போர்க்களத்தில் பரிசில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 18,403 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்வளம் பல சிறந்து விளங்கியது கழாத்தலை எனும் ஊர். அறிஞர் பலர் அதன் கண் வாழ்ந்தனர். அவருள் ஒருவர் வளமுடைய செய்யுள் செய்யும் திறமை மிகுந்திருந்தார். அவரை யாவரும் கழாத்தலை என்ற ஊரிற் பிறந்தவர் என்றறிந்தார்கள்; ஆதலின், கழாத்தலையார் என்று அழைத்தார்கள்.

இவருள்ளம் மிகத் தூய்மை வாய்ந்தது. ஒரு முறை, இருங்கோவேள் என்பவனைச் சார்ந்து பரிசில் விரும்பி நின்றார். அவன், இவர் பெருமையை அறியாது அவமதித்தான். அக்காலத்தில் புலவருள்ளம் சிறிது வருந்தியது. அதன் பயனாக அச் சிற்றரசனுடைய அரையம் எனும் ஆட்சியிடம் முழுவதும் அழிந்தொழிந் தது.

இவர், நெடுஞ் சேரலாதன் என்பானைக் காண எண்ணினார். சேர நாட்டினை அடைந்தவுடன் இங்கு அமைதி குலைந்திருத்தலைக் கண்டார். காரணம் யாதென அறியும் அவாவினால் அங்கு எதிர்ப்பட்டாரைக் கேட்டார். அப்பொழுது சேரமன்னனுக்கும் சோழனுக்கும் போர் நடக்கின்றதென்று அறிந்தார். பரிசில் பெற – வேண்டும் என்ற அந்த ஒரே எண்ணத்துடன் புலவர் வந்தவர் அல்லர். அரசனைக் கண்டு அவன் உடல் நலத்தையும் பிற நலங்களையும் அறியும் அன்பு மிகுதியாக அவருக்கு உண்டு. ஆதலினாலே, “பரிசில் தரும் நிலைமையில் அரசன் இல்லை; மீண்டேகலாம்” என்று எண்ணினாரல்லர். ஆகவே, போர்க்களம் என்றும் நினையாது, அரசனைத் தேடிச் சென்றார்.

புலவர் போர்க்களத்தை அடைந்தார். அவர் சென்ற காலம் போர்முடியும் காலம். இரு பக்கத்துப் போர் வீரர்களும் இறந்து கிடக்கின்றனர். சேர மன்னனும் சோழமன்ன னும் புண்பட்டுப் போர்க்களத்தில் வீழ்ந்தனர். சேரல் உடல் முழுவதும் அம்புகள் தைத்திருந்தன. அவன் மார்பிலும் நெஞ்சிலும், வேல் பாய்ந்தவழிக் குருதி அருவி நீரைப்போல் ஓடிக் கொண்டிருந்தது; ஆனால் அவன் உயிர் நீங்க வில்லை .

இந்த நிலையில், புலவர் கழாத்தலையார் சேரனைக் காண்கின்றார்; மன்னனை மனமியைந்த சொற்களால் வாழ்த்துகின்றார். மன்னன் உயிர் தளர்ந்த நிலையிலும் உணர்வு பெறுகின்றான். புலவரை உற்று நோக்குகின்றான். பின்னர்ப் போர்க்களத்தைக் காண்கின்றான். பெரிய மலையை ஒத்துக் களிறுகள் வெட்டுண்டு கிடக்கின்றன. அம்மலையில், உயிருடன் கூடிய யானை ஒன்றும் இல்லை. இருந்திருப்பின், அதனைப் புலவருக்குப் பரிசிலாக அளித்திருப்பான் போலும்! யானைப் பரிசில் பயனின்றிப் போகவே, தேர்ப் படையில் கருத்தை இருத்துகின்றான். போர்க்களத்தில், பாகர்கள் குதிரைகளை ஓட்டிய வழியெல்லாம் தேர்கள் ஓடின. அதனாலே மேடு பள்ளங்களில் ஓடிய அவை ஒடிந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றேனும் நன்றாக இல்லை. ஆதலின், தேர்ப் பரிசிலையும் தரமுடியவில்லை. உயிர் போகும் நிலையில் அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் மன்னனுக்கு வருத்தம் மிகுகின்றது. குதிரை களையேனும் தந்தனுப்புவோம் என்று பின்னர் எண்ணுகின்றான். ஆகவே, குதிரைப்படை அணிவகுத்து நின்ற பக்கத்தைப் பார்க்கின்றான். அந்தோ! அவையும் யானைத்திரளின் கதியையே அடைந்தன. காற்றினால் – அசையாமல் கடல் நடுவில் கப்பல்கள் நிற்கின்றன: அவ்வாறே குருதிக் கடலில் அசைவின்றி இறந்த குதிரைகள் கிடக்கின்றன. மன்னனின் துன்பம் மிக்கு ஓங்குகின்றது. “என்னே என் தன்மை! என் நலம் அறிந்து என்னை வாழ்த்துவதற்காகப் போர்க் களத்திற்கும் இப்புலவர் வந்தனரே! தம் உயிரை மதியாது என்னை வாழ்த்துதல் என்ற முழு நோக்கத்துடன் இங்கு வந்த புலவரை வெறுங்கையராக அனுப்பமாட்டேன். என்ன செய்வேன்!” என்று படைகளால் தன் உடற்குண்டாகிய துன்பத்தையும் சிறிதும் எண்ணாதவனாய்க் கவலை மிகுந்தான் அரசன்.

உயர்ந்த எண்ணங்கள் முற்றுப் பெறாமல் போதலில்லை. அஞ்ஞான்று, தன் கழுத்திலிருந்த அழகிய முத்துமாலையைப் பற்றிய நினைவு அரசனுக் குண்டாகியது. அம்மாலை பாம்பின் உடலைப்போல் பளபளவென்று ஒளி விட்டு விளங்கியது. அம்மாலையைக் கழற்றிப் புலவர் கையில் தந்து மன்னன் மன அமைதியைக் கொண்டான்.

மாணவர்களே! இக்கதை எவ்வளவு உருக்கம் தரத்தக்கதாய் இருக்கின்றது. புலவரை வெறுங்கையுடன் அனுப்பலாகாது என்று சில நாழிகைக்குள் உயிர் நீங்கும் மன்னன் எண்ணுகின்றான். ஆ! அவனுடைய புலவரைப் போற்றும் பெருமை எவ்வளவினது.

இக்கதையைப் படிக்கும் உங்களுக்கு மற்றொரு கதை நினைவிற்கு வரலாம். பாரத சண்டை நடந்தது. கர்ணன் என்பவன் போர் செய்து அருச்சுனன் அம்புகளால் அடியுண்டு வீழ்ந்தான். அவனுயிர் போகவில்லை. அவன் செய்த புண்ணியச் செயல்கள் அவனைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன. அப்பொழுது கண்ணன் வேற்று வடிவத்தில் சென்று, அவனிடமிருந்து ஒரு வரம் பெற்றான். அதன் பயனாகக் கர்ணன் இறந்தான்.

இவ்விரு கதைகளையும் ஒரு சேர எண்ணிப் பாருங்கள். ஆராய்ச்சி அறிவு மாணவர்களுக்கு, வேண்டியதொன்றன்றோ!

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *