கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 64,944 
 

விடுதி நள்ளிரவுக்குப் பின்பும் விழித்திருந்தது. இன்று யார் பலியாகப்போகிறார்கள் என்ற பயம் திட்டுத்திட்டாய் எல்லார் முகத்திலும் படர்ந்திருந்தது. கடந்த ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தங்களுக்கு நேர்ந்த கொடிய அனுபவத்தைப் புதிய முறையில் விளக்க முயன்றுகொண்டிருந்தனர். இரண்டு பேர் மட்டுமே படுக்கும் விடுதி அறைகள் இப்போது நான்கு பேருக்கு மேல் அடைகலம் கொடுக்கத் தொடங்கியிருந்தன. ஒட்டடை தனது பூஜையை முடித்துக்கொண்டு விபூதி வழங்கியதோடு அனைவரும் அறைக்குள் நுழையத் தொடங்கினர். சிலர் விபூதியைத் தின்றனர். அனைவரின் இறுதி நம்பிக்கையும் இப்போது ஒட்டடையின் மேல்தான் இருந்தது. ஒட்டடை யாருடைய முகத்தையும் அதிகம் பார்க்கவில்லை. வழக்கமான அவனது ஞானப்பார்வையில் கொஞ்சம் தடுமாற்றம் கலந்திருந்தது. அவனுக்கும் இன்னும் முழுமையாக அச்சம் விலகாமல் இருக்கலாம்.

ஒட்டடை பயந்து இதுவரை நாங்கள் யாரும் பார்த்ததில்லைதான். கல்லூரிக்கு வந்த புதிதில் சீனியர்கள் என்ன மிரட்டியும் மீசையை மழிக்காமல் பிடிவாதமாக நின்றவன் அவன் மட்டும்தான். பின்னர் ஏதோ மனமிறங்கி தாடியை மட்டும் மழித்துவிட்டு முதல் நாள் வகுப்புக்குள் வந்தவன் ஐயனாரை நினைவு படுத்தினான். கட்டைவிரல் தடிமனுக்கு மீசை. நல்ல உயரம். உரமான தேகம். கைகளும் கால்களும் முறுக்கு ஏறியவை என உடை மூடியிருந்தபோதும் உணரமுடிந்தது. கழுத்தில் உத்திராட்சை கொட்டை எப்போதும் தொங்கும். டை கட்டாமல் இருந்தால் கொட்டை சட்டையைத் துருத்திக்கொண்டு தெரிவது வேடிக்கையாக இருக்கும். முதலில் உத்திராட்சைக்கொட்டையை ஒரு ஸ்டைலுக்காக அணிந்துள்ளான் எனதான் எல்லோரையும் போல நானும் நினைத்தேன். ஆனால், அவன் மிகப்பெரிய பக்திமான் என்பது சில வாரங்களில் புரிந்துகொள்ள முடிந்தது.

காலையில் முதல் ஆளாக எழுந்து குளித்துவிட்டு, அறையில் இருக்கும் சாமிப்படங்களுக்குப் பூஜை போடுவது தன் தூக்கத்துக்குத் தடையாக இருப்பதாக அவன் அறைத்தோழன் வேறு அறையைப் பார்த்துக்கிழம்பிய போதுதான் நாங்கள் அவனை உன்னிப்பாகக் கவனிக்கத்தொடங்கினோம் . ஒட்டடையும் நண்பனின் அலமாரியைச் சாமி பொருள்கள் வைக்கும் பகுதியாக ஒதுக்கி, காலியாகிவிட்ட அவன் மெத்தைக்கு மேல் ஒரு மஞ்சள் துணியை விரித்து தியானம் செய்வதற்கென்றே தயார்ப்படுத்திவிட்டான். இரவு எட்டு மணிக்கு மேல் ஒட்டடையை வெளியில் பார்க்க முடியாது. அறையில் தியானம் செய்துக்கொண்டிருப்பான். டியூப் லைட்டில் சிவப்பு நெகிழியை ஒட்டி, தியான நிலைகளில் திறந்துவிட்டிருப்பதால் வெளிப்புற சன்னல் வழியாக பிதுங்கி பரவும் சிவப்பொளி அவன் அறையைத் தணித்துக்காட்டும். பின்னர் நள்ளிரவுக்குள்ளாகவே அந்த ஒலி அடங்கிவிடும்.

பெண் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் ஒட்டடைக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. எந்த நேரமும் அவனிடம் ஏதாவது குசுகுசுவென பேசிக்கொண்டே இருப்பார்கள். அவனிடம் பேசும் போது மட்டும் அவர்களிடம் அதிகமாகப் பெண்தன்மை கூடியுள்ளதை நான் பலமுறை கண்டதுண்டு. எங்களிடம் அவன் குறித்து பேசும் போதும் அவர்கள் குரலில் ஒரு குழைவு தெரிவது எரிச்சலாக இருக்கும். ஒட்டடை பெண்களுடனான சம்பாஷனைகள் குறித்தெல்லாம் யாரிடமும் பகிர்வதே இல்லை. அவன் ஒரு பெண்ணிடம் பெற்ற தகவல் அடுத்தப் பெண்ணிடம் போகாது என்பது உத்தரவாதம். முதலில் ஒரு பெண்ணுடன் அணுக்கமாக இருப்பான். அவர்களைப் பல கோயில்களுக்குக் கூட்டிச்செல்வான். ஒவ்வொரு நாளும் அறையிலிருந்து எலுமிச்சைக் கனிகளை எடுத்து வந்து கொடுப்பான் . அவர்களும் அதை பக்தியோடு வாங்கி கொள்வார்கள். ஆனால் ஒட்டடை ஒரே பெண்ணிடம் தொடர்ந்து நெருக்கமாக இருந்து யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். எலுமிச்சைக் கனிகள் யாரிடம் போகிறது என்பதைப் பொறுத்து அப்போதைய நெருக்கமான பெண்களை நாம் அணுமானித்துக்கொள்ளலாம்.

யாரும் ரகசியத்தை வெளியிடாவிட்டாலும் ஒட்டடை சக தோழிகளின் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் ஆலோசகனாக இருக்கிறான் என்பது மட்டும் ஆண் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக நம்பப்பட்டது. எந்த பிரச்னைக்கு எந்தச் சாமியை எப்படிக் கூம்பிட வேண்டும் என்றும் அதற்கு என்னென்ன பரிகாரங்கள், சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பதிலும் ஒட்டடை இரட்டை மாஸ்டர் வைத்திருந்தான். பல பெண் பயிற்சி ஆசிரியர்கள் அவனது ஆலோசனையால் பிரச்னைகள் தீர்ந்துவிட்டதாக வெளியில் பேசிக்கொண்டனர். யாரும் இல்லாத காலை நேரங்களில், பெண்களின் விடுதிக்குள் நுழைந்து சேட்டை செய்யும் பூர்வக்குடி சிறுவர்கள் தொடர்பான பிரச்னையை வார்டன்களே எப்படிக் கையாள்வதென தயங்கிய சூழலில், ஒருநாள் விடுப்பு எடுத்து காத்திருந்து , ஒட்டடையே அச்சிறுவர்களை பிடித்து கொடுத்த சம்பவம் பெண்கள் மத்தியில் அவனை ஒரு ஹீரோவாக்கியது. ஒட்டடை இந்தச் சேவைக்கெல்லாம் பணம் எதுவும் வாங்குவதில்லை. ஒரு மெல்லிய ஞானப்பார்வையை வீசிவிட்டு உதட்டோரம் புன்னகை புரிவதோடு சரி. ஆனால் ஒவ்வொரு பருவத்தின் போதும் நாங்கள் செய்து முடிக்கத் திணரும் பயிற்றுப்பணிகள் எந்தத் தடையும் இல்லாமல் பெண் பயிற்சி ஆசிரியர்களால் அவனுக்கு முடித்துக் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவனது இந்த சொகுசு வாழ்வே நாங்கள் அவனை இத்தனை காலம் அணுகி போகவும் எங்களில் ஒருவனாக இணைத்துக்கொள்ளவும் தடையாக இருந்தது. எந்தப் பிரச்னைக்கும் நாங்கள் அவனை நாடிப்போகத் தயாராக இல்லை. அது தோழிகள் மத்தியில் அவனை இன்னமும் ஒரு படி உயர்த்தலாம்.

தனியார் கல்லூரிகளுக்கும் இது போன்ற ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கும் அடிப்படையில் சில வித்தியாசங்கள் உண்டு. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் இருந்ததாலும் பயிற்சி ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையை வளர்க்கும் கருவிகள் என்பதாலும் முழு கட்டொழுங்குடன் திகழ வேண்டும். பத்து மணிக்குப் பிறகு ஓர் ஆணும் பெண்ணும் தனியாக அமர்ந்து பேசுவது கடும் குற்றம். இருபாலருமே தொடை தெரியும் வகையில் கால்சட்டைப் போட்டுக்கொண்டு விடுதி வளாகத்தில் உலாவக் கூடாது. மதுபானம் அல்லது வெண்சுருட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில் ஏதாவது மீறல் நடந்து வார்டன் கையில் பிடிபட்டால் சபைக்கூடலில் மானம் மல்லாக்கப்படுத்துக்கொள்ளும்.

ஒட்டடை கல்லூரி விதிமுறைகளைக் கடுமையாகவே பின்பற்றினான். ஆனால், தனது வழிபாட்டுச் சுதந்திரத்துக்காக யாரையும் எதிர்க்கத் தயாராகவே இருந்தான். ஓர் இரவில், சாமி படங்களும் ஊதுவத்தி, சூடத்தின் புகையும் மற்ற இன மாணவர்களை அச்சுறுத்துவதாக வார்டன் வாதாடிய போது அதை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கும்படி சத்தமிட்டவனை நாங்கள் ஒளிந்திருந்து அதிசயமாய் பார்த்தோம். இரவு எட்டு மணிக்குப் பிறகு அவனைப்பார்ப்பது அதுதான் முதன்முறை. அவன் தியானத்தில் இருந்து பாதியில் எழுந்திருத்திருக்க வேண்டும். வார்டனுக்கும் அவன் அறையில் இருந்த எந்த பொருளின் மீதும் கை வைக்கத் துணிவு வரவில்லை. சிவப்பு வெளிச்சம் பரவியிருந்த அறையில் ஒட்டடை நெற்றி முழுவதும் குங்குமத்தை அப்பியிருந்தான். உடலை வெள்ளை வேட்டியால் சுற்றி விரைத்து வைத்திருந்தான். வியர்வையில் அவன் உடலோடு வெள்ளைத்துணி ஒட்டிக்கொண்டு அவன் உடலில் திமிரை வெளியே கக்கியது. உண்மையில் அவன் வேறொருவனாக இருந்தான்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் நாங்கள் அவனை ஒட்டடை எனக் கூப்பிடுவதை முடிந்தவரை தவிக்கப் பார்த்தோம். எப்படி அழைத்துப்பார்த்தாலும் கமலக்கண்ணன் என்ற பெயர் ஏதோ அந்நியமாகவே ஒலித்தது. ஒட்டடை என்பது காரணப் பெயர்தான். அவனது தலைமயிர் அதிகம் வளராமல் செம்பட்டை நிறத்தில் சுருண்டிருக்கும். அதுவே அவனை அடையாளம் காணும் விதமாகத் தனித்திருந்ததால் ஒட்டடை என பெயர் உருவாகிவிட்டது. அதையெல்லாம் அவன் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நாங்கள் அவனை அணுகி செல்லாவிட்டாலும் பகல் நேரங்களில் எங்களுடன் இருப்பதை அவன் விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். எங்கள் உரையாடல்களில் மிக இயல்பாக அவ்வப்போது புகுந்து ஏதாவது ஆலோசனைக் கூறுவான். மிக எளிதாக அவன் பேச்சு ஒரு கூட்டத்தை வசியப்படுத்தும். அதிராத, அலுங்காத குரல் அவனது. நாங்கள் அவன் பேச்சைக் காதில் வாங்காதது போல பாவனை செய்துக்கொள்வோம். எப்படி ஒதுக்கி வைத்தாலும் அவன் முகத்தில் இருக்கும் ஞானப்பார்வையும் புன்னகையும் எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்திருக்கும். ஆனால், கடந்த மூன்று நாள்களாக ஒட்டடையை மட்டுமே நம்பி, நெருங்கிச் சென்று மையம் கொண்டிருக்கும்படி சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறின.

முதலில் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டது சேகர்தான் என நாங்கள் நினைத்திருந்தோம். இரவில் தனது குறியை ஏதோ ஓர் உருவம் பிடித்து வன்மமாக அழுத்தி பின் மறைந்துவிட்டதாக ரகசியக் குரலில் சொல்ல ‘உன்னையுமா?’ என ஓரிரு குரல்கள் கூட்டுச்சேர்ந்தன. இதுவரை அந்த அனுபவத்தைப் பொதுவில் பகிராதது பற்றி ஒவ்வொருவரிடமும் ஒரு காரணம் இருந்தது.

பழனி, அது தனது கற்பனை என தானே நினைத்துக்கொண்டதாகக்கூறினான். கல்லூரிக்கு வந்ததிலிருந்து அவன் தன் காதலியின் நினைவாகவே இருப்பதாகவும் எனவே தன் காதலியின் சில்மிஷம் கற்பனையில் வந்ததென நம்பியதாகவும் வெட்கம் ஒழுக சொன்னான்.
அசோக் பதற்றத்தில் தான் கண் விழித்தபோது ஒரு கருத்த உருவம் ஓடியதாகவும் பேய்களைக் காட்டிக்கொடுத்தால் அவை தொடர்ந்து பலிவாங்கும் என தான் கேள்விப்பட்டுள்ளதால் யாரிடமும் சொல்லவில்லை என்றான். இது போன்ற கதைகளை எலிக்காகச் சொல்லப்பட்டவை என்றும் பேய்களுக்கு அது பொருந்தாது என்றபோது திருதிருவென விழித்தான்.
விக்கி தான் தன் அறைத்தோழன் மேலேயே சந்தேகப்பட்டு அறைந்துவிட்டதாகக் கூறி சமாதானம் செய்ய பக்கத்து வகுப்பறையை நோக்கி திபு திபுவென அப்போதே ஓடினான்.
இதில் செல்வா சொன்ன காரணம்தான் விசித்திரமானது. அப்போது அவன் ஏதோ மூடான கனவில் இருந்ததாகவும் குறியைப் பிடிப்பது கனவின் ஒரு பகுதியென நினைத்து விட்டுவிட்டதாகவும் அது விந்து வெளியேறும் வரை தொடர்ந்ததாகவும் கூற ஒருவர் முகத்தை மற்றவர் திகிலுடன் பார்த்துக்கொண்டோம்.

ஆக, இது பல நாள்களாக நடந்துகொண்டிருக்கும் சம்பவம் என்பதும் கண் விழித்து நிதானமாகும் போது ஓர் உருவம் கண்ணிலிருந்து மறைவதும் எங்களுக்கு உறுதியானது. அதோடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே புளோக்கைச் சார்ந்தவர்கள் என்பது சந்தேகத்தை வலுத்தது. அந்த உருவத்தைப் பார்த்தது சேகரும் அசோக்கும் மட்டும்தான் என்ற நிலையில் அவ்வுருவம் குறித்த தகவல்களைச் சேகரித்து ஒப்பிட்டோம். எங்கள் ஆய்வறிவு துரிதமாக வேலை செய்யத்தொடங்கியது. உயரம், பருமன், நேரம் போன்றவற்றைக் கணித்து எங்கள் புளோக்கில் உள்ள நால்வரை குற்றவாளி பட்டியலில் சேர்த்தோம். பட்டியலிட்டவர்களின் விபரம் பின்வருமாறு :

கிங்கியாட் எனும் சீனன். அதிக குறும்புக்காரன். மற்றவர்களைச் சீண்டுவதில் ஆர்வம் உள்ளவன். எதையும் எப்போதும் ஒளித்துவைத்து தேட வைப்பான்.
இரண்டாமவன் ஓரினப்புணர்ச்சியாளனாக நம்பப்படுபவன். விடுதியைச் சுத்தம் செய்யும் ஊழியரை அவன் அறைக்குள் இரவு நேரங்களில் பார்க்கலாம். ஊழியரே அவன் சேவை குறித்து சிறப்பான முறையில் விளம்பரமும் செய்துள்ளார்.
அஸ்ரான் மூன்றாமவன். கொஞ்சம் பெண் தன்மை கொண்டவன். சபா மாநிலத்திலிருந்து வந்திருந்தான். எந்த ஆணும் தொட்டுப்பார்க்கத் தூண்டும் வனப்பான தோல் அவனுக்கு. அதிகம் தனித்தே இருப்பான்.
நான்காமவன் எங்கள் சக தோழன் மதி. அதிகம் தொடையையும் பிட்டத்தையும் தொட்டுத் தொட்டுப் பேசுவான். இரட்டை அர்த்த பேச்சுகள் தூள் பறக்கும்.

இவர்கள் நால்வரையும் கண்காணிக்க பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டே சிறப்புக்குழு ஒன்றை உருவாக்கினோம். இரவில் அவர்கள் அறையை வேவு பார்ப்பதுதான் எங்கள் திட்டம். எல்லோரும் நள்ளிரவுக்குப் பின்தான் பாதிக்கப்பட்டுள்ளதால் தூக்கம் பொறுக்க வேண்டும் என முடிவானது. இது சரியாக நடந்துமுடிந்தால் நாங்களும் ஹீரோவாக ஒரு எளிய வாய்ப்புண்டு. எல்லாமே திட்டமிட்டபடி நடக்கையில் எங்கள் நம்பிக்கை நாசமாகும் படி ஒட்டடை அலரிக்கொண்டு அறையிலிருந்து நள்ளிரவில் வெளிவந்து விழுந்தான். ஒரு பிரமாண்டம் அவ்வளவு எளிதாக வீழ்வதை எங்களால் ஏற்க முடியவில்லை. அவன் முகம் முழுதும் வியர்த்திருந்தது. நாங்கள் அவனை சூழ்ந்துகொண்டோம். நெற்றியில் அப்பியிருந்த குங்குமம் வியர்வையால் வழிந்து அவன் முகத்தை அகோரமாகக் காட்டியது. ஒட்டடை வார்த்தை வராமல் திணறினான். விரலை மட்டும் அறைக்குள் காட்டினான். உள்ளே யார் சென்று பார்ப்பது என்ற கேள்வி வந்தபோது ‘வகுப்புத்தலைவன்தான்’ என ஆருயிர் நண்பர்கள் என்னை உள்ளே தள்ளினர்.

அறை களைந்து கிடந்தது. சாமி படங்கள் நொறுங்கியிருந்தன. அர்த்தநாரீஸ்வரர் போஸ்டர் இரண்டாகக் கிழிந்து சிவனும் பார்வதியும் தனித்தனியாக வாழ ஆரம்பித்திருந்தனர். திறந்திருந்த ஜன்னல் வழியாக இரவு நேரத்தின் குளிர் காற்று நுழைந்து ரோமங்களை நிமிர வைத்தது. அவன் அறையிலிருந்தே தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். கொஞ்சம் பருகியவன் நிதானமானான். அபூர்வ மணம் அந்த இரவிலும் அவன் மேலிருந்து வீசியது. ஒரு கறுத்த உருவம் அவன் குறியைப் பிடிக்க முயன்றதாகவும் அவன் அதன் கையைப் பிடிக்க, அது மிக ஆக்ரோஷமாக தன்னிடமிருந்து விடுபட போராடியதையும் கூறினான். தொடர்ந்த போராட்டத்தில் அவ்வுருவம் தன்னைக் கடுமையாகத் தாக்கிவிட்டு அறையை நாசம் செய்ததாகவும் பின்னர் சன்னல் வழியாக குதித்து ஓடிவிட்டதாகவும் மூச்சுவாங்கினான்.

சாமி படங்கள் நொறுங்கியது அவனுக்குத் தாள முடியாது துக்கத்தைக் கொடுத்தது. நொறுங்கிய கண்ணாடிகளை நடுங்கும் கைகளால் பொறுக்கினான். சாமி படத்தை மேசை மீது வைத்து ஒருதரம் வணங்கினான் . அடுத்து என்ன பேசினாலும் ஒட்டடை அழுதுவிடுவான் எனத் தோன்றியதால் அவனை அறையில் படுக்கை வைத்தோம். என்னதான் பொறாமை இருந்தாலும் நாங்கள் மனதில் உருவாக்கி வைத்த அவன் ஆளுமை எங்கள் கண்முன் சிதறுவதை நாங்கள் விரும்பவில்லை. தனியாகப் படுக்கத் தயங்குகிறான் என்பது புரிந்தது. நானும் என் அறையில் தனியன் என்பதால் வேறு வழியில்லாமல் அவனது மெத்தையில் நான் படுத்துக்கொள்ள அவன் தனது தியான மெத்தையில் சாய்ந்தான். இரவு முழுவதும் புரண்டு கொண்டே இருந்தான். எல்லோருக்கும் பரிகாரம் சொல்லும் ஒட்டடைக்கே ஓர் உருவம் சவால் விட்டுவிட்டதால் எங்கள் முன் அனுமானங்கள் அனைத்துமே கலைந்து போயின. இத்தனை நாள் சீண்டியது மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் அப்போதுதான் தோன்றியது. அதே போல யார் கையிலும் பிடிபடாத அந்த உருவம் ஒட்டடை கையில் கிடைத்தது அவனின் சிறப்பாம்சத்தைதான் காட்டுகிறது என்றும் தோன்றியது.

நடந்த சம்பவங்களை கல்லூரி நிர்வாகத்திடம் சொல்ல வேண்டாமென ஒட்டடை மறுநாள் முதல் வேலையாகக் கேட்டுக்கொண்டான். பேச்சில் பழைய நிதானம் திரும்பியிருந்தது. தான் செய்யும் பூஜையினால்தான் இது போன்ற அமானுஷயங்கள் நடக்கிறதென, சூழல் வார்டனுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் பின்னர் தன்னால் பூஜை செய்ய முடியாது எனவும் எங்களைத் தடுத்தான். ஒட்டடை சொல்வதும் சரியாகவே பட்டது. வார்டன் கல்லூரி நிர்வாகத்திடம் , ஒட்டடை சாத்தனை வணங்குவதாகப் புகார் கொடுத்திருந்ததால் அனைவருமே மௌனம் காத்தோம். எங்கள் பிரச்னையை நாங்களே சமாளிப்பதென சபதம் எடுத்தோம்.

முதலில் எல்லா அறைக்கும் தாழ்ப்பாள் போடுவதென மறுநாள் மாலையில் நடந்த எங்கள் ரகசியக் கூட்டத்தில் முடிவானது. அதற்குள் இருட்டிவிட்டதால் உடனே திட்டத்தை அமுல் படுத்த முடியவில்லை. ஆனால், ஒட்டடை எங்கோ எப்படியோ ஒரு பழைய தாழ்பாளைத் தேடி வந்து அறையின் கதவில் பிணைத்தான். ஒட்டடை இந்த சிக்கலை எவ்வளவு காத்திரமாகப் பார்க்கிறான் என்பது எங்களுக்கு அப்போதுதான் புரிந்தது. அவன் பதற்றத்தைத் தணிக்க அன்று இரவும் நான் அவனுடன் படுத்துக்கொண்டேன். ஒரு தாழ்பாள் அத்தனை நாள்களாக நாங்கள் கடைப்பிடித்த பொதுவுடமை கொள்கையை நாசம் செய்துவிட்டதாக ஓரத்தில் ஒரு கவலை இருக்கவே செய்தது. அந்தக் கவலையெல்லாம் மறைந்துப்போகும் வகையில் இரவில் திடீர் என ஒரு சுகமான உணர்வு. எங்கிருந்து அது தொடங்குகிறது எனப் புரியவில்லை. கண்களைத் திறந்தால் கனவு போல இருக்கும் அவ்வின்பம் விலகிவிடுமோ என தொடர்ந்து தூக்கத்தைத் தீவிரப்படுத்த முயன்றேன். எதை தீவிரப்படுத்துகிறோமோ அதுதானே விழிப்புடன் இருக்கும். சட்டென மூளைக்கு விழிப்பு வந்தபோது என் ஆண்குறியை ஓர் அந்நிய கை வருடுவது புரிந்தது. மூளை உடலுக்கு செய்தியை அனுப்பி நான் சுதாகரித்து எழும் முன் கை அகன்றது.

திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் போட்டேன். அறை கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அடைத்து வைத்திருந்த ஜன்னல் திறந்திருந்தது. குளிர் காற்று ஜிவ்வென உடலை உடனே தழுவியது. விளக்கின் ஒலியால் ஒட்டடை கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தான். நடந்ததைச் சொன்னபோது, “அது உனக்காக வரல. நான் அதை நேத்து கோவப்படுத்திட்டேன். எனக்காகதான் வந்திருக்கு… இங்கப் படுத்தா உனக்குதான் பிரச்னை… சாரி…வேணுமுன்னா நீ உன் அறைக்கே போயிடு” என்றான் பலவீனமாக. நான் அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வதென தெரியாமல் விழித்தேன். சம்பவம் பெரிதாகப் பதற்றம் ஏற்படுத்தாதது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏன் தொடர விடாமல் விழித்தேன் என்ற வருத்தம் ஆழ்மனதில் இருக்குமோ என்னவோ. ஜன்னலை அடைக்கச் சென்றேன். வெளியில் ஏதும் கண்களுக்குத் தெரிகிறதா என்று உற்று உற்று பார்த்தேன். காட்டுப்பகுதியில் அமைந்துள்ள எங்கள் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் விடுதியில் அதிக நேரம் ஜன்னலைத் திறப்பது ஆபத்து. விஷ பூச்சிகள் புகுந்துவிடும். சில சமயம் குரங்குகளும் நுழைவதுண்டு. பூர்வக்குடி சிறுவர்கள், பெண்கள் விடுதியில் புகுந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஜன்னலை அடைத்தபோதும் ரோமம் அடங்கவில்லை.

தாழ்ப்பாள் போட்ட அறைக்குள் அந்த உருவம் நுழைந்தது மறுநாள் பரவலாகப் பேசப்பட்டது. ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களுக்கும் எங்கள் புளோக்கில் நடக்கும் விசயம் மெல்ல மெல்ல பரவியிருந்தது. எல்லோரும் ரகசியமாகப் பேசி சிரித்துக்கொண்டனர். ஒட்டடையிடம் மட்டும் சீரியஸாக அது குறித்து பேசினர். சில தோழிகள், “பத்திரம்” என எச்சரித்தபோது எது குறித்து சொல்ல வருகிறார்கள் எனப் புரியாமல் விழித்தேன். தாழ்ப்பாள் போடுவதில் பயனில்லையென எங்கள் இரண்டாவது திட்டமும் கைவிடப்பட்டபோது நான் மனதளவில் சோர்ந்திருந்தேன். இனி ஒரே பாதுகாப்பு எங்களில் பிரத்தியேக சக்தி பெற்ற ஒட்டடைதான் என்றானது. அன்றுதான் நாங்கள் முதன்முதலாக ஒட்டடையிடம் உதவிக்காக நின்றோம். ஒட்டடை எங்கள் அனைவரையும் ஞானக்கண்ணால் பார்த்தான். மறுநாள் கோயிலுக்கு அழைத்துச்செல்வதாகவும் அங்கு என்ன செய்ய வேண்டும் என தனக்கு மேலிருந்து உத்தரவு வரும் என்றான். கொஞ்சம் மறுப்புகள் எழுந்தன. கிருத்துவ , முஸ்லிம் நண்பர்களோடு ஒரு நாத்திகனும் இருந்ததால் சலசலப்பு அடங்க தாமதமானது. எந்த முடிவும் எடுக்காமல்தான் அன்றிரவு படுத்தோம்.

நான் மூன்றாவது நாளாக ஒட்டடையின் அறையில் படுத்தேன். ஒட்டடை அதை விரும்பவில்லை என அவன் பேச்சில் தெரிந்தது. தான் அந்த உருவத்துக்குக் காத்திருப்பதாகவும் தன்னால் அந்த உருவத்தைத் தனியாகச் சமாளிக்க முடியும் என்றான். நான் இருப்பதால் அது அவ்வறைக்கு வராமல் போகும் சாத்தியம் உண்டு என்பதையும் விளக்கினான். ஆனால், மூன்று நாள்களுக்கு முன் இருந்த தைரியம் எனக்குதான் தொலைந்திருந்தது. அறைத்தோழன் இல்லாத எனக்கு இப்போதைக்கு ஒட்டடையின் அருகாமை தேவைப்பட்டது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “நாளைக்கு கோயிலில பூஜை முடிஞ்சோடனே நா உங்கள பாதுகாப்பா விட்டு போயிடுறேன் ” என உளறி வைத்தேன். பொதுவாகவே எல்லோருடைய குறிகளும் ஒருமுறைதான் தீண்டப்பட்டிருந்ததால் என்னிடம் அந்த உருவம் மீண்டும் வாலாட்டாது என்ற அற்ப நம்பிக்கை மட்டும் ஒரு ஓரமாக மனதில் இருந்தது.

நான் தூங்கி விட்டிருக்கிறேன் என உடைப்பது போல கதவு தட்டப்பட்டபோதுதான் உணர்ந்தேன். பதறியடித்து விளக்கைத் தட்டினேன். மணி அதிகாலை மூன்று. சன்னல் மற்றும் கதவு சாத்தியிருந்தது. ஒட்டடை நல்ல தூக்கத்தில் இருந்தான். கதவைத் திறந்த போது நடராஜன் அழுதுகொண்டிருந்தான். அந்த உருவம் அவன் குறியைக் கடுமையாகப் பிணைந்துவிட்டு ஓடிவிட்டதாகவும் இதை உடனே வார்டனிடம் சொல்ல வேண்டும் என்றும் வலி தாங்காமல் தேம்பினான். நான் அவனை சமாதானம் செய்தேன். நாளை ஒட்டடைச் சொன்னபடி கோயிலுக்குச் சென்று வந்தபின் எதையும் முடிவெடுக்கலாம் என்றேன். தீவிர நாத்திகனான அவன் அறைகுறையாகச் சம்மதித்ததே சூழலின் திகிலை மேலும் கூட்டியது.

கலக்கத்துடன் கதவைச் சாற்றினேன். இரும்பு பிடியின் ஈரத்தில் வலது கை பிசுபிசுத்தது. எங்கிருந்து ஈரம் வந்ததென தெரியாமல் இடது கையைப் பார்த்தேன். காய்ந்துதான் இருந்தது. விளக்கை அணைக்க விரல்கள் சென்ற ஒரு நொடிக்கு முன்பாக ஒட்டடையைக் கவனித்தேன். அபாரமாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கடுமையான உடற்பயிற்சியோ நூறு மீட்டர் ஓட்டப்பந்தையமோ ஓடி வந்தவர்களிடம் வெளிவரும் அவசரமான மூச்சின் வேகம் அது. மூடியிருக்கும் போர்வையைத் தாண்டி நெஞ்சுப்பகுதி ஓய்வில்லாமல் ஏறி இறங்குவதை உத்திராட்சை கொட்டை தெளிவாகக் காட்டிக்கொண்டே இருந்தது.

– மே 2014 (நன்றி: http://vallinam.com.my)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *