விருந்தோம்பல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 15,562 
 

அயர்ன்புரம் என்ற ஊரின் அருகே பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் கொடிய வேடன் ஒருவன் வசித்தான். ஒரு நாள் காட்டில் பெரும் புயல் அடித்தது. பயங்கர மழையும் பெய்தது. இடியும், மின்னலும் பயங்கரமாக இருந்தது. காடு எங்கும் பயங்கர வெள்ளமாக காட்சியளித்தது. மேடும் பள்ளமும் தெரியாத அளவு காட்டில் வெள்ளம் பெருகி இருந்தது. அந்தக் காட்டில் பாதை தெரியாமல் குளிரில் நடுங்கியபடியே வேடன் நடந்து கொண்டிருந்தான். மழையிலும் புயலிலும் அடிபட்டு ஒரு பெண் புறா தண்ணீரில் விழுந்து கிடந்தது. பாவம் அது குளிரில் நடுங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேடன் அந்த புறாவை கண்டுவிட்டான். அதை எடுத்து தன் பைக்குள் போட்டுக் கொண்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான்.
அந்த மரத்தில் புறா ஒன்று வெகு நாட்களாக குடும்பம் நடத்தி வந்தது. அப்போது காட்டில் ஆண் புறா மட்டுமே இருந்தது. இரை தேடி வெளியே பறந்து சென்ற பெண் புறா இன்னும் திரும்பி வரவில்லை. எனவே, ஆண் புறா கவலையுடன் தன் மனைவியான பெண் புறாவைத் தேடிக் கொண்டிருந்தது.
பெண் புறாவோ வேடனிடம் அகப்பட்டுக் கொண்டது. அது மரத்தடியில் அமர்ந்திருந்த வேடனின் பைக்குள் கிடந்து தவித்துக் கொண்டிருந்தது. ஆண் புறா அழுது கண்ணீர் வடிப்பதை அது கேட்டு மனம் குமுறியது.

“”அய்யோ என் அருமைக் கணவரே… நான் வேடனிடம் சிக்கிக் கொண்டுள்ளேன். என்னை நினைத்து நீங்கள் புலம்ப வேண்டாம். நாம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். செயலாலும் எண்ணத்தாலும் நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நாம் அன்புடன் வாழ்ந்த மரத்தடியில் இந்த வேடன் தஞ்சமாக வந்து தங்கியுள்ளான். அவன் எத்தகைய கொடியவன். ஆனாலும் நம்மால் விருந்தோம்பப் பட வேண்டியவன். இவன் குளிரால் தவிக்கிறான், பசியால் வாடிக் கொண்டிருக்கிறான். இவனுக்கு உதவுங்கள். நான் இறந்தாலும் வேறு ஒரு பெண் புறாவை மனைவியாக கொள்ளுங்கள்,” என்று தன் கணவனிடம் பெண் புறா கூவியது.
இதைக் கேட்டு ஆண் புறா வேடன் அருகே வந்தது. வேடன் குளிரால் நடுங்கி வெட வெடத்துக் கொண்டிருந்தான். ஆண் புறா வேடனை அன்புடன் உபசரித்து, “”வேடனே உனக்கு என்ன தேவை. கூச்சப்படாமல் என்னிடம் சொல். பகைவன் ஆனாலும், வீட்டுக்கு வந்துவிட்டால் அவனை உபசரித்து மகிழ்விப்பது எங்கள் வழக்கம்,” என்றது.
“”ஏ ஆண் புறாவே நான் வேடன், எனக்கு நீ உதவ முன் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. புறா இனங்களை வேட்டையாடும் எங்களை பகைவராக அல்லவா நீ கருத வேண்டும்,” என்றான்.
“”வேடரே, நீ சொல்வது சரிதான். நீர் எங்களுக்கு பகைவர்தான். ஆனால், வெட்ட வருபவனுக்கு மரம் நிழல் கொடுக்கிறதே. அது போல் தான் தீமை செய்தவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதவ வந்தேன்,” என்று கூறியது. வேடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் புறாவைப் பார்த்து, “”என்னால் குளிரை தாங்க முடியவில்லை. படுபயங்கரமாக குளிர்கிறது. என் குளிரை போக்க வழியுண்டா,” என்று கேட்டான்.
“”அன்புள்ள ஆண் புறாவே, நீ என் குளிரை போக்க உதவி செய்தாய். இப்போது எனக்கு கடுமையாக பசிக்கிறது. என் பசியை போக்க ஏதாவது செய்,” என்றான்.
“”வேடரே, நாங்கள் ஏழை புறாக்கள். கவலை இல்லாமல் வாழ்பவர்கள், அன்றாடம் கிடைக்கும் உணவை சாப்பிட்டு நிம்மதியாக தூங்கி விடுவோம். மறு நாளைக்கு சேர்த்து வைப்பது இல்லை. எங்கள் காடுகளில் ஒன்றும் இல்லை. ஆனாலும், விருந்தினரான உம்மை பசியால் வாட விடுவது சரியானது அல்ல. எனவே, உமக்கு உணவு தர நான் தயாராகிவிட்டேன்,” என்று கூறியது.
பின்னர் எரியும் தீயை அதிகமாக்கியது. தீ மள மளவென எரிந்தது. நெருப்பை வலம் வந்து அதில் குதித்தது.
“”வேடரே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே, என்னையே உமக்கு உணவாக தருகிறேன்,” என்று கூறியது. தீயில் அதன் உடல் கருகி வெந்து அதன் உயிர் பிரிந்தது.
வேடன் இதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தான். புறாவின் விருந்தோம்பல் அவனை திகைப்படைய வைத்தது.
“”நான் பெரும் பாவி. புத்தியற்றவன். இவ்வளவு அருமையான அன்புள்ள புறாக்களை நான் வேட்டையாடி குவித்துள்ளேன். இனி இந்த பாவத் தொழிலை செய்யமாட்டேன்,” என்று எண்ணி வருந்தினான்.
தன் கையில் வேட்டையாட வைத்திருந்த பொருட்களை தூக்கி வீசி எறிந்தான். பெண் புறாவையும் விடுதலை செய்தான்.
பெண் புறா விடுதலை அடைந்ததும் தன் கணவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தது. தானும் தீயில் விழுந்து இறந்தது. தவறை எண்ணி மனம் வருந்திய வேடன் அன்று முதல் வேட்டையாடும் தொழிலை விட்டான்.
டியர் பட்டூஸ்… அடைக்கலம் புகுந்தவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவனை உயிரைக் கொடுத்தாவது காத்த புறாக்களின் அன்பு எத்தனை மேலானது பார்த்தீர்களா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *