தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,112 
 

கேசவனும் ராமுவும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். கேசவன் நன்கு படிப்பான்; தவிர வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், எப்போதும் செருக்குடன் பேசி, நடந்து கொள்வான். ராமு சுமாராகப் படிக்கக்கூடியவன். ஆனல் மிகவும் பண்போடு நடக்கக்கூடியவன்.

பெருமைமேலும் ராமு கிரிக்கெட் விளையாட்டில் மாவட்ட அளவில் சிறந்த பந்துவீச்சாளன் என்று பெயர் எடுத்தவன். பள்ளியின் கிரிக்கெட் அணிக்கும் அவன்தான் தலைவனாக இருந்தான். ஆனால் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

அன்று-

வகுப்பறையில் ஆசிரியர் அந்த மாதத் தேர்வுக்குரிய விடைத்தாள் மதிப்பெண்களை அறிவிக்க ஆரம்பித்தார். எப்போதும் போல கேசவனே அதிகமான மதிப்பெண்கள் பெற்று இருந்தான். ராமுவோ அறுபது மதிப்பெண்கள்தான் பெற்றிருந்தான்.

கேசவன், அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட்டதால், தன்னைவிடக் குறைவாக மதிப்பெண்களை பெற்ற பிற மாணவர்களைக் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தான்.

இதைக் கவனித்த ராமு, கேசவனிடம் போய், “”கேசவா, நீ நிறைய மதிப்பெண்கள் பெற்றுள்ளாய்… வாழ்த்துக்கள்! ஆனால் அதற்காக பிறரை இழிவாகக் குறைத்து மதிப்பிட்டுப் பேசாதே…” என்றான்.

“”நான் நன்றாகப் படித்ததால் நல்ல மதிப்பெண்கள் பெற்றுப் புகழ் பெற்றிருக்கிறேன். என்னால் இந்தப் பள்ளிக்குத்தானே பெருமை! இதைப் புரிந்து கொள்…” என்று ஆணவத்துடன் பதில் கூறினான் கேசவன்.

“”தப்பு கேசவா… பள்ளியால்தான் உனக்குப் பெருமை. உன்னால் பள்ளிக்குப் பெருமை என்று சொல்லாதே!” என்று ராமு சொல்லவும்,

“”என் வசதிக்கு இங்கு நான் படிப்பதே, இந்தப் பள்ளிக்குப் பெருமைதான்!” என்று கேசவன் மீண்டும் கூறினான்.

ராமு அமைதியாகிவிட்டான்.

அந்த ஆண்டின் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அனைத்துப் பள்ளிகளும் அதில் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டில் அனவைரும் எதிர்பார்த்தபடியே ராமு தலைமையிலான அந்தப் பள்ளியின் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றியது.

ராமுவுக்கு வாழ்த்துகள் குவிந்தன. கேசவனுக்கு ராமு இப்படிப் புகழடைவது பொறுக்கவில்லை. மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தான். ஊர் பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள் எல்லோரும் கலந்து கொண்ட விழா நடைபெற்றது. எல்லோரும் பேசி முடித்த பிறகு-

ராமு பேச ஆரம்பித்தான்…

“”எல்லோரும் என்னால்தான் நமது அணி வெற்றி பெற்றது என்று கூறுகிறார்கள். இது தவறு; இது எங்கள் அணியின் கூட்டு முயற்சி. நாங்கள் பயிலும் பள்ளிக்கு எங்களால் முடிந்த சிறு நற்பெயர்… அவ்வளவுதான்! இந்த வெற்றி, எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பாராட்டுகள், கோப்பை எல்லாம் இந்தப் பள்ளியால்தான் எங்களுக்குக் கிடைத்தது! இதை யாரும் மறுக்க முடியாது!” என்று பேசி முடித்தான் ராமு.

ராமுவின் அடக்கமான, பணிவான பேச்சைக் கேட்டுக் கேசவன் தலைகுனிந்தான்.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *