கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,051 
 

செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள். அவன் சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் வெகு தூரம் நடந்து சென்றான். வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது. அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான். குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது. அதை அடித்துக் கொன்றான். சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார்.

VasiyaMandiram“”தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன். அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும்,” என்றார்.

அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.

“”அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள்,” என்றார் முனிவர்.
அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான். அது அவன் மடியில் அமைதியாக இருந்தது. அதை அன்போடு முதுகில் தடவிக் கொடுத்தான். அது நீண்ட நாள் பழகியதுபோல் அவன் மடியில் அமர்ந்திருந்தது.

“”அதை நிற்கச் சொல்,” என்றார்.

“”முயலே! எழுந்து நில்!” என்றான். உடனே அது எழுந்து நின்றது.

“”மிக்க நன்றி ஐயா! நான் வருகிறேன்,” என்று கூறி அவரை வணங்கினான். குடிலை விட்டு வெளியே வந்தான். அருகில் ஏதாவது கிராமம் தென்படுமா என்று பார்த்தவாறு நடந்து சென்றான்.

போகும் போதே பல குயில்கள் அவன் தோள் மேல் வந்து உட்கார்ந்து கீதம் இசைத்தன. அவன் வெகுதூரம் சென்ற பின்பு ஒரு கிராமம் வந்தது. அங்கு மக்கள் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கு போய் நின்று அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று கவனித்தான். புதியவனான அவனைப் பார்த்த ஒரு முதியவர், “”தம்பி! இங்கு இரவில் சிறுத்தைப்புலி ஒன்று வருகிறது. எங்கள் ஆடுகளை அது பிடித்துச் செல்கிறது. வயலில் வேலை செய்யக் கூட மக்கள் பயப்படுகின்றனர்,” என்று நடுங்கிய குரலில் கூறினார் அவர்.

“”ஐயா! பயப்பட வேண்டாம். நான் அதை இன்று இரவு பிடித்து விடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்,” என்றான் தாமு. அவன் பேச்சைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.

“”என்ன தம்பி, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம். தீப்பந்தம் எல்லாம் வீசி அதை விரட்டினாலும் அது இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. உன்னால் எப்படி அதைப் பிடிக்க முடியும்?”

“”ஐயா! எனக்கு மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரம் தெரியும். என்னால் அதை வசியப்படுத்த முடியும்,” என்றான் தாமு.

அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. “”இதோ பாருங்கள், நான் சொல்வதை எல்லாம் இப்போது இந்த நாய் கேட்கும்,” என்றான் தாமு.

“”அன்பு நாயே! இங்கே வா!” என்றான் அவன்.

நாய் அவன் அருகில் வந்து, அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.

அவன் அதை இரண்டு காலால் நிற்கச் சொன்னான். உடனே அது முன் இரண்டு கால்களைத் தூக்கியபடி நின்றது. வேகமாக ஓடச் சொன்னான்; வேகமாக ஓடியது.

இதைப் பார்த்ததும் கிராம மக்களுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது.
“”சரி… எங்கள் கிராமத்திலேயே நீ தங்கியிரு. புலி வந்தால் காட்டுகிறேன்,” என்றார் கிராமத் தலைவர்.

அவன் அருகில் இருந்த ஒரு குடிசையில் தங்கினான். கிராம மக்கள் அவனுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்தனர்.

அடுத்த நாள் இரவு புலி உறுமும் சப்தம் கேட்டது.

அப்பொழுது கிராமத் தலைவர் அவனை எழுப்பி மெல்லிய குரலில், “”தம்பி! புலி வந்திருக்கிறது,” என்றார்.

அவன் உடனே எழுந்து சென்று புலியைத் தேடினான். புலி அருகில் இருந்த ஒரு புதருக்குள் இருந்தது.

அவன் புலியை விசில் அடித்துக் கூப்பிட்டான். அதுவும் அமைதியாக அவனை நோக்கி வந்தது. அவன் அதன் முதுகை அன்போடு தடவிக் கொடுத்தான். இதை பல கிராம மக்கள் தங்கள் வீட்டில் ஒளிந்து கொண்டு சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவன் அந்தப் புலியிடம் என் பின்னே வா என்று சொல்லிக் காட்டுக்குள் சென்றான்.

புலியும் அவன் பின்னால் பழகிய நாய்க்குட்டி போல் காட்டுக்குள் சென்றது. நடுக்காட்டை அடைந்த அவன், “”இனி நீ காட்டை விட்டு ஊருக்குள் வரக்கூடாது,” என்று சொல்லி அதை அனுப்பி வைத்தான்.

அவன் திரும்பவும் கிராமத்திற்கு வந்ததும், மக்கள் எல்லாரும் அவனைக் கடவுளைப் பார்ப்பதுபோல் பார்த்தனர்.

ஒரு விழா எடுத்து அவனைப் பாராட்டினர். அவனுக்கு நிறைய பணமும் ஊருக்குச் செல்ல ஒரு அழகிய குதிரையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தாமு அந்தக் குதிரையின் மேல் ஏறி ஒரு நகரத்திற்குச் சென்றான். அங்கு ஒருவன் ஆடு, கரடி, புலி முதலியவற்றை வைத்துக் கொண்டு வேடிக்கைக் காண்பித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவைகள் உண்மையான மிருகங்கள் இல்லை. எல்லாவற்றுக்குள்ளும் மனிதர்கள் மறைந்து இருந்தனர். மிருகங்கள் போல வேடம் போட்டுக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த தாமு உண்மையான மிருகங்களை வைத்து வேடிக்கைக் காண்பித்தால் மக்கள் மிகவும் விரும்பி வேடிக்கை பார்ப்பர் என்று எண்ணினான். குரங்கு, நாய், நரி, பூனை, முயல் போன்றவற்றைப் பிடித்து வந்தான்.

குரங்கு முயலைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுவதைப் போல் பழக்கினான். நாய் மேல் நரி உட்கார, அதன் மேல் பூனை உட்கார்ந்தபடி நடக்கப் பழக்கினான்.
ஆட்டின் மீது குரங்கு சவாரி செய்வதுபோல் காட்டினான்.

இதையெல்லாம் மக்கள் விரும்பிப் பார்த்து அவனுக்குக் காசு போட்டனர்.
அந்த ஊர் இளவரசன் தினமும் ஒரு வெள்ளைக் குதிரையில் நாட்டை வலம் வருவது வழக்கம். அவனிடம் இரண்டு குதிரைகள் இருந்தன. அதில் ஆண் குதிரை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. அதனால் பெண் குதிரை சொன்னபடி சரியாக நடக்காமல் முரண்டு பிடித்தது. ஒருநாள் இளவரசர் அதன் மீது அமர்ந்தபொழுது அது அவனைக் கீழே தள்ளி விட்டுவிட்டது. இளவரசனுக்குக் குதிரை மீது சவாரி செய்ய முடியவில்லையே என்று மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

அவன் தாமுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். உடனே அவனை அழைத்து வர தன் காவலர்களை அனுப்பினார். தாமு வந்ததும் அவனிடம், தன் குதிரையை முன்புபோல் வழிக்குக் கொண்டு வந்தால் தக்க பரிசுகள் கொடுப்பதாகக் கூறினார்.

குதிரை லாயத்தில் நின்ற வெள்ளைக் குதிரையின் அருகில் தாமு சென்றான். அது தன் தலையை ஆட்டி கனைத்தது. மெதுவாகப் பேசியபடி அதைத் தடவிக் கொடுத்தான். பிறகு அதன் மேல் அமர்ந்து சுற்றி வந்தான்.

அதைப் பார்த்ததும், இளவரசர் வியப்படைந்தார். தாமுவிடம் அது வெகு நாட்கள் பழகியதுபோல் நடந்து கொண்டது இளவரசனுக்கு வியப்பைத் தந்தது.
தாமு குதிரையை விட்டுக் கீழே இறங்கினான்.

“”அன்பான குதிரையே, உன் துணை இறந்துவிட்டது வருத்தம் தருவதுதான். ஆனாலும் நீ உன்னை அன்போடு வளர்க்கும் இளவரசருக்குத் துன்பம் தரலாமா? இனி ஒழுங்காக நடந்து கொள்!” என்றான். அவன் பேச்சைக் கூர்ந்து கேட்ட குதிரை “ஆம்’ என்பது போல் கனைத்தது.

அதன்பிறகு இளவரசரும் அந்தக் குதிரை மீது அமர்ந்து சவாரி செய்தார். முன்புபோல் இளவரசன் சொன்னபடி குதிரை நடைபோட்டது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தாமுவுக்கு நிறைய பணமும், பரிசுகளும் கொடுத்து அனுப்பினான் இளவரசன்.

இப்படியாக சிறிது காலத்திற்குள்ளே நிறைய பணம் சம்பாதித்து தன் தாயிடம் அவற்றைக் கொடுத்தான்.

அவனது திறமையை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் அவன் தாய். விரைவிலேயே அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தாள். அவன் ஊர் ஊராகச் சென்று விலங்குகளைக் கொண்டு வித்தைகள் காண்பித்து பணம் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்றினான்.

தன் சுற்றத்தாருக்கும், தன் ஊர் மக்களுக்கும் அடிக்கடி பல உதவிகளைச் செய்தான். அதனால் அவனை அனைவரும் பாராட்டினர். விரைவிலேயே அந்த ஊர் பெரிய மனிதர்களில் ஒருவனான் தாமு.

– அக்டோபர் 08,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *