கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,742 
 

அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர்.

அரசன் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டான். அப்போது ஒர்அறிஞன் பிச்சைக்காரனைப் போல் வேடம் பூண்டு, தன் கையில் செல்லாக்காக ஒன்றை வைத்துக்கொண்டு, “இவ்வரசன் என்னிலும்பணக்காரனல்ல; இவ்வரசன் என்னிலும் பணக்காரனல்ல” என்று கூவிக்கொண்டேயிருந்தான்.

அரசனது காவலர்கள் அவனை தாக்க முயன்றனர். இதுகண்ட அரசன் அவனை அடிக்க வேண்டாம் என்று தடுத்து, ‘அந்தக் காசைப் பிடுங்கிக் கொண்டு அவனை விரட்டிவிடுங்கள். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்’ என்று கட்டளையிட்டான்.
ஆட்கள் அவ்வாறே செய்தனர். பல்லக்கு தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரன் அங்கு வந்து நின்று கொண்டு, “என்னிலும் ஏழையான அரசன் என் காசைப் பிடுங்கிக் கொண்டான். என்னிலும் ஏழையான அரசன் என் காசை பிடுங்கிக்கொண்டான்” என்று உரத்துக் கூவினான்.

அதுகண்ட அரசன், தன் காவலாளியிடம், “முன்பு அவன் தன்னைவிடப் பணக்காரணல்ல என்றுதான் சொன்னான். இப்போது தன்னைவிட ஏழை என்று என்னைச் சொல்லுகிறான். இது என் செல்வத்தையே பழித்துக் காட்டுவதாக இருக்கிறது. போனால் போகிறான் காசை அவனிடம் கொடுத்து விரட்டுங்கள்” என்று கூறினான். காவலர்களும் அப்படியே செய்தனர்.

பல்லக்கு மேல வீதியில் வந்தது. அங்கு நின்று கொண்டிருந்த அப்பிச்சைக்காரன், “அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான். அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான்” என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான்

அரசன் சினந்து, அவனைக் கொல்ல தன் வில்லையும் அம்பையும் எடுத்தான். பிச்சைக்காரன் ஒடி மறைந்தான்.

பல்லக்கு வடக்கு வீதியில் வந்தது, அங்கு நின்று கொண்டிருந்த பிச்சைக்காரன். “பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான். பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான்” என்று அலறிக் கொண்டேயிருந்தான். காவலர்கள் அவனைப் பிடித்துத் துன்புறுத்த முயன்றனர்.

அவர்களை அரசன் தடுத்து, அவன் பிச்சைக்காரணல்ல அறிஞன் என உணர்ந்து அறிவிலும், செல்வத்திலும், வீரத்திலும் எனக்கு இணை எவருமில்லை என்ற என் இறுமாப்பை அழித்து ஒழித்த பேரறிஞன் இவனே.” எனப் பாராட்டிப் பொருளுதவியும் அளித்து அனுப்பி வைத்தான்.

அக்கால அரசர்களில் இப்படியும் சிலர் இருந்ததாகத் தெரியவருகிறது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *