வெள்ளைத் தாமரையும் ஹசீனாவும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,994 
 

ஹசீனாவுக்கு தாமரைக்குளத்தருகே விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு விளையாடத் தோழிகள் யாருமில்லை. எனவே குளத்திலுள்ள தாமரைப் பூக்களைப் பறித்து விளையாடுவாள்.

வெள்ளைத் தாமரையும் ஹசீனாவும்இதை ஒரு தவளை பார்த்துக் கொண்டேயிருந்தது. ஹசீனாவின் தனிமை அதற்கு வருத்தத்தைக் கொடுத்தது. எனவே, ஒருநாள் மாலை ஹசீனா வந்ததும் அவளைக் கூப்பிட்டது.

“ஹசீனா…ஹசீனா…’

ஹசீனா சுற்றுமுற்றும் பார்த்தாள், எவரையும் காணோம்.

“ஹசீனா… நான்தான் தவளை பேசுகிறேன்…’ என்றது அந்தத் தவளை. ஹசீனாவுக்குப் பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

“உன்னால் பேசமுடியுமா?’ என்று வியப்புடன் கேட்டாள்.

“ஓ…. ஆனால் எனக்குப் பிடித்தவர்களோடு மட்டும்தான் பேசுவேன். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்… உனக்கு விளையாடத் தோழிகள் வேண்டாமா?’

“வேண்டும்தான்… ஆனால் நானும் என் தாத்தாவும் இந்தக் காட்டில் தனியாக வசிக்கிறோம்… எனவே எனக்கு நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை!’

என்றாள் ஹசீனா.

“சரி… இந்தக் குளத்தில் இருக்கும் தாமரை இலைகள் மேல் மட்டும் கால்களை வைத்து குளத்தின் மையப்பகுதிக்குப் போ…. அங்கு நடுவில் இருக்கும் வெள்ளைத் தாமரையை எட்டிப் பார்… உனக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்…’ என்றது தவளை.

ஹசீனா வியப்புடன் எழுந்தாள்.

‘பார்த்து… தாமரை இலைமீது மட்டும்தான் கால் வைக்க வேண்டும்…’

ஹசீனா ஒவ்வொரு இலையாகக் கால் வைத்து நடந்தாள். இப்போது அவளுக்கு உற்சாகம் வந்துவிட்டது.

குளத்தின் நடுவில் ஒரு பெரிய வெள்ளைத் தாமரை மலர்ந்திருந்தது. ஹசீனா, மெதுவாக எட்டிப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்!

அடுத்த நொடியே, தாமரைப் பூ அவளை உள்ளிழுத்துக் கொண்டது. பயத்தினால் அலறிய ஹசீனா, தொப்பென்று விழுந்தாள்.

அவள் ஒரு மெத்தையின் மீதுதான் விழுந்திருந்தாள். படுத்தபடியே சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆகா… அழகான அரண்மனையில் அல்லவா இருக்கிறாள்…

“இளவரசி தூங்கி எழுந்துவிட்டார்…. வாருங்கள்…’ என்றாள் ஒரு பணிப் பெண்.

உடனே நான்கைந்து பணிப்பெண்கள் வந்தார்கள். ஹசீனாவை அழைத்துப் போய் குளிக்க வைத்து, பட்டாடை உடுத்தி, தங்க,வைர நகைகளைப் போட்டு அலங்கரித்தார்கள்.

பிறகு, தங்கத்தட்டில் சுவையான சூடான சிற்றுண்டி வகைகளைப் பரிமாறினார்கள்.

அப்போது ஒரு சிறுவன் ஓடி வந்தான்.

“ஹா…இளவரசி எழுந்துவிட்டீர்களா? சீக்கிரம் வாருங்கள், நம் நண்பர்கள் காத்திருக்கிறார்கள்…’ என்றான்.

ஹசீனா வெளியே வந்தாள். அங்கே நிறையச் சிறுவர், சிறுமியர்கள் இருந்தனர். நிறைய விளையாட்டுப் பொருள்களும் இருந்தன. ஹசீனா, அவர்களுடன் விளையாட ஆரம்பித்தாள்.

புதுப் புது விளையாட்டுகள்… பாடல்… நடனம்… என்று தன்னை மறந்து ஒன்றிப் போனாள் ஹசீனா. திடீரென்று அவளுக்கு தாத்தா ஞாபகம் வந்தது.

“நான் வீட்டுக்குப் போகவேண்டும்… என்னை விடுங்கள்…’ என்றபடியே ஓடினாள்.

வெள்ளைத் தாமரைக்குள் நுழைந்து வெளியே வந்தாள். பழையபடி குளம் இருந்தது.

ஒவ்வொரு தாமரை இலையாகப் பார்த்துக் கால் வைத்து நடந்து கரைக்கு வந்தாள்.

வீட்டுக்கு ஓடோடி வந்தாள். நல்லகாலமாக தாத்தா அப்போதுதான் உள்ளே நுழைந்தார்.

ஹசீனாவுக்கு நடந்ததெல்லாம் கனவு போலிருந்தது. தன்னைக் குனிந்து பார்த்தவள் திடுக்கிட்டாள். காரணம்… அவளுடைய பட்டுடை, தங்க நகைகள் எல்லாம் அப்படியே இருந்தன.

“ஹசீனா… சுவையான கிழங்குகள் தோண்டியெடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். அதனை வேகவைத்து வை…. குளித்துவிட்டு வருகிறேன்…’ என்றார் தாத்தா.

அவளைக் கவனிக்காமலேயே தாத்தா எதிரிலிருந்த குளத்தில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தார்.

ஹசீனா, அவசர அவசரமாக நகைகள் அனைத்தையும் கழற்றி பெட்டிக்குள் போட்டு மூடினாள். பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது. வேகமாக சமைக்கப் போனாள்.

மறுநாள்… தாத்தா காட்டுக்குப் போனதும் ஹசீனா தாமரைக்குளத்துக்கு வந்தாள்.

“தவளையே… நீ எங்கிருக்கிறாய்?’ என்று கூப்பிட்டாள்.

தவளை அவள் முன்னால் வந்தது.

“ஹசீனா, நேற்று நீ நன்றாக விளையாடினாயா? புது நண்பர்கள் கிடைத்தார்களா?’ என்று கேட்டது.

“ஆமாம்… ஆனால் அங்கிருப்பவர்கள் என்னை இளவரசி என்று கூப்பிடுகிறார்கள். அதுதான் புரியவில்லை!’

“இன்றும் போய்ப் பார்… ஜாக்கிரதை.. தவறியும் தண்ணீரில் கால் வைத்து விடாதே!’ எச்சரித்தது தவளை.

ஹசீனா அப்படியே செய்து வெள்ளைத் தாமரைக்குள் நுழைந்தாள். நேற்று போலவே தொப்பென்று மெத்தை மேல் விழுந்தாள்.

“இளவரசி வாருங்கள்…’ என்றபடியே பணிப் பெண்கள் அவளை நேற்று போலவே அலங்காரம் செய்தார்கள்…. பிறகு சுவையான உணவு… அந்தச் சிறுவன் ஓடி வந்தான்.

ஹசீனா, அவனை நிறுத்தி “உன் பெயரென்ன?’ என்று கேட்டாள்.

“என் பெயர் அனீக். வாருங்கள் விளையாடலாம்…’

அனீக்குடன் சென்று பிற நண்பர்களுடன் சேர்ந்து ஆசைதீர விளையாடினாள். நேரம் போனதே தெரியவில்லை.

“அனீக்… நேரமாகிறது. தாத்தா வந்து விடுவார்…’ சொல்லியபடியே வெள்ளைத் தாமரைக்கு வந்தாள்.

வீடு வந்து சேர்ந்ததும், இன்றும் பட்டுடையுடனும் நகைகளுடனும் வந்துவிட்டதை உணர்ந்தாள்.

அவற்றைக் கழற்றிப் பெட்டிக்குள் வைத்தாள். அதற்குள் தாத்தா ஒரு குடுவை நிறையத் தேனுடன் வந்தார்.

“ஹசீனா, இதில் சுத்தமான கொம்புத்தேன் இருக்கிறது. எடுத்து வை. நான் குளித்துவிட்டு வருகிறேன்..’ என்றார்.

ஹசீனாவுக்கு இரவு முழுக்கத் தூக்கம் வரவில்லை. யாருடைய பொருள்களையோ எடுத்துவந்து விட்டோமே என்று உறுத்தலாக இருந்தது.

மறுநாள் அந்த ஆடைகள், நகைகள் எல்லாவற்றையும் சிறுமூட்டையாகக் கட்டிக் கொண்டாள். கொஞ்சம் தேனையும் கிழங்குகளையும் இன்னொரு மூட்டையில் சேகரித்துக் கொண்டாள்.

தாமரைக்குளத்துக்குப் போய் தவளையைக் கூப்பிட்டாள்.

“தவளையே, நான் இந்த மூட்டைகளோடு இலையின் மேல் நடந்தால் ஒன்றும் ஆகாதே?’ என்று கேட்டாள்.

“என்ன மூட்டை அது?’

“வந்து சொல்கிறேன்… நான் நடக்கலாமா?’

“தாராளமாக…’

கவனமாக நடந்து வெள்ளைத் தாமரைக்குள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் பணிப்பெண்கள் சூழ்ந்தனர். ஆனால் ஹசீனா தடுத்தாள்.

“நில்லுங்கள்… நான் உங்கள் இளவரசி இல்லை. நான் உங்கள் அரசரைப் பார்க்க வேண்டும்…’

அப்போது, அங்கே அனீக் வந்தான்.

“அனீக், நான் அரசரைப் பார்க்க வேண்டும்…’

அனீக் அவளை அரசரிடம் அழைத்துப் போனான்.

அரசர் முகம் கருணையோடு இருந்தது.

“வாருங்கள்…’ என்று அவளை வரவேற்றார்.

ஹசீனா, அவரை வணங்கிச் சொன்னாள் –

“அரசே… நான் இங்கு விளையாடத்தான் வந்தேன். ஆனால் என்னை இளவரசியென்று எண்ணிக் கொண்டு எனக்கு பட்டுடுத்தி, ஆபரணங்கள் பூட்டி அலங்கரித்தார்கள். நான் அவசரமாக வீட்டுக்குச் சென்றதால் அவற்றைத் திருப்பித் தரமுடியவில்லை. இன்று அவற்றைப் பத்திரமாக எடுத்து வந்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்…’ என்றபடியே அந்த மூட்டையை அவரிடம் கொடுத்தாள்.

“அப்படியா? நீ, இளவரசியைப் போல இருப்பதால் இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. எனக்கு உன்னைப் போல ஒரு பெண் இருந்தாள். ஒரு முனிவரின் சாபத்தால் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டாள். அந்தத் துயரத்தில் எங்கள் அரண்மனையே மூழ்கிக் கிடக்கின்றது. உன்னைக் கண்டதும் இளவரசியென்று எண்ணிவிட்டார்கள்… சரி… நீ போகலாம்..’ என்றார் அரசர்.

“அரசே, நான் சிறிது கிழங்கும் தேனும் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?’

அரசருக்கு வியப்பாகப் போய்விட்டது.

“பரவாயில்லையே! நல்ல குணங்களெல்லாம் உன்னிடம் இருக்கின்றன. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத உள்ளம், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்று நல்ல குணங்கள் பெற்றிருக்கிறாய்… பெண்ணே, இந்தப் பட்டு, நகைகள் எல்லாவற்றையும் உனக்கே அன்பளிப்பாகத் தருகிறேன்… எடுத்துச் செல்.’

அரசர் உத்தரவிட்டதும், ஹசீனா தயக்கத்துடன் பேசினாள்.

“அரசே, தவறாக நினைக்கவில்லையென்றால் உங்கள் மகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ளலாமா?’

“என் மகள் விளையாடும்போது, ஒரு முனிவரின் கோபத்தை மூட்டி அவர் தவத்தைக் கலைத்துவிட்டாள். சினம் கொண்ட அவர், அவளைப் பேசும் தவளையாக்கி விட்டார். அவள் இப்போது எங்கிருக்கிறாளோ தெரியவில்லை. உன்னை மாதிரியே நல்ல குணம் கொண்ட சிறுமி ஒருத்தி தனது கையால் மூன்று முறை அவளைத் தடவினால் அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்கும். பழையபடி இளவரசியாகிவிடுவாள். ஆனால், அவளைத்தான் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை…’ என்று அரசர் கவலையுடன் சொல்லவும் துள்ளிக் குதித்தாள் ஹசீனா.

“பேசும் தவளையா? எங்கள் தாமரைக் குளத்திலிருக்கிறது… என்னுடன் வாருங்கள்…’

அரசரும் மற்றவர்களும் ஆவலுடன் ஓடி வந்தார்கள். வெள்ளைத் தாமரை வழியே குளக்கரையை அடைந்தனர்.

“தவளையே, நீ எங்கிருக்கிறாய்?’ கூவினாள் ஹசீனா.

தவளை வெளியில் வந்தது.

ஹசீனா, அதை எடுத்து மூன்று முறை தடவினாள். என்ன ஆச்சரியம்! அழகிய சிறுமியாக தவளை மாறிவிட்டது.

“மகளே!’ என்று தாவி அணைத்துக் கொண்டார்

அரசர்.

“இனி நீயும் இளவரசியின் தோழிதான்.. தினமும் வந்து விளையாடலாம்..’ என்றார் அரசர்.

அன்று முதல் ஹசீனா நிறைய நண்பர்களுடன் உல்லாசமாக விளையாடி ஆனந்தமாக வாழ்ந்தாள்.

– ஜூலியட் மரியலில்லி (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *