என் அருமை சந்திரிக்கா

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 51,613 
 

கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம்.

இரவு 1 மணி

படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்….

ஒன்றும் தெரியவில்லை…

மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்…

அப்போதும் தெரியவில்லை

கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்…

கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது..

அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது…

எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து படுத்துவிட்டேன்….

மீண்டும் அதே சத்தம்,

தனியாய் இருக்கிறோம் என்று அப்போதுதான் நினைவுக்கே வந்தது…

வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்தால் கீழ்தளம் முழுக்க நன்கு தெரியும்…

தொட்டதுக்கெல்லாம் குரைக்கும் நாய்கள் தூங்க போயினவோ? தெரியவில்லை…

மேல் வீட்டுத் தளத்திலும் யாரும் இல்லை…

வாயில் கதவு பூட்டி இருப்பதால் யாரும் வர வாய்ப்பே இல்லை….

ஆனால் படியேறும் சத்தம் எங்கனம்?

பேய்களை கண்டால் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை…..

கைபேசியின் கமராவை கைவசம் வைத்துக்கொண்டே கட்டிலுக்கு வந்துவிட்டேன் மீண்டும்….

அதற்கு பின்னும் அதே சத்தம்…

பேய் வாயை மூட முடியாது, நம் காதை மூடிவிடலாம் என்று தலையணையை எடுத்து தலையோடு சுற்றினேன்….

சில நிமிடங்களும் இல்லை…

கால்களை ஏதோ சுரண்டுவதை உணர்ந்தேன்…

குளிர்காலத்திலேயே போர்வையை காணாத ஜாதி நாங்கள்…

இப்போது கோடைகாலம்.

என்றால் என்ன? ஆபத்துக்கு பாவமில்லை.

கால்களை இறுக்கி கனமாக போர்திக்கொண்டேன்….

அப்போதும் அதே சுரண்டல்…

போர்வைக்குள் கால்களை சுருட்டி இழுத்துக்;கொண்டு, இன்னொரு போர்வையை எடுத்து போலிக் கால்களை செய்து வைத்துவிட்டேன்..

எந்த சத்தமும் கேட்டுவிடாதபடிக்கு காதுகளை சுற்றி தலையணை வழமைப்போல்…

ஆனாலும் யாரோ அருகில் இருந்து சிரிப்பதாக ஒரு எண்ணம்….

தலையை சுற்றி இருந்த தலையணையை அகற்றி, சற்றே மேல் எழுந்து பார்த்தேன்…

கூந்தலால் உடலை மூடிய ஒரு உருவம் என் கால்மாட்டில்.

தப்பி ஓடுவதானாலும், இந்த உருவத்தை தாண்டிதான் ஓட வேண்டும்…

தடுமாறிப் போன நான், சற்றே தைரியத்தை வரவழைத்து, சில அடிகளை தாண்டிச் சென்று மின்விளக்கை ஏற்றினேன்…

கூந்தலை விலக்கிய அந்த உருவம் நிமிர்ந்து பார்த்து….

‘ஹ…ஹா..ஹாh….. பயந்திட்டியா?’

‘சந்திரிக்கா’– நான்…

‘ஆ… சந்திரிக்காவேதான்;.. நல்லா பயந்துட்டதானே நீ… ஹீ.ஹீ…ஹீ…’– அவள்

‘இந்த இருட்டுல வந்து இப்பிடி சிரிச்சா பயப்படமா என்ன செய்வான்’– நான்..

சந்திரிக்கா என் நண்பி… இல்லை அதற்கும் கொஞ்சம் மேல்…

அவளும் நானும் பேஸ்புக்கில் அறிமுகமாகி, இப்போது நெருக்கமான நண்பர்கள்.

இப்படி இரவில் வீட்டுக்குள் வரும் அளவுக்கு…

ஆனால் இதுதான் முதல் முறை அவள் என் வீட்டுக்கு வருவது..

என் வீட்டோடு முன்பாக செல்லும் பாதையைக் கடந்தே அவள் வீட்டுக்கு செல்ல வேண்டும்.

‘இந்த நேரத்துல எப்படி வீட்டுக்குள்ள வந்த? கதவெல்லாம் பூட்டிஇருந்துச்சே’– நான்

‘நீ கீழ கேட்ற மூட போனப்போ நான் உள்ள வந்துட்டேன்.. ஹீ…ஹீ…’– அவள்…

‘நல்ல ஆள்தான் நீ… இந்த ரைம்ல எங்க போய்ட்டு வார? – நான்

‘இண்டைக்கு நைட் டுயுட்டி.. முடிஞ்சி வர லேற் ஆகிட்டு… இங்க வரும் போது ஓன் ஞாபகம் வந்துச்சு.. அதான் சர்ப்ரைஷா விசிட் பண்ணிட்டேன்…’– அவள்…

‘நல்லா கொடுத்தடீ சர்ப்ரைஷு’– நான்…

அவளை அதற்கு மேல் என் கட்டில் அறையில் வைத்து கதைத்திருக்க விரும்பவில்லை.

‘வா.. முன்னுக்கு போவம்..’– நான்

அவளை அழைத்துக் கொண்டு முன்னறைக்கு சென்று மின்னொளியை ஏற்றி, ஷோபாவில் அமரச் செய்தேன்…

படுக்கை அறையின் மின்னொளி வெளிச்சத்தைவிட முன்னறையின் வெளிச்சம் அதிகமானது…

சந்திரிக்கா அதனிலும் பிரகாசமாக தெரிந்தால்…

அவளை பேஸ்புக்கில் சந்தித்திருந்த போதும் அதன் பின்னர் நேரடியாக ஏற்பட்ட பழக்கம்தான் அவளிடம் என்னை நெருங்க வைத்துவிட்டது…

கடந்த வாரம் அவள் மரணித்துவிட்டதாக கூறி என்னிடம் ஒரு சுவரொட்டியை தந்துச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியை சீ.சீ.ரீ.வி கமராவில் அடையாளம் கண்டு, அவர்தான் தன் தந்தை என்றும், அவர் இறந்துவிட்டதாகவும் அவள் கூறியதன் பின்னர் ஏற்பட்ட பதட்டம் இன்னும் தணியவில்லை.

அதற்கு பிறகு இன்றுதான் அவளை சந்திக்கிறேன்…

அவள் யாரென்று இன்னும் எனக்கு உறுதியாக தெரியவில்லை.

ஆனால் இந்த வாரம் முழுக்க அவளின் நினைப்பாகவே இருந்தது.

அவளை முன்னே தனியாக இருந்த ஷோஃபாவில் அமரச் செய்து, எதிரே இருந்த நீண்ட ஷோஃபாவில் நான் அமர்ந்துக் கொண்டேன்…

சற்றும் தாமதியாமல் என் அருகிலேயே ஓடிவந்து அமர்ந்துக் கொண்டாள்…

என்னை பார்க்கமலேயே பேசினாள்.

தன் கைப்பையில் இருந்த ஒரு புகைப்பட ஆல்பத்தை எடுத்து ஒவ்வொரு புகைப்படமாக காட்ட ஆரம்பித்தாள்…

அவள் சிறுவயது முதல், அவள் அம்மா, அப்பா, என்று ஒவ்வொருவரையாக காட்டி அறிமுகம் செய்தாள்…

புகைப்படங்களை காட்டும் போது அவளின் விரல் நகம் அங்காங்கே என் விரல்களை முட்டிச் செல்லும்…

அப்போதெல்லாம் நான் உயிரோடிருக்கிறேன் என்பதை உரத்துச் சொல்லும்..

அவளின் பிரகாசமான கண்கள், அவள் காட்டிய புகைப்படங்களை பார்க்கச்சொல்லவே இல்லை….

அவள் தன் நீண்ட வளைந்த கண்களை சிமிட்டும் போது, அவளின் இடது கண் இமைக்குள் இருந்து ஒரு கறுப்பு நிலவு எட்டிப் பார்க்கும்…

அந்த மச்சத்துக்காகவே என் உயிரை கொடுக்கலாம்…

அவள் அவ்வளவு அழகானவள்… இன்று இன்னும் அழகாய் தெரிந்தாள்…

விரல் நகத்துக்கு பூசி இருந்த கறுப்பு நிற க்யுரெக்ஸ், விரலை கடித்திழுக்கும் படிதான் சொன்னது….

நான் அப்போதே நினைத்திருந்தேன்…

இவள் மட்டும் ஆவியாக இல்லாவிட்டால், என் அம்மாவிடம்தான் முதலில் அழைத்துச் செல்வேன்…காலில் விழுந்து கதறியாவது கட்டிவைக்கச் சொல்லி இருப்பேன்..

ஆனால் இப்போது நினைக்கிறேன்…

இவள் ஆவியாக இருந்துவிட்டால், நானும் ஆவியாகியேனும் இவளையே காதலிப்பேன்…

அவள் யாரென்பதில் இன்னும் எனக்கு தெளிவில்லை. ஆனாலும் அவளுடன் பழகுவதில் எனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை.

அவள் வந்து ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ஆகிவிட்டது…

அதிகாலை 2.30…

தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தவள்…

‘நேரமாச்சு… நான் போறேன்… என்ன கூட்டிப்போய் வீட்ல விடுறியா?’

‘ஓகே… கொஞ்சம் இரு வாறேன்…’– நான்

உடையை மாற்றிக் கொள்ளும் சில நொடிகளை அவளை அனுப்பத்தான் வேண்டுமா? என்று யோசித்தேன்….

அவள் காட்டும் அன்பை உணர்ந்தால் மாத்திரம்தான் புரிந்துக் கொள்ள முடியும்.

என்னோடு இருந்த இந்த ஒரு மணித்தியாலயத்தில் அவள் என்னை விட்டு பிரிந்தே இருக்கவில்லை.

என் அருகில், எனக்கு மிக அருகில் அமர்ந்துக் கொண்டே இருந்தாள்..

அப்போதெல்லாம், அவள் அழகிலும் மேன்மையான அன்பு என் உடலெல்லாம் வியாபிக்கும்..

அந்த புகைப்பட ஆல்பத்தில் இருந்த படங்களை காட்டிலும் அவள் கூறிய கதைகளை கூறிக் கொண்டே இருந்தாள்…

நான் எங்கே கேட்டேன்…

இடையில் ‘சிகரட் பிடிப்பியா? தண்ணி அடிப்பியா? கேர்ள் ஃபிரண்ட் இருக்கா? என்றெல்லாம் கேள்விகள் வேறு…

ஆவியை கண்டால்படம்பிடிக்க வைத்திருந்த கைப்பேசியின் கெமராவில், ஒன்றிரண்டு செல்ஃபிகளையும் எடுத்துக் கொண்டோம்…

‘போவமா..?’– நான்…

‘ஓகே..’– அவள்…

நாங்கள் இருவரும் வீட்டுப் படியை கடந்து வீதியில் இறங்கினோம்…

தெருநாய்களெல்லம் அடங்கி இருந்தன…

சில்வண்டுகளின் ரீங்காரம் மட்டும், அவ்வப்போது… திடீரென போகும் வாகனங்கள்… மற்றபடி அது அமைதியான தெரு…

அவளின் வீடிருக்கும் திசை எனக்கு தெரியும்…

வீடு தெரியாது…

இன்றுதான் முதல் முறையாக அவள் வீட்டுக்கு அவளுடன் நடக்கிறேன்…

என் கையை பிடித்துக் கொண்டே நடந்தாள், அப்பாவை பற்றி கூறினாள், அவளது அப்பா மீது அவள் எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் என்பது புரிந்தது….

எனது வீட்டுக்கு சற்று முன்னர் உள்ள வீதியின் வளைவில் விபத்தொன்றில் அப்பா இறந்துவிட்டதாக கூறினாள்.

அந்த இடத்தையும் காட்டினாள்…

அப்போதெல்லாம் கொஞ்சம் ஆடிப்போனேன் நான்…

அவள் மீது எல்லை கடந்த காதல் இருக்கிறது…

இன்னும் சொல்ல நினைக்கவில்லை.

ஆனால் அவள் அப்படி இல்லை..

என்னை அவள் தன் காதலனாகவே பார்க்கிறாள் போல்தான் தோன்றுகிறது எனக்கு…

இல்லையென்றால் இவ்வளவு நெருக்கமாக பழகுவாளா?

அவள் வீடிருக்கும் இடம் வந்துவிட்டது…

‘ஓகே.. நீ போ… இனி நா போய்டுவேன்..’– அவள்

‘எது வீடு?’– நான்

‘அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது’– அவள்..

‘சரி ஓகே…’ நான்

‘பாய்… நாளைக்கு மீற் பண்ணுவம்’– அவள்…

அவள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னமே என்னை போகும் படி சொன்னாள்…

அவள் ஆவியா, இல்லையா? என்பதை தேடும் எண்ணத்தில் நான் இல்லை…

விடாமல் துரத்தும் அவளுக்காக என் சந்தேகத்தை விடாது போனால்தான் குற்றம்…

எனவே நான் திரும்பிவிட்டேன்…

நான் வீட்டுக்கு வந்து வாயிற்கதவை நன்கு பூட்டிவிட்டு மின்விளக்குகளை ஒளிரவிட்டபடியே உறங்கிவிட்டேன்…

அவளும் அவள் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும்…

காலை 4.30

எனது கைப்பேசிக்கு வந்த அழைப்பு என்னை எழுப்பியது…

சந்திரிக்கா அழைப்பில்…

‘குட் மோர்னிங்’– அவள்

‘குட் மோர்னிங்…ஏர்லியா எழுந்துட்ட?’– நான்

‘ம்ம்… குட் நியுஸ் இருக்கு…’– அவள்..

‘என்னது…?’ நான்..

‘சொல்லட்டுமா?’– அவள்…

‘சொல்லேன்..’– நான்…

‘அப்பாவ கனவில கண்டே(ன்)’– அவள்…

‘என்ன சொன்னார்?’– நான்…

‘உன்னையே கல்யாணம் பண்ணிக்க சொன்னார்’– அவள்

என் கண்களிலும், உடலிலும் ஆங்காங்கே கட்டிலின் இடுக்களிலும் ஒட்டிக் கிடந்த உறக்கத்துளிகள் பறந்து போயின…

வீரிட்டு எழுந்து வினவினேன்…

‘அதுக்கு நீ என்ன சொன்ன?’

‘நானும் சரினு சொல்லிட்டன்’– அவள்

‘கனவிலதானே…’– நான்…

‘உனக்கு ஓ கேனா, நிஜத்திலயும்தான்…’– அவள்…

‘உண்மையாதான் சொல்றியா?’– நான்

‘ப்ரொமிஸ்… உனக்கு விருப்பம் இல்லையா?’– அவள்…

‘இத நீ எப்ப சொல்லுவனு காத்திட்டு இருந்தேன்….’– நான்…

‘ஈவ்னிங் வீட்டுக்கு வறேன்… அம்மா வாறாங்க…’ என்று சொல்லிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்…

அந்த தருணத்தில் நான் நானாக இல்லை…

அவளாக இருந்திருக்க கூடும்..

பட்டுப்போன்ற அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டால் என்ன என்று தோன்றியது….

கைப்பேசியில் நேற்று இரவு நானும் சந்திரிக்காவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை திறந்தேன்…

அதில் நான்… என் அருகில் சந்திரிக்காவின் அப்பா…..

– உதயசூரியன் பத்திரிகையில் வெளியானது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “என் அருமை சந்திரிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *