யானைக்குத் தண்டனை!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,840 
 

பொதுக்கூட்டம் போட்ட எறும்புகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. யானைக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.

தெருவில் நேற்று நடந்த விபத்துதான் இதற்குக் காரணம். தெருவில் நடந்துபோய்க் கொண்டிருந்த எறும்பு ஒன்றின் மீது கால் வைத்துக் கொன்றுவிட்டது யானை!

யானைக்குத் தண்டனைசிங்கத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. சிங்கமும் சரியான தீர்ப்பைத் தருவதாகச் சொல்லி, மறுநாள் அனைவரும் ஆலமரத்தினடியில் கூட வேண்டும் என்று தண்டோரா போடச் சொன்னது.

மறுநாள்… ஆலமரத்தடியில் ஒரே கூட்டம்! எறும்புகள் ஒருபக்கமாக நின்றன. எதிரே குற்றம் சாட்டப்பட்ட யானை நின்றது.

சிங்கம், யானையைப் பார்த்து, ‘என்ன யானையாரே… உம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்?’ என்று கேட்டது.

யானை பணிவோடு சொன்னது, “மகாராஜா… நான் கொன்றது நிஜம்தான்! ஆனால் வேண்டுமென்று அதை நான் செய்யவில்லை. எறும்பின் மீது சிறியதாக ஒரு காய்ந்த இலை மூடிக் கிடந்ததால், அது என் கண்ணுக்குத் தெரியவில்லை! இருந்தாலும், நான் எறும்புகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்…’

சிங்கம், “என்ன எறும்புகளே, யானை மன்னிப்பு கேட்கின்றது… மன்னித்து விடுகிறீர்களா?’ என்றது.

எறும்புகள் கூட்டமாகக் கூச்சல் போட்டன, ‘முடியாது… முடியாது…. தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்…’

“சரி, நாளை தீர்ப்பு சொல்கிறேன். எல்லோரும் போய்விட்டு நாளை இதே இடத்துக்கு வந்து சேருங்கள்…’ என்று கட்டளையிட்டு விட்டு, சிங்கம் தனது இருப்பிடத்துக்குச் சென்றது.

சோகத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்த யானையைப் பார்த்து எறும்புகள் கூச்சல் போட்டன…”யானையே, நாமதான் பெரிய மிருகம் என்று பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தாயல்லவா? இந்த முறை உனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தே தீருவோம். அப்படியும் நீ இந்தத் தடவை தப்பித்துவிட்டாய் என்றால் பழைய புகார் ஒன்று இருக்கவே இருக்கிறது. அந்தக் கேûஸத் தூசி தட்டி எடுப்போம். உனக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும்…’ என்று திமிராகப் பேசின, அந்த எறும்புகள்.

யானைக்கும் ஒன்றும் புரியவில்லை! இது என்னடா, புதுக்கதையா இருக்கு? என்று விழித்தது.

எறும்பு ஒன்று உடனே, “புரியலையா… என்னோட ஜட்டியைத் திருடி நீ போட்டிருக்கேன்னு ஒரு புகார் கொடுத்தோமோ… உனக்கு ஞாபகம் இல்லையா?’ என்று கேட்டுவிட்டு கேலியாகச் சிரித்துக் கொண்டே போனது.

மறுநாள், கூட்டம் தாங்கமுடியவில்லை…

சிங்கம் கூட்டத்திலிருந்த ஒரு எறும்பைக் கூப்பிட்டு, “இந்த யானைக்கு என்ன தண்டனை தரலாம்னு நீயே சொல்லு…’ என்றது.

“நீங்க என்ன தண்டனை கொடுக்கலாம்னு நினைச்சீங்க?’ என்று கேட்டது எறும்பு.

‘ஆறு மாதம் ஜெயில்…’ என்றது சிங்கம்.

“ஆ…ஆ… ஊ…ஊ….’ என்று கத்தின எறும்புகள்.

பின்னர் ஒரு எறும்பு, “இரண்டு வருடம் ஜெயில்…’ என்று கூவியது.

மற்ற எறும்புகளும், “ஆமாம்…ஆமாம்..!’ என்ற கோரஸ் பாடின.

“நீங்கள் சொல்றபடி நான் கேட்கிறேன்… ஆனா நான் சொல்றதையும் நீங்க கேட்கணும்’ என்று கெஞ்சாத குறையாகக் கேட்டது சிங்கம்.

‘அசுக்கு… பிசுக்கு… நாங்க ஏமாற மாட்டோம். ரெண்டு வருடம் வேண்டாம்… ரெண்டு மாசம் போதும்னு சொல்லப் போறீங்க… நாங்க அதுக்கு ஒத்துக்க மாட்டோம்… ரெண்டு வருட சிறைத்தண்டனை போல வேறு எது சொன்னாலும் கேட்டுக் கொள்கிறோம்…’ என்றன எறும்புகள்.

“பேச்சு மாற மாட்டீங்களே..?’ என்று கேட்டது சிங்கம்.

“நாங்க மாற மாட்டோம், நீங்களும் மாறக்கூடாது…’ என்று எறும்புகள் குரல் எழுப்பின.

சிங்கம் தனது தொண்டையைக் கனைத்துக் கொண்டு தீர்ப்பு சொல்லியது –

“எல்லோரும் கேட்டுக்கோங்க! யானைக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை விதிக்கிறேன்…’

எறும்புகளின் சிரிப்பால் அந்த இடமே அதிர்ந்தது!

யானை, சிங்கத்தைப் பரிதாபமாகப் பார்த்தது.

சிங்கம், கனிவோடு யானையைப் பார்த்துக் கண்ணடித்தது…

எறும்பு சொல்லியது, “சிங்கராஜாவே, வேறு எதுவோ சொல்றேன்னீங்களே..’

“யானை இரண்டு வருடங்கள் சிறையில் இருக்கணும்… அந்த இரண்டு வருடங்களும் யானைக்குப் பசியாற, எறும்புகள் உணவு கொடுக்கணும்…’ என்றது சிங்கம்.

“ஆ….ஆ……’ என்று அலறியபடியே எறும்புகள் மயங்கிச் சாய்ந்தன.

மயங்கி விழுந்த எறும்புகளில் ஒன்று மெல்ல விழித்து, சிங்கராஜாவைப் பார்த்து, “ராஜாவே… நாங்க யானையை மன்னித்துவிடுகிறோம்… அந்தப் பழைய புகாரையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்…’ என்று கெஞ்சியது.

சிங்கத்துக்குச் சிரிப்பாக வந்தது. அடக்கிக் கொண்டது.

எறும்புகள் சாரை சாரையாக திரும்பிச் செல்ல ஆரம்பித்தன.

யானை, நன்றியுடன் சிங்கத்தைப் பார்த்துப் புன்னகைத்தது.

– எஸ்.அனுசூயா சுவாமிநாதன் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *