ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 12,043 
 

வணக்கத்துக்குரிய வாசகர்களே! உங்களை வேதாளமாக பாவித்துக் கூறுகிறேன், கேளுங்கள்…

எனக்கு பல நிறைவேறாத வக்கிரமான அபிலாஷைகள் உண்டு. அவற்றில் முக்கியமான மூன்று:

முதலாவதாக – பாலசரஸ்வதி பாட , வழுவூர் ராமையாப் பிள்ளை ஜதி போட, சுப்புடு பாராட்ட, மியூசிக் அகாடமியில் சிலுக்கு ஸ்மிதாவுக்கும் ஜெயமாலினிக்கும் சாதுர்யம் பேசாதேடி’, வஞ்சிக் கோட்டை வாலிபன் போட்டி நடனம் நடக்கவேண்டும்…. முதல் வரிசையில் நான் அமர்ந்து கொண்டு நடனத்தின் உச்சக்கட்டத்தில் பி.எஸ். வீரப்பா ஸ்டைலில் “சபாஷ்… சரியான போட்டி!” என்று சொல்லவேண்டும்.

இரண்டாவதாக – இந்திய ஜனாதிபதியாக என்னெத்த’ கன்னையாவும், உதவி ஜனாதிபதியாக உசிலை மணியும் ஐந்து ஆண்டுகள் செங்கோல் ஆட்சி செலுத்தவேண்டும்

மூன்றாவதாக – ஏதேனும் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் சென்று போரிடம் (சர்வர் என்ற சொல்லுக்கு உயர்வு நவிற்சியணி) “சுடச்சுட மல்லிகைப்பூ மாதிரி இரண்டு இட்லி…நாலு மெதுவடை…தொட்டுக்க புதினா சட்னி, வெங்காய கொத்சு’ ‘சீனி போடாம டிகிரி காபி…’ என்று நான் கூற ‘பேரர்’, தான் வேலை பார்ப்பது ‘ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா’ இல்லை. ‘பீம விலாஸா’ என்ற குழப்பத்தில் மயக்கம் போட்டு விழவேண்டும்.

நான் பலமுறை வீதியில் ஸ்கூட்டரில் செல்லும் போது அந்த ஓங்கி உலகளந்த உத்தமர் மேல் மாடி ‘ ஓட்டலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டது உண்டு.

என்றாவது ஒரு நாள் இதில் நுழைந்து ஆண்டாள் கூறியபடி, ‘மூட நெய் பெய்து முழங்கை வழிவார நண்பர்களோடு கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் செய்ய வேண்டும் என்ற சபலம் வரும். இந்த ஐந்து நட்சத்திர பலகாரக்கடையில் நுழைவது எப்படி? இது என்ன உடுப்பியா, இல்லை சாந்தா பவனா… உள்ளே நுழைந்து சர்வரிடம் ‘சூடா என்ன இருக்கு” என்று கேட்க!

சென்றவாரம் எனது ஐந்து நட்சத்திர அரிப்பை நண்பர்கள் கிருஷ்ணன், சுப்பு இருவரிடமும் கூறினேன். இவர்கள் இருவரும் கம்பெனி அக்கவுண்டில் கஷ்டமர்’களுக்கு கிச்சுக்கிச்சு மூட்டி, குஷிப்படுத்துவதற்காக அடிக்கடி ஐந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெறுபவர்கள். “சனிக்கிழமை இரவு சில்லறையோடு ஒட்டலின் லவுஞ்சுக்கு வா. வினோதங்களை நாங்கள் காட்டுகிறோம்” – சுப்பு, கிருஷ்ணன் உறுதி அளித்தார்கள். “கையில் கரென்ஸி எவ்வளவு கொண்டுவர வேண்டும்” என்று நான் கேட்டதற்கு அவர்கள், “எதற்கும் முன்னெச்சரிக்கையாக, தந்தையிடம் கூறிச் சொத்தைப் பிரித்து உன் பாகத்தை வாங்கி வைத்துக் கொள். தேவைப்படலாம்” என்று கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறி மறைந்தார்கள்.

சனிக்கிழமை இரவு நானும் எனது மற்றொரு தோழன் கிச்சாவும் (கிச்சா என்பது திருவேங்கட சுப்ரமணியன் என்பதன் சுருக்கம்…) அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் முகப்புக்கு வந்தோம். நானாவது பரவாயில்லை . மாதம் ஓரிரு முறை உட்லண்ட்ஸ் ‘, ‘பாம் – குரோவ், ‘டிரைவ்-இன்’ என்று பார்த்திருக்கிறேன். பாவம், கிச்சா! அவன் பார்த்த அதிகபட்ச ஓட்டல்களின் வாசல் பலகையில் இவ்விடம் புரோட்டா கிடைக்கும்’ என்று எழுதப்பட்டிருக்கும். அல்லது ‘வியாதியஸ்தர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று பொறிக்கப்பட்டு இருக்கும்.

ஓட்டல் வாசலிலேயே கிச்சாவின் முகத்தில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் கலந்த களேபரம் குடி கொண்டது. படிக்கட்டுகளில் ஏறி நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்ததைப் பார்த்தவர்களுக்கு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல் போல தோற்றமளித்திருக்கும்!

கண்ணாடி நுழைவாயிலுக்கு அருகில் நீண்ட தொப்பி அணிந்து கோப்பெருஞ் சோழன் அரண்மனை வாயிற்காப்போன் வேடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர், எங்களுக்கு வந்தனம் தெரிவித்து வழிவிட்டார். கிச்சாவும் விறைப்பாகப் பதிலுக்கு ஒரு சல்யூட்’ செய்தான். கிச்சாவைப் பொறுத்தவரை தொப்பி வைத்திருப்பவர்கள் அனைவரும் போலீஸ்காரர்கள்.

உள்ளே நுழைந்ததும் பிரமாண்டமான லவுஞ்ச் எங்கள் இருவருக்கும் விசுவரூப தரிசனம் தந்தது. அழுத்தமான ஏஸியால் குளிர்ந்து போயிருந்த அந்த ‘லவுஞ் சே’ ஒரு ராட்சத ரெப்ரிஜிரேட்டரைப் போல இருந்தது. சாதாரணமாக ஓயாமல் பேசும் கிச்சா வாயடைத்து இருந்தான். வழக்கம் போல தடதடவென்று ஓடாமல், நாரதர் வான வீதியில் வலம் வருவது போல மிருதுவாக நடந்தான் கிச்சா.

அங்கு போடப்பட்ட சோபாவில் நாங்கள் இருவரும் அமர, சோபாவின் குஷன்கள்’ எங்களை விழுங்கி ஏப்பம் விட்டது. சரியாக பத்து மணிக்கு அங்கு இருப்பதாக வாக்களித்த சுப்பு கிருஷ்ணன் வரவில்லை. அரைமணி நேரமாக அறையின் குளிர்ச்சியில் நனைந்த எங்கள் இருவருக்கும் சிறிது ஆசுவாசம் தேவைப்பட்டது.

‘பாத்ரூமுக்கு இப்படிச் செல்லுங்கள்’ என்ற அம்புக்குறியைத் தொடர்ந்தோம். சாதாரணமாக நமது சினிமா தியேட்டர்களில் பாமர ஜனங்களுக்கும் புரிவதற்காக பாத்ரூம் வாசலில் ஆண்கள்’ என்று எழுதி டர்பனோடு கூடிய வ.உ.சி. படத்தையும், பெண்கள்’ என்று எழுதி கவிக்குயில் சரோஜினிநாயுடு போலத் தோற்றமளிக்கும் படத்தையும் வரைந்திருப்பார்கள். ஆனால், இங்கோ எதையும் காணோம். வரைந்த படங்களில் எது ஆண், எது பெண் என்ற வித்தியாசமும் தெரியவில்லை. வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு ஒரு பாத்ரூமின் கதவைத் திறந்தோம். இது ஆண்களுக்காகத்தான் என்று நிரூபிப்பது போல் திடகாத்திரமான ஒரு புருஷலட்சணம் பாத்ரூமிலிருந்து திருப்தியான பார்வையுடன் வெளியேறியது. ஈரமான கையை உலர்த்துவதற்காக அங்கு ஒரு பெட்டியிலிருந்து பொத்தானை அமுக்கினால் உஷ்ணக் காற்று உறுமுகிறது.

அங்கு யாரும் இல்லாததால் நானும் கிச்சாவும் ஐந்தாறு முறை கையை வேண்டுமென்றே ஈரமாக்கி, பின்பு உஷ்ண காற்றில் உலர வைத்து யாருடைய கைகள் முதலில் உலருகிறது என்று சிறிய அளவில் ஏஷியாட்’ நிகழ்த்தினோம்.

கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு சுப்பு – கிருஷ்ணன் வந்தார்கள். எங்கள் இருவர் கையையும் ஆளுக்கொருவராகப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு இருபத்து நான்கு மணி நேர காபி கடையில் நுழைந்தார்கள்.

இந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் பிரத்தியேக அம்சங்களில் இருபத்து நான்கு மணி நேர காபி ஷாப் முக்கிய அங்கம் வகிக்கிறது நர மாமிசம் ஒன்றைத் தவிர மற்ற எதுவும் இந்த இடத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் சாப்பிடுவதற்குக் கிடைக்கும்! ஓரமான இடம் பார்த்து நால்வரும் அமர்ந்தோம். கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு கண்ணியவான் வந்து, மெனு கார்டை எங்களிடம் பவ்யமாக நீட்டினார். அயல்நாட்டுத் தூதுவர் பதவிக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இவரிடம் இருந்தன. சும்மா சொல்லக்கூடாது – மெனு கார்டை அந்த மனிதர் எங்களிடம் கொடுத்த லாகவம் ஏதோ மத்திய மந்திரி பட்ஜெட் சமர்ப்பித்தது போல இருந்தது!

மெனுவில் இருந்த அயிட்டங்களை வாசித்துப் பார்த்தேன். நமக்கு வேண்டாதவர்களை அவர்களுக்கே புரியாமல் திட்ட வேண்டுமானால் மெனுவில் உள்ள தின்பண்டங்களின் பெயர்களைத் தைரியமாக உபயோகப்படுத்தலாம். மெனு வின் கடைசிப் பக்கத்தில் இட்லியின் விலை ஏழு ரூபாய் என்று போடப்பட்டிருப்பதைப் பார்த்து கிச்சா , ஏழு ரூபாயை உடுப்பி இட்லியின் விலையால் வகுத்து நான்கு பேருக்கு இருபது இட்லிகள் மிகவும் ஜாஸ்தி என்று வெகுளியாகக் கூறினான். சற்று நேரத்தில் இன்னொருவர் வந்து கோட்டு சூட்டு) “யெஸ்?” என்றார். ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துமா இட்லி தோசை என்ற ஆவேசத்தில் ரஸ்முலாய்’ என்ற தித்திப்பை ஆர்டர் செய்தோம்.

சிறிது நேரத்தில் வேறு ஒருவர் அதேபோல கோட்டு சூட்டோடு வந்து டம்ளர்களில் நீர் வார்த்தார். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நல்ல முக லட்சணத்தோடு ஆட்கள் தான் வந்து கொண்டிருந்தார்களே ஒழிய ஆர்டர் செய்த அயிட்டங்கள் வரவில்லை. கிச்சா பொறுமையிழந்து கை துடைக்க வைத்திருந்த பேப்பரில் கத்திக் கப்பல்’ செய்தான். ரஸமுலாயும் அதன்பின் பில்லும் வந்தது. பில்லை எட்டிப் பார்த்ததில் உடனே ரஸமுலாய் கசந்தது.

அடுத்ததாக ஹோட்டலின் உச்சியில் இருக்கும் சைனீஸ் ரெஸ்டாரெண்டுக்குச் செல்வதாக உத்தேசித்தோம். போகும் வழியில் BAR தென்பட்டது. அட்டகாசமாக அலங்கரிக்கப்பட்ட ‘சல்பேட்டா’ கடை. அங்கு வைக்கப்பட்ட மதுபானங்களின் விலைப்பட்டியலைப் பார்த்தாலே போதும், வேண்டிய அளவு ‘கிக்’ வந்துவிடும். சாதாரணமான பார்களில் உள்ளது போல இங்கு உட்கார்ந்து குடிக்க நாற்காலிகளுக்குப் பதிலாக ஒய்யாரமான ஊஞ்சல்களைத் தொங்க விட்டிருக்கிறார்கள். குடித்துவிட்டு ஆடுவதைத் தவிர ஆடிக்கொண்டேயும் இங்கே குடிக்கலாம்!

லிஃப்டில் ஏறி சைனாவின் மீது படையெடுக்கப் புறப்பட்டோம்.

அங்கு ஒரு யமா குச்சி பலமாக உபசரித்து எங்களை உள்ளே அழைத்துப் போனார்.

அவரது நடை உடை பாவனைகளில் குலத் தொழில் கராத்தேயும், குங்ஃபுவும் கலந்து இருந்தது. ஆனாலும், அந்த அறையில் வெளிச்சம் மெலிதாக இருந்ததால் கிச்சா அங்கு இருந்த பலரின் பாதங்களை மிதித்துத் துவம்சம் செய்தான். இங்கும் ஒருவர் வந்து மெனு கார்டைக் கொடுத்தார். மெனுவில் வெஜிடபிள்ஸ் என்ற இடத்தில் சை சீவான்’ தூ சாங்க்-க்வா’ ‘கூலோ-சாய்’ என்று ஒரே மழலை. ஒவ்வொரு ‘தின்பண்டத்துக்கும் முடிவில் நமஹ’ சேர்த்தால் படிப்பதற்கு ஏதோ ஒரு சீன ரிஷி எழுதிய புத்த சகஸ்ரநாமம் போல் இருக்கும். சை சௌஃபான்’ என்பது சைவமாம். ‘சி சௌஃபான்’ என்றால் அசைவமாம். கர்மம்! ஒரு வார்த்தை மறந்து போய் மாற்றி உச்சரித்துவிட்டால் நமது ஆசாரம் அனாசாரமாகிவிடும். நாங்களும் எதையோ கண்மூடித்தனமாக ஆர்டர் செய்ய, பேரரும் நான்கு தட்டுகளில் குப்பலாக நூடுல்ஸ் எனப்படும் ‘சேமியா மாலை’ தொடுத்து வைத்து எங்களிடம் நீட்டினார். மலர் மாலை, கறிகாய் மாலை, ரூபாய் நோட்டு மாலை என்று அரசியல் தலைவர்களுக்குப் போடும் தொண்டர்கள், ஒரு மாறுதலுக்கு இந்த சேமியா மாலையைப் போடலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

எங்களுக்கு அருகில் போடப்பட்ட ஸ்டேஜில்’ நால்வர் குழு வாத்தியம் இசைத்தனர். அதில் ஒருவன் “கறுப்பு தந்திர பொம்பளையே காட்டு உந்தன் பின்னழகை” என்ற மானுவல் சாண்ட்ருவின்’ பாப் கீர்த்தனையைப் பாட ஆரம்பித்ததும், ஜோடியாக வந்தவர்கள் மேடைக்குத் தாவிச் சென்று பாட ஆரம்பித்தார்கள்.

இசைக்குழு வாசிப்பின் துரித கதியை ஏற்றி இறக்கி, நடனமாட வந்தவர்களை வெறி ஏற்றினார்கள்.

அங்கு இருந்த பெண்களில் பலர் ‘திருட்டு தம்’ அடித்தனர். ஆண்கள் லட்சுமி வெடி, குருவி வெடி சைஸில் சுருட்டை வாயில் திணித்திருந்தனர்.

அங்கு நிலவிய அட்டகாசமான வானிலை, வேடிக்கை பார்க்க வந்த எங்களை அந்நியர்களாக்கியது. அங்கு உள்ளவர்களுக்கு இந்த ஆட்டமும் பாட்டமும் நித்திய நாடகம். நாங்களோ ஒரு நாள் கூத்துக்காக மீசை வைத்தவர்கள் ! கிட்டத்தட்ட இருநூறு ரூபாய்க்கான பில்லுக்குப் பணம் வழங்கிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றோம்.

நானூறு ரூபாய் செலவழித்துவிட்டுக் கடுமையான பசியோடு நட்சத்திர ஓட்டலைவிட்டு வெளியேறி ஆளுக்கு நான்கு ரஸ்தாளி பழங்கள் சாப்பிட்ட பிறகுதான் சிறிது தெம்பு வந்தது.

மறுநாள் காலை முதல் வேலையாக மயிலாப்பூர் ராயர் ஓட்டலுக்குச் சென்று ஆசை தீர இட்லி வடை சாம்பாரில் மூழ்கினேன். ராயரிடம் நேற்று நடந்த அனுபவத்தை விவரமாகக் கூறினேன். ராயரும் என்னுடைய காபியை, பெற்ற தாயைப் போல சுவாதீனமாக ஆற்றிக்கொண்டே கூறினார்;

“அட… மடையா! டிபன் சாப்பிட நானூறு ரூபாயா செல்வழிச்ச மண்டு… நானூறு ரூபாயை என்கிட்ட கொடு…. அதையே ஆயுள் சந்தாவா வச்சுண்டு காலம் பூரா உனக்கு இட்லி வடை செஞ்சு போடறேன்.”

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *