அனந்தநாராயணியின் அமெரிக்க விஜயம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 8,648 
 

பாட்டி அனந்தநாராயணியின் நடவடிக்கைகள் கொஞ்ச நாளாய் மர்மமாக தோன்றியது பேரன் வினீத்துக்கு.

எப்போதுமே பாட்டியின் அறை திறந்தே இருக்கும். ஆனால் பத்துநாளாய் பெரும்பாலும் உள்ளிருந்து தாள் போட்டிருக்கிறது.

‘பாட்டி.பாட்டி.’ என்று கூப்பிட்டாலும் பதில் இல்லை.

வீனீத்துக்கு இதைப் போய் பெரிது பண்ண விருப்பமில்லை.

அவனுடைய துப்பறியும் மூளை சுறுசுறுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்தது.

வெள்ளிக்கிழமை. பாட்டி கோவிலுக்குப் போனால் கொஞ்சத்தில் திரும்பமாட்டாள்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பாட்டியின் அறைக்கதவைத் தள்ளினான்.

நல்லவேளை.பூட்டவில்லை.தள்ளியதும் திறந்து கொண்டது.

உள்ளே நுழைந்து கதவை தாள் போட்டான்.

பெரிதாக ஒரு மாற்றமும் இருப்பதாய் தெரியவில்லை.

அலமாரியைத் திறந்தான்.

ஆச்சரியத்தில் மயக்கம் போடாத குறை.

மூன்று ஜீன்ஸ் பேண்ட். ஏழெட்டு டீ ஷர்ட். குதிகால் உயர்ந்த காலணிகள். இரண்டு ஜோடி அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் ஷுஸ்.. பெரிய ஹாண்ட் பேக். லிப்ஸ்டிக். மேக்கப் சாதனங்கள்.!!!

அம்மா மஞ்சரிக்கா இத்தனையும்.? இல்லை மகள் ராதிகாவுக்கா.? அப்படியெல்லாம் சுலபத்தில் வாங்கித்தரும் ஆளில்லையே பாட்டி..?

தவறிப் போய் அக்கா ரேகாவின் அறைக்குள் நுழைந்து விட்டோமோ.?

இல்லை.இது பாட்டியின் அறைதான்.தாத்தா படம் மாட்டியிருக்கிறது.பெரிய பிள்ளையார் படம்.!

அமெரிக்காவில் இருக்கும் இரண்டாவது மகன்
ரகுவரன். மருமகள் சமந்தாவின் பெரிய ப்ளோஅப்.
அதன் கீழ் இரண்டு பேரன்கள் ரோஹன்.ரிக்கி.!

வினீத்துக்கு இன்னும் புதிர் விடுபடவில்லை.

கீழ் தட்டில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை எடுத்தான்.

‘முப்பது நாளில் ஆங்கிலம் பேச. படிக்க.’

‘முப்பது நாளில் பால்ரூம் டான்ஸ்.’

‘இத்தாலியன் உணவு வகைகள்.

‘மெக்சிகன் ரெசிபி.’

மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.

‘பாட்டி.நீ படா கில்லாடி பாட்டி.’

வினீத்துக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது.

பாட்டி அமெரிக்கா போகிறாள்.!!

எண்பத்தைந்து வயதில் முதல்முறையாக.. அதுவும் தனியாக. தனது இரண்டாவது பையன் ரகுவரன் வீட்டிற்கு.

சத்தமில்லாமல் எல்லாம் வைத்தது வைத்தபடி கதவை சாத்திவிட்டு மாடிக்கு போய்விட்டான்.

வினீத்தின் பாட்டி ஒரு ஜாலி பேர்வழி. அவள் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது.

பாட்டிக்கு பதிமூன்று வயது பேரன் வீனீத் என்றால் உயிர்.

கோவிலுக்கு போன பாட்டி திரும்பி வந்தாள்.

“வெல்கம் பாட்டி.யூ லுக் வெரி பியூட்டிஃபுல்.!!!”

“என்னடா. .நக்கலா.?”

“இல்ல பாட்டி .உண்மையாலுமே. பாட்டி உங்களுக்கு சூப்பர் ஃபிகர். ஜீன்ஸ் போட்டா மிஸ்.சென்னைதான்.!”

பாட்டிக்கு புரிந்து விட்டது.

“டேய் . நான் இல்லாதப்போ என் அலமாரியக் குடஞ்சயா.?”

காதைத் திருகினாள்.

“ஐய்யோ.விடு பாட்டி.உண்மைய சொல்லிடறேன்!.ஆமா.உன்னோட ரகசியமெல்லாம் அம்பேல்.!

“டேய். வினீத். ப்ளீஸ்டா. யார் கிட்டையும் சொல்லாத. எனக்கு நீ நிறைய ஹெல்ப் பண்ணனும்டா.”

“அப்பிடி வா வழிக்கு.!”

“எனக்கு ரோஹன்.ரிக்கிய. பாக்கணும்னு ரொம்ப ஆச வந்துடுத்துடா. அப்பாதான் சாகற வரைக்கும் பிடிவாதமா இருந்துட்டா.!!

குருசரண் சரின்னு சொல்லிட்டாண்டா.இன்னும் ஒரு மாசத்தில விசாவாமே. அதுக்கு நேர்ல போணமாம். ப்ளீஸ்டா.! எனக்கு கொஞ்சம் சொல்லிக் குடுடா.!!

அனந்தநாராயணி ஒரு தனிப்பிறவி.

அவளுக்கு தெரிந்ததெல்லாம் அன்பு ஒன்றுதான். அவளைப் பொறுத்தவரை எல்லா ஜீவராசிகளும் ஒன்றே.

***

“பாட்டி. இன்னொரு வட இருக்கா.?”

“இல்லடா.சாரி.எல்லாம் காலி.!”

“இதோ. தட்டை போட்டு மூடி வச்சிருக்கியே. இரண்டு வட.ஒளிச்சு வைக்கிறயா.?”

“டேய்.அது நம்ப கோவிந்தா வுக்கு.பாவண்டா. அவளுக்கு வடன்னா உசிரு.”

கோவிந்தா எங்கள் வீட்டில் பத்து வருஷமாய் வேலை செய்பவள். பணத்துக்காக இல்லை. பாட்டியின் அன்புக்காக.

***

“ஏதோ ஒரு வெள்ளக்காரிய இழுத்துட்டு வருவானாம். நான் சரிங்கணுமாம்.!!”

“ஏதோ ஒரு வெள்ளைக்காரியில்லை. நம்ப ரகுவுக்கு பிடிச்ச, நம்ப வீட்டு மருமகளாகப்போற வெள்ளைக்காரி.”

பாட்டி எவ்வளவு கெஞ்சியும் நந்தகோபால் மசியவில்லை.

அவர் சாகும்வரை ஒத்துக்கொள்ளவேயில்லை.

பாட்டி மட்டும் பச்சைக்கொடி காட்டாமலிருந்திருந்தால் சமந்தவைமட்டுமல்ல..

ரகுவரனையும் அந்த குடும்பம் இழந்திருக்கும்.

***

“ம்ம்ம்.பாட்டி. மாக் இன்டர்வியூ ஆரம்பிக்கலாமா.?”
“என்னது மக்கா.நானா மக்கு.?”

“ஐய்யோ . பாட்டி. நான் இப்போ விசாவுக்கு பதில் சொல்ல கத்துக் குடுக்கப்போறேன். அதுக்கு சாம்பிள் தான் இப்போ.!!

ரெடியா.?நேத்திக்கு சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா.?”

“ஓ. . யெஸ்.!”

“வாட்ஸ் யுவர் நேம்.?”

“ஆனி.”

“வாட்.?ப்ளீஸ் கிவ் யுவர் நேம் அஸ் இன் யுவர் பாஸ்போர்ட்.”

“அனந்தநாராயணி நந்தகோபாலன்.”

“வேர் ஆர் யூ பிளானிங் டு கோ.?”

“சிகாகோ.”

“ஹூ இஸ் தேர்.”

“ரகுவரன்.மை சன். வெரி நைஸ் பாய். இத்தாலியன் வைஃப்.”

“ப்ளீஸ் ஆன்சர் ஒன்லி டு மை கொஸ்டீன்.”

“ஓக்கே.ஓக்கே.”

“ஃபார் ஹௌ லான்ங்.?”

“டூ இயர்ஸ்.! ஐ லவ் மை பேரன்ஸ். ரோஹன் அண்ட் ரிக்கி.”

“ஸாரி.ஐ கான்ட் அலவ் டூ இயர்ஸ்.ஒன்லி சிக்ஸ் மன்த்ஸ்.”

“வொய்.? வொய்.?

மை சன்.மை ஹவுஸ். நான் எவ்வளவு நாள் வேணா இருப்பேன்.நீ யாரு கேக்கறது.?”

“நோ விசா.யூ கேன் கோ.?”
“நான் போகத்தான் போறேன். வெளில இல்ல . அமெரிக்காவுக்கு.நீ வேணா பாரு.!!”

“கிராண்ட்மா.ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் யுவர் லேங்க்வேஜ் . யு ஹாவ் இன்ஸ்ஸல்டட் அமெரிக்கன் எம்பஸி.நோ விசா ஃபார் டென் இயர்ஸ்.யூ கேன் லீவ் நௌ.”

“டேய் . வினீத். என்னடா. நான் என்னடா தப்பா சொன்னேன்.எம்பையனோட நான் எவ்வளவு நாள் வேணா இருப்பேன்.இவனுக்கென்ன வந்தது.?”

“பாட்டி.பாட்டி.நீ ரொம்பவே ஸ்வீட். இப்படியெல்லாம் சொல்லக் கூடாது.”

நான் சொன்னபடி கரெக்டா சொல்லணும்.சரியா.?”

சரியாக பத்து நாளில் விசா வந்துவிட்டது. அதுவும் பத்து வருடத்துக்கு ‘மல்ட்டிபில் ரீ என்ட்ரி.’

பாட்டியைத் தூக்கி தட்டாமாலை சுற்றினான்.

“பாட்டி , உனக்கு பத்து வருஷத்துக்கு விசா.!”

“பாத்தியா.நான் போட்ட போடுல பயந்துபோய் பத்து வருஷத்துக்கு.!

ஹாய்.ஜாலி.பத்து வருஷம் அமெரிக்கால.!!”

“பாட்டி.பாட்டி.சேந்த மாதிரி இருக்கமுடியாது பாட்டி.போய்ட்டு , போய்ட்டு வரணும்..

என்னாலஆகாதுப்பா.ரேகா. பாட்டிக்கு சொல்லிக் குடு.!! “

அடுத்த ஒரு வாரம் வீடே திமிலோகப் பட்டது.

ஒரு வழியாக பாட்டியை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றி விட்டார்கள்.

ஜீன்ஸூம்.வெள்ளை டீ ஷர்ட்டும்.
பாட்டி சூப்பர் கெட்டப்பில்.!

“பாட்டி.இனிமே சிகாகோ போய்தான் பாத்ரூம் போகமுடியும்.!!”

“ஏண்டா.?”

“நீ ஜீன்ஸுக்குள்ள நொழயப் பட்ட பாடு.? மறந்து போச்சா.?”

ஏர்போர்ட்டில் சுற்றி நின்றவர்கள் எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டார்கள்.

ஆனிப்பாட்டிக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது.

பாட்டியைத் தனியாக அனுப்ப குருவுக்கு விருப்பமே இல்லை. வீல் சேர் ஏற்பாடு பண்ண பாட்டி மறுத்து விட்டாள்.

“ஏண்டா. கையும் காலும் நன்றாக இருக்கும்போ எதுக்கு நடக்க முடியலன்னு பொய் சொல்லணும். நான் எட்டூருக்கு சமாளிப்பேன்.நீ கவலையே படாதே.!!!

எனக்கு ஜன்னல் சீட் வாங்கிடு.வேடிக்க பாத்துண்டே போவேன்.”

“பாட்டி.இது என்ன பஸ்ஸா.?ரயிலா? எல்லாமே நீலமாத்தான் தெரியும் பாட்டி.!”

ஏர்போட்டிலிருந்து எல்லாமே புதிதாய் இருந்தது பாட்டிக்கு.

விமானத்துக்குள் நுழைந்ததும் விமானப் பணிப்பெண் அழகாக கைகுவித்து “வணக்கம்”என்றாள்.

பாட்டிக்கு அவளை ரொம்ப பிடித்துப் போனது.

“அழகா இருக்கடியம்மா.!! தமிழ் நன்னா பேசறியே. எனக்கு கவல விட்டுது. உம்பேரென்ன.?”

“திவ்யதர்ஷினி.”

“திவ்யமா இருக்கு.இந்த புடவைல தங்கச்சிலை மாதிரியே இருக்க.!”

அவளுக்கு உச்சி குளிர்ந்திருக்க வேண்டும். சிகாகோ வரும் வரை பாட்டிக்கு ராஜ உபசாரம் தான்.இல்லை ‘ராணி உபசாரம்’

பாட்டிக்கு பக்கத்தில் ஒரு தமிழ் குடும்பம்.கேட்கவா வேண்டும்.?

“திவ்யா. நான் முட்டை கூட தொடமாட்டேன்.பாத்து பரிமாறு.”

“பாட்டி. உங்களுக்கு ஏசியன் வெஜிடேரியன் ஆர்டர் பண்ணியிருக்கு. கிச்சடி. ஊத்தப்பம், குலோப் ஜாமூன். தயிர் பச்சடி.!! பழங்கள்.!
பயப்படாம சாப்பிடுங்க.”

“பழைய சிவாஜி படம் இருக்குமா.?”

திவ்யா பாட்டிக்கு ‘திருவிளையாடல்’ வைத்துக் குடுத்தாள்.

பாட்டிக்கு ஏகக்குஷி.

எல்லாமே சரியாய் தான் போனது.பாட்டி பாத்ரூம் போகும்வரை.!!!

ஒரு வழியாக ரெஸ்ட்ரூமில் போய் கதவைத் தாளிட்டவுடன் விமானம் ஏகத்துக்கும் ஆட ஆரம்பித்தது.

ஒரு கையில் ஜீன்ஸைப் பிடித்தடி மறுகையில் வாஷ்பேஸினைப் பிடித்துக் கொண்டு விழாமல் சமாளித்துப் பார்த்தாள்.!!

அதற்குள் எல்லோரையும் தத்தம் இருப்பிடத்துக்குப் போகச் சொல்லி கேப்டன் உத்தரவு.

வினீத் சொன்னது நடந்தேவிட்டது.

எமர்ஜென்சி பெல்லை அமுக்கினாள் பாட்டி.

ஓடிவந்த திவ்யா.”பாட்டி.மே ஐ கம்இன்.? ஐ கேன் ஹெல்ப் யூ.டோன்ட் பானிக்.”

பாட்டி கதவைத் திறந்து விட்டாள்.

ஒரு வழியாக பாட்டியை ஸீட்டில் உட்கார வைத்து , பெல்ட்டை கட்டிவிட்டு ,

“பயப்படாதீங்க பாட்டி.யூ வில் பி ஆல்ரைட்.”என்று கூறி ஒரு கப் தண்ணியும் குடுத்தப்புறம் தான் பாட்டிக்கு மூச்சு வந்தது.

இருபது மணிநேரம் எப்படி ‘பறந்து’ போனது என்றே தெரியவில்லை.

பாட்டிக்கு இறங்கவே மனசில்லை.!

“ப்ரீத்தி.போய்ட்டு வரேன்.மாமியார சமாளிக்க நான் குடுத்த டிப்ஸெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ.”

பக்கத்து ஸீட்டில் இருந்த ப்ரீத்தியைக் கட்டிப்பிடித்து முத்தம் குடுத்தாள்.

“இதப்பாரு..நந்து.! ப்ரீத்தி மாதிரி ஒரு வைஃப் கெடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும்.கண்கலங்காம பாத்துக்கோ.”

நந்துவுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஏறினதும் லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு காதில் இயர்ஃபோனை மாட்டிக்கொண்டவன் தான்.இதோ இப்போதுதான் பாட்டியைப் பார்க்கிறான்.!

பாட்டியிடம் குடும்ப சரித்திரத்தையே சொல்லிவிட்டாளா ப்ரீத்தி.?

சரி. தொலையட்டும்.!

இத்தோடு விட்டதே . !!

அவன் நினைத்தது தவறு என்று உடனே புரிந்து விட்டது.!

“ப்ரீத்தி.உனக்கு சிகாகோவில யாருமில்லங்கிற கவலய விடு. எனக்கும் பொழுது போக வேண்டாமா?

எங்கிட்ட தான் உன் நம்பர் இருக்கே. தெனமும் கூப்பிட்டு பேசினாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.!!

நந்து ப்ரீத்தியை முறைத்துப் பார்த்தான்.!!

“’வீட்டுக்கு வா.வச்சுக்கறேன்.”

இதுதான் அர்த்தமா.?

இறங்கும்போது திவ்யாவுக்கு ஒரு ஹக்.!!

“காலாகாலத்தில ஒரு கல்யாணம் பண்ணிக்கோடியம்மா.உங்கம்மாவ திருஷ்டி சுத்தி போடச்சொல்லு. எல்லார் கண்ணும் உம்மேலதான்.”

ஒருவழியாக லக்கேஜ் இருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்தாள் ஆனிப்பாட்டி.!!!

ரகுவரனுக்கு வேலை இருப்பதால் சமந்தா அங்கு வந்து காத்திருப்பதாய் ஏற்பாடு.

அரை மணி நேரம் ஆச்சு.சமந்தாவை கண்ணில காணுமே.! பாட்டிக்கு பயம் பிடித்துக் கொண்டது.!

நல்லவேளை.நந்துவும் ப்ரீத்தியும் அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன பாட்டி. யாரும் வரலயா.?”

“மாட்டுப்பொண்ணு வரேன்னாளே. இத்தாலியன்.வெள்ளைக்காரி. பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுமே.பயமா இருக்கு..! “

“இங்க எல்லாருமே பளிச்சுன்னு தான் தெரிவாங்க.இது அமெரிக்கா பாட்டி.! பாட்டி.!! உங்க பேர் அனந்தநாராயணியா.?”

“ஆமாண்டா கண்ணா.!”

“அதோ பாருங்க உங்க மாட்டுப்பொண்.கையில ப்ளாக் கார்டில பேர் கொட்டையா எழுதி இருக்கே.!!

அழகான கருப்பு ஸில்க் காட்டன் புடவையில் சமந்தா. நெற்றியில் பெரிய பொட்டு.

ஜீன்ஸ் பாட்டியை எதிர் பார்க்கவில்லை. அவளும் தேடிக் கொண்டிருந்தாள்..!!!

பாட்டி சமந்தாவை தழுவி, கைகுலுக்க அவளது கையைப் பிடிக்கும் முன்பே, இரண்டு கையையும் குவித்து சமந்தா ‘வணக்கம் அம்மா’ என்றாள்.!

பாட்டிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

பாட்டியின் லக்கேஜை வாங்கி பூட்டில் வைத்துவிட்டு, அழகாக கார் கதவைத் திறந்து ‘கெட் இன் அம்மா.’ என்று கூறி ஸீட் பெல்ட்டையும் போட்டு விட்டாள்.

போகும் வழியெல்லாம் பேசிக் கொண்டே வந்தாள்.

நிறுத்தி நிதானமாய் அவள் பேசிய ஆங்கிலத்தை பாட்டியால் சுலபமாய் புரிந்து கொள்ள முடிந்தது.

நிறைய தமிழும் கலந்திருந்தது.

அரை மணியில் வீடு வந்து சேர்ந்தார்கள்.

வாசலிலேயே காத்திருந்தார்கள் ரோஹனும் , ரிக்கியும்.

“ஹலோ.டார்லிங். ‘ஐயாம் யுவர் கிரான்னி.ஆனி.’

‘நோ. .நோ. நீங்க பாட்டி. இந்தியா பாட்டி.’

இரண்டும் பாட்டியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததும் பாட்டி அப்படியே உச்சி குளிர்ந்து போனாள்.

வீட்டுக்குள் நுழைந்த பாட்டி அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டாள்.!!

பெரிய நடராஜர் சிலை.எங்கு பார்த்தாலும் ரவிவர்மா படங்களும். இந்திய கோவில்களின் ப்ளோஅப்பும்.

வேட்டி சட்டையில் ரோஹனும்.ரிக்கியும். புகைப்படங்களில் சிரித்துக் கொண்டு.

ஒரு மணிநேரத்தில் ரகுவரன் வந்துவிட்டான்.

‘அம்மா.இது என்ன கோலம்.? நீ அழகா புடவைல வருவன்னு நெனச்சு சமந்தா பிடிவாதமா புடவ கட்டணும்னு சொல்லிட்டா.

நீயானா ஜீன்ஸும்.டீஷர்ட்டும்..”

“யூ லுக் வெரி யங்.”

சமந்தா பாட்டியை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

அப்பாடி.பாட்டி எதிர்பார்த்த சர்ட்டிபிகேட் கடைசியாக கிடைத்தது விட்டது..

இந்தியாவிலிருந்து கட்டி சுமந்து கொண்டு வந்த சாமான்களை கடை பரப்பினாள் ஆனிப்பாட்டி.

‘ரிக்கி.இங்க வா.உனக்கு பிடிச்ச

‘பீ நட் ஸ்வீட் பால்ஸ்.’ “

“ஹையா.கடல உருண்ட.!!”

“ரோஹன்.இன்டியன் ட்விஸ்ட்.’!

“பாட்டி. திஸ் இஸ் முறுக்கு.!!”

ஐய்யய்யே. பாட்டிக்கு ஒண்ணுமே தெரியல.!!”

பேரன்கள் கலாட்டா பண்ணி அமர்க்களம் செய்து விட்டார்கள்.

இனிமேல் பேசுவது ஆபத்து என்று பாட்டி வாயை மூடிக்கொண்டாள்.

“அம்மா. போய் ரெஸ்ட் எடு. இருபது மணிநேரம் டிராவல் பண்ணி ஒரே அலுப்பாயிருக்கும்.

போய் படுத்தது தான் தெரியும். நன்றாய் அசந்து தூங்கிவிட்டாள்.

அடுத்த நாள் விடுமுறை. எல்லோரும் வீட்டிலிருந்தார்கள்.

“அம்மா. இங்க பாருங்க. இதெல்லாம் சமந்தா வாங்கி வச்ச புத்தகங்கள்.!

பார்க்க பார்க்க பாட்டிக்கு தலை சுற்றியது.

‘முப்பது நாளில் தமிழ் .பேச. படிக்க.’

‘முப்பது நாளில் முப்பது இந்திய உணவு வகைகள்.’

‘கானாம்ருத போதினி.”

அம்மா.சமந்தா இப்போ ஓரளவுக்கு தமிழ் பேசறா. மோர்க்குழம்பு, அவியல் எல்லாம் கத்து வச்சிருக்கா.

ரிக்கி.ரோஹன. இந்திய முறைப்படி வளக்கணும்னு ஆசப்படறோம்.

நீங்க இனிமே அவங்க கிட்ட தமிழ்தான் பேசணும்.

சின்ன தமிழ் கதையெல்லாம் சொல்லணும். பாட்டு கத்துக் கொடுக்கணும்.!”

அடுத்த ஒரு மாதமும் கோவில்.பஜனை.

வீட்டில் எல்லா நண்பர்களுக்கும் இட்லி.தோசை.விருந்து. தடபுடல்.

பாட்டி ஜீன்ஸை யெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டாள்.

சமந்தாவுக்கு விதவிதமாய் புடவை கட்டி விட்டாள்.

வினீத் ஃபோன் பண்ணினான்.

“பாட்டி.பால்ரூம் டான்ஸ் என்னாச்சு?”

“அடப்போடா. நீதான் வரும்போதே கண்ணு போட்டுட்டியே.பால்ரூமாவது ஒண்ணாவது.? இப்போ பால்கொழக்கட்டையும். பால் பாயசமும்தான்.”

“ஜீன்ஸ்ல கலக்கியிருப்பியே..? பாஸ்தா சாப்பிட்டயா.?

“நீ வேற.”

பாஸ்தா சாப்பிட்டு அலுத்து போச்சாம்.!

ஜீன்ஸெல்லாம் சூட்கேஸிலேயே தூங்கறது.!

இங்க குழந்தைங்க ‘பீன்ஸ் பருப்புசிலிய வெளுத்து வாங்கறதுகள்.!!

“பாட்டி.கவலய விடுங்க. நீங்க திருப்பி வந்ததும் நாம இரண்டு பேரும் மட்டும் கோவா போறோம்.

நீங்க ஆசபட்டபடி ஜீன்ஸ் போட்டு கலக்கலாம்.!

“நீதாண்டா எனக்கு சரியான ஜோடி”

பாட்டி சத்தம் போட்டு சிரித்து இப்போதுதான் பார்க்கிறான் ரகுவரன்.

“யாரு அம்மா ஃபோன்ல. ஏதோ ஜோடின்னு காதுல விழுந்துதே.

நீஇப்படி சிரிச்சு இப்பத்தான் பாக்கறேன்.!”

“அது டாப் சீக்ரெட்.என்னோட பாய் ஃப்ரெண்ட்.”

“அம்மா.நீ நான் நெனச்ச மாதிரி இல்ல.எங்கியோ போய்ட்ட.!!”

ஆனிப்பாட்டி திரும்பி இந்தியா வரும் நாளுக்காக ஆர்வமாய் காத்திருக்கிறாள்.

பேரன் வினீத்தும்தான்..!

பாட்டியுடன் கோவா போகலாமா.?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *