கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 45,070 
 

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்தபடி கூவியது. பறவைகளின் மொழி அறிந்த வீரனை அழைத்தான் அவன்.

“”இந்த பறவை என்ன சொல்கிறது?” என்று கேட்டான்.

“”அரசே! அந்தப் பறவை நம்மைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உழவன் ஒருவன் புல் வெட்டுவதற்காக வருவான். அவன் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று சொன்னது!” என்றான் அவன்.

Vidhiஅப்போது கையில் அரிவாளுடன் உழவன் ஒருவன் அந்த வழியாக சென்றான். “பறவை சொன்னதில் பாதி நடந்து உள்ளது. மீதியும் நடக்கிறதா?’ என்று அறிய ஆவல் கொண்டான் அரசன். தன் வீரர்களுடன் அங்கேயே தங்கினான்.

மாலை நேரம் வந்தது. தலையில் புல் கட்டுடன் அந்த உழவன் திரும்ப வந்தான். இதைப் பார்த்த அரசன் குறி சொன்ன வீரனை அழைத்தான்.

“”இந்த உழவனைப் பாம்பு கடிக்க மறந்துவிட்டதா அல்லது இவன் எமனை ஏமாற்றி விட்டானா? உன்னால் எனக்கு ஒருநாள் வீணாயிற்று. சாவில் இருந்து இவன் எப்படித் தப்பித்தான். காரணம் சொல். இல்லையேல் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது!” என்று கோபத்துடன் கத்தினான்.

“”அரசே! பறவை சொன்ன மொழி இதுவரை தவறியது இல்லை. இவன் உயிர் பிழைக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும். இவனை விசாரித்தால் உண்மை தெரியும்!” என்றான் அந்த வீரன்.

தலையில் புல் கட்டுடன் அவர்கள் அருகில் வந்தான் உழவன். அந்தப் புல் கட்டில் அரிவாள் ஒன்று செருகப்பட்டு இருந்தது.

“”உழவனே! புல் கட்டைக் கீழே போடு!” என்றான் அந்த வீரன்.

அவனும் புல் கட்டைக் கீழே போட்டான். புல் கட்டு விழுந்த வேகத்தில் அதைக் கட்டியிருந்த கயிறு அறுந்தது. உள்ளே இருந்த புற்கள் பரவலாக விழுந்தன. அதில் பாம்பு ஒன்று வெட்டப்பட்டு இறந்து கிடப்பது தெரிந்தது.

இதைப் பார்த்து எல்லாரும் வியப்பு அடைந்தனர். அந்த வீரன், “”அரசே! இந்தப் பாம்பு இவனைக் கொல்ல வந்திருக்கிறது. இது எப்படி இறந்தது என்று தெரியவில்லை!” என்றான்.

அந்த உழவனைப் பார்த்து அரசன், “”நீ புல் வெட்டக் காட்டிற்குள் சென்றாய். அங்கே விந்தையான நிகழ்ச்சி ஏதாவது நடந்ததா?” என்று கேட்டான்.

“”அரசே! அப்படி எதுவும் நடக்கவில்லை. வழியில் முதியவர் ஒருவர் வந்தார். நான் அவரைப் பணிவாக வணங்கினேன். நீடூழி வாழ்க என்று என்னை வாழ்த்தினார்!” என்றான் அவன்.

இதைக் கேட்ட அந்த வீரன், “”அரசே! அந்த முதியவரின் வாழ்த்துதான் இவனைக் காப்பாற்றி உள்ளது. உயர்ந்த சான்றோர்களின் சொற்கள் விதியையும் மாற்றும் வல்லமை வாய்ந்தவை!” என்றான்.

அதைக் ஏற்றுக் கொண்ட அரசன் அந்த வீரனுக்கும், உழவனுக்கும் பரிசு அளித்துச் சிறப்பித்தான்.

– டிசம்பர் 17,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *