ஆரம்பம் எனும் ஓர் அனுபவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 23,664 
 

நான் ஏன் ஆரம்பித்தேன்? டில்லி செல்லும் டிரெயினில் ஏறி உட்கார்ந்து திருநெல்வேலி போகும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது என் பாடங்களுள் ஒன்று.

இங்கு நடந்த தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற போது அங்கு இருந்த சிலர், தாங்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களுக்கு என்னையும் எனக்குத் தெரிந்த தமிழர்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன். தாங்கள் நடத்தும் சிறு பத்திரிகை ஒன்றைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்கள். சில கதைகளும், பல கவிதைகளும் இருந்தன.

“மூன்று மாதங்களுக்கு ஒன்று” என்றார்கள்.

“இதை எங்கே வாங்குவது?” என்றேன்.

“இது கடைகளில் கிடைக்காது. சந்தா கட்டிவிடுங்கள். தபாலில் அனுப்பிவிடுவோம்”என்றார்கள்.

மீண்டும் பிரித்துப் பார்த்தேன். ஆசிரியர் குழுவினராகப் பெயர் போட்டுள்ளவர்களே உள்ளேயும் கதைகள் எழுதியிருந்தார்கள்.

“இதென்ன? இவர்கள் தங்கள் கதைகளை மட்டும்தான் பிரசுரித்துக் கொள்வார்களா?” என்று கேட்டேன்.

“அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் கூட எழுதலாம்” என்று கூறிச் சிரித்தார் அந்த நண்பர்.

“ஆகா! லகுவாய் மாட்டினார்கள்” என்று என் கணவர் எனக்கு மட்டுமே கேட்கிறாற்போல் கிசுகிசுத்தார்.

நான் கலகலவென்று சிரித்தேன். புத்தகம் தேடிக் கொண்டிருந்த ஒரு சிலரும் திரும்பிப் பார்த்தனர்.

“இப்படி இத்தனை தூரத்திற்கு வந்தும், தமிழார்வத்தினால் பத்திரிகை நடத்துகிறார்கள் என்றால் சும்மாவா? அதுவும் நம் இரட்டை மாநகர் தமிழ் மக்களுக்காக என்று வேறு போட்டிருக்கிறது. நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டாமா?” என்றேன் என் கணவரிடம்.

அவர் ஒன்றும் சொல்லவில்லை. சந்தாப் பணம் ஓராண்டுக்குத் தபால் தலையோடு சேர்த்துப் பத்து ரூபாய் கூட ஆகவில்லை. கட்டினோம். “இதற்கு பில் உண்டா?” என்று கேட்டார் என் கணவர்.

“இல்லைங்க! ஒரு நம்பிக்கைதான்!” என்றார் நண்பர்.

“அப்ப சரி!” என்று சொல்லி, எங்கள் வீட்டு அட்ரசை எழுதிக் கொடுத்துவிட்டு, புத்தகங்களைத் தேடித் பிடித்து ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

“நல்ல கதைங்க. உங்களுக்கு இவர் கதை என்றால் விருப்பமா?” என்று கேட்டார் அந்த நண்பர்.

“நான் படித்ததில்லை. அதனால் தான் வாங்குகிறேன்” என்றேன்.

என் கணவரோ சினிமாப் பாடல் காசெட் வாங்குவதில் மும்முரமாக இருந்தார். கதையே படிக்காத நல்ல மனிதர் அவர்.

அந்தப் பொருட்காட்சியை விட்டு வெளியே வந்து , வண்டியில் அமர்ந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் சொன்னேன், “பாவம், அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது”.

மறுநாளைக்கு மறுநாளே அவர்களுக்குத் தெரிந்து போயிற்று. ஏனெனில் மறுநாளே உட்கார்ந்து ஒரு கதை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி விட்டேன், ஒரு நீண்ட கவரிங் லெட்டரோடு.

தொடர்ந்து வந்த ஒரு ஞாயிறில் நாங்கள் வாங்கும் தினத்தாளில் ‘எங்கேஜ்மென்ட்’ பகுதியில் வந்த ‘தமிழ் ரீடர்ஸ் போரம்’ என்ற வார்த்தையைப் பார்த்துப் புளகித்தேன். அன்று மாலையே ஆறுமணி சுமாருக்குக் குழந்தைகள் இருவரையும் பத்திரமாக வீட்டிற்குள் அமர்ந்து டிவி பார்க்கச் சொல்லிவிட்டுத் துணையாக ஆயிரம் அறிவுரைகளையும் வழங்கிவிட்டுக் கிளம்பினோம் வாசகர் வட்டத்திற்கு.

தேடித் பிடித்து அந்தப் பார்க்கைக் கண்டுபிடித்து வண்டியை நிறுத்தி இறங்கினோம். அங்கங்கே சிறு சிறு கூட்டமாக மனிதர்கள். நாங்கள் எப்போதுமே பார்க்கில் போய் அமர்ந்து பழக்கமில்லை. ‘எது நம் ஆட்களாக இருக்கும்?’ என்று பார்வையைச் சுழல விட்டோம்.

“இதுவாகத்தானிருக்கும்” என்றார் என் கணவர், ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி. ஏனெனில் அங்கேதான் பெயருக்குத் தகுந்தாற்போல் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். அதிலிருந்த ஒருவர் நாங்கள் பொருட்காட்சியில் பார்த்த நண்பர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டு அவர்களை நெருங்கினோம். ஒரு பத்து ஆண்களும், ஒரேயொரு பெண்ணும் இருந்தார்கள். வட்டத்தைப் பெரிதாக்கி எங்கள் இருவருக்கும் இடமளித்தார்கள்.

ஹெல்மெட்டை முன் வைத்து நான் அந்தப் பெண்ணருகில் அமர்ந்தேன்.

“உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார் அந்தப் பெண்.

நான் சொன்னேன். “ஒ! நீங்கள் தானா? உங்கள் கதைகளை நான் படித்திருக்கிறேன்” என்றார்.

எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. அதற்குள் அந்த மாதம் வெளியான அவர்கள் பத்திரிகையை என்னிடம் நீட்டினார் நண்பர்.

“நீங்கள் தபாலில் அனுப்புவதாகச் சொன்னீர்கள். வரவில்லையே?” என்றேன்.

ஒரு கணம் திடுக்கிட்டுச் சமாளித்தாற்போலிருந்தது.

“நேற்றே அனுப்பிவிட்டோம்” என்றார். மறந்திருப்பார். பொய் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

“உங்களை இவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்”என்றார் நண்பர்.

எனக்குக் கூச்சமாக இருந்தது. என் கணவரைப் பார்த்தேன். அவரும் பேசாமலே அமர்ந்திருந்தார். பின், அந்த நண்பரே நான் கதையோடு அனுப்பிய கடிதம் மூலம் என்னைப் பற்றி அறிந்ததைத் தெரிவித்தார்.

நான் உடனே, கடிதத்தில் எழுத்தாக ஒரு புது விஷயத்தை அங்கு வெளியிட்டேன்.

“நான் ஒரு வருடம் கதை எழுதுவதைப் பற்றிப் படித்தேன்” என்றேன்.

“என்ன? என்ன? மீண்டும் சொல்லுங்கள்” என்றார் நண்பர்.

“நான் கதை எழுதுவது எப்படி என்று தபால் மூலம் படித்தேன்” என்று சொன்னேன்.

“அதெல்லாம் படித்து வருமா? தானாவே வர வேண்டும்” என்றார் நண்பர் அவசரமாக.

ஒரு நிமிடம் நான் அடிபட்டாலும், உடனே சொன்னேன். “இல்லை. இல்லை. அதில் சேர்ந்திருக்காவிட்டால் நான் கதையே எழுதியிருக்க மாட்டேன்”.

அந்த நண்பரும் தான் அவசரமாகச் சொன்ன வார்த்தைகளுக்கு வருந்துவார் போல, “அப்ப நல்லா கைட் பண்றாங்க போல” என்றார்.

அந்த வாசகர் வட்டத்தில் அன்றைய தலைப்பான பாரதியார் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் ஆரம்பமாகியது.

நாங்கள் அதற்கு முன் இலக்கியக் கூட்டம் எல்லாம் போனதுமில்லை. பார்த்ததுமில்லை. பேசாமல் அமர்ந்திருந்தோம். நண்பரும் மற்ற சிலரும் எழுதி வந்த குறிப்புகளைப் பார்த்து பாரதி வாழ்க்கை வரலாறு பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் சில மறுப்புகளும், சில அறிவுரைகளும், சில ஜோக்குகளுமாக நடந்து கொண்டிருந்தது வட்டம்.

இருட்டிக் கொண்டு வந்தது. ஆனால் பார்க்கில் விளக்கு எரியவில்லை.

இருவர் எழுந்து போய் வாட்ச்மேனிடம் பேசிவிட்டுத் திரும்பி வந்து உதட்டைப் பிதுக்கினர். ஒருவர் பாக்கெட்டைத் துழாவி காசு எடுத்துச் சென்று காண்டில் வாங்கி வந்தார். மீண்டும் பேச்சு தொடர்ந்தது.

கருத்தரங்கில் இப்போது கொஞ்சும் சலசலப்பு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்த ஒருவரை நிறுத்தச் சொல்லி இருவர் குசுகுசுக்க, அவர் தொடர, நான் என் கணவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்த பார்வையில், ‘நன்றாக வேண்டும் உனக்கு’ என்னும் வார்த்தைகள் பதுங்கி இருந்தன.

எனக்கு அங்கு நடந்தவற்றில் ஈடுபாடு போய், மனம் வீட்டில் விட்டுவந்த குழந்தைகளிடம் தாவியது. என் கணவரும் அதற்குள், “நாம் கிளம்பலாம்” என்றார்.

நாங்கள் நண்பருடனும், அவர் மனைவியான அந்தப் பெண்ணிடமும் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டோம்.

வீட்டு வாசலில் குழந்தைகள் விளையாடிக் கொண்ட்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் ஒருவர் மேல் ஒருவர் ஒரே புகார் மயம்.

“நான் சொன்னேனே, கேட்டாயா? என்னமோ உனக்குத்தான் தமிழ் சொந்தம் போல ஓடினாயே! என்னவாயிற்று?” என்றார் என் கணவர்.

நான் பேசவில்லை. என்ன இருந்தாலும் நான் பெண்தானே! இதுவே அவருக்கு விருப்பமுள்ள சப்ஜெக்டாக இருந்தால், தானே போய்விட்டு, கூட்டம் முடியும்வரை இருந்து பத்தோ, பதினொன்றோ எப்போது வேண்டுமானாலும் வரமுடியும். என்னால் தனியாக அப்படி பஸ்ஸில் போய் இருட்டில் வர முடியாதே! சும்மா ஆசைப்பட்டால் முடியுமா?

அதன் பின் அந்த மாதிரி கூட்டங்களுக்கு எல்லாம் போகவில்லை. ஒரு சனியன்று அவர்களிடமிருந்து கடிதம் வந்தது. மறுநாளைய வட்டத்தின் தலைப்பு, ‘தற்காலப் பெண் எழுத்தாளர்கள்’ என்று. அதற்கு எங்கள் இருவரையும் அழைத்திருந்தார்கள்.

எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, இரண்டே கதைகள் எழுதி எழுத்தாளராகி விட்டதில்.

ஆனால் மறுநாள் எனக்கு ஷார்ட் ஹாண்ட் பரீட்சை இருந்தது. இன்னும் படிக்க வேண்டிய ஹாவிங் பிரின்சிபிள், டபிளிங் பிரின்சிபிள், ஆஸ்பிரேட் என்று வரிசையாக என்னை பயமுறுத்தின.

என் கணவர் அலட்டலாகச் சொன்னார், “நீ வேணும்னா போயிட்டு வா”. நான் போகமாட்டேன் என்ற கெட்டி தைரியத்தில்.

இந்த மாதிரி சமயங்களில்தான் நாம் ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம் என்று எனக்குத் தோன்றும்.

இந்தக் கடைசி முதல் அந்தக் கடைசி வரை ஒரு வரி கூட விடாமல் படித்து, பின் அவற்றைப் பிய்த்து அடுக்கி பைண்ட் பண்ணும் என் போன்ற பைத்தியம் அவருக்குப் பிடிக்கவில்லை. அலுப்பத்த பாடு.

எனக்குத் தெரிந்த தமிழர்களின் வீட்டுக்குச் சென்று, இந்த வாசகர் வட்டம் பற்றிச் சொல்லி, விருப்பமிருந்தால் போய் வரும்படி சொன்னேன்.

அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல், “ஆமாம், ஒரு பக்கம் கதை எழுதுகிறேன், என்கிறாய். மறுபக்கம் ஷார்ட் ஹாண்ட் படிக்கிறேன் என்கிறாயே! வேலைக்குப் போகும் ஆசையா?” என்று கேட்டார்கள்.

“சும்மாதான். எதிர் வீட்டில் இன்ஸ்டிட்யூட் நடத்துகிறார்கள். ஒழிந்த நேரத்தை வீணடிக்காமல் கற்றுக் கொள்கிறேன்” என்று சமாளித்து வீட்டுக்கு வந்தேன்.

நான் எழுத ஆரம்பிக்கும் முன்பே என் கணவரை நச்சரித்து எதிர்வீட்டில் டைப் கிளாசுக்குச் சேர்ந்தேன். தொடர்ந்து ஹையர் பாஸ் செய்தேன். ஷார்ட் ஹாண்ட் சேர்ந்து ஒரு மாதத்தில் நிறுத்தி விட்டேன்.

“ஏன்?” என்றபோது, “தோட்டத்தில் புல் மண்டிவிட்டது” என்று காரணம் சொன்னேன். சிரித்தார் மாஸ்டர்.

அந்த ஷார்ட் ஹாண்ட் புஸ்தகத்தை அதே விலைக்கு விற்றுத் தருவதாகக் கேட்டார். “இல்லை, நான் என்றாவது ஒரு நாள் படிப்பேன்” என்று சொல்லிக் கொடுக்க மறுத்தேன்.

பின் மீண்டும் சேர்ந்தேன். இப்போது ஏன் சேர்ந்தேன் என்று என் கணவர் கேட்டார். ஸ்பஷ்டமாக பதில் சொன்னேன்.

“என்னைப் பற்றி எனக்குக் கர்வம் உண்டு. பள்ளியிலும் சரி. கல்லூரியிலும் சரி. எப்போதுன் முதல் மார்க் வாங்குவேன்.அதே அளவு உழைப்பும், புத்திசாலித் தனமும் இன்னும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகச் சேர்ந்தேன்” என்று.

மூன்று மாதம் போயிருக்கும். குழந்தைகளுக்கு ஏப்ரல் பரீட்சை. என் கிளாஸ் கட். தொடர்ந்து லீவுக்கு ஊருக்குப் போனோம்.

என் முதல் கதை பிரசுரமானபோது என் அம்மா எழுதிய கடிதம் என் கண்ணீரை வரவழைத்தது.

“உன் பெயரைப் பார்த்தேன். நீயாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அந்தக் கதையைத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடமே ஆகிவிட்டது” என்று.

இதை விட வேறு என்ன வேண்டும்? நான் ஜென்மம் எடுத்த பலன் தீர்ந்து விட்டாற்போல் தோன்றியது.

ஊரில் என் அக்கா கேட்டாள், என் பையனிடம், “ஏண்டா, உங்கம்மா உங்களுக்குச் சாப்பாடு எதாவது போடுவாளா? இல்லை, கதை எழுதிக் கொண்டு உட்கார்ந்திருபாளா?”

கடிதத்தில் என் கதையைப் படித்துச் சந்தோஷத்தை வெளியிட்ட என் ககோதரிகள் கூட, நேரில் பார்த்தபோது “நாங்கள் உன்னை விட நன்றாகவே எழுதுவோம்” என்று சொன்னபோது மனம் காயம்பட்டது.

இவர்கள் எழுதுவதை நான் கையைப் பிடித்துத் தடுக்கவில்லையே!

லீவு முடிந்து ஊருக்கு வந்து மீண்டும் ஷார்ட் ஹாண்ட் வகுப்பில் சேர்ந்தேன். எல்லாம் மறந்து போயிருந்தது. திரும்பவும் பிபி டிடி என்று படிக்க வேண்டியிருக்குமோ என்று பயமாக இருந்தது.

ஆனால் மாஸ்டர் தைரியம் கொடுத்தார். “ஜெனரல் கண்ட்ராக்ஷன் முதல் எழுத ஆரம்பித்தால் போதும். தானே வந்துவிடும்”.

அவர் சொன்னது உண்மைதான். நாலே நாட்களில் ஸ்பீட் எழுத ஆரம்பித்தேன்.

பரீட்சைக்குத் தயார் செய்ய வேண்டுமென்பதற்காகத் தொடர்ந்து மூன்று மாதங்களும் கதை எழுதுவதையோ படிப்பதையோ முற்றுமாக நிறுத்தியிருந்தேன்.

அந்த அரையாண்டுத் தேர்வில் என் கவனிப்பு இல்லாமல் குழந்தைகள் ராங்க் குறைந்து போனது. என்னைப் பரீட்சை ஹாலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் அழைத்துப் போக வந்திருந்த என் கணவர், என் சிரித்த முகத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஏனென்றால் ஷாட் ஹாண்ட் என்றால் கஷ்டம். ஒரே தடவையில் பாசாக முடியாது என்றெல்லாம் எங்களிடையே பரவலான பயம் ஒன்று இருந்தது.

இரண்டு மாதம் கழித்து வந்த ரிசல்ட் நான் பாசாகி விட்டேன் என்றது.

“வெறும் பாஸ்தானே! கிளாஸ் வரவில்லையே?” என்று குறைப்பட்டார் என் கணவர்.

மீண்டும் கதை எழுத உட்கார்ந்தேன். புதிதாக எந்தக் கருவும் உருவாகாமல் பழைய குறிப்புகளிலிருந்து எடுத்து எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து திரும்பிவந்த கதைகள் என் உற்சாகத்தைத் தடை செய்தன.

ஒரு கதையைச் சித்தரிக்கும்போது, அன்று இரவு முழுவதும் தூக்கம் வருவதில்லை. அந்த கதா பாத்திரங்களோ, சம்பாஷணையோ வந்து தூக்கத்தைக் கெடுக்கிறார்கள்.

வெறுமே வீட்டிற்குள் உட்கார்ந்திருந்தால் உலகம் தெரியாது என்று, இங்கு சிறிது தூரத்தில் இருக்கும் மகிளா மண்டலியில் முப்பது ரூபாய் பணம் கட்டி மெம்பராகச் சேர்ந்தேன். அங்கு ஹிந்தி ஆதிக்கமே ஓங்கியிருந்தது.

அங்கிருந்த ஐந்தாறு தமிழ்ப் பெண்மணிகளோடு பழக்கம் ஏற்பட்டது. என்னைப் பற்றி என் தோழி அவர்களிடம், ‘இவள் கதை எல்லாம் எழுதுவாள்’ என்று குட்டைப் போட்டு உடைத்து விட்டாள்.

அவர்கள் எல்லோரும் ஆவலாக என்னைச் சூழ்ந்துகொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்.

“எழுத்தாளர் என்றால் சமூகத்தில் அந்தஸ்து உயர்கிறது” என்று என் பாடத்தில் வந்த வாசகங்கள் நினைவுக்கு வந்தன.

ஒருத்தி மட்டும், “ஆமாம், என்ன வேண்டிக் கிடக்கிறது? திரும்பத் திரும்ப ஒரே மாதிரிக் கதைகள்!” என்று அங்கலாய்த்தாள்.

அவள் ஒரு புத்தகம் விடாமல் கிளப் மூலம் வாங்கி ப படிப்பவள். அப்படி ஒரே மாதிரியானவற்றைப் படிப்பானேன்! நிறுத்தி விடுவது தானே என்று நினைத்துக் கொண்டேன்.

அவள் வருத்தமெல்லாம் கதை மேலா அல்லது என் மேலா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.

“உங்களுக்கு ஏன் கதை எழுத வேண்டும் என்று தோன்றியது?” என்று மிகவும் ஆர்வத்தோடு ஒரு பெண் கேட்டாள்.

என்னிடம் இதற்குப் பதில் தயாராக இல்லை. நடிகைகள் சொல்வது போல் கலைச் சேவை என்றோ, அரசியல்வாதிகள் சொல்வது போல் பிரஜா சேவை என்றோ சொல்ல முடியாதே!

இதைப் பற்றி நான் விரிவாக யோசித்தபோது, என் ஜாதகத்தை பல வருடங்கள் முன் பார்த்த ஜோசியம் தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

“இந்த தேதியில் பிறந்து, இந்த மாதிரி ஜாதகம் உள்ளவர்களுக்கு மொழிப் பற்றும் இலக்கியப் பற்றும் இருக்கும். கலையார்வம் உள்ளவர்கள். அது எந்த விகிதத்தில் இருக்கும் என்பதற்கு இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும்” என்றார்.

அதனால் என்னை இந்த ஜாதக விசேஷம்தான் வழி நடத்துகிறதோ என்று நினைத்துக் கொண்டேன்.

“எப்படி தைரியமாக முன்னூறு ரூபாயை அதில் போட்டாய்?” என்று ஆச்சர்யப்பட்டாள் ஒரு பெண். நான் கதை எழுதக் கற்ற கோர்ஸைப் பற்றி கேட்கிறாள் அவள்.

இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை. அவசியமுமில்லை என்று தோன்றியது. இப்படிக் கூடக் கேட்பார்கள் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. மாசா மாசம் புடவையில் பணத்தைப் போடும் பெண்கள் எவ்வவளவு பேர் இல்லை?

ஒவ்வொரு முறையும் கதை உருவாகும்போதும், பரபரவென்று பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கும்போதோ, காய்கறி நறுக்கும்போதோ, அனிச்சையாக பழக்க தோஷத்தால் செய்யும் எந்த வேலையையும் முடித்து விட்டு, கைகளைத் துடைத்துக்கொண்டு, லேசான ஈரக் கைகள் அழுந்த நோட்டில் எழுத ஆரம்பிக்கும்போது குழந்தைகள் வந்து பாடத்தில் சந்தேகம் கேட்டாலோ, ‘என்னம்மா எழுதறே?” என்று கேட்டாலோகூட என் கவனம் திரும்புவதில்லை. பாவம், குழந்தைகள்.!

ஒவ்வொரு கதைக்கும் இரண்டு பிரசவங்கள் என்று நான் நினைத்துக் கொள்வேன். மனதில் உருவான கரு எழுத்து வடிவம் பெற்று என் அங்கீகாரத்தைப் பெறுவது ஒன்று. பின் தபாலில் பயணித்து, பத்திரிக்கை ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெற்றுப் பிரசுரமாவது மற்றொன்று.

நான் கிறுக்கலாக எழுதிய ரப் வொர்க்கை என் கணவரிடம் காட்டி, அவர் படிக்கக் காத்திருப்பேன். ஆனால் அவரோ கதை என்றாலே காத தூரம் ஓடுவார்.

ஒவ்வொரு முறையும் கெஞ்சத்தான் வேண்டும். அவர் படித்துப் பார்த்து கமெண்ட் சொல்லாவிட்டால் பத்திரிகைக்கு அனுப்பும் தைரியம் எனக்கு வரவில்லை.

“ஏன், கடிதங்கள் எழுதுவதில்லையா? நாம் எழுத நினைத்ததை எழுதியிருக்கிறோமா என்று படித்துப் பார்த்ததும் புரிந்து போகுமே!” என்று என் கணவர் ஒரு முறை கேட்டார்.

ஆனால் கடிதம் வேறு, கதை வேறு அல்லவா? ஆனால் அவரோ நோட்டுப் புத்தகத்தைக் கையில் கொடுத்ததும், முதலில் எவ்வளவு பக்கங்கள் எழுதியிருக்கிறேன் என்று புரட்டிப் பார்ப்பார்.

“ஐயோ! இவ்வளவு பக்கங்கள் என்னால் படிக்க முடியாது” என்று அலறுவார்.

எங்கே படித்துப் பார்க்காமலே பக்கங்களைத் திருப்பி விடுவாரோ என்று நான் அருகிலேயே காவல் இருப்பேன்.

“நீ கிறுக்கிக் கிறுக்கி எழுதி இருக்கிறாய். எனக்குப் படிக்கக் கஷ்டமாயிருக்கு” என்பார்.

“அந்த இடத்தில் இதுவாகத்தான் இருக்கும் என்று படிக்க முடியாதா? நீங்கள் படித்துப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் நான் பேர் காப்பி எடுக்க முடியும்” என்று கெஞ்சுவேன்.

ஆனால் அவருக்கு இந்த உத்தியோகம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தினமும் ஆபீசிலிருந்து வந்ததும், “ஐயோ! கதையா?” என்று பயப்படுவார்.

“இது என்ன நீ! என்னைப் பற்றியே எழுதி விட்டாய்?” என்று எரிச்சல்படுவார்.

ஒரு பிரபல ஆங்கில நாவலாசிரியரின் சுய சரிதையைப் படிக்க நேர்ந்த போது, அவருடைய ஆரம்ப காலக் கதைகளின் ரீ மேக் போலிருந்ததாகப் படித்திருக்கிறேன்.

என்ன இருந்தாலும் ஆரம்பங்கள் எல்லாமே ஒரு அனுபவம்தானே. குழந்தை வயிற்றில் இருக்கும் போதும் உதைக்கிறது. வெளியில் வந்த பின்னும் உதைக்கிறது. சுகமாயில்லை? குழந்தைக்கு முதன் முதலில் பாலூட்டும்போது விண் விண் என்றும், சுருக் சுருக்கென்றும் பலவித வினோத வலிகளோடு பால் ஊறுகிறதே! அது போலத் தான் இந்த ஆரம்ப அனுபவங்களும்.

– கணையாழி- மே, 1988ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *