புத்திசாலி முத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 12,988 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணி இரண்டு !

பள்ளிக்கூடத்து பெரிய மணி, ‘டாண். டாண்’ என்று முதல் மணி’ அடித்தது ; ஓய்ந்தது.

முதுகிலே புத்தகப் பை ; கையிலே குடை இந்தக் கோலத்தோடு, பள்ளிக்கூடத்தை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தான் முத்து.

“தம்பி….!” – அந்த சமயத்தில் இப்படி ஒரு குரல் எழும்பியது. அந்தக் குரலில் தான் எத்தனை அன்பு! பரிவு!

முத்து திரும்பிப் பார்த்தான். அவனுக்கு பின்னால் ஒரு மனிதர் வந்துகொண்டிருந்தார். அவர் தான் அழைத்ததோ? முத்து நின்றான். அந்த மனிதரின் வெற்றிலைக் காவி படிந்த பற்களெல்லாம் வெளியே தெரிந்தன ; அப்படி சிரித்தார். அவர் ஏன் தன்னை அழைக்க வேண்டும்? ஏன் இப்படி சிரிக்க வேண்டும்? இது என்ன புதுமை ! – இப்படி எண்ணினான் முத்து. ஏன்? யாரைக் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான்.

“உன்னைத்தான் கண்ணு!” என்று சொன்னார் அந்த மனிதர். மறுபடியும் சிரித்தார். அதற்குள் முத்துவிடம் வந்துவிட்டார்.

“நீங்க யாரு? உங்களை நான் பார்த்த தே இல்லையே!” – வெடுக்கென்று கேட்டான் முத்து. பொல்லாத குறும்புக்காரனாயிற்றே, அவன்!

சும்மாதான் கூப்பிட்டேன் , தம்பீ! தனியா நடந்தேன் ; என்னவோ போல இருந்தது ; பேச்சுத் துணை தேடினேன் ; நீ கிடைத்தாய் ; அவ்வளவுதான். வா , போகலாம்!” என்றார் அவர். முத்துவும் கூட நடந்தான்.

சற்று நேரம் சென்றது.

“ஏன் தம்பீ , உன் வீடு எது?” – மெதுவாகக் கேட்டார் அந்த மனிதர்.

முத்துவுக்குப் பயமாக இருந்தது. ‘பிள்ளை பிடிப்பவன் என்பார்களே, அந்த மாதிரி மனிதரோ இவர் – என்று நினைத்தான். இருந்தாலும் இயல்பான துடுக்குத்தனம் போகுமா? திட்டிக் கொண்டிருக்கும் அப்பாவின் வாய் – அடிக்க வரும் அம்மாவின் கை பாய்ந்து வரும் ஆசிரியரின் பிரம்பு – இவை அனைத்துமே பின் வாங்கிவிடுமே சுட்டித்தனத்தில் வேடிக்கைப் பேச்சில்! இந்த மனிதர் எம்மாத்திரம்?

“அதோ, அந்தக் கோடியிலே இருக்கே, அந்த மஞ்சள் மாடி வீடுதான் எங்க வீடு!” என்றான்.

“ஓகோ! ஆமாம் தம்பீ ; நீ மட்டும் தனியா படிக்கப்போறியே, உனக்கு அண்ணன் ‘கிண்ணன்’ இல்லியா?” – மறுபடி புதுக் கேள்வி போட்டார் அவர்.

‘இவர் ஏன் இப்படி யெல்லாம் கேட்க வேண்டும்? – சிரித்து சிரித்தல்லவா விஷயங்களைக் கிரகிக்கிறார்!’ – என்று யோசித்தான் முத்து. ஏதோ முடிவு செய்தான். பதிலும் சொன்னான்.

“கிண்ணன் யாருமில்லே ; ஆனால் மூன்று அண்ணன் இருக்காங்க ! எல்லோரும் ‘காலேஜிலே படிக்கிறாங்க. ஒரு அண்ணன் சென்னையிலே – அடுத்த அண்ணன் சிதம்பரத்திலே — கடைசி அண்ணன் கும்பகோணத்திலே – போதுமா?” என்று சொன்னான்.

“ஆமாம்! ஏன் இப்படி தனித்தனி ஊரிலே படிக்கிறாங்க?”

“ஏனா? மூணு பேரும் எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்குவாங்க ; அதனாலேதான் எங்க அப்பா இந்த வேலையைச் செய்தாங்க!”

“ஓகோ; அப்படியா? போகட்டும். ஏன் தம்பி; உனக்கு அக்கா யாரும் இல்லையா?”

“இல்லைன்னு யாரு சொன்னது? மூன்று அக்கா இருக்காங்களே! ஒரு அக்கா இந்தி படிக்குது; இன்னொரு அக்கா ‘தமிழ் வித்வானு’க்காக படிச்சுக் கிட்டிருக்கு; கடைசி அக்கா ‘மெட்ரிக்’ பரீட்சை எழுதப் போவுது, இந்த வருஷம்!…..”

“சபாஷ்! உங்க வீட்டிலே எல்லாரும் நல்லா படிக்கிறாங்க போலிருக்கே ! அப்படித்தான் இருக்கணும்!”

“ஆமாம்; எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே படிச்சவங்களாச்சே, அதனாலே தான்!”

“அடடா! கேட்க மறந்துட்டேனே; உங்க அப்பா யாரு? அவருக்கு என்ன வேலை?”

“தெரியாதா உங்களுக்கு? இந்த ஊருக்கு புதிசு போலேயிருக்கே!”

“ஆமாம் தம்பி; இப்பத்தான் ரயிலைவிட்டு இறங்கி வர்ரேன்?”

“ஓகோ , அப்படியா? எங்க அப்பா இந்த ஊர் சர்க்கார் வக்கீல்! இன்னும் ரெண்டு மாதத்திலே ‘மாஜிஸ்ட்ரேட்’ வேலைக்குப் போகப் போறாங்க! ஐயையோ! சொல்லிட்டேனே! இது ரொம்ப ரொம்ப ரகசியமாச்சே ! ‘வெளியே சொன்னால் தோலை உறிச்சுடுவேன்’னு சொல்லியிருக்காரே அப்பா. இதை நீங்க யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க..?”

“நான் ஏன் தம்பி சொல்லப் போறேன். அதோ , இன்னும் கொஞ்ச தூரம் போனவுடன் எல்லாமே மறந்துடும்….அதிருக்கட்டும்; உங்க அம்மா என்ன படிச்சிருக்காங்க?…”

“பீ . ஏ! ஆனால் வேலைக்குப் போக மாட்டாங்க. வீட்டிலே இருந்து கதை எழுதுவாங்க. எல்லாப் பத்திரிகையிலும் வருமே ! போன மாசம்கூட ஒரு நாவல் போட்டியிலே ஆயிரம் ரூபாய் பரிசு வாங்கினாங்க…..ரொம்ப நல்ல அம்மா ! என்னை அடிக்கவே மாட்டாங்க…”

“ஊம்…. அப்படியா? நீ அதிர்ஷ்ட சாலிதான்! ஆமாம் தம்பி; உனக்கு தம்பி, தங்கை யாரும் இல்லியா?”

“இல்லியே ! ஆனால் அடுத்த மாசம் எங்க அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறக்குமாம்! அது தம்பியோ – தங்கையோ – இப்ப எப்படித் தெரியும்?”

பள்ளிக்கூடம் நெருங்கிவிட்டது!

“நீ ரொம்ப நல்ல தம்பி! நான் போகட்டுமா?” – என்று நகர்ந்தார், அந்தப் புதிய மனிதர்.

“என்ன சார், இவ்வளவு தூரம் உங்களோடு பேசிக்கிட்டு வந்தேன்; சும்மா போறீங்களே! அதோ அந்தக் கடையிலே ஒரே ஒரு பலூன் வாங்கித் தாங்களேன்!” என்றான் முத்து, குறும்பாக!

அந்த மனிதர் யோசிக்கவில்லை. கடைக்குப் போனார். பெரிய பலூன் ஒன்று வாங்கினார். முத்துவிடம் தந்தார். அவனுக்கு ஏக மகிழ்ச்சி ! பள்ளிக்குள் ஓடினான். அந்த மனிதரும் நடந்தார்.

மாலை நேரம்!

மணி மூன்றரை!

‘டிரில்’ ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லையாம்; அதனால் முத்து பள்ளி முடிவதற்கு முன்னேயே வீட்டுக்குத் திரும்பினான்.

வாசலில் அடி வைத்ததும் உள்ளே ஏதோ புதிய குரல் கேட்டது. நின்றான். கவனித்தான். வேறு யாருடைய குரலுமல்ல அது ; பள்ளிக்குச் செல்லும் போது அவனுடன் பேசிக்கொண்டு வந்தாரே, அந்தப் புதிய மனிதருடையதுதான். முத்துவுக்கு ‘திக்’ கென்றது. உற்றுக் கேட்டான்.

“ஆகா! என்ன அருமையான கை ! நானும் ஐம்பது வருடமாக உலகம் முழுதும் சுற்றுகிறேன். ரேகை பார்க்கிறேன் ; இப்படி ஒரு யோகக் கையைப் பார்த்ததேயில்லையே!”

ஆமாம்! அந்த மனிதருடைய குரலே தான் அது!

“சரிங்க! எனக்கு எத்தனை பிள்ளைகள் ? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள், பார்ப்போம்!” – இது அப்பாவின் குரல்!

“குழந்தைகளா? அதற்கென்ன பஞ்சம்?…. பொருட்செல்வம் மட்டுமல்ல ; மக்கள் செல்வமும் குறைவில்லையே உங்களுக்கு!……. நான்கு பிள்ளைகள் ! ஆமாம்….நான்கு !..மூத்தவர் மூவரும் வெளியூர் ‘காலேஜ் ‘களில் படிக்கிறார்கள்! இளையவன் – சிறியவன் உள்ளூரிலே படிக்கிறான்! அது மட்டுமா? அதோ , அந்த ரேகை என்ன சொல்கிறது தெரியுமா? கருத்தோடு படிக்கும் மூன்று பெண்களும் உண்டு உங்களுக்கு…”

“என்ன? என்ன?….”

“அது மட்டுமா? கடைசியில்….அடுத்த மாதம் பதிமூன்றாம் தேதி, நள்ளிரவு, ஒரு மணிக்கு இன்னு மொரு பெண்ணும் பிறக்கப் போகிறது. ராசாத்தி மாதிரி! அது நடனம் கற்றுக்கொண்டு உலகத்தையே ஆட்டிவைக்கப் போகிறது!”

“சரி…இருக்கட்டும்…என் தொழில் நிலைமை எப்படியிருக்கு? கொஞ்சம் பாருங்க!”

“ஆகா….ஆகா! என்ன ரேகை! என்ன ரேகை ! ஐயா, வக்கீலையா , இன்னும் இரண்டே மாதத்திலே – ஏன், இன்றிலிருந்து ஐம்பதாவது நாள் நீங்கள் ‘மாஜிஸ்ட்ரேட்’ ஆகப்போகிறீர்கள். மேலிடத்திலே பேச்சு நடக்கிறது

“ஓகோ !…அப்படியா?….அப்புறம் ?…”

“அப்பப்பா! என்ன அருமை! என்ன சொல்வ தென்றே புரியவில்லையே எனக்கு! பிறந்தாலும் இப்படியல்லவா பிறக்க வேண்டும்! உங்கள் மனைவி எழுதிய கதை ஒன்றுக்கு யோகம் வருகிறது! பெருத்த யோகம் ஓடி வருகிறது! போன மாதம் ஆயிரம் ரூபாய் பரிசு தந்ததே ஒரு நாவல் – அது இன்னும் ஆயிர மாயிரமாகக் குவிக்கப் போகிறது….. அதை சினிமாவாக எடுக்க ஒரு பிரபல கம்பெனி யோசனை செய்து கொண்டிருக்கிறது…இன்னும் இரண்டு நாளில்…’

அந்தப் புதிய மனிதர் – ஆச்சரியம், சிரிப்பு இவை பொங்க பேசிக்கொண்டேயிருந்த சோதிடர் தன் பேச்சை முடிக்கவில்லை…

“பளார்” என்று ஒரு சப்தம் எழும்பியது.

என்ன அது? முத்து திடுக்கிட்டான்.

அதற்குள் “ஐயோ ஐயா! என்னை ஏன் அடிக்கிறீர்கள்?” என்ற அலறல் எழும்பியது; சோதிடர் கதறினார்.

“ஏன் அடிக்கிறேனா? சோம்பேறிக் கழுதை! உன்னைத் தூக்கிலே அல்லவா போடவேண்டும்! ரேகை பார்க்கிறானாம், ரேகை! பதினைஞ்சு வருஷம் தவம் கிடந்து, ‘ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு’ன்னு ஒரு பையன் பிறந்தான்….எட்டு பிள்ளைக்கு கணக்கு சொல்லுகிறான், முட்டாள்! ..ஏய்; நான் வக்கீலுன்னா ரேகை சொல்லுது? அட பாவி…நகைக் கடை நல்லமுத்துன்னா ஊர் முழுதும் தெரியும்… என்னை வக்கீலாக்கிட்டியே நீ! -ம்…”

மறுபடி ஒரு குத்து விழுந்தது!

“ஐயோ! அப்ப நான் சொன்னதெல்லாம் பொய்யா?”- சோதிடர் ‘ஓ’ என்று கத்தினார்.

“இல்லை; நூற்றுக்கு நூறு உண்ம ! அ ஆவன்னா படிக்கத் தெரியாத என் மனைவியை கதாசிரியைன்னு சொன்னே பாரு முட்டாளே! ஓடு இங்கிருந்து ….இல்லை மண்டையைப் பிளந்து விடுவேன்….ஓடு!…ஓடு !” – அப்பா கோபமாகக் கத்தினார்.

“ஐயோ; போகிறேனே!” என்று அலறிக் கொண்டே ஓடி வந்தார், சோதிடர்.

வாசலுக்கு வந்தார்.

‘படார்’ என்ற ஒரு சப்தம் கேட்டது. பயந்து விட்டார். பரபரப்புடன் பார்த்தார். அவர் வாங்கித் தந்த பலூன் வெடித்து விட்டது! ‘கலகல’வென்று சிரித்துக் கொண்டு நின்றான் முத்து.

சோதிடருக்கு எப்படி இருக்கும்? ஊரை ஏய்க்கப் புது வழி கண்டார் – உழைக்காமல் பிழைத்தார் –

அப்படிப்பட்ட ‘பகற்கொள்ளைக்காரனாயிற்றே அவர், அவரையே ஏமாற்றிவிட்டானே முத்து! அவரது முகமூடியைக் கிழித்து எறிந்துவிட்டானே!

“நான் அப்பவே நினைத்தேன். இந்த ஆள் ஏதோ தப்பானவர் என்று. அதான் கேள்விக்கெல்லாம் ‘டக்டக்’னு பதில் தந்தேன்; இல்லாததைச் சொன்னேன் – நல்ல பாடம் கற்பித்தேன்” என்று முணுமுணுத்தான் முத்து. தெருக்கோடியில் ஓடிக் கொண்டிருந்த சோதிடரைப் பார்த்தான். சிரித்தான். வீட்டிற்குள் ஓடினான்.

– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *