கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,438 
 

அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் வருவான் என்பதில் மட்டும் அவருக்குத் துளியும் சந்தேகமில்லை. அந்த முதிய கேரள நம்பூதிரி சொன்னது அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. “வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்….”.

அபிராம பட்டரின் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தது. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு விக்கிரகம் இன்னும் பிரதிஷ்டையாகாத கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் தொலை தூரத்திற்கு வேறு எந்த வீடும் கிடையாது. காலையில் பால்காரன் வந்து விட்டுப் போனால் வேறு யாரும் அவர் வீட்டுக்கு வருவது கிடையாது. உறவினர்களோ நண்பர்களோ இல்லாமல் தனிமையாக அவர் அந்த வீட்டில் வசித்து வந்தது செந்திலின் திட்டத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்தியது.

ஒரு புராதன அம்மன் கோயிலில் நகைகளைக் கொள்ளை அடிக்க அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டான். அதை வாங்குவதற்கு வட நாட்டு மனிதர் ஒருவர் தயாராக இருந்தார். கொள்ளை அடித்தவுடன் அன்றைய தினமே நகைகளை அவர் வந்து வாங்கிக் கொண்டு போவதாக இருந்தது. ஆனால் கொள்ளையடிக்கப் போகும் கோயிலின் அருகே உள்ள பெரிய மைதானத்தில் அவனது திட்ட நாளன்றே முதலமைச்சரின் பொதுக்கூட்டம் நடக்க திடீரென்று ஏற்பாடு ஆனது. போலீஸ் நடமாட்டம் அதிகமாக அந்தப் பகுதியில் ஆரம்பிக்கும் என்பதால் அவன் தனது திட்டத்தை மூன்று நாட்கள் முன்னதாக செயல்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அந்த வட நாட்டு மனிதரோ முன்பு சொன்ன தேதிக்கு முன்னால் வர முடியாது என்று சொல்ல கொள்ளை அடித்த நகைகளுடன் மூன்று நாள் மறைந்திருக்க ஒரு இடத்தைத் தேடித் தேடிக் கடைசியாக அவன் தேர்ந்தெடுத்தது தான் அவர் வீடு. நகைகளை வெற்றிகரமாக அவன் கொள்ளையடித்து விட்டான். லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஒரு பழந்துணியில் கட்டிக் கொண்டு அவன் அவரது வீட்டை அடைந்த போது இரவு மணி பன்னிரண்டு. அந்த நேரத்தில் வாசற் கதவு திறந்திருந்ததும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்ததும் அவனை திடுக்கிட வைத்தன. ‘யாராவது வந்திருக்கிறார்களா?’ வெளியே சிறிது நேரம் நின்று காதுகளைக் கூர்மையாக்கினான். காற்றும், வண்டுகளும் தான் சத்தமிட்டன. வீட்டுக்குள் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. தன் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு மெள்ள உள்ளே நுழைந்தான்.

“வாங்கோ..வாங்கோ”

அபிராம பட்டர் மிகுந்த சந்தோஷத்துடன் எழுந்து நின்று அவனை வரவேற்றார். கிட்டத்தட்ட எழுபது வயதைத் தாண்டிய அவர் தன் வயதில் பாதியைக் கூடத் தாண்டாத அவனது திடகாத்திரமான முரட்டு உருவத்தையோ கத்தியையோ பார்த்து பயக்காதது மட்டுமல்ல அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்ததும், வரவேற்றதும் அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இது வரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன் எதிர்கொண்டதெல்லாம் பயம், அதிர்ச்சி, மயக்கம், உளறல், கூக்குரலிடுதல் வகையறாக்களைத் தான்.

“உட்காருங்கோ” என்று தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலியைக் கை காட்டினார்.

செந்தில் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தான். இங்கு நடந்து கொண்டிருப்பவை எதையும் அவனால் நம்ப முடியவில்லை. அபிராம பட்டரைக் கூர்ந்து பார்த்தான். அவர் அவிழ்ந்திருந்த தன் குடுமியை நிதானமாக முடிந்து கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அது ஒரு சந்தோஷமான, மனம் நிறைந்த புன்னகை.

“பெருசு நீ என்னை வேற யாரோன்னு நினைச்சுட்டே போல இருக்கு” செந்தில் கரகரத்த குரலில் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

அபிராம பட்டருக்கு அந்தக் கேரள நம்பூதிரிகள் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. “வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்….”. அவன் வந்த நேரமும் சரி, கத்தியோடு வந்த விதமும் சரி அவர்கள் சொன்னது போலத் தான் இருக்கிறது.

“அப்படியெல்லாம் இல்லை” என்று அமைதியாக சொன்னார்.

‘கிழத்திற்குப் பைத்தியம் முற்றி விட்டது போலிருக்கிறது’ என்று எண்ணிய செந்திலுக்குச் சிறிது உதறல் எடுத்தது. போலீஸைக் கூட சமாளிக்க அவன் தயார். ஆனால் பைத்தியம் என்றால் அது அடுத்து என்ன செய்யுமோ என்று அனுமானிக்க முடியாததால் ஏற்ப்படுகிற உதறல் அது. அதை வெளிக் காட்டாமல் யோசித்தான். எதிராளியை என்றுமே பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனது தொழில் சூத்திரம். பயம் மட்டுமே என்றுமே மனிதனை செயல் இழக்க வைக்கிறது என்பதும் அது தனக்குப் பாதுகாப்பு என்பதும் அனுபவம் அவனுக்குக் கற்றுத் தந்த பாடம். கத்தியை அவர் முன்னுக்கு நீட்டினான். “பெருசு இது பொம்மைக் கத்தியில்ல. நான் நினைச்சா ஒரு நிமிஷத்தில உன்னைக் கொன்னுடலாம் தெரியுமா?”

அபிராம பட்டர் அதற்கும் அசரவில்லை. “நான் எப்ப சாகணும்னு பராசக்தி நான் பிறந்தப்பவே நாள் குறிச்சுருக்கா. அதுக்கு முன்னாடி நீங்க நினைச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அந்தக் கத்தியை உள்ளே வைங்கோ. நான் என்ன உங்க கிட்ட சண்டையா போட்டேன்”.

மனிதர் ஒடிசலாக இருந்தாலும் அவர் பேச்சு உறுதியாக இருந்தது. அவரை என்ன செய்வது என்றே அவனால் தீர்மானிக்க முடியவில்லை. “பெருசு உன் கிட்ட நானும் சண்டை போட வரல. நான் இங்க மூணு நாள் தங்கப் போறேன். நான் இங்க இருக்கறது வெளிய ஒருத்தனுக்கும் தெரியக் கூடாது. அது உன்னால வெளிய தெரியப்போகுதுன்னு தெரிஞ்சாலோ, நீ என் கிட்ட எடக்கு முடக்கா நடந்துகிட்டாலோ நான் உனக்கு நாள் குறிச்சுடுவேன். பராசக்தி குறிச்ச நாள் வரை நீ உசிரோட இருக்க முடியாது. புரிஞ்சுதா”

“புரிஞ்சுது. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. பயப்படாதீங்கோ. எவ்வளவு நாள் வேணும்னாலும் இருங்கோ. உங்களாலும் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதுக்காகத் தான் பெளர்ணமி எப்போ வரும், நீங்க எப்போ வருவீங்கன்னு நான் ஆவலாய் காத்துகிட்டு இருந்தேன்”.

அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்களும் அவனை திடுக்கிட வைத்தன. எரிச்சலோடு சொன்னான். “புதிர் போடாம எனக்கும் பைத்தியம் பிடிக்கறதுக்கு முன்னாடி விவரமா சொல்லுய்யா”

அபிராம பட்டர் சொல்ல ஆரம்பித்தார். பம்பாயில் கோடிக் கணக்கில் சொத்துள்ள வைர வியாபாரம் செய்யும் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தின் பூர்வீக இடமும் அந்த இடத்தில் ஒரு பராசக்தி கோயிலும் இங்கிருந்தன. தங்களது சுபிட்சத்திற்கு அந்தப் பராசக்தியின் அருள் தான் காரணம் என்று பெரிதும் நம்பிய அந்தக் குடும்பம், தடைப்படாமல் பூஜை அந்தக் கோயிலில் நடக்க அபிராம பட்டரை நியமித்திருந்தது. தனது பதினெட்டாம் வயதிலிருந்து அபிராம பட்டர் கோயிலில் பூஜை செய்து கொண்டு அருகில் இருந்த அந்த வீட்டில் வசித்து வந்தார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அனைவரும் வந்து பராசக்தியை தொழுது விட்டுப் போவார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பராசக்தி சிலை சேதப்பட்டுப் போனது. அதே சமயம் அந்தக் குடும்பத்தின் மூத்த தலைவருக்கு மாரடைப்பும் வரவே உடனடியாக பல லட்சம் செலவு செய்து கோயிலைப் புதிதாகக் கட்டவும் சாஸ்திரப்படி ஒரு பராசக்தி சிலை செய்யவும் ஏற்பாடு செய்தார்கள். கோயில் கட்டப்பட்டு முடிந்த போது பராசக்தி சிலையில் கண்களைத் தவிர சிற்ப வேலை எல்லாமே முடிந்திருந்தது. அந்த நிலையில் சிற்பி ஒரு சாலை விபத்தில் இறந்து போனான். இது ஒரு பெரிய அபசகுனமாகத் தோன்றவே அந்தக் குடும்பத் தலைவர் அபிராம பட்டரையும் அழைத்துக் கொண்டு கேரளா சென்று சில வேத விற்பன்னர்களான நம்பூதிரிகளையும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்தார். அவர்கள் அஷ்ட மங்கலப் ப்ரஸ்னம் வைத்து ஆருடம் சொன்னார்கள். பெளர்ணமி இரவு அன்று ஒருவன் தானாகவே அபிராம பட்டரைத் தேடி வருவான் என்றும் அவனைக் கொண்டு அந்தக் கண்களைச் செதுக்கும் படியும் சொன்ன அவர்கள் சிலையைப் பிரதிஷ்டை செய்ய நாளையும் குறித்துக் கொடுத்திருந்தார்கள். அப்படிச் செய்தால் அந்தக் குடும்பத்தார்களுக்கு எல்லா தோஷங்களும் நீங்குவதோடு அந்தக் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசிக்கும் பிரசித்தியும், சக்தியும் வாய்ந்த ஸ்தலமாக மாறும் என்றும் சொன்னார்கள்.

“இந்த வீட்டுக்கு வெளியாட்கள் வந்து பல காலம் ஆயிடுச்சு. ஆனா அவங்க சொன்னது போல இந்த பெளர்ணமி ராத்திரியாப் பார்த்து நீங்க வந்திருக்கீங்கோ. அவங்க சொன்னபடியே நீங்க இங்கே இருந்து அந்தக் கண்களையும் செதுக்கித் தரணும். அந்தக் குடும்பத்துப் பெரியவர் நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரச் சொல்லி என் கிட்டே அவர் கையெழுத்து போட்ட ப்ளாங்க் செக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதில் நீங்க என்ன தொகை வேணும்னாலும் எழுதிப் பணம் எடுத்துக்கலாம். அவங்களுக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை”

கேட்டு விட்டு செந்திலே ஒரு சிலையாகத் தான் நின்றிருந்தான். கடைசியில் அரை மனதோடு சொன்னான். “நான் ஒரு திருடன். சிற்பியல்ல”

“அஷ்ட மங்கல ப்ரஸ்னம் வைத்தவர்கள் மஹா தவசிகள். சாதாரணமானவங்க அல்ல. அவங்க சொன்னது பொய்க்காது. உங்களுக்கு சிற்பக்கலை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை” அபிராம பட்டர் ஆணித்தரமாகச் சொன்னார்.

அந்த ப்ளாங்க் செக் நிறையவே ஈர்த்தாலும் செந்திலுக்கு அந்த இடமே மாந்திரிகம் நிறைந்ததாகத் தோன்றியது. எல்லாம் முன்னமே தெரிந்து வைத்திருந்த அந்தக் கேரள நம்பூதிரிகளும், அபிராம பட்டரும் அவனை அசத்தினார்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா என்கிற பிரமிப்பு தீரவில்லை. கூடவே அங்கிருந்து ஓடி விடலாம் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் அந்தத் திருட்டு நகைகளோடு இனி எங்கே போய் ஒளிவது? இன்னமும் மூன்று நாள் ஒளிந்திருக்க இது தான் பாதுகாப்பான இடம்.

“பெருசு நான் இப்ப எங்கேயிருந்து வர்றேன் தெரியுமா? ஒரு அம்மன் கோயில்ல இருந்து நகைகளைக் கொள்ளை அடிச்சுட்டு வர்றேன். என்னைப் போய் ஒரு அம்மன் சிலைக்குக் கண் வடிக்கச் சொல்றிச்ங்க. இத்தன உசந்த வேலையை எங்கிட்டத் தர்றீங்களே தமாஷா இல்ல”

“உங்களை மாதிரிக் கொள்ளை அடிச்ச ஒருத்தர் தான் ராமாயணம் எழுதினார். எல்லாம் தெய்வ சங்கல்பம். சரி சரி மணி ரெண்டாகப் போகுது. பேசாமத் தூங்குங்கோ. மீதி எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்” என்று அவர் அவனுக்குப் படுக்கையை விரித்துத் தானும் போய் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது குறட்டை சத்தம் லேசாகக் கேட்டது.

அவனுக்கு உறக்கம் வரவில்லை. ‘இனி இந்த வேலையைச் செய்ய மாட்டேன்’ என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன் அப்பாவின் எதிரில் உளியைத் தூக்கி எறிந்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அப்பா அன்று சொன்னார் “இது ஒரு நல்ல கலைடா”.

“நீங்க கலையைப் பார்க்கிறீங்க. நான் இந்தக் கலை இத்தனை வருஷமா உங்களுக்குக் கொடுத்த பட்டினியைப் பார்க்கறேன்”

அதற்குப் பின் அவன் உளியை எடுத்தது பூட்டுகளை உடைக்கத் தான். இத்தனை வருடம் கழித்து இப்படியொரு சூழ்நிச்லையில் மறுபடி அவனுக்கு ப்ளாங்க் செக்குடன் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அபிராம பட்டரின் குறட்டை சத்தம் அதிகமாகியது. ஒரு கொள்ளைக்காரன் வீட்டில் இருக்கும் போது எந்த பயமும் இன்றித் தூங்கும் பட்டரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனையும் அறியாமல் அவனுக்கு ஏனோ அந்தப் பட்டரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

மறு நாள் காலை அவன் சொன்னான் “எனக்கு நேத்துத் தூக்கமே வரல பெருசு”

“கையில கொள்ளையடிச்ச நகை அவ்வளவு இருக்கிறப்ப எப்படித் தூக்கம் வரும்”

“என்ன கிண்டலா. அது சரி. என்னை இங்க வச்சிகிட்டு எப்படிப் பெருசு நீ நிம்மதியாத் தூங்கினே”

“உண்மையைச் சொன்னா நான் ஆறு மாசம் கழிச்சு நேத்து தான் நிம்மதியாத் தூங்கினேன்” அபிராம பட்டரின் கண்களில் நீர் தழும்பியது “அந்தப் பணக்காரங்களைப் பொறுத்த வரை இந்த பராசக்தி அவங்களைச் சுபிட்சமாய் வச்சிருக்கும் ஒரு தெய்வம். ஆனா எனக்கு எல்லாமே அவள் தான். பதினெட்டு வயசுல பூஜை செய்ய ஆரம்பிச்ச எனக்கு அப்புறம் ஒரு குடும்பமோ, பணமோ, வேற சினேகிதர்களோ வேணும்னு தோணலை. தாயாய், சினேகிதியாய், குழந்தையாய்,சொத்தாய்,எல்லாமாய் எனக்கு அவள் இருந்தாள். பூஜை செய்துகிட்டு இருக்கிறப்பவே ஒரு நாள் அவள் காலடியில் உயிர் போயிடணும். அது தான் என் ஒரே ஆசை. விக்கிரகம் சேதப்பட்டப்ப என்னையே ரெண்டாப் பிளந்த மாதிரி துடிச்சேன். நேத்து உங்களைப் பார்த்த பிறகு தான் நிம்மதி.சந்தோஷம்.எல்லாம் சரியாகி நான் பழைய படி பூஜை செய்ய ஆரம்பிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு”

“ஏன் பெருசு எனக்கே அவங்க இவ்வளவு பணம் தர்றாங்களே. உனக்கு எவ்வளவு தருவாங்க”

“எவ்வளவு வேணுனாலும் தருவாங்க. பசிக்குச் சோறு, உடுக்கத் துணி, தங்க இடம் இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்கோ. அதுக்கு மேல கிடைக்கிறதெல்லாம் அதிகம் தான். அவங்க தந்தாலும் நான் வாங்கறதில்லை”

அந்தக் கிழவரின் கள்ளங்கபடமில்லாத பேச்சும் வெகுளித்தனமும் அவன் தந்தையை அவனுக்கு நினைவுபடுத்தின. அவரும் இப்படித்தான் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்தார். ஆனால் பிழைக்கத் தெரியாதவர் என்று தான் நினைக்கும் இந்தக் கிழவரின் நேற்றைய நிம்மதியான உறக்கமும் பிழைக்கத் தெரிந்த தனது உறக்கம் வராத நிலையும் ஒரு கணம் அவனுக்கு உறைத்தது. இது பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.

“ஏன் பெருசு இவ்வளவு சின்னவனான என்னைப் போய் எதுக்கு நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றே”

“என் தெய்வத்திற்கு கண்கள் தரப்போறவர் நீங்க. நீங்க எவ்வளவு சின்னவராக இருந்தாலும், எப்படிப் பட்டவரா இருந்தாலும் சரி எனக்கு கடவுள் மாதிரி தான்”

அவரது வார்த்தைகள் அவனை என்னவோ செய்தன.

“நான் சிற்ப வேலை செஞ்சு இருபது வருஷம் ஆயிடுச்சு. இப்ப எனக்கு எப்படி வரும்னு தெரியல”

“நல்லாவே வரும்.எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றவர் அருகில் கோயிலில் இருந்த அந்த சிற்பத்தைக் காண்பித்தார். பழைய சிற்பி உபயோகித்த உபகரணங்களும் அங்கிருந்தன. சிலைக் கல்லையும் அந்த உபகரணங்களையும் அவன் நன்றாக ஆராய்ந்தான்.

“பெருசு, நீங்க போங்க. எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும்” அவர் போய் விட்டார்.

அந்த சிலையையே பார்த்தபடி நிறைய நேரம் செந்தில் உட்கார்ந்தான். திருடன் திரும்பவும் கலைஞனாக மாற சிறிது நேரம் தேவைப் பட்டது. தன் குருவான தந்தையை நினைத்துக் கொண்டான்.
“சிலை கல்லில் வர்றதுக்கு முன்னால் மனசில் துல்லியமாய் வரணும். அதுக்கு முன்னால் உளியைத் தொடக்கூடாது” என்று அப்பா என்றும் சொல்வார். சிலையை நிறைய நேரம் பார்த்து கண்ணை மூடினான். மனதில் பல விதமான கண்கள் வந்து வந்துப் பொருத்தமில்லாமல் மறைந்தன. கடைசியில் பேரழகுடன் இரு விழிகள் வந்து மனதில் உள்ள சிலையில் நிலைத்தன. அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி ஒரு துளியாக ஆரம்பித்து வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது. உளியைக் கையில் எடுத்தான். சிலை கண்கள் திறக்க ஆரம்பித்தது.

அவனுக்கே எப்படி செதுக்கி முடித்தான் என்று தெரியவில்லை. ஆனால் முடித்த பின் அவனே சொக்கிப் போனான். பராசக்தியின் கண்கள் மெள்ள மெள்ளப் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது. கடைசியில் அந்தக் கண்களைத் தவிர வேறெதையும் அவனால் காண முடியவில்லை. அண்ட சராசரங்களையே அவன் அந்தக் கண்களில் கண்டான். அந்தக் கண்களில் இருந்து கவனத்தைத் திருப்ப அவனால் முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. பார்த்தான். பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். காலம் அவனைப் பொருத்த வரை நின்று போய் விட்டது.

அபிராம பட்டர் மதியம், மாலை, இரவு என மூன்று நேரங்களில் வந்து பார்த்தது அவனுக்குத் தெரியாது. இரவில் அவர் வந்து பார்க்கும் போது இரண்டு சிலைகளைப் பார்த்தார். அந்தத் தெய்வச் சிலையும் மனிதச் சிலையும் ஒன்றை ஒன்று நேராகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. அந்த முரட்டு முகம் சிறிது சிறிதாகக் கனிய ஆரம்பித்து பேரமைதியுடன் பளிச்சிட்டது. பட்டர் பராசக்தியைப் பார்த்தார். அவரது பராசக்தி இப்போது முன்பை விட அதிகப் பேரழகுடன் ஜொலித்தாள். எல்லை இல்லாத சந்தோஷத்தில் அவர் கண்கள் அருவியாயின. அவர் சாஷ்டாங்கமாய் அவனது கால்களில் விழுந்தார்.

இந்த உலகிற்கு மறுபடியும் திரும்பிய அவன் தீயை மிதித்தவன் போலப் பின் வாங்கினான். “பெரியவரே, என்ன இது…” அவனது பேச்சும் தோரணையும் முற்றிலும் மாறி இருந்தது.

அபிராம பட்டருக்கு வார்த்தைகள் வரவில்லை. மெளனமாக அந்தச் சிலையைக் காண்பித்துக் கை கூப்பினார். பின்பு அந்தப் ப்ளாங்க் செக்கை நீட்டினார்.

அவன் வாங்கவில்லை. “நான் கண்களைச் செதுக்குனதுக்கு அவள் என் கண்களைத் திறந்துட்டா பெரியவரே. எங்களுக்குள்ள கணக்கு சரியாயிடுச்சு” புன்னகையோடு கரகரத்த குரலில் சொன்னான். “ஒரு விதத்தில் பார்த்தா வாழ்க்கையே நமக்கு அவள் தர்ற ப்ளாங்க் செக் தான், இல்லையா பெரியவரே. என்ன வேணும்னாலும் எழுதி நிரப்பிக்கோன்னு குடுத்துடறா. நாம் தான் எதையோ எழுதி எப்படியோ நிரப்பிக் கெடுத்துடறோம்” அவன் குரலில் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு வருத்தப் படுவது போல் தெரிந்தது. அதற்குப் பின் பேசும் மனநிலையில் இருவருமே இல்லை. மனம் நிறைந்திருக்கையில் வார்த்தைகள் அனாவசியமாகவும், மெளனமே இயல்பாகவும் இருவருக்கும் தோன்றியது. சாப்பிட்டு விட்டுத் தூங்கினார்கள்.

நடு இரவில் அபிராம பட்டர் விழித்துப் பார்க்கையில் செந்திலின் படுக்கை காலியாக இருந்தது. வீடு முழுவதும் தேடி அவன் இல்லாமல் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார். அவன் அங்கும் இருக்கவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவன் போய் விட்டிருந்தான். ஆனால் அவன் நேற்றுக் கொண்டு வந்திருந்த நகைகள் எல்லாமே பராசக்தியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *