட்டான்…”

“பாரு! இது நெறைய பைண்ட் பண்ணின புத்தகம்.. எல்லாமே தமிழ் புத்தகம்..

‘தில்லானா மோகனாம்பாள் , பொன்னியின் செல்வன்‘

‘துப்பறியும் சாம்பு ‘, நெறைய இருக்கும்மா…”

“ஓ மை காட்..! நான் பயந்தே போய்ட்டேன்..அம்மா பேப்பர்காரனுக்குத்தான் போட்டுட்டாளோன்னு.. !!

வெயிட்.. வெயிட்..ஐயாம் கமிங் அப்…!”

“நன்னாருக்கு..! நீங்க அடிக்கிற கூத்து..! முதல்ல என்னோட வெங்கலப்பான வந்தாகணும்..!!”

“ஐய்யோ பாட்டி..! அதக் கண்டுபிடிச்சு தந்துட்டுதான் கீழ எறங்குவேன்….!

அம்மா ஏணியப் பிடி..!!!”

பாரு மளமளவென்று மேலே ஏறி விட்டாள்..

“ஹைய்யா..!! ‘பொன்விலங்கு , கடல் புறா , துப்பறியும் சாம்பு , பெண்மனம் ‘“

அப்பாவையும் கிரியையும் அப்படி கட்டிக் கொண்டாள்..

அங்கேயே உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்து விட்டாள்….

“அம்மா… சேவை நாழி !! நீ காணம் , காணம்னு அமக்களம் பண்ணினியே…இங்கபாரு…!”

கிரிக்கு தலைகால் புரியவில்லை..

“என் சமத்துக் கட்டி..! ஒரு பெரிய சரஸ்வதி படம் இருக்கா பாரு..!! பூஜைல வைக்க படமே இல்ல…!!

“இதோ ! தேடிப்பாக்கறேன் !”

“வேண்டாம்! நானே மேல வரேன்..

கல்யாணத்துக்கு முன்னாடி எத்தன பூவேல பண்ணி டேபிள்கிளாத் , கர்ட்டன் எல்லாம் வச்சிருந்தேன்.எல்லாத்தையும் கட்டி பரண் மேல போட்டாச்சு.

என்னமோ எனக்கு சமையல் மட்டும்தான் வரும்னு எல்லாருக்கும் என்னக்கண்டா எளக்காரமா போச்சு..

முதல்காரியமா அத எடுத்து எல்லோருக்கும் காட்டினாத்தான் நான் யாருன்னு புரியும்…!!”

“விஜி..ஏற்கனவே முட்டிவலி! முட்டிவலின்னு பாதிநாள் அம்மாதான் சமைக்கிறா..! நீ மேல ஏறி எங்கியாவது படுத்துட்டேன்னா…?”

“ஏன்.. சமையலும் அவ்வளவுதான்’ னு சொல்றேளா..!”

“ஜக்கு! வாடா ! வந்து ஏணியப் பிடிச்சுக்கோ..”

“உருப்படியா ஒரு மேட்ச் பாக்க முடியாது இந்தாத்துல..!”

விஜி தத்தி கித்தி மேலே ஏறிவிட்டாள்..

“அய்யா..! அம்மா! அம்மா!”

கிரி அம்மா இடுப்பைக் கட்டிக் கொண்டான்..

***

மேலே ஒரே சிரிப்பும் , கூத்தும் கும்மாளமுமாய்..!

ஆளாளுக்கு அங்கேயே கடை பரப்பி வைத்துக்கொண்டு..!

கிரி பழைய உடைந்து போன கார் டயர்களை ஒட்ட வைப்பதில் மும்முரமாய் இருந்தான்…!!

“ அப்பா! இங்க பாருங்க!! சாம்பு மூக்கு எப்படி நீட்டிண்டு !! கோபுலு படத்தை பாத்துண்டே இருக்கலாம்..!

பாருவைச் சுற்றி ஒரே புத்தகங்கள்…

அம்மா எதையோ புதையலைக் கண்டுபிடித்தமாதிரி,
“இங்க பாருங்கோ!! டிரான்சிஸ்டர்..!”

“ அத குப்பைலதான் போடணும்..! தா! பாடறதான்னு பாக்கறேன்.!”

சபேசனுக்கு ஒரு நப்பாசை…

பாரு அம்மா கையிலிருந்து பிடுங்கினாள்.

ஏதோ ஒரு ஸ்விட்சை திருப்பினாள் ..

“மன்மத லீலையை வென்றார் உண்டோ…??”

“தியாகராஜ பாகவதர் குரலா…??”

“அம்மா..! டிரான்ஸிஸ்டர் வொர்க் பண்றது ..!”

“ஏய்! பாரு!! அது பாடல!! நான்தான்…!”

அசடு வழிந்தார் சபேசன்…

“போறுமே !! வேற பாட்டே கெடைக்கலையா…??”

கீழே பாட்டிக்கு பொறுமை போய்விட்டது.

“வேலையை முடிச்சோமா , எறங்கி வந்தோமான்னு இல்லாம மேல என்ன கூத்து..???

எனக்கு நின்னு கால் கடுக்கறது.. நான் போய் சித்த நாழி படுத்துக்கணும்.

வெங்கலப்பான வந்தாகணும்.சொல்லிட்டேன்…!
சத்தம் காதப் பொளக்கறது.கதவ மூடிண்டு கும்மாளம் போடுங்கோ…!!

பாட்டி போய்விட்டாள்..

“ஏய்! பாரு ! லைட்ட போட்டுட்டு அந்த கதவ லேசா மூடி வை…”

சபேசன் இன்னும் அம்மாவுக்கு பயந்த பிள்ளைதான்…!!

***

“ஜக்கு தம்பி..! என்ன வீடு கொய்யட்டா இருக்குது ?? எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்களா ?? அம்மா என்னாண்ட ஒண்ணும் சொல்லவேயில்லியே!”

ஜமுனா அவர்கள் வீட்டில் முப்பது வருடங்களாய் வேலை செய்கிறாள்.குடும்பத்தில் ஒருத்தி.

எலி நுழையாத இடங்களில் கூட நுழைய உரிமை உண்டு.

ஜக்கு அவள் கேட்டதையே காதில் வாங்கிக் கொண்டதாய் தெரியவில்லை..

சமையலறையில் நுழைந்தவள் அங்கு சமைத்து மூடிவைத்திருந்த பாத்திரங்களைப் பார்த்தாள்..

“இங்கதான் இருக்காங்க போலியே..!”

துடைப்பத்தை எடுத்துக் கொண்டு பின்பக்கம் போனாள்.

“இந்த ஏணி எதுக்கு இங்க இருக்குது..?? எடுத்தா எடுத்த எடத்துல வைக்க மாட்டாங்க.! அப்பால ‘ஜமுனா, அதப்பாத்தியா.?? இதக்காணல‘ இதே பொழப்பா போச்சு…!!”

ஏணியைத்தூக்கி பின்பக்கத்தில் ஒரு மூலையில் சாத்தி வைத்தவள் மளமளவென்று வேலையை முடித்ததும்,

“ஜக்கு…அம்மா வந்தா நான் வந்து போனேன்னு சொல்லு..! என்ன டி.வி.யோ ? என்ன கருமமோ..??”

யாரு வந்தாலும் தெரியாது.. போனாலும் தெரியாது…!”

ஜக்குவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது..

இன்னுமா மேல உக்காந்து கொண்டாட்டம்..???

சமையலறையில் நுழைந்தவன் கடமுடாவென்று ஏதோ சத்தம் கேட்கவே மூலையில் பார்த்தால் எலி அழகாக உட்கார்ந்து கொண்டு ஒரு அப்பளத்தை நொறுக்கிக் கொண்டிருந்தது..

ஒரு கம்பை எடுத்து ஒரே போடாக போடுவதற்குள் ஒரே தாவாகத் தாவி வெளியே ஓடி விட்டது….!

ஒரு வழியாக சொர்க்கவாசல் கதவு திறந்தது..

“ஒவ்வொத்தரா பாத்து இறங்குங்கோ..!

பாரு முதல்ல நீ எறங்கிண்டு அம்மாவ பத்திரமா பிடிச்சு எறக்கி விடு..!”

“அப்பா! நான்தான் முதல்ல.!”

“கிரி..! சொன்னாக்கேளு ! இல்லைனா ஒரு வெளையாட்டு சாமானும் கெடையாது..!”

“அப்பா..என்புக்ஸ்..! வெங்கலப்பான..”

“நீங்கல்லாம் முதல்ல எறங்குங் கோ! ஒண்ணொண்ணா எடுத்துத் தரேன்…”

“அப்பா.! ஏணி !ஏணியக்காணமே…?? யாரெடுத்தா…??”

“டேய்..ஜக்கு ! ஏணி எங்கடா…???”

“எனக்கென்ன தெரியும் ??? ஆங்..! ஜமுனாக்கா வந்து வேல பாத்துட்டு போனா..! எங்கியாவது எடுத்து வச்சிருப்பா!”

“போடா..போய்த் தேடி பாரு…”

“எனக்கு பசிக்கறதும்மா…!”

கிரி அழ ஆரம்பித்தான்.

அம்மா ஏணி எங்கயும் காணம்..மேல ஒரு பழைய டி.வி.இருக்கு..அது வொர்க் பண்ணினாலும் பண்ணும்…

மூன் டி.வி. ல பழைய சிவாஜி படம் போடறான்.!!

‘சம்பூர்ண ராமாயணம் ‘

மூணு மணி நேரம் போகும்…

பாத்துட்டு அங்கேயே பாய் இருக்கும்…. விரிச்சு படுத்துக்கோங்கோ…!

நான் நிம்மதியா மாட்சப் பாத்து முடிக்கிறேன்..”

“டேய்! சாப்பாடு..???”

கேரியர்ல வச்சு மேல அனுப்பறேன்.! டோன்ட் ஒர்ரி..”

“அப்பா.! அப்புறம்..அந்த எலி சமையல் ரூம்ல அப்பளத்த தின்னுண்டு என்ன மொறச்சு பாத்துது……ஒரே அடி…!”

“அடப்பாவி…! கொன்னுட்டியா..???”

“இல்ல..செத்தேன்.! பொழச்சேன்னு ஓடியே போச்சு…”

பாட்டி முழித்துக் கொண்டு விட்டாள்..

“வெங்கலப்பான கெடச்சுதா..??”

மேலேயிருந்து,

‘இன்று போய் நாளை வாராய்”

என்று சிதம்பரம் ஜெயராமன் குரல் பெரிதாக ஒலித்தது…

சபேசன் குரல் அச்சு அசல் அப்படியே இருக்கும்…

விஜி விசும்பி அழும் சத்தம் மெலிதாகக் கேட்டது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *