கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 29,808 
 

சுமார் ஒன்பது மணி இருக்கும், ஒரு நாள் காலையில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் நடந்து வந்ததும் , வேலூர் பஸ் மெதுவாக நகர்வதைக்கண்டேன்.

பதற்றத்துடன் சற்று வேகமாக நடக்கவே, அதை கண்டு கொண்ட கண்டக்டர் விர்ர்ர்ர்ர்… என விசில் அடித்தார். பஸ் நின்றது !

“வாங்க சார் சீக்கிரம், டைம் ஆவுது…..“ கண்டக்டர் எனக்கு பதில் அவர் கையசைத்து அழைத்தார்.

சற்று துரிதமாக நடையை கட்டினேன். பஸ்ஸில் ஏறியாகி விட்டது, “தேங்க்ஸ்…” கண்டக்டருக்கு தெரிந்தவன் போல் பாவனை செய்து, “நேரத்தோடு பஸ்ஸே கிளப்பிட்டீங்களே …” என்றேன். அவரும் சற்று இளித்தபடி, “சார் நீங்கள் வருவதை தூரத்திலிருந்து பார்த்து விட்டேன், இன்னும் ரண்டே நிமிஷம் தான்…. வண்டி புறப்பட்டு விடும்.. என்றார்.

“அப்படின்னா, பஸ் மெதுவாக ஏன் நகர்த்தினார் டிரைவர்?” நான் கேட்டேன், சற்று மூச்சு வாங்கியபடி.

“மக்கள் நிக்கிற பஸ்ஸில் ஏறமாட்டாங்க, பஸ் போவுதுன்னா, அப்பத்தான் ஏறுவாங்க, சில நேரம் கௌர்மெட் பஸ் வந்தால் ஃபாஸ்ட்டா போவும் என்று அதில் ஏறி விடுவதும் உண்டு அதனாலே, எடுக்கிற மாதிரி டிரைவர் பாசாங்கு செய்வார்”, ஒரு பெரியவர், அனுபவசாலி, கடகட என சொல்லித்தீர்த்தார்.

அனைவரும் சற்று சிரிக்க, காலி இடங்கள் நிறைய ஆரம்பித்தன. நானும் ஒரு வின்டோ சீட் பார்த்து அமர்ந்துகொண்டேன். என் அருகில் ஒரு இளைஞன் அமர்ந்தான். பஸ்ஸும் தன் சேரும் இடத்தை நோக்கி புறப்பட்டது.

சற்று நேரத்தில், பஸ் நிறைந்து, மக்கள் நிற்க வேண்டிய நிலையும் வந்தது. போகப்போக நெருக்கடியும் அதிகமானது, கண்டக்டர், நெளிஞ்சி வளைந்து, புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது போல் நின்று அனைவருக்கும் டிக்கட்களும், சில்லரையும் பரிமாறிக்கொண்டிருந்தார். இப்படித்தான் ரஜினி காந்துக்கும் இயற்கையாக பல ஸ்டைல்ஸ் வந்திருக்குமோ என தோன்றியது!! பெரிய நோட்டு கொடுத்தவர்களுக்கு டிக்கெட்டின் பின்புறம் குறித்து, வேலூரில் இறங்கும் பொழுது தவறாமல் சில்லரை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். வேறு வழியின்று அவர்களும் அரை மனதுடன், தலையசைத்தனர். பஸ் மாதனூர் வந்தடைந்தது.

“மாதனூர் யார், எறங்கிக்கோங்கோ…” கண்டக்டரிடமிருந்து வீல்… என விசில் சத்தம்…” நின்றவர், அமர்ந்திருந்தவர் என சிலர் இறங்க ஆயத்தம் ஆய்க்கொண்டிருந்தனர். அதை அறிந்தும் சிலர் அவர்கள் படிகட்டுவரை போகமுடியாமல் தவிப்பதை கண்டும் காணாமல் இருந்தனர். அதற்கும் கண்டக்டர் தான். அவருடைய அறிவுரைத்திட்டுகளில்லாமல், ஒரு காலடியும் நகராது. இது நம் மக்களுக்கு பழகிவிட்டது. இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக சர்வ சாதாரணமாக விட்டுவிடுவர். காமன் ஸென்ஸைப்பற்றி பேசக்கூடாது, அது பாவம்.

இறங்கவேண்டியவர் ஒரு வழியாக மனிதப்புதருக்குள்ளிருந்து தப்பித்து வாகனத்தைவிட்டு வெளி வந்ததும் “அப்பாடா…” என பெரு மூச்சு விட்டனர். அடுத்து வந்தது ஏறுபவர் படலம், துள்ளி குதித்து, தாவி ஆண்களும் பெண்களுமாக மக்கள் பஸ்ஸுக்குள் நுழைந்தனர். விசில் சத்தம் கேட்டவுடன், ஓட்டுநர் தன் வேலையை ஆரம்பித்து விட்டார்.

இரண்டே நிமிடத்தில், ‘யம்மா ஆ ஆ ஊ’ என ஒரு பெண்மணியின் வேதனைக்குரலால் அனைவரும் மிரண்டனர். திரும்பி பார்த்த பொழுது, சற்று முடி நரைத்த ஒரு அம்மா, கூட்டத்தில் போரடிக்கொண்டிருந்தார். இடது கையால், இருக்கையின் விளிம்புகளை பிடிக்க தேடி தடவிக்கொண்டிருந்தார். அவர் விழாமலிருக்க அக்கம் பக்கத்தவர், அவரை தாங்கிக்கொண்டனர். தன் வலது கையை முன்னுக்கு மடக்கி முந்தானியால் போர்த்திக்கொண்டிருந்த அந்த முதிய வயதை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்மணியை அமர்ந்திருப்பவர் யாரும் எழுந்து, அமரச்சொல்லவில்லை. “‘லேடீஸ் ஃபரஸ்ட்’ எல்லாம் மலையேறிவிட்டது, சம உரிமை கோரும் பெண் இனமே, ஒவ்வொருவரும் சுயநலவாதியாகி விட்டனர்,” என அருகில் அமர்ந்திருந்த பையன் முணுமுணுத்தானே தவிர அவனும் சிறிதும் இரக்கப்படவில்லை. “ஐயோ கை….” என சத்தம் கேட்டு, நான் எழுந்தேன், என் சித்தி வயதில் இருந்த அந்த பெண்மணியை அழைத்தேன். அருகில் இருந்த பையனை ஒதுங்க சொல்லி, அவன் விண்டோ பக்கம் நகர, நான் வெளியேவந்து, காலியிடத்தில், அந்த பாவப்பட்ட பெண்மணியை அமரச்செய்தேன். வலது கையை மடித்தபடியே, வேதனைப்பார்வையோடு என்னை ஏறெடுத்துப்பார்த்தாள். அவள் கண்களில், சோகமும், கோபமும் குடிகொண்டிருந்ததே தவிர, நன்றி சொல்லும் அளவிற்கு அவள் சந்தோஷமாக தன் சுயநிலையில் இல்லாமலிருந்ததை என்னால் அறிய முடிந்தது.

ஆற அமர சற்று நேரம் ஆயிற்று. பெரு முச்சுவிட்ட அந்த பெண்மணி, அடிக்கடி, தன் முந்தானையால் போர்த்தப்பட்ட கையின் மேல் வாயினால் ஊதியபடி ஒரு அமைதியற்ற நிலையில் இருந்தாள். தன் கண் பார்வையை கையின் மீதே வைத்திருந்தாள். சற்று நேரம் கழிந்து, என் வின்டோ சீட்டைவிட்டு அந்த பையன் எழுந்து வந்தான். அவனுக்கு போக இடம் கொடுத்த அந்த அம்மை, என்னை நோக்கினாள். அவள் பேச வில்லை, ஆனால், அவள் கண்கள் பேசின. என்னை அமரும் படி சொன்னது போல் தோன்றியது எனக்கு. அதற்கேற்றார் போல், அவளும் விண்டோ பக்கம் நகர்ந்து சீட்டையும் என்னையும் பார்த்தாள். நான் கண நேரத்தில் புரிந்து கொண்டேன். காலி இடத்தில் அவள் அருகில், மெதுவாக அவள் மட்டும் கேட்கும் படி “நன்றிம்மா…” என கூறி அமர்ந்தேன். அவள் முக பாவனை கஷ்டப்பட்டு பலவந்தமாக புன்முறுவலை வரவழைத்தது போல் தோன்றியது.

நிசப்தம்… இன்னும் சற்று தூரம் பஸ் போய் இருக்கும், அமைதியற்று காணப்பட்ட அந்த பெண் தன் இடது கையில் வைத்திருந்த கைக்குட்டையால், தன் கண்ணீரை துடைக்க முயற்சித்தாள். அவள் அழுகிறாளா? எனக்கு வயிற்றை கலைத்தது. அவள் ஏழையாகவோ, கஷ்டப்பட்டு உழைக்கும் பெண் தொழிலாளியாகவோ தெரியவில்லை. அவள் தலை முடி அலங்கோலமாவும் இல்லை. நன்றாக, எண்ணெய்யிட்டு சீவிய தலை முடி, ஆங்காங்கே முதிர்ச்சியால் படர்ந்த வெள்ளி நிற கோடுகள் போன்ற நல்ல அமைப்பான சிகை அலங்காரம், காதில் கச்சிதமாக அமைந்திருந்த காதணிகள், கழுத்தில் அடக்கமான தங்க சங்கிலி, இடது கையிலும் இரண்டு தங்க வளையல், அவள் கட்டியிருந்த சேலை உடுத்தியிருந்த ரவிக்கை, ஆக அனைத்தும் அவளை நிச்சயமாக ஒரு நடுத்தர நல்ல குடும்பத்தைச்சேர்ந்தவளாக அடையாளங்காட்டின. அவள் கண் துடைக்க தடுமாறுவதை கண்ட நான் என்னை அறியாமலேயே அவள் கைகுட்டையை வாங்கி அவள் வலது கண்ணிலிருந்து அவள் துடைக்க முடியாமல் படர்ந்திருந்த கண்ணீரை துடைத்தேன்.

அவள் என் பக்கம் இரக்கத்துடன் திரும்பினாள், ஏதோ சொல்லப்போகிறாள் என பயந்து போன நான், “என்னம்மா? ஏன் அழுறீங்க…” என்ன ஆச்சு? என கேட்டேன். “இல்லே தம்பி … என் கை…” ரொம்ப எரீது தம்பி….” தாங்க முடியலே…”

மீண்டும் அழுகை…

“கைக்கு என்ன ஆச்சி, கீழே விழுந்துட்டீங்களா? எலும்பு முறிவா?”

“இல்லே… கீழே விழலே…” அவளுக்கு துக்கம் தொண்டையை கட்டியது. சிரமப்பட்டு, அழுகையை நிறுத்த போராடுவதை நான் அறிந்தேன். பேச்சை மாற்றி, அவள் பரிதவிப்பை குறைக்க எண்ணி, “எந்த ஊர்ம்மா உங்களுக்கு” என கேட்டேன்.

“தம்பி எனக்கு மாதனூர் தான். இட்லி வியாபாரம் செய்றேன், விட்டிலே சமைச்சு காலை ஆறு மணியிலேயிருந்து பத்து மணி வரைக்கும் விப்பேன்.”

“சரி…”

“உங்க கையே பாக்கலாமா…”

வித்தியாசமாக தென்படுவோரை அணுகி, அவரைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு புதிதல்ல. என் சுபாவமே அப்படித்தான். என்னுடன் மார்கெடிங்க்கு வரும் என் நண்பன், யாரையாவது பஸ்ஸில், வித்தியாசமாக இருப்பதை கண்டுகொண்டால், என்னுடன் பேசி, அவரை விசாரிக்க சொல்வான், சிரித்துக்கொண்டே. அவன் சொல்லும் முறையே தனியாகத்தான் இருக்கும் . என்னை அழைத்து – “குரு ஹோஜா ஷுரூ” என்றதும் என் வேலையை ஆரம்பித்துவிடுவேன். நான் கேட்கும் கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டே நம் பயணத்தை முடிப்போம். அப்படி இன்டெர்வியூ எடுத்த சுவரஸ்யமான பல உண்மை நிகழ்சிகள் உண்டு. அதில் ஒன்றுதான் இது. உடம்பு முழுக்க, முகத்தையும் சேர்த்து வெறும் கட்டிகளுடன் ஒருவர், மாதக்கணக்கில் குளியாமலிருந்த அகோர ஜடா முனி சுவாமி, உதடுகளே இல்லாமல் வெறும் ஒரு சிறு துவாரமாக அமைந்துள்ள வாய் கொண்டவர் ஒருத்தர், நெத்தியில் ஒரு லட்டு பொருந்தும் அளவுக்கு குழி விழுந்துள்ள ஒருவர், இப்படி, இன்னும் பல விசித்திரமானவர்களுடன் உறவாடி அவர்களுடைய அனுபவத்தை கண்டறியும் பழக்கமும் ஆர்வமும் எனக்கு உண்டு.

“கட்டு போட்டுரிக்கீங்களா ? காட்ட வலி இல்லேன்னா, பாக்ரேன்.” என்றேன்.

அந்த அம்மா, தன் முந்தானியை நகர்த்தி கையை என் பக்கம் சிறிது நீட்டினாள். எனக்கு பகீர் என்றது. “என்னம்மா இது, இப்படி இருக்கு..” கை வெந்து போய் கொச கொச என்று முழங்கை வரைக்கும், வெறும் கொப்புளமாகவும் காயமாகவும், ஒவ்வொரு விரலும் ரஸ்தாளி வாழைப்பழம் அளவுக்கு வீங்கியும் இருந்தது, அவளால், விரல்களை அசைக்க முடியவில்லை. மருந்தோ, மஞ்சளோ தடவி, இரத்தத்துடன் கலந்து,… நீர் கசிந்து…. மிகவும் பரிதாபமாக காணப்பட்டது. இப்படி ஒரு கையை நான் பார்த்ததே இல்லை. அவள் மீன்டும் கையை தன் முந்தானியால் மூடிக்கொண்டாள்.

“எப்படிம்மா இது இந்த மாதிரி ஆச்சு…” நான் விடவேயில்லை.

“அதே ஏம்பா கேக்ரே… நேத்து சாம்பார் சட்டி பொங்கி வடிந்ததால் என் மவ அதை அடுப்பிலிருந்து இறக்கி வைத்திருந்தா. நான் இட்லி இறக்கி விட்டு, அந்த பொங்கிய சாம்பாரை விளிம்பிலிருந்து கையாலே துடச்சி சாம்பார் சட்டியிலே கையே விட்டு நன்றாக கலக்கும் போது தான் தெரிந்தது சாம்பார் சூடாக இருக்குன்னு. நான் அது ஆறிப்போய் இருக்கும்னு நெனச்சேன். ரண்டு வாட்டி தான் கலக்கியிருப்பேன், சூடு தெரிந்த உடன் கையே வெளியே எடுத்துட்டேன். ஆனால், முழங்கை வரைக்கும் வெந்து போச்சு….” கண்ணீர் மல்க தன் சோக நிகழ்சியை விவரித்தாள்.

“எந்த ஜன்மம் கண் பட்டதோ, யார் மூதேவி என் குறுக்கே வந்தாளோ, அன்னமிட்ட இந்த கை இன்னிக்கு இந்த மாதிரியாயிடிச்சி…” தினமும் சாம்பாரை கையாலேயே கலக்கி கொஞ்சம் நீர் ஊற்றி அதிலே கை அலும்பும் பழக்கம் உண்டாம். அதைக்கேட்டு நான் சிரிப்பதா, வேதனைப்படுவதா என்றே குழப்பமாகி விட்டது. சுற்று முற்றும் பார்த்தேன், முன் பின் சீட்டுகளில் இருந்தோர், நின்றுக்கொண்டிருந்தவர் சிலர் எங்களை கவனிக்காமலில்லை. கஷ்டப்பட்டு சிரிப்பு வெடிக்கும் என் வாயை பொத்திக்கொண்டு அருகில் இருப்பவர்களின் ரீஆக்ஷனை கவனித்தேன். அனைவரும் சிரித்த முகத்துடன் தென்பட்டனர். ஒரே நிமிடத்தில், அரை மணி நேர சோகம் பறந்து, சுற்றுபுறத்தையே மாற்றியமைத்த இந்த ரசனையான நிகழ்சி நினக்கும் பொழுதெல்லாம் புன்னகையை வரவழைக்கிறது.

“அப்புறம் என்ன செய்தீங்க?”

“நேத்து மருந்து தடவி, இன்னிக்கு தான் ஆஸ்பத்திரிக்கு போய்க்கொண்டிருக்கேன். ராத்திரியெல்லாம், தூங்க முடியலே.”

சிறிது நேரத்தில், பஸ் நிலயத்திற்குள் சென்றது. அவளை, கைகொடுத்து கீழே இறக்கி, ஆட்டோவில் அமர்த்தி, அவர் கூறும் ஆஸ்பத்திரிக்கு போகும்படி சொல்லிவிட்டு, என் பயணத்தை தொடர்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *