புது பள்ளிக்கூடம்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,921 
 

என்னுடைய அம்மாவுக்கு வேறு ஊரில் நல்ல வேலை கிடைத்ததால், நாங்கள் அந்த ஊருக்குச் சென்றோம். நானும் புதிதாக ஒரு பள்ளியில் சேர நேரிட்டது.

“பள்ளிக்கூடம் புதுசா, ஜாலியா இருக்கும்… உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்’ என்றாள் அம்மா!

பள்ளிக்குள் நுழைந்தேன். எல்லோரும் என்னை முறைத்து முறைத்து பார்த்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு நண்பனுடன் வலம் வந்தார்கள். எனக்கு மட்டும் அங்கு நண்பர் யாருமில்லை!

அழகிய வெட்டுக்கிளி படம் போட்ட புதிய சட்டை அணிந்திருந்தேன். அதைக் கூட யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் என்னை மார்த்தா என்று அழைத்தார்கள். எனக்கு எரிச்சலாக வந்தது. உண்மையில் என் பெயர் “மார்சியா’! அதைக்கூடச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

மதியம் சாப்பாட்டு வேளை! எல்லோருக்கும் சாப்பாட்டு அறைக்கு வழி தெரிந்திருந்தது. எனக்கு மட்டும் தெரியவில்லை! எல்லோரும் ஆசிரியர் போட்ட கணக்கை சரியாகச் செய்தார்கள். என்னால் மட்டும் முடியவில்லை. மீண்டும் எரிச்சல் வந்தது!

இரவு படுக்கப்போகும் போது அம்மாவிடம் சொன்னேன்: “இந்தப் பள்ளிக்கூடம் எனக்குப் பிடிக்கவில்லை’.

“எல்லாம் சரியாகிவிடும்’ என்றாள் அம்மா.

அடுத்த நாள் – பள்ளிக்கூடப் பேருந்தில் ஏறினேன். இரண்டு இரண்டு பேராக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். என் அருகில் மட்டும் யாரும் உட்காரவில்லை.

மதியம் சாப்பாட்டு வேளை – ஜோடி ஜோடியாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். நான் மட்டும் தனியே சாப்பிட்டேன். இன்றும் அதே எரிச்சல்…

“இன்றைக்கும் சரியில்லை!’ இரவில் படுக்கப் போகுமுன் அம்மாவிடம் சொன்னேன். “சரியாயிடும்..!’ அம்மாவின் பழைய பல்லவி.

அடுத்தநாள்- “உடம்பு சரியில்லை… நான் பள்ளிக்குப் போகவில்லை!’ என்று அம்மாவிடம் கூறிப் பார்த்தேன்.

“அதெல்லாம் முடியாது… பள்ளிக்குப் போ’ அம்மா வலுக்கட்டாயமாக என்னைப் பள்ளிக்கு அனுப்பினாள். பள்ளி சென்றேன்.

அன்று ஓவிய வகுப்பு! சிலர் வரைந்த படங்களை ஆசிரியர் எல்லோருக்கும் தெரியும்படி கைகளில் தூக்கிக் காண்பித்தார். எனது ஓவியத்தை மட்டும் காட்டவில்லை. மாலையில், கால்பந்து விளையாடினோம். நான் 2 கோல்கள் போட்டேன்! எல்லோருக்கும் ஆச்சரியம்!

அன்று இரவு அம்மா கேட்டாள், “இன்று எப்படி இருந்தது பள்ளிக்கூடம்?’

“இன்னும் ஒருநாள் பார்ப்போம்!’ என்றேன்.

“உங்க டீச்சரிடம் நான் வேண்டுமானால் பேசட்டுமா?’

“அதெல்லாம் வேண்டாம்மா..!’

அடுத்த நாள் கிராஃப்ட் வகுப்பு நடந்தது. நான் காகிதத்தில் அழகிய விமானம் ஒன்று செய்தேன். டீச்சர் அதை வாங்கி எல்லோருக்கும் தெரியும்படி தூக்கிக் காட்டினார் (நான் செய்த விமானத்தை மட்டுமே).

எல்லோரும் என்னை வியப்புடன் பார்த்தார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.

அதுவரை என்னிடம் பேசாமலிருந்த கேத்தரீன், என்னருகே வந்து, “உன் சட்டையிலுள்ள வெட்டுக்கிளி கொள்ளை அழகு’ என்றபடியே அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள்.

டயானா என்ற பெண், “என் பக்கத்தில் வந்து உட்காரேன்’ என்றபடியே நகர்ந்து இடம் கொடுத்தாள்.

அன்று இரவு அம்மா கேட்டாள், “என்ன வேறு நல்ல பள்ளிக்கூடத்தில் உன்னைச் சேர்த்து விடட்டுமா?’

“ஏன்? இந்தப் பள்ளிக்கூடத்துக்கு என்ன? எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! இங்கேதான் நான் படிப்பேன்!’

-ஆங்கிலத்திலிருந்து தமிழில்: அபி (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *