காதிலே கடுக்கன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 8, 2012
பார்வையிட்டோர்: 12,734 
 

காதிலே கடுக்கன்
காதிலே கடுக்கன்

கதை ஆசிரியர்: மாதவி

அந்தச் செதியைக் கேட்ட நேரத்தில் இருந்து கடுக்கனைத் தேடுகிறேன் காணவில்லை. நெஞ்சு விறைக்கிற மாதிரி கனக்கிறது. தோழுக்கு மிஞ்சினால் பிள்ளைகளுடன் தோழனாகப் பழகவேண்டும் என்று பல மேடைகளில் முழங்கியிருக்கிறேன். ஆனால் என் சொந்த மேடையில், அப்படிக் கடுக்கனை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கடுக்கன் என் மகன் தான் என்னுடைய மூக்குக் கூட அவனுடைய தோழுக்கு கீழ் தான். என்ன செய்துவிட்டான் என்று நான் கடுக்கனுக்கு அடித்தேன்.

என் பாட்டனார் போட்ட கடுக்கனைச் சற்று வித்தியாசமாக காதில் வளையமாகப் போட்டுவிட்டான். இதுமட்டுமல்ல ஒரு கொஞ்ச மயிரை வளர்த்து பின்னுக்கு தங்கைச்சியின் இரப்பர் வளையம் ஒன்றை மாட்டி குதிரைவால் கொய்யகம் ஒன்று இதுற்கெல்லாம் நான் அடிக்கவில்லை. இப்படி இருப்பது நல்லபிள்ளைக்கு அழகல்ல நீ எதிர் வீட்டுப் பெடியனைப் பார். அவனும் எங்கள் நாட்டில் இருந்து வந்தவன் தான். மிதிச்ச இடத்துப் புல்லும் சாகாது என்பார்களே ! அது அவன் கால்களுக்குத் தான் பொருந்தும் என்பேன்.
 
அவனைப் பார்க்கும்; போதெல்லாம் எனக்கு கடுக்கன் மீது கோபம் பத்திக் கொண்டு வரும். இறுதியாக கடுக்கனும் குடுமியும் இல்லாமல் வந்தால் தான் இனி இந்த வீட்டுக் கதவ திறக்கும் என்று சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றேன். மாலை வந்தபோது தாயார் அதாவது அரசதரப்பு வக்கீல் கடுக்கனின் வக்கீல் என் மனைவி.
 
கடுக்கனுக்கு தோசைசுட்டுக் கொடுக்க ஒரு கையால் அவன் தன் தலைமுடியை பெண்கள்போல் கையால் வாரிவிட்டுக் கொண்டு தோசையைச் சம்பலில் தொட்டுத் தொட்டுச் சாப்பிட்டான். நான் உற்றுப் பார்க்கிறேன் ஏதாவது என் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறானா என்று முகத்தில் கன்னத்தில் ஓரமாகக் கிடந்த நாலைஞ்சு மயிரையும் சுருக்கி திரித்த கயிற்றில் தாடி ஒட்டுவது போல் வெட்டி மெல்லிய தாடி விட்டிருந்தான்.
நான் அவன் மீது பாய்ந்தேன். நான் சொன்னேன் இந்த நாகரீகம் எனக்குப் பிடிக்கவில்லை உடனடியாக வெட்டு என்றேன். ஆனால் நீயோ தாடியும் விட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். இந்த நாகரீகம் பிடிக்கவில்லை என்கிறீர்கள் அப்படி என்றால் இதனை நாகரீகம் என்று ஒப்புக் கொள்கிறீர்களே! என்றான் வந்த ஆத்திரத்தில் காற்சட்டையில் இருந்த பட்டியை உருவி என்னடா தகப்பனோடை பட்டிமன்றமா நடாத்தப்போறாய் என்று பெலிற்றால் நாலு சாத்துச் சாத்திப்போட்டேன். அவ்வளவு தான் அவனைக் காலையில் இருந்து காணோம்.
 
இப்போ அவன் புத்தகங்களை அவன் நினைவாகக் கிளறிக் கொண்டு அவன் நினைவாகக் கிடந்தேன். அவனுடைய பாடப் புத்தகத்தில் அவனுக்கு எல்லாப் பாடங்களிலும் நான் என் பாடசாலைக் காலத்தில் காண்ணிலும் காணாத உயர் புள்ளிகளை அவன் பெற்றிருந்தது தெரிந்தது. தங்கை மீது பாசத்தைப் பொழிகின்றான். நான் அடித்தாலும் தோழுக்கு மிஞ்சிய அவன் தோழனாகவே இருக்கின்றான். எனக்கு என் செயல் மீது வெட்கம்தான் வந்தது. எப்போதாவது தந்தையாக நான் அவனுடன் ; பழக ஆசை இருந்தாலும் மனம் அடிக்கடி ஜரோப்பிய காலநிலைமாதிரி மாறிக்கொண்டே இருந்தது.

எனக்கு இப்ப அந்தச் சேதியைக்கேட்ட நேரத்தில் இருந்து என் மகன் காதில் நான் கடுக்கனாக இருக்க ஆசைப்படுகிறேன். எதிர்வீட்டுப் பையன் கறுப்புக் காற்சட்டையும் வெள்ளைச் சேட்டும் போட்டுக் கொண்டு தந்தையின் கட்டளைக்குப் பணிந்து நடப்பது முதல் வீட்டில் இருந்த பாடசாலைக்குப் புறப்படும் அழகை எத்தனை நாள் இரசித்திருப்பேன் அவனைப்போல நீ இரு என்று எத்தனை தரம் என்னுடைய கடுக்கன் அதுதான் என்மகன் இரவியை ஆத்திரத்தில் திட்டித் தீர்த்திருப்பேன்.
 
அந்த எதிர்வீட்டுப் பெடியன் இறந்திட்டானாம். மூன்றுமாதம் அவனை வீட்டில் காணவில்லை. இப்போ சொல்கிறார்கள் அந்த அமைதியான பெடியனுக்கு எயிட்ஸ் வந்து இறந்திட்டான் என்று. தாய் தந்தையர் இந்தச் சேதியை வெட்கத்திலை மறைச்சிட்டினம்.

நான் சொல்லுறதை எதையுமெ கேட்காத கடுக்கன். இன்று எதிர்வீட்டுப் பெடியன் போல் இருஎன்றதை மட்டும் கேட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் மூழ்கினேன்.

தொலைபேசி மணி அடிக்க ஓடினேன். மகன் இரவிதான் என் அண்ணன் வீட்டில் இருந்து கதைத்தான் பெரியப்பாவிடம் கணக்குக் கொஞ்சம் கேட்டுப்படிக்க வேண்டும் படித்துவிட்டு வருகிறேன் என்றான்.

இரவு 8 மணிக்கு பெரியப்பாவுடன் வீட்டிற்கு வந்தான்.
 
காதில் கடுக்கன் இல்லை. தலையில் அந்த சிறிய கொண்டைவால் இல்லை. சேட்டுக் கூட முதல்தடவையாக அவனுக்கு அளவு எடுத்துத் தைத்தமாதிரி இருந்தது.

எனக்கு இப்படி அவனைப் பார்க்க பயமாக இருந்தது. இப்போ எதிர்;வீட்டுச் சம்பவத்தின் பின் ஆடைக்குள்ளும் வெளித்தோற்றத்திலும் மனசைத் தேடுவதை என்மனசு நிறுத்திவிட்டது.

அவனை முன்புமாதிரியே கடுக்கனையும் தலையையும் மாற்றும்படி சொல்லு என்று என் மனைவியிடம் சொல்லுகிறேன் அதனை அவனுக்கு நேரில் சொல்ல எனக்கு தகப்பன் என்ற பதவி இன்னும் உதைக்கிறது.
 
காதிலே கடுக்கன் இருந்தாலும் -அவன்
மனதிலே பண்பாட்டின் மிடுக்கு இருக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *