லஞ்சம் வாங்காதவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி த்ரில்லர்
கதைப்பதிவு: January 3, 2012
பார்வையிட்டோர்: 14,250 
 

கதை ஆசிரியர்: அமரர் கல்கி.

1

     நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. ஆனால் இன்னும் அவர் பைஸல் செய்ய வேண்டிய தஸ்தாவேஜிக் கட்டுகள் மேஜை மேல் மலைபோல் குவிந்து கிடந்தன!

*****

     உத்தியோக பதவியில் மேலேற ஏற, சம்பளம் அதிகமாக ஆக, வேலை குறைவு என்று சாதாரணமாய் ஓர் எண்ணம் இருந்து வருகிறது. சிற்சில இலாக்காக்கள் சிற்சில பதவிகள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நிர்வாக இலாகா உத்தியோகங்களைப் பொறுத்தவரையில் மேற்கண்ட எண்ணம் எவ்வளவு பிசகானது என்பதற்கு மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். பிரத்யட்ச உதாரணமாயிருந்தார்.

     அதுவும் ஜில்லாக் கலெக்டர் ஆனதிலிருந்து அவர் பொழுது விடிந்தது முதல் இரவு பன்னிரண்டு மணி வரையில் உழைத்து உழைத்து ஓடாய்ப் போனதை யார் அறிவார்கள்? சர்வமும் அறிந்த ஆண்டவனுக்கும் டபேதார் சின்ன கேசவலுக்கும் தவிர, வேறு யாருக்குத்தான் தெரியும்?

     கிராம வெட்டியான் மேல் கிராம முனிசீப் செய்யும் புகார் முதற்கொண்டு ரயில் கவிழ்க்கும் சதியாலோசனை வரையில் அவர் விசாரணை செய்து நியாயத் தீர்ப்பு சொல்ல வேண்டும். புறம்போக்கை ஆக்ரமித்த குடியானவனுக்கு இரண்டு ரூபாய் தண்டத் தீர்வை விதிப்பது முதல் கடற்கரையோரத்தில் ஜப்பான் உளவுப் படகு வருவதைத் தடுப்பது வரையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொறுப்பை அவர் தாங்கியாக வேண்டும்.

     இதெல்லாம் ஒரு புறமிருக்க, இந்தச் சாமான் கட்டுப்பாடு விஷயம் வந்தாலும் வந்தது – ஐயையோ! சகிக்க முடியாத தொல்லையாய்ப் போயிற்று. மனுஷர் ஐம்பது வயது வாலிபராயிருந்தவர் ஆறே மாதத்தில் எழுபது வயதுக் கிழவனாகி விட்டார். மூக்குக் கண்ணாடியை அந்த ஆறு மாதத்தில் மூன்று தடவை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

     ஆறு மாதத்துக்கு முன்பு அவருடைய தலையில் ஆங்காங்கு இரண்டொரு வெள்ளி ரோமம் காணப்பட்டது. இப்போது தலையெல்லாம் ஒரே நரை. நல்ல வேளை! மிஸ்டர் பராங்குசத்தின் பத்தினி இரண்டு வருஷத்துக்கு முன்பே காலமாகி விட்டாள். இப்போது மட்டும் அந்த நாகரீகப் பெண்மணி உயிரோடிருந்தால், மிஸ்டர் பராங்குசம் எவ்வளவு அவதியடைய நேர்ந்திருக்கும்!

     இப்போதும் மிஸ்டர் பராங்குசத்திற்கு அவதி அவ்வளவு ஒன்றும் குறைவாக இல்லை; மேஜை மீது குவிந்து கிடந்த தஸ்தாவேஜுக் கட்டுகளை அவர் வெறுப்புடனே ஒரு தடவை பார்த்தார். சிவா! ராமா! இன்னும் இரண்டு மணி நேர வேலை இருக்கிறது. இப்படி உத்தியோகம் பார்த்து அணு அணுவாய் உயிரை விடுவதைக் காட்டிலும் ஒரேயடியாய்ச் செத்துத் தொலைந்து போனால் தான் என்ன? இதற்குள் மிஸ்டர் பராங்குசத்தின் பார்வை தஸ்தாவேஜுக் கட்டுக்களுக்குப் பக்கத்திலே கிடந்த பண நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்தது. உடனே அவர் முகம் பிரகாசம் அடைந்தது. அவர் வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் ராம்ஜி ஸேட் மேஜை மேல் வைத்து விட்டுப் போன நோட்டுகள் அவை. ஸேட் அங்கு இருந்தவரையில் மிஸ்டர் பராங்குசம் அந்த நோட்டுக்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. இப்போது தான் பார்த்தார். பார்த்துவிட்டுக் கட்டுக்களை எடுத்து ஒவ்வொன்றாய் எண்ணினார். ஒவ்வொன்றிலும் இருபது 100 ரூபாய் நோட்டு மொத்தம் பத்து கட்டு ஆக மொத்தம் இருபதினாயிரம் ரூபாய்.

     எண்ணிப் பார்த்த கட்டுகளை மிஸ்டர் பராங்குசம் எடுத்து மேஜை டிராயர் ஒன்றுக்குள் திணித்தார்.

     மேஜைக்கு மேலே பெரிய பவர்லைட் எரிந்து கொண்டிருந்தது. சுவர் ஓரமாய்த் தரையில் ஒரு ரெவினியூ இலாகா லாந்தர் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து இப்போது புகை அசாத்தியமாய்க் கிளம்பியது.

     “கேசவா! இந்த லாந்தர் புகைகிறது; எடுத்துக் கொண்டு போ” என்றார் பராங்குசம்.

     வெளியிலிருந்து டபேதார் வந்து லாந்தரை எடுத்துக் கொண்டு போனான்.

2

     கேசவன் போனதும் மிஸ்டர் பராங்குசம் ஒரு கொட்டாவி விட்டு நாற்காலியின் மேல் “அம்மாடி” என்று சாய்ந்தார். பிறகு ஒரு காகிதமும் பென்ஸிலும் எடுத்து யோசித்து சில எண்களை வரிசையாக எழுதினார். எழுதிய எண்களைக் கூட்டிய போது ஒன்பதரை லட்சம் வந்தது.

     “இன்னும் ஐம்பதினாயிரம் வந்து விட்டால், அப்புறம் எந்த ராஜா பட்டணம் போனாலும் சரி” என்று மிஸ்டர் பராங்குசம் முணுமுணுத்தார்.

     பிறகு, பழையபடி தஸ்தாவேஜிக் கட்டுகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார்.

     மிஸ்டர் பராங்குசம் தஸ்தாவேஜுக் கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், மேற்படி ஒன்பதரை லட்சத்தின் மர்மம் என்னவென்பதை நாம் பார்க்கலாம்.

     சென்ற ஆறு மாத காலத்தில் மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்கிச் சேர்த்திருந்த பணம் தான் ஒன்பதரை லட்சம்.

     வாசகர்களுக்கு இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கும். சாதாரணமாக ஐ.சி.எஸ். காரர்கள் மீது லஞ்சக் குற்றம் ஏற்பட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. பெரிய அதிகாரங்களை வகிக்கும் அவர்களுக்கு லட்சம் வாங்கத் தூண்டுதலே ஏற்படக்கூடாதென்பதற்குத் தானே பெருவாரியான சம்பளம் கொடுக்கப்படுகிறது?

     இதெல்லாம் உண்மைதான். ஆனால், மிஸ்டர் பராங்குசம் அன்று வரையில் ஒன்பதரை லட்சம் வாங்கிச் சேர்த்திருந்ததும் உண்மைதான். இது எப்படி நேர்ந்தது என்பதைச் சொல்லுகிறோம்.

     மிஸ்டர் பராங்குசத்தின் காலஞ்சென்ற மனைவிதான் அதற்கு முதற் காரணம். இந்தப் பாழாய்ப் போன யுத்தம் இரண்டாவது காரணம்.

     மிஸ்ஸஸ் பராங்குசம் நாகரிகத்தில் முதிர்ந்த சீமாட்டி. இந்த நாளில் நாகரிகமாய் வாழ வேண்டுமென்றால் பணத்தையல்லவா கண்களை மூடிக் கொண்டு செலவு செய்ய வேண்டியிருக்கிறது? மிஸ்டர் பராங்குசம் ஆபீஸுக்குப் போக ஒரு கார், மிஸ்ஸஸ் பராங்குசம் லேடீஸ் கிளப்புக்குப் போக ஒரு கார், குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஒரு கார் – இப்படியெல்லாம் நாகரிக வாழ்க்கையாகிய பூதம் பணத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.

     இதனுடைய பயனாக, மிஸ்ஸஸ் பராங்குசம் கண்ணை மூடியபோது, மிஸ்டர் பராங்குசத்துக்குத் திருடர் பயம் என்பதே அடியோடு இல்லாமலிருந்தது. மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம்?

     மிஸ்ஸஸ் பராங்குசம் பண விஷயத்தில் தாராளமாயிருந்தது போல் சந்ததிகள் விஷயத்திலும் வெகு தாராளாமாயிருந்தாள். ஐந்து பெண் குழந்தைகளையும் நாலு பிள்ளைக் குழந்தைகளையும் விட்டுச் சென்றாள். இவ்வளவு பேருக்கும் உயர்தரக் கல்வி அளித்து, கல்யாணம் பன்ணி வைக்கும் பொறுப்பு எல்லாம் மிஸ்டர் பராங்குசத்தின் தலையில் விழுந்தது. அவருக்கோ வயது ஆகிவிட்டது. உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆக வேண்டிய காலம் சமீபித்திருந்தது.

     இந்த நிலைமையில் பாழாய்ப் போன யுத்தம் வந்து தொலைந்ததா? யுத்தத்தினால் எத்தனையோ ஜனங்கள் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்கள். ஆனால் ஒரு சிலர் ஏராளமாய்ப் பணத்தை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதை மிஸ்டர் பராங்குசம் கவனித்தார். யுத்த காண்டிராக்ட்டுகளில் சிலர் லட்சம் லட்சமாய்ப் பணம் பண்ணியிருந்தார்கள். பிண்ணாக்கு வியாபாரி ஒருவர் ஏழு லட்சம் பண்ணியிருந்தார். நூல் வியாபாரிகள் சிலர் இருபது லட்சம் முப்பது லட்சம் சம்பாதித்திருந்தார்கள். செங்கள் சூளை போட்ட ஒருவர் ஏழு லட்சம் சேர்த்திருந்தார்.

     இப்படி யுத்தத்தினாலே பலர் கொழுத்த பணக்காரர்களாகிக் கொண்டு வரும் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு இவ்வளவு நீடித்த ஊழியம் செய்து வந்திருக்கும் தாம் மட்டும் ஏன் ஏழையாயிருக்க வேண்டும் என்று மிஸ்டர் பராங்குசம் வியந்தார்! இத்தனைக்கும் மேற்கண்ட விதமாகப் பணம் சம்பாதித்தவர்கள் பெரும்பாலும் தம்மிடம் லைசென்ஸோ, அனுமதியோ பெற்று வியாபாரம் செய்தவர்கள் என்பதை எண்ணும் போது அவருடைய வியப்பு பன்மடங்கு ஆயிற்று! அவ்விதம் தம்மிடம் லைசென்ஸுக்கோ, பர்மிட்டுக்கோ வருகிறவர்களிடம் தாம் சற்றே கையை நீட்டினால் போதும்; வீட்டில் தனலக்ஷ்மி தாண்டவமாடத் தொடங்குவாள்!

இன்னும் சில நாளைக்கெல்லாம் மிஸ்டர் பராங்குசம் இத்தனை காலமும் தாம் இவ்வளவு பரிசுத்தமாய் இருந்து கண்ட பலன் என்ன என்று வியக்கத் தொடங்கினார். தம் கண் முன்னால் லஞ்சம் வாங்கிப் பணம் சேர்த்திருக்கும் மனிதர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் அவர் கண் முன்னால் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன கௌரவம் குறைந்து விட்டது? இன்னும் யோசிக்க, யோசிக்க “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆதி ஸ்தாபகர்களான கிளைவும் வாரன் ஹேஸ்டிங்க்ஸுமே லஞ்சம் வாங்கியிருக்கும் போது, நமக்கென்ன வந்தது?” என்று அவருக்குத் தோன்றியது.

     பட்டினி கிடந்தவர்களின் முன்னால் நல்ல சாப்பாட்டை வைத்தால், கணக்குத் தெரியாமல் சாப்பிட்டு விடுவது இயற்கையல்லவா? அஜீரணமாகி விடுமே – வயிற்றை வலிக்குமே என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்க முடியுமா? – அதே மாதிரி உத்தியோகத்தில் வெகு காலம் நெறி தவறாமலிருந்த மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்க ஆரம்பித்த போது, அவருக்கு நூறு கை வந்து விட்டது போலிருந்தது. அப்படிப் பணத்தை வாரிக் குவித்தார். அவருடைய டபேதார் சின்னக்கேசவலு சுமார் பதினையாயிரம் ரூபாய் சேர்த்து விட்டான் என்றால், அவர் ஒன்பதரை லட்சம் சேர்த்து விட்டதில் என்ன ஆச்சரியம்?”

     இப்படி மளமளவென்று குவிந்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்பதிலேதான் கஷ்டம் அதிகமாயிருந்தது. ஆறே மாதத்தில் மனுஷருக்குத் தலை நரைத்துப் போனதற்கு இந்தக் கவலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். வெள்ளிக் கட்டிகளும் தங்கக் கட்டிகளும் வாங்கினார். அப்புறம் ஷேர் மார்க்கெட்டில் பங்குகள் வாங்கினார்.

     நாளாக ஆக, அவருக்குத் துணிச்சல் அதிகமாயிற்று. பகிரங்கமாக பாங்கிகளிலேயே பணத்தைப் போட ஆரம்பித்தார்.

     நிலைமை இவ்வளவுக்கு முற்றிய பிறகு சர்க்கார் காதுக்கு எட்டாமலிருக்குமா? எட்டிய பிறகு சர்க்கார் தான் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமலிருக்க முடியுமா?

     ஆனால், பராங்குசத்துக்கு இப்போது ஏற்பட்டிருந்த துணிச்சல் கவர்ன்மெண்ட் நடவடிக்கையைக் கூட ‘பூபூ’ என்று தள்ளிற்று. ‘என்ன பிரமாத நடவடிக்கை எடுத்து விடப் போகிறார்கள்? பிராஸிகியூட் செய்து வழக்கு நடத்த ஒரு நாளும் தைரியம் வரப் போவதில்லை. அதனால் கவர்ன்மெண்டின் மதிப்பேயல்லவா குறைந்து போய் விடும்? இன்றைக்கெல்லாம் செய்தால் உத்தியோகத்தை விட்டு நீக்கி வைப்பார்கள். போனால் போகட்டும் இந்த உத்தியோகம் யாருக்கு வேண்டும்? இன்னும் ஐந்து வருஷம் உழைத்துப் பிறகு காணப் போகும் லாபந்தான் என்ன? பத்து லட்சம் ரூபாயுடன் இப்போதே தான் விலகிக் கொள்ளலாமே! இன்னும் ஐம்பதாயிரம் தான் பாக்கி!” இப்படி எண்ணமிட்ட மிஸ்டர் பராங்குசத்துக்கு மறுபடி கொட்டாவி வந்தது.

3

     “மிஸ்டர் பராங்குசம்! உடனே புறப்படும்!” என்ற பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டவராய்ப் பராங்குசம் நிமிர்ந்து பார்த்தார்.

     எதிரே சுவர் ஓரத்தில் ஓர் கறுத்த உருவம் நின்றது.

     சொல்ல முடியாத பீதியினால் மிஸ்டர் பராங்குசத்தின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

     தட்டுத் தடுமாறி, “நீ யார்?” என்று கேட்டார்.

     “மேலேயிருந்து உத்தரவு கொண்டு வந்திருக்கிறேன். உம்மைக் கையோடு அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளை.”

     மேலே இருந்து உத்தரவு வரும் என்பது பராங்குசம் எதிர்பார்த்தது தான். ஆனால், இந்த வேளையில் இந்த விதத்தில் இப்படித் திடீரென்று உத்தரவு வரும் என்பதாக அவர் எதிர்பார்க்கவில்லை.

பராங்குசத்தின் மார்பு தட், தட் என்று அடித்துக் கொண்டது.

     “ஏன் தாமதம்? கிளம்பும்!”

     பராங்குசம் ஈனக் குரலில், “எனக்கு இப்போது வர சௌகரியம் இல்லை” என்றார்.

     “உம்முடைய சௌகரியத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உத்தரவு அப்படியில்லை.”

     பராங்குசத்தின் ஆரம்ப பீதி குறைந்தது, வர வரத் துணிச்சல் ஏற்பட்டது.

     “இந்தத் தஸ்தாவேஜிக் கட்டுகளில் எல்லாம் நான் கையெழுத்துப் போட்டு ஆக வேண்டும்.”

     “நீர் போட வேண்டியதில்லை; உமக்குப் பதில் வருகிறவர் போட்டுக் கொள்வார்.”

     “முக்கியமான சொந்த ஜோலிகள் இருக்கின்றன.”

     “இனிமேல் உமக்கு ஒரு சொந்த ஜோலியும் இல்லை.”

     பராங்குசம் அப்போது மேஜை டிராயரை இழுத்து ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டுக்களைக் கையில் எடுத்தார்.

     “இதோ பத்தாயிரம் ரூபாய்; திரும்பிப் போய் நான் வீட்டில் இல்லையென்று சொல்லிவிடும்.”

     “முடியாது, லஞ்சமெல்லாம் உம்முடனே இருக்கட்டும்.”

     “இருபதனாயிரம் தருகிறேன்.”

     “பணப்பேச்சே வேண்டாம்.”

     “இந்த டிராயரில் உள்ள ஐம்பதினாயிரம் ரூபாயையும் எடுத்துக் கொள்ளும்.”

     “நான் லஞ்சம் வாங்குவது கிடையாது. கிளம்பும் உடனே.”

     பராங்குசம் சற்று யோசித்து விட்டு, “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்; என் பிள்ளையப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன்” என்றார்.

     “முடியாது; நேரம் இல்லை.”

     “அரைமணி நேரம் கொடும். மேல் மாடிக்குப் போய் என் கடைக் குட்டிக் குழந்தையை ஒரு தடவை கண்ணால் பார்த்து விட்டு வருகிறேன்.”

     “குழந்தையா? நீர் செய்த அக்கிரமங்களினாலே இன்று இந்த ஜில்லாவில் இருபதினாயிரம் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன.”

     “இந்த ஐம்பதினாயிரம் ரூபாயும் கொடுத்து இரண்டு லட்சம் ரூபாய்க்குச் செக்கும் தருகிறேன். பத்து நிமிஷமாவது கொடும்.”

     “முடியாது. ஒரு நிமிஷம் கூடக் கொடுக்க முடியாது.”

     “அப்படியானால் இந்தாரும்” என்று சொல்லி, மிஸ்டர் பராங்குசம் சடக்கென்று மேஜையின் இன்னொரு டிராயரைத் திறந்தார். அதிலிருந்து ஒரு கைத் துப்பாக்கியை எடுத்து எதிரே நீட்டினார்.

     “இப்போது என்ன சொல்கிறீர்?” என்று கூறி மிஸ்டர் பராங்குசம் பயங்கரமாகச் சிரித்தார். அவருடைய சிரிப்பின் எதிரொலியே போல் அந்தக் கறுத்த உருவமும் சிரித்தது.

     அடுத்த விநாடி ‘படீர்’ என்று கைத் துப்பாக்கி வெடித்தது. மிஸ்டர் பராங்குசம் மேஜை மேல் சாய்ந்தார். அவருடைய ஆத்மா தன் நீண்ட பிரயாணத்தைத் தொடங்கிற்று.

4

     இரண்டு நாளைக்கெல்லம் பத்திரிகைகளில் பின் வரும் செய்தி பிரசுரமாயிற்று.

     “சென்ற செவ்வாய்க்கிழமையன்று இரவு ஜில்லா கலெக்டர் மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். திடீரென்று மாரடைப்பால் காலம் சென்றார்.”

     “மிஸ்டர் பராங்குசத்தின் மேல் லஞ்சப் புகார் அதிகமாக ஏற்பட்டு மாகாண கவர்ன்மெண்டார் அவர் மேல் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தார்கள் என்று தெரிகிறது. உத்தியோகத்திலிருந்து அவரைத் தற்காலிகமாய் நீக்கி உத்தரவில் கையெழுத்துக் கூட ஆகிவிட்டதாம். மிஸ்டர் பராங்குசத்தின் அகால மரணத்தை முன்னிட்டு மேற்படி நடவடிக்கைகள் வாபஸ் வாங்கப்படுமென்று அறிகிறோம்.”

     மேற்படி சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஜில்லா கலெக்டர் பங்களாவைப் புதிய கலெக்டர் வரப் போவதை முன்னிட்டு சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். டபேதார் சின்னக் கேசவலு இன்னொருவனுடன் கலெக்டரின் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்ய வந்தான்.

     “அதோ பார்த்தாயா, அண்ணே!” என்று முத்தப்பன் சுவரைச் சுட்டிக் காட்டினான். இருவரும் அருகாமையில் போய்ப் பார்த்தார்கள்.

     ரவிவர்மா படத்தில் சத்தியவானுடைய உயிரைக் கொண்டு போவதற்காக ஒரு புகை உருவம் வருகிறதே, அந்த மாதிரியான ஒரு உருவம் சுவரில் காணப்பட்டது.

     அதைப் பார்த்து டபேதார் சின்னக் கேசவலு சொன்னான்: “தம்பி, ஒரு நாளைக்கு இங்கே ஹரிகேன் லாந்தர் வைத்திருந்தது. அதிலிருந்து ஒரே புகை அடித்தது. நான் தான் லாந்தரை எடுத்துக் கொண்டு போய் அணைத்தேன். அந்த லாந்தர் புகைதான் இப்படி யமனைப் போல் சுவரில் விழுந்திருக்கிறது.”

     “அப்படியா?” என்றான் முத்தப்பன்.

     “இதில் வேடிக்கையைக் கேளு. அன்றைக்கு இராத்திரி தான் ரூமிலேயே பழைய கலெக்டர் துரை மாரடைத்துச் செத்துப் போனார்!”

     ஆமாம், ஆறே மாதத்தில் பதினையாயிரம் சம்பாதித்த டபேதார் சின்ன கேசவனுக்கு, உலகமே இப்போது ஒரு வேடிக்கையாய்த்தானிருந்தது!

நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

Print Friendly, PDF & Email

0 thoughts on “லஞ்சம் வாங்காதவன்

  1. இது நடந்த காலம் ஆங்கில ஆட்சிக்காலம் ; செய்தவர் பராங்குசம், டபேதார் ! திமுக அதிமுக பாமக பாஜக காங்கிரசாரை மட்டும் சொல்லக்கூடாது !
    இந்நாட்டு மக்களின் உடன்பிறப்பு ஊழல் கையூட்டு . சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *